![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை ஒன்பதாம் அத்தியாயம் - விடுதலை கயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், "பேச வேண்டாம்" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். இதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார். இவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள். பன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது. புத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள். அந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. பல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோது, "பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான். தாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, "ஆஹா! என்ன அழகான கோயில்!" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வெளிக்கு வந்திருந்தார்கள். அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வெளிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள். இரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், "புத்தம் சரணம் கச்சாமி!" என்றான். இளம் பிக்ஷு, "தர்மம் சரணம் கச்சாமி!" என்றார். "அடிகளே! இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வெளியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ?" என்றான் முதிய வீரன். "தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது" என்றார் பிக்ஷு. "இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ?" "இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன். காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன்." "இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ?" "சோழ நாட்டில் செங்காட்டங்குடி." "இன்றைக்குத்தான் இருவரும் வந்தீர்களாக்கும்!" "ஆம், ஐயா!" "தங்கள் திருநாமம் என்னவோ!" "நாகநந்தி என்பார்கள்." "இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி! சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்." வீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வெளிக் கதவு சாத்தப்பட்டது. உள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது. புத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, "பிள்ளாய்! எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது! புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்!" என்றார். பரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, "அடிகளே! எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான். "பெரிய ஆபத்து! இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா?" "எனக்கு எப்படித் தெரியும், சுவாமி? காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே!" பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, "மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்!" என்றார். பரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. "நிஜமாகவா?" என்று வியப்புடன் கேட்டான். "ஆம்! இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை." பரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, "அவர்களால் எனக்கு என்ன ஆபத்து?" என்று கேட்டான். புத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். "என்ன ஆபத்து என்றா கேட்கிறாய்? யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்!" "சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே! சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்! யாராய்த்தான் இருக்கட்டும்!" என்றான் பரஞ்சோதி. "தெரியும் தம்பி! நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம். நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்." பரஞ்சோதிக்கு நெஞ்சில் 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று. "அப்படிப்பட்ட அநியாயமும் உண்டா?" என்றான். "பரஞ்சோதி! இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்..." "அப்புறம்?" "மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்!..." பரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது! பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது!" என்றான். நாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, "பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள். தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்" என்றார். பரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள். |