உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை மூன்றாம் அத்தியாயம் - சிநேகப் பிரதிக்ஞை ஒரு பக்கம் மாமல்லருடன் சல்லாபம் செய்துகொண்டு வந்தபோதே, மற்றொரு பக்கத்தில் காஞ்சி மாநகரின் விசாலமான இராஜ வீதிகளையும், வீதியின் இருபுறமும் காணப்பட்ட மாட மாளிகைகளையும், ஈ மொய்ப்பதுபோல் ஜனக்கூட்டம் நிறைந்த கடை வீதிகளையும், இடையிடையே தீபாலங்காரங்களுடன் விளங்கிய சிவாலயம் விஷ்ணு ஆலயங்களையும் தெய்வத் தமிழை வளர்த்த சைவ வைஷ்ணவ மடங்களையும், பௌத்தர் சமணர்களின் கோயில்களையும், வேதகோஷம் எழுந்த சமஸ்கிருத கடிகை ஸ்தானங்களையும், சிற்பசித்திர கலா மண்டபங்களையும் பரஞ்சோதி கண்கொட்டா ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு வந்தார். எட்டு மாதத்துக்கு முன்பு அவர் தெற்குக் கோட்டை வாசல் வழியாகப் பிரவேசித்த அன்றிரவு இருந்ததைக் காட்டிலும் இன்று நகரில் கலகலப்பும் களையும் அதிகமாயிருந்தன. அன்றைக்கு யுத்தச் செய்தி திடீரென்று வந்திருந்தபடியாலும் கோட்டை வாசல்கள் சாத்தப்பட்டு நகரமெல்லாம் ஒற்றர் வேட்டை நடந்து கொண்டிருந்தபடியாலும் காஞ்சி நகரம் அப்படிப் பொலிவிழந்து காணப்பட்டது போலும்! அந்த ஆரம்ப பீதிக்குப் பிறகு ஜனங்கள் மறுபடியும் ஒருவாறு மனோதைரியம் அடையவே எல்லாக் காரியங்களும் வழக்கம்போல் நடந்து வருகின்றன போலும்! ஆனால் இதெல்லாம் எத்தனை நாளைக்கு? அதி சீக்கிரத்தில் மீண்டும் இந்தச் சௌந்தரிய நகரம் அழகும் பொலிவும் இழந்து இருளடைந்து ஜனசூன்யமாகத் தோன்றப் போகிறதல்லவா? இந்த எண்ணங்கள் எல்லாம் மாமல்லரின் ரதத்தில் வந்து கொண்டிருந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் இடையிடையே எழுந்துகொண்டிருந்தன. ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார். "ஆம்; தளபதி! இந்தச் சந்நிதிக்கு இதற்கு முன்னால் நீர் வந்ததே இல்லையல்லவா?" என்று மாமல்லர் கேட்டார். "இல்லை; வந்ததில்லை. முன்தடவை இந்த நகரத்திற்குள் நான் பிரவேசித்தபோது, ஏகாம்பரர் சந்நிதியைத்தான் தேடிக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த இடம் வரையில் அன்றைக்கு வந்து சேரவில்லை. கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி. கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார். "புலிகேசியின் காதலா? என்ன சொல்கிறீர், தளபதி?" என்று மாமல்லர் கேட்டார். "புலிகேசி இந்தக் காஞ்சி சுந்தரியின்மேல் கொண்டிருக்கும் காதலைப் பற்றி வீரர் வஜ்ரபாஹு எனக்குச் சொன்னார். காஞ்சி என்னும் பெயரைக் கேட்டதும் காதலியின் பெயரைக் கேட்டால் காதலனுடைய முகத்திலே என்ன மாறுதல் உண்டாகுமோ, அம்மாதிரி மாறுதல் புலிகேசியின் முகத்தில் உண்டாயிற்றாம்!" "தளபதி! வீரர் வஜ்ரபாஹு எவ்வளவுதான் சாமர்த்தியசாலியானாலும், அப்படித் துணிந்து புலிகேசியிடம் போயிருக்கக் கூடாதல்லவா? உம் கருத்து என்ன?" என்று மாமல்லர் கேட்டார். அதற்கு மறுமொழி சொல்லாமல் பரஞ்சோதி, "பிரபு! இங்கே திருநாவுக்கரசர் மடம் எது?" என்றார். "அதோ வெறுமையாய்க் கிடக்கிறதே அந்தக் கட்டிடந்தான்..." "ஆஹா! இந்த மடத்தில் சேர்ந்து தமிழ்க் கல்வி கற்பதற்காகத்தான் வந்தேன். நான் கல்வி கற்பதற்காக வந்த முகூர்த்தம் மடத்தையே மூடும்படியாகி விட்டது!" என்றார் பரஞ்சோதி. நரசிம்மவர்மர் மீண்டும் இளநகை புரிந்துவிட்டு, "பல்லவ குலத்துக்கு நீர் எவ்வளவோ மகத்தான சேவைகளையெல்லாம் செய்யவேண்டுமென்று ஏற்பட்டிருக்கும்போது நாவுக்கரசரின் சீடராக நீர் எப்படிப் போயிருக்க முடியும்? அதோடு, என்னிடம் நீர் தமிழ் பயிலவேண்டும் என்பதும் தெய்வத் தமிழ்மொழியை அளித்த இறைவனுடைய சித்தமாக ஏற்பட்டிருக்கிறதே!" "இதைத் தெரிந்து கொண்டுதான் அன்றிரவு அந்த யானை மதங்கொண்டு ஓடி வந்ததோ, என்னவோ? அதன் காரணமாகத்தானே இப்படியெல்லாம் நேரிட்டது?" என்றார் பரஞ்சோதி. உடனே சட்டென்று நினைத்துக்கொண்டு, "ஐயா! ஆயனரும் சிவகாமியும் சுகமாயிருக்கிறார்களா?" என்று கேட்டார். "சிவகாமி" என்ற பெயரைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைப் பரஞ்சோதி கவனியாமல் போகவில்லை. "ஆஹா! காதலைப் பற்றிய வஜ்ரபாஹுவின் கூற்றுக்கு மாமல்லரே உதாரணமாக இருக்கிறார்!" என்று மனத்தில் எண்ணிக்கொண்டார். மாமல்லர் மறுமொழி கூறியபோது அவருடைய குரலிலே கூட மாறுதல் இருந்தது. "சுகமாயிருக்கிறார்கள் என்றுதான் அறிகிறேன். தளபதி! ஆனால், அவர்களை நான் பார்த்துப் பல மாதங்கள் ஆயின. ஆயனரின் பழைய அரண்ய வீட்டில் தான் அவர்கள் இருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் கட்டளைப்படி துறைமுகத்தில் திருப்பணி செய்த கல் தச்சர்களையெல்லாம் பாரத மண்டபங்கள் கட்டுவதற்கு அனுப்பிய பிறகு ஆயனரும் மாமல்லபுரத்திலிருந்து தமது அரண்ய வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டார்" என்று மாமல்லர் கூறியபோது, அவருடைய வார்த்தைகளில் முன்னே காணப்படாத உணர்ச்சி தொனித்தது. மறுபடியும் மாமல்லர் பரஞ்சோதியின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டவராய் உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினார்: "தளபதி பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எவ்வளவோ சேவை சென்ற எட்டு மாதத்தில் செய்திருக்கிறீர். இன்னும் எவ்வளவோ செய்யப் போகிறீர். ஆனால் அன்றிரவு நீர் செய்த வீரச் செயலைப் போன்ற மகத்தான சேவை வேறொன்றும் இருக்க முடியாது. ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்றினீர் அல்லவா? அந்தச் செயலை நான் எவ்வளவு தூரம் பாராட்டுகிறேன் என்பதற்கு இதோ அடையாளத்தைப் பாரும்!" என்று கூறி அன்று மதயானை மீது பரஞ்சோதி எறிந்த வேலை எடுத்து காட்டினார். மாமல்லரின் உணர்ச்சி ததும்பிய வார்த்தைகளினால் பரஞ்சோதியின் மனமும் கனிந்திருந்தது. எனவே, அவர் மறுமொழி கூற முடியாதவராய் மாமல்லர் நீட்டிய வேலை வாங்கிக் கொள்வதற்காக ஒரு கையினால் அதன் அடிப் பகுதியைப் பிடித்தார். நரசிம்மவர்மர் வேலைக் கொடுக்காமல் தாமும் அதை ஒரு கையினால் பிடித்துக் கொண்ட வண்ணம் சொன்னார்: "இந்த ஏகாம்பரர் சந்நிதியில் நான் எத்தனையோ தடவை எனக்கு ஓர் உற்ற நண்பனை அளிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்திருக்கிறேன். அந்தப் பிரார்த்தனையின் பயனாகவே நீர் இந்தக் காஞ்சிக்கு வந்ததாக நம்புகிறேன். தளபதி! இந்த சந்நிதியிலேயே நீரும் நானும் இன்று சிநேகப் பிரதிக்ஞை செய்து கொள்வோம். ஆயனரையும் சிவகாமியையும் காத்த இந்த வீரவேலின் மீது ஆணை வைத்து நம்முடைய நட்பை நிலைப்படுத்திக் கொள்வோம்" என்றார். ஏகாம்பரநாதரின் திருச்சந்நிதியில் அப்போது தீபாராதனைக்குரிய ஆலாட்சிமணி "ஓம் ஓம்" என்று ஒலித்தது. அன்றிரவு கண்ணபிரான் கமலியிடம் சொன்னான்: "என் கண்ணே! உன்னுடைய சிநேகிதி சிவகாமியின் சக்களத்தியை இன்று ரதத்தில் வைத்து ஓட்டிக்கொண்டு வந்தேன். அதை நினைத்தால் எனக்குத் துக்கம் துக்கமாய் வருகிறது!" "இது என்ன பிதற்றல்? நீ சொல்வது உண்மையானால் அவள் யார் என்று இப்பொழுது சொல்லு! உடனே போய் விஷங்கொடுத்துக் கொன்று விட்டு வருகிறேன்" என்றாள் கமலி. "அவள் இல்லை, அவன்! மதயானை மேல் வேல் எறிந்து உன் சிநேகிதியைக் காப்பாற்றிய வாலிபன் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவன் இப்போது காஞ்சிக் கோட்டையின் தளபதியாம். அவனோடு குமார சக்கரவர்த்தி குலாவியதைப் பார்த்தால் சிவகாமியைக் கூட மறந்து விடுவார் போலத் தோன்றியது." "உனக்குத் தெரிந்த லட்சணம் அவ்வளவுதான். அந்தப் பிள்ளையின் மேல் மாமல்லருக்கு ஏன் அவ்வளவு பிரியம் என்று நான் சொல்லட்டுமா? என் தோழியைக் காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தான் கண்ணா! இதிலிருந்தே மாமல்லரின் மனம் எவ்வளவு உறுதியாயிருக்கிறதென்று தெரிகிறது!" என்றாள் கமலி. "உன் புத்திக் கூர்மையே கூர்மை! கேவலம் ஒரு ரத சாரதியைப் போய் நீ கல்யாணம் செய்து கொண்டாயே. இராஜ்யம் ஆளும் மதிமந்திரியையல்லவா நீ மணந்து கொண்டிருக்க வேண்டும்!" என்று கண்ணன் சொன்னான். "அதனாலேதான் காதலுக்குக் கண்ணில்லை என்ற பழமொழி ஏற்பட்டிருக்கிறது. உனக்குத் தெரியாதா?" என்றாள் கமலி. |