மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்

பதினெட்டாம் அத்தியாயம் - “புலிகேசிக்குத் தெரியுமா?”

     மறுநாள் மாலை கண்ணபிரானுடைய வீட்டுக் கூடத்தில் ஆயனர், சிவகாமி, கமலி, கமலியின் மாமனார் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். புலிகேசியும் மகேந்திர பல்லவரும் நகர்வலம் வந்தது பற்றியும், அவர்கள் வடக்குக் கோட்டை வாசலில் ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொண்ட காட்சியைப் பற்றியும், புலிகேசி அக்கோட்டை வாசல் வழியாக வெளியேறியது பற்றியும் யோகி அசுவபாலர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். புலிகேசி காஞ்சிக்கு விஜயம் செய்த நாளிலிருந்து அந்த யோகி தமது யோக சாதனத்தை அடியோடு மறந்து நகரில் நடந்த களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

     மேற்படி பேச்சுக்கு இடையிடையே அங்கே தவழ்ந்து வட்டமிட்டுக் கொண்டிருந்த சின்னக் கண்ணன் அவர்களுடைய கவனத்தைக் கவர முயற்சி செய்தான். கமலியும் அவனுடைய நோக்கத்துக்குத் துணை செய்கிறவளாய், பேச்சை மறித்து, சின்னக் கண்ணனுடைய பிரதாபங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் அசுவபாலர் அவளை, "ஐயோ! பைத்தியமே! இப்படியும் ஒரு அசடு உண்டா?" என்று சொல்லும் தோரணையில் பார்த்துவிட்டு, மேலே தமது வரலாற்றைத் தொடர்ந்தார்.

     எல்லாம் முடிந்ததும் சிவகாமி, "மாமா வாதாபிச் சக்கரவர்த்திதான் போய்த் தொலைந்துவிட்டாரே? கோட்டைக் கதவுகளை இனிமேல் திறந்துவிடுவார்கள் அல்லவா?" என்று கேட்டாள்.

     "எல்லாம் நாளை மறுநாள் தெரிந்து விடும், அம்மா! எனக்கென்னவோ அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை. அந்த வாதாபி சளுக்கனுடைய முகத்தில் பத்து நாளாக இருந்த முகமலர்ச்சியை இன்றைக்குக் காணோம். பல்லவரிடம் விடைபெற்று வெளியே போகும் சமயத்தில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டிருந்தான்! அந்த ராட்சதன் என்ன செய்கிறானோ, என்னவோ?"

     "அப்படி என்ன செய்துவிடுவான்?" என்று சிவகாமி கேட்டாள்.

     "மறுபடியும் அவன் கோட்டையை முற்றுகை போடத் தொடங்கலாம். அல்லது கோட்டையைத் தாக்கிப் பிடிக்க முயலலாம்."

     "அப்படியெல்லாம் செய்வார்களா, என்ன? இத்தனை நாள் இவ்வளவு சிநேகம் கொண்டாடிவிட்டு?" என்று சிவகாமி வியப்புடன் கேட்டாள்.

     "தங்கச்சி! இது என்ன நீ கூட இப்படிக் கேட்கிறாயே? இராஜ குலத்தினருக்கு விவஸ்தை ஏது? இன்றைக்குச் சிநேகிதர்களாயிருப்பார்கள்; நாளைக்குக் குத்திக் கொள்வார்கள். இன்றைக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தியாவார்கள்; நாளைக்குப் போர்க்களத்தில் சண்டை போடுவார்கள்!" என்றாள் கமலி.

     ஆயனர், அசுவபாலரைப் பார்த்து, "வாதாபி அரசருக்கு என்ன கோபமாம்? எதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

     "சளுக்கனும் பாண்டியனும் சிநேகிதர்களாம். கொள்ளிடக் கரையில் இரண்டு பேரும், ரொம்ப உறவு கொண்டாடினார்களாம். சளுக்கன் இங்கே வந்திருக்கும் போது, மாமல்லர் பாண்டியன் மீது படையெடுத்துச் சென்றதில் இவனுக்குக் கோபம் என்று சிலர் சொல்லுகிறார்கள். இன்னும் ஒரு அபிப்பிராயம் என்ன தெரியுமா?...." என்று அசுவபாலர் நிறுத்தினார்.

     "என்ன சொல்லுங்களேன்?" என்றார் ஆயனர்.

     "சிவகாமியின் நடனத்தைப் பார்த்து விட்டு மயங்கிப் போய் வாதாபி அரசர் சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி கேட்டாராம். பல்லவேந்திரர் மறுத்து விட்டாராம்! - அதனால்தான் புலிகேசிக்குக் கோபமாம்!" என்றார் அசுவபாலர்.

     "அவன் நாசமாய்ப் போக! அவன் தலையிலே இடி விழ!" என்றாள் கமலி அழுத்தந் திருத்தமாக.

     அப்போது, "ஆஹா! இவ்வளவு திவ்யமான ஆசீர்வாதம் யார் வாயிலிருந்து வருகிறது?" என்று ஒரு குரல் கேட்டதும், அனைவரும் திடுக்கிட்டு எழுந்து நின்று, குரல் வந்த பக்கத்தைப் பார்த்தார்கள். அந்தக் கம்பீரமான குரல் சின்னக் கண்ணனுடைய கவனத்தைக் கூடக் கவர்ந்து விட்டதாகத் தோன்றியது. அவனும் உட்கார்ந்தபடியே ஆவலுடன் குரல் வந்த திசையை நோக்கினான்.

     வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே வந்தவர் வேறு யாருமில்லை; மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான்.

     "அசுவபாலரே! நீர் சொல்லிக் கொண்டிருந்த வதந்தி என் காதிலும் விழுந்தது. ஆனால் அது உண்மையல்ல; வாதாபிச் சக்கரவர்த்தி சிவகாமியைத் தம்முடன் அனுப்பும்படி என்னைக் கேட்கவில்லை. பின்னே என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் பெண்ணுக்கு என்னவோ இவ்வளவு பிரமாத மரியாதை செய்கிறீரே? என்னுடன் வாதாபிக்கு அனுப்பினால் சாட்டையினால் அடித்து நாட்டியம் ஆடச் சொல்வேன்' என்றார். அவ்வளவு ரஸிக சிகாமணி அந்த மூர்க்கப் புலிகேசி!" என்றார் சக்கரவர்த்தி. அப்போது அவருடைய கண்களில் உண்மையான கோபத்துக்கும் வெறுப்புக்கும் அறிகுறி காணப்பட்டது.

     அப்போது சிவகாமி ஓர் அடி முன் வந்து சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து, "பிரபு! அப்பேர்ப்பட்ட பரம ரஸிகரின் முன்னிலையிலே என்னை நாட்டியம் ஆடச் சொன்னீர்களே! அது தர்மமா?" என்று கம்பீரமாக கேட்டாள்.

     "அது தவறுதான், குழந்தாய்! புலிகேசியின் முன்னால் உன்னை நான் ஆடியிருக்கச் சொல்லக்கூடாதுதான்; ஆனால் நான் கண்டேனா? அஜந்தாவின் அற்புத வர்ண சித்திரங்கள் எவனுடைய இராஜ்யத்தில் உள்ளனவோ, அவன் இப்பேர்ப்பட்ட ரஸிகத் தன்மையற்ற மூர்க்கனாயிருப்பான் என்று நான் நினைக்கவில்லை.... ஆயனரே! ஒரு செய்தி கேட்டீரா? காஞ்சிக் கோட்டைக்கு வெளியே இத்தனை மாதம் சளுக்க சக்கரவர்த்தி தண்டு இறங்கியிருந்தாரல்லவா? ஒரு தடவையாவது மாமல்லபுரத்துக்குப் போய் அவர் பார்க்கவில்லையாம்! நான் கேட்டதற்கு, 'உயிருள்ள மனிதர்கள் இருக்கும் போது வெறும் கல் பதுமைகளை யார் போய்ப் பார்த்துக் கொண்டிருப்பது?' என்று விடை சொன்னார். இது மட்டுமா? 'அஜந்தாவிலே அப்படி என்ன பிரமாதமாயிருக்கிறது? சுவரில் எழுதிய வெறும் சித்திரங்கள் தான்?' என்றார். இப்பேர்ப்பட்ட மனுஷரிடந்தான் அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்து வரும் பொருட்டு நாகநந்தியின் ஓலையுடன் பரஞ்சோதியை நீர் அனுப்பி வைத்தீர்; உமக்கு அது ஞாபகம் இருக்கிறதா?" என்று மகேந்திர பல்லவர் ஆயனரை நோக்கிக் கேட்டார்.

     ஆயனருக்கு அப்போது உண்டான அளவு கடந்த ஆச்சரியத்தை அவருடைய முகக் குறி காட்டியது. "பல்லவேந்திரா! உண்மையாகவா? வாதாபிச் சக்கரவர்த்திக்கா நாகநந்தி ஓலை கொடுத்து அனுப்பினார்? இது தங்களுக்கு எப்படி...?" என்று தயங்கினார்.

     "எப்படித் தெரிந்தது என்றுதானே கேட்கிறீர்? ஓலையை நானே படித்துப் பார்த்தேன். ஆனால் நாகநந்தி ரஸிகர் இந்த மூர்க்கப் புலிகேசியைப் போன்றவர் அல்ல. அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? 'சைனியத்துடன் சீக்கிரம் வந்து பல்லவ ராஜ்யத்தையும் காஞ்சி சுந்தரியையும் நீ கைப்பற்றிக் கொள். சிவகாமியை மட்டும் எனக்குக் கொடுத்துவிடு!' என்று எழுதியிருந்தார். எப்படியிருக்கிறது, விஷயம்?...ஆயனரே? உம்முடைய அத்தியந்த சிநேகிதர் நாகநந்தியினால் இந்தப் பல்லவ இராஜ்யத்துக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வருவதற்கு இருந்தது, தெரியுமா?" என்றார் சக்கரவர்த்தி.

     ஆனால், ஆயனரோ சக்கரவர்த்தி கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கவனித்தவராகக் காணப்படவில்லை. வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராகக் காணப்பட்டார். 'ஆஹா! புத்த பிக்ஷு கொடுத்த ஓலை வாதாபிச் சக்கரவர்த்திக்கா?... அப்படியானால், அஜந்தா வர்ண இரகசியம் புலிகேசி மகாராஜாவுக்குத் தெரியுமா?' என்று தமக்குத் தாமே மெதுவான குரலில் சொல்லிக் கொண்டார்.