![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை ஏழாம் அத்தியாயம் - நிலா முற்றம் ஆயனரிடமும் சிவகாமியிடமும் விடை பெற்றுக் கொண்ட பிறகு மகேந்திர சக்கரவர்த்தியும் மாமல்லரும், குதிரைகளைத் திருப்பி அதிவேகமாய் விட்டுக்கொண்டு போய், அரண்மனையை அடைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அரண்மனை வாசலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், "வாழ்க! வாழ்க சக்கரவர்த்திப் பெருமான்! வாழ்க! மாமல்ல மகா வீரர் வாழ்க!" என்று கோஷித்துக் கொண்டு அவர்களுக்கு வணங்கி வழிவிட்டு நின்றார்கள். காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது. சக்கரவர்த்தியையும் குமார பல்லவரையும் கண்டதும் அந்த வீரர்களும் ஜயகோஷம் செய்தார்கள். எல்லோருக்கும் முன்னால் நின்ற ஒருவர் மட்டும் தனியே பிரிந்து முன்னால் வந்து பணிவுடன் நிற்க, சக்கரவர்த்தி அவரைப் பார்த்து, "சேனாதிபதி! தூதர்களுக்கு எல்லா விஷயமும் சொல்லியாகி விட்டதா! புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்களா?" என்று கேட்டார். "ஆம், பிரபு! எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது. அவரவர்களும் இன்னின்ன திக்குக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்து விட்டேன். எல்லோரும் கிளம்ப ஆயத்தமாய்த் தங்களுடைய கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று சேனாதிபதி கூறினார். சக்கரவர்த்தி நரசிம்மவர்மரைப் பார்த்து, "குழந்தாய்! உன் தாயார் கவலையுடன் இருப்பாள். அவளிடம் சென்று விஷயம் இன்னதென்று தெரியப்படுத்து. இருவரும் போஜனத்தை முடித்துக்கொண்டு, மேல் மாடத்துக்குச் செல்லுங்கள். இந்தத் தூதர்களை அனுப்பிவிட்டு நானும் அங்கு வந்து சேருகிறேன்" என்றார். வெகுகாலம் சமணராயிருந்த காரணத்தினால் சக்கரவர்த்தி இரவில் போஜனம் செய்வதில்லை. சைவரான பிறகும் அவர் இரவில் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. "ஆகட்டும் அப்பா! இதோ போகிறேன், ஆனால் எல்லாப் படைகளும் வந்து சேரும் வரையில் காத்திருக்க வேண்டுமா? ஆயத்தமாயிருக்கும் படைகள் உடனே போருக்குப் புறப்படலாமல்லவா?" சக்கரவர்த்தி புன்னகையுடன், "அதைப்பற்றி யோசிக்கலாம், குழந்தாய்! நீ இப்போது தாயாரைப் போய்ப் பார்!" என்றார். மாமல்லர் போன பிறகு மகேந்திரர் சேனாதிபதியைப் பார்த்து, "கலிப்பகையாரே! தூதுவர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டிய செய்தி இது. தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உள்ள ஒவ்வொரு கோட்டத்திலும் ஆயிரம் வீரர் அடங்கிய படைகளைத் திரட்டி ஆயத்தமாய் வைத்திருக்க வேண்டியது. மறுபடியும் செய்தி அனுப்பியவுடனே படை புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும் நான் சொல்வது தெரிகிறதா?" என்றார். "தெரிகிறது, பிரபு!" "கோட்டையைப் பத்திரப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்தாகிவிட்டதல்லவா?" "துறவறத்தாரைத் தவிர வேறு யாரையும் விசாரியாமல் கோட்டைக்குள் விடக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறேன். வெளியே போகிறவர்களையும் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். நகருக்குள்ளேயும் யார் பேரிலாவது சந்தேகத்துக்கு இடமிருந்தால் சிறைப்படுத்திக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறேன்." "கோட்டைச் சுவரெல்லாம் பழுது பார்த்திருக்கிறதா? சேனாதிபதி! பல்லவ சாம்ராஜ்யம் நிலைத்து நிற்பது இந்தக் காஞ்சிக் கோட்டையின் பாதுகாப்பையே பொறுத்திருக்கலாம்." "பல்லவ சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்குக் காவேரி முதல் கிருஷ்ணா நதி வரையில் லட்சோப லட்சம் வீரர்கள் காத்திருக்கிறார்கள், பிரபு!" "உண்மைதான், ஆனால், அவர்கள் வெறும் கையினால் சண்டை போட முடியாதல்லவா? அந்த லட்சோப லட்சம் வீரர்களுக்கும் வேண்டிய வேல்களும் வாள்களும் எங்கே?" என்றார் சக்கரவர்த்தி. சேனாபதி கலிப்பகையார் மௌனம் சாதித்தார். "கீழைச் சோழநாட்டில் வாளும் வேலும் நன்றாய்ச் செய்வார்கள் போலிருக்கிறது. யானைமேல் எறியப்பட்ட வேலை நீர் பார்த்தீரா?" "இல்லை, பிரபு!" "மாமல்லனிடம் அது இருக்கிறது 'மாமாத்திரர்' என்று எழுதியிருக்கிறது. 'மாமாத்திரர்' என்ற பட்டம் கீழைச் சோழ நாட்டிற்கு உரியதல்லவா?" "ஆம், பல்லவேந்திரா!" "அந்த வேலை எறிந்தவன் கீழைச் சோழநாட்டானாய்த்தானிருக்கவேண்டும். அம்மாதிரி வேல் எறியக்கூடிய வீரர்கள் ஆயிரம் பேர் இருந்தால் இந்தக் கோட்டைக் காவலைப்பற்றிக் கவலையில்லை!" "பல்லவ சைனியத்தில் எத்தனையோ ஆயிரம் வேல் வீரர்கள் இருக்கிறார்கள், பிரபு!" "அந்த வேலை எறிந்தவன் பதினாயிரத்தில் ஒரு வீரன். அவனை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்" சேனாபதி மௌனமாயிருந்தார். "இன்னும் ஒரு விஷயம், காவித்துணி அணிந்தவர்களைப் பற்றிய கட்டளையை மாற்ற வேண்டும். ஆயனரையும் அவர் மகளையும் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஒரு சந்தின் முனையில் ஒரு புத்த பிக்ஷு நிற்பதைப் பார்த்தேன். சட்டென்று அவர் நிழலில் மறைந்துகொண்டார்." "கட்டளை என்ன பிரபு?" "இராஜ விஹாரத்தின் மேல் கவனம் வைத்து, புதிதாக வந்திருக்கும் புத்த பிக்ஷு யார் என்று பார்க்கவேண்டும்." "உடனே ஏற்பாடு செய்கிறேன்." பிறகு, சேனாபதி கலிப்பகையார் ஒவ்வொரு தூதராக அழைத்து இவரிவர் இன்னின்ன கோட்டத்துக்குப் போகிறார் என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்தினார். தூதர்கள் தனித் தனியே சக்கரவர்த்திக்கு வணங்கி விடைபெற்றுக் கொண்டு தத்தம் குதிரை மீதேறி விரைந்து சென்றார்கள். |