![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை பத்தாம் அத்தியாயம் - ஆனந்த நடனம் "அப்பா! நான் நடனம் ஆடி வெகுகாலம் ஆகி விட்டதே, இன்றைக்கு ஆடட்டுமா?" என்று சிவகாமி கேட்டாள். இருவரும் வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்து மரத்தடியிலே வர்ணம் அரைக்கும் கல்லுவங்களும், வர்ணம் காய்ச்சும் அடுப்புகளும், சட்டி பானைகளும் கிடந்தன. ஆயனர் சிறிது அதிசயத்துடன் சிவகாமியை உற்று நோக்கினார். "இன்றைக்கு என்ன குழந்தாய், உன் முகம் இவ்வளவு களையாயிருக்கிறது?" என்று வினவினார். உடனே மறுமொழி சொல்ல முடியாமல் சிவகாமி சிறிது திகைத்துவிட்டு, பிறகு, "கமலியைப்பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு உற்சாகமாயிருக்கிறது. அப்பா! காஞ்சிக்குப் போய் கமலியைப் பார்த்துவிட்டு வரலாமா?" என்றாள். உடனே, தான் பிழை செய்துவிட்டதை உணர்ந்து நாவைப் பற்களினால் கடித்துக் கொண்டு "ஆமாம், அப்பா! சக்கரவர்த்தி ஏதோ நமக்குச் செய்தி அனுப்பியதாகச் சொன்னீர்களே, அது என்ன?" என்று கேட்டாள். "எதிரி சைனியம் வடபெண்ணை ஆற்றைக் கடந்து விட்டதாம். காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறதாம். காஞ்சியை முற்றுகை போட்டாலும் போடுமாம். ஆகையால், 'ஒன்று நீங்கள் காஞ்சி நகருக்கு போய்விடுங்கள்; அல்லது சோழ தேசத்துக்குப் போங்கள்' என்று சக்கரவர்த்தி சொல்லி அனுப்பினாராம். நீ என்ன சொல்கிறாய், அம்மா?" "நான் என்ன சொல்ல, அப்பா! எனக்கு என்ன தெரியும்? தங்கள் இஷ்டம் எதுவோ, அதுதான் எனக்கு இஷ்டம்..." "என் இஷ்டம் இங்கேயே இருக்க வேண்டுமென்பதுதான். இந்தக் காட்டை விட்டு வேறு எங்கே போனாலும் எனக்கு மன நிம்மதியிராது" என்றார் ஆயனர். "எனக்கும் அப்படித்தான், அப்பா! இங்கேயே நாம் இருந்து விடலாமே?" என்றாள் சிவகாமி. மாமல்லரின் ஓலையில், தாம் வந்து அவளைச் சந்திக்கும் வரையில் ஒன்றும் முடிவு செய்ய வேண்டாம் என்று எழுதியிருந்ததை நினைத்துக் கொண்டுதான் மேற்கண்ட விதம் சிவகாமி சொன்னாள். காஞ்சிக்குப் போய்க் கமலியைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஒரு பக்கத்தில் அவளுக்கு அளவில்லாமல் இருந்தது. ஆனால், எட்டு மாதத்துக்கு முன்பு திருநாவுக்கரசரைப் பார்ப்பதற்காக காஞ்சிக்கு போய்த் திரும்பியதும், முதன் முதலாக மாமல்லர் தனக்கு எழுதிய ஓலையை நினைவுப்படுத்திக் கொண்டாள். "அரண்மனை நிலா மாடத்தில், முத்துப் பதித்த பட்டு விதானத்தின் கீழே, தங்கக்கட்டிலின் மேல் விரித்த முல்லை மலர்ப்படுக்கையிலே படுத்துறங்க வேண்டிய நீ, என்னுடைய ரதசாரதியின் வீட்டில் தரையிலே விரித்த கோரைப் பாயில் படுத்துறங்கினாய் என்பதை எண்ணி எண்ணி என் மனம் புண்ணாகிறது!" என்று பல்லவ குமாரர் எழுதியிருந்தார். இதிலே, அவர் சிவகாமியிடம் கொண்டிருந்த காதலின் மேன்மையும் வெளியாயிற்று. கண்ணபிரான் வீட்டிலே வந்து சிவகாமி தங்குவதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்பதும் புலனாயிற்று. இதைப்பற்றிச் சிவகாமியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் நடந்தது. கமலியிடம் அவளுக்கிருந்த நட்புணர்ச்சியும் பல்லவ குமாரரிடம் அவள் கொண்டிருந்த காதல் வெறியும் போராடின முடிவிலே, காதல்தான் வெற்றி பெற்றது. "ஆகா! எத்தகைய பேதை நாம்! மகிதலம் போற்றும் மண்டலாதிபதியின் குமாரரிடம் காதல் கொள்ளத் துணிந்து விட்டு, அவருடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையக்கூடிய காரியத்தை செய்தோமே!" என்று வருந்தி, இனிமேல் பல்லவ குமாரரின் விருப்பம் தெரியாமல் காஞ்சிக்கே போவதில்லையென்று தீர்மானித்திருந்தாள். ஆகையினாலேதான் மேற் கண்டவாறு சொன்னாள். அதற்கு மறுமொழியாக ஆயனர் கவலை தொனித்த குரலில் கூறினார்; "என்ன இருந்தாலும் மகேந்திர பல்லவர் தீர்க்கமான அறிவு படைத்தவர். அவருடைய கட்டளைக்கு மாறாக நடந்தால் ஏதாவது விபரீதம் வருமோ, என்னவோ? யாரிடமாவது யோசனை கேடகலாமென்றால், அதற்கும் ஒருவரும் இல்லை. நாகநந்தியடிகளாவது வரக்கூடாதோ? எட்டு மாதத்துக்கு முன்பு போனவர் இன்னும் வரவில்லை. பிக்ஷுவுக்கு என்ன நேர்ந்து விட்டதோ, என்னவோ?" ஆயனரின் மனச்சோர்வைக் கவனித்த சிவகாமி அவரை உற்சாகப்படுத்தும் பொருட்டு, மறுபடியும் "அப்பா! நான் நடனம் ஆடி வெகு காலமாயிற்றே! இன்றைக்கு ஆடுகிறேன் பார்க்கிறீர்களா?" என்றாள். "சிவகாமியின் நாட்டியத்தை நானும் பார்க்கலாமா" என்று ஒரு குரல் கேட்டது. இரண்டு பேரும் ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுத் தூரத்தில் நாகநந்தி அடிகள் நின்று கொண்டிருந்தார். "புத்தம் சரணம் கச்சாமி"
என்று நாகநந்தி கோஷித்து முடித்ததும் ஆயனர், "அடிகளே! வரவேணும்! வரவேணும்!
நினைத்த இடத்தில் நினைத்த போது வந்து அருள் செய்கிறவர் கடவுள்தான் என்று
பெரியோர் சொல்லுவார்கள். தாங்களும் கடவுள் மாதிரி வந்திருக்கிறீர்கள்.
உங்களைப்பற்றி இப்போதுதான் பேசிக் கொண்டிருந்தோம்" என்றார். "தர்மம் சரணம் கச்சாமி" "சங்கம் சரணம் கச்சாமி" "அப்படியா? இந்தக் காவி வஸ்திரதாரியைப் பற்றி நினைவு வைத்துக் கொண்டிருந்தீர்களா? சிவகாமியின் திருநாவினால் கூட நாகநந்தியின் பெயர் உச்சரிக்கப்பட்டதா? அவ்விதமானால் என்னுடைய பாக்கியந்தான்... ஆயனரே உங்கள் குமாரியின் புகழ் தேசமெல்லாம் பரவியிருக்கும் அதிசயத்தை நான் என்னவென்று சொல்வேன்? திருவதிகைக்கும் தில்லைக்கும் போனேன்! உறையூருக்குப் போனேன்; வஞ்சிக்குப் போனேன்; நாகைக்கும் போயிருந்தேன்; இன்னும் தெற்கே மதுரையம்பதிக்கும் கொற்கைத் துறைமுகத்துக்கும் சென்றிருந்தேன். எங்கே போனாலும், எனக்கு முன்னால் சிவகாமியின் புகழ் போயிருக்கக் கண்டேன். காஞ்சியிலிருந்து நான் வந்ததாகத் தெரிந்ததும் எல்லாரும் சிவகாமியின் பரதநாட்டிய கலையைப் பற்றியே கேட்டார்கள். புத்த பிக்ஷுக்களும் ஜைன முனிவர்களும் கேட்டார்கள். சைவப் பெரியார்களும் வைஷ்ணவ பக்தர்களும் கேட்டார்கள். உறையூரில் சோழ மன்னர் கேட்டார். நாகப்பட்டினத்திலே சீன தேசத்திலிருந்து வந்திருக்கும் சித்திரக்காரர்கள் கேட்டார்கள். ஆயனரே! இப்பேர்ப்பட்ட கலைச் செல்வியைப் புதல்வியாகப் பெற நீர் எவ்வளவோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்..." இவ்வாறு, புத்த பிக்ஷு சொன்மாரி பொழிந்து வருகையில் ஆயனரும் சிவகாமியும் இடையில் பேசச் சக்தியற்றவர்களாகப் பிரமித்து நின்றார்கள். கடைசியில் நாகநந்தி, "ஓ மகா சிற்பியே! சென்ற எட்டு மாதத்திற்குள் சிவகாமியின் நடனத் திறமை இன்னும் எவ்வளவோ வளர்ந்திருக்க வேண்டுமே? தென்னாடெல்லாம் புகழும் நடன ராணியின் நாட்டியத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிட்டுமா?" என்றார். நாகநந்தியின் விஷயத்தில் சிவகாமியின் மனப்பாங்குகூட அவருடைய புகழுரைகளினால் ஓரளவு மாறிவிட்டது. எனவே ஆயனர், "ஆடுகிறாயா, அம்மா!" என்று கேட்டதும் உடனே, "ஆகட்டும் அப்பா!" என்றாள் சிவகாமி. மூவரும் வீட்டுக்குச் சென்றதும், சிவகாமி ஒரு நொடியில் நடன உடை தரித்துக் கொண்டு நாட்டியத்துக்கு ஆயத்தமாக வந்து நின்றாள். அவளுடைய முகத்திலும் மேனி முழுவதிலுமே ஒரு புதிய ஆனந்தக் கிளர்ச்சி காணப்பட்டது. மாமல்லரின் காதல் கனிந்த மொழிகளும், அவளுடைய கலைச் சிறப்பைக் குறித்து நாகநந்தி கூறிய புகழுரைகளும் அத்தகைய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. ஆயனர் போட்ட தாளத்துக்கிசைய சிவகாமி நிருத்தம் ஆட ஆரம்பித்தாள். அதில் பாட்டு இல்லை; பொருள் இல்லை; உள்ளக் கருத்தை வெளியிடும் அபிநயம் ஒன்றும் இல்லை. ஒரே ஆனந்தமயமான ஆட்டந்தான். சிவகாமியின் ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வோர் அங்கத்தின் அசைவிலும் அந்த ஆனந்தம் பொங்கி வழிந்தது. ஆஹா! அந்த ஆனந்த நடனத்திலே எத்தனை விதவிதமான நடைகள்? மத்தகஜத்தின் மகோன்னதமான நடை, பஞ்ச கல்யாணிக் குதிரையின் சிருங்கார நடை, துள்ளி விளையாடும் மான் குட்டியின் நெஞ்சையள்ளும் நடை, வனம் வாழ் மயிலின் மனமோகன நடை, அன்னப் பட்சியின் அற்புத அழகு வாய்ந்த நடை. இவ்வளவு நடைகளையும் சிவகாமியின் ஆட்டத்திலே காணக் கூடியதாயிருந்தது. ஆட்டம் ஆரம்பித்துச் சிறிது நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடுவதாகவே தோன்றவில்லை. தன் செயல் என்பதையே இழந்து அவள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. ஆயனரும் தம்மை மறந்த, கால எல்லையையெல்லாம் கடந்த காலதீதமான மன நிலைக்குப் போய்விட்டார். |