![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் இருபதாம் அத்தியாயம் - காபாலிகர் குகை வாதாபிச் சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்று மூன்று நாள் ஆகியும், கோட்டைக் கதவுகள் திறக்கப்படவில்லை. இதைப் பற்றி நகரில் பல வகை வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. "ஒப்பந்தப்படி வாதாபிப் படைகள் திரும்பிப் போகவில்லை; மறுபடியும் கோட்டையை நெருங்கி வந்து வளைத்துக் கொண்டிருக்கின்றன!" என்று சிலர் சொன்னார்கள். புலிகேசி வெளியில் போன பிறகு மகேந்திர பல்லவருக்கு ஏதோ ஓலை அனுப்பியிருந்ததாகவும், அதற்கு மறு மொழியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் சிலர் சொன்னார்கள். "வாதாபி மகாராஜாவுக்கு மிகவும் வேண்டியவரான யாரோ ஒரு புத்த பிக்ஷுவை மகேந்திர பல்லவர் சிறையில் வைத்திருக்கிறாராம். அவரை உடனே விடுதலை செய்து அனுப்பாவிடில் மீண்டும் யுத்தம் தொடங்குவேன்!" என்று அந்த ஓலையில் எழுதியிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். "ஆயனரையும் சிவகாமியையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிடில் யுத்தத்துக்கு ஆயத்தமாக வேண்டும்" என்று எழுதியிருந்ததாக இன்னொரு வதந்தி உலாவியது. மகேந்திர பல்லவருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சி நகரத்து மக்கள் முதன் முதலாக இப்போதுதான் அவருடைய காரியங்களைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்தார்கள். "புலிகேசியைக் காஞ்சிக்குள் வர விட்டதே தவறு!" என்று சிலர் சொன்னார்கள். "அப்படியே நகருக்குள் விட்டாலும் அவனுக்கு என்ன இவ்வளவு உபசாரம்? சத்துரு அரசனிடம் இவ்வளவு தாழ்ந்து போகலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அந்த மூர்க்கனுக்கு முன்னால், நமது கலைச்செல்வி சிவகாமியை ஆடச் சொல்லியிருக்க வேண்டியதில்லை; சிவகாமியின் நடனத்தைப் பார்த்து விட்டுத்தான் புலிகேசி தேன் குடித்த நரியாக ஆகிவிட்டான்!" என்று வேறு சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். அந்த மாதிரியான நகர மாந்தர் பேச்செல்லாம் கமலி மூலமாக வடிகட்டி வந்து ஆயனரின் காதிலேயும் எட்டியது. அதிலெல்லாம் ஒரே ஒரு விஷயந்தான் ஆயனர் மனத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதாவது வடக்குக் கோட்டை வாசலுக்குக் கொஞ்ச தூரத்தில் வாதாபிப் படையின் தண்டு இன்னும் இருக்கிறது என்பதுதான். "வாதாபி மன்னர் புறப்படுவதற்குள் இந்தக் கோட்டையை விட்டு நாம் வெளியேறி விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அவரை எப்படியும் பார்த்து அஜந்தா வர்ணத்தைப் பற்றிக் கேட்டு விடுவேனே?" என்று அடிக்கடி ஆயனர் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு தடவை திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல், "நகரிலிருந்து வெளியே போவதற்குச் சுரங்க வழி ஒன்று இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் போய் விடலாம்!" என்றார். இதைக் கேட்ட சிவகாமி கண்களில் மின்வெட்டுடன், "நிஜந்தானா, அப்பா! சுரங்க வழி தெரிந்தால் நாம் வெளியே போய் விடலாமா!" என்று கேட்டாள். "போய் விடலாம். நான் கூட அந்தச் சுரங்க வழியில் கொஞ்ச நாள் வேலை செய்திருக்கிறேன். ஆனால் அதற்கு வாசல் எங்கே என்று மட்டும் தெரியாது! அதை எப்படிக் கண்டுபிடிப்பது?" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார். "அப்பா நம் கமலி அக்காவுக்கு அந்தச் சுரங்க வழி தெரியுமாம்!" என்று சிவகாமி மெல்லிய குரலில் கூறியதும், ஆயனர் பரபரப்புடன் எழுந்து கமலியின் அருகில் வந்து அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, "என் கண்ணே குழந்தாய்! உன் தங்கச்சி சொல்வது உண்மைதானா? அப்படியானால் நீ எனக்கு அந்தச் சுரங்க வழியைக் காட்டவேணும். இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன்" என்றார். "ஆகட்டும், சித்தப்பா! ஆனால், சமயம் பார்த்துத்தான் உங்களைச் சுரங்க வழிக்கு அழைத்துப் போக வேண்டும். அங்கே பலமான காவல் இருக்கிறது!" என்றாள் கமலி. மூன்று தினங்களாக அசுவபாலர் அநேகமாக யோக மண்டபத்திலேயே காலம் கழித்து வந்தார். மண்டபத்திலிருந்து அடிக்கடி மணிச் சப்தமும் கலகலத் தொனியும் பேச்சுக் குரலும் கேட்டுக் கொண்டிருந்தன. நாலாம் நாள் இரவு ஜாமத்தில் ஆயனர் தூக்கம் பிடிக்காமல் பலகணியின் வழியாக அரண்மனைத் தோட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நிலா வெளிச்சத்தில் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டார். தோட்டத்தின் வழியாக நல்ல ஆஜானுபாகுவான ஆகிருதி உடைய ஒருவரை இரண்டு புறத்திலும் இரண்டு பேர் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு வந்தார்கள். நடுவில் இருந்தவரின் கண்கள் துணியினால் கட்டப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது. இன்னும் சிறிது உற்றுப் பார்த்தபோது, நடுவில் நடந்து கொண்டிருந்த ஆஜானுபாகுவான உருவம் ஒரு புத்த பிக்ஷுவின் வடிவமாகக் காணப்பட்டது. அந்த உருவம் ஆயனருக்கு நாகநந்தியை நினைவூட்டியது. ஒருவேளை நாகநந்திதானோ அவர்? ஊர் வதந்தியின்படி இந்தப் புத்த பிக்ஷுவுக்காகத்தான் புலிகேசி இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தாரோ? நாகநந்தியை அதற்காகத்தான் சுரங்க வழியாக அனுப்புகிறார்களோ? அப்படியானால் நாகநந்தி போய்ச் சேர்ந்ததும் புலிகேசி புறப்பட்டு விடுவாரல்லவா? ஆஹா! எப்பேர்ப்பட்ட அருமையான சந்தர்ப்பம் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது. நாகநந்திக்கும் புலிகேசிக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஆயனருடைய மனத்திலும் அப்போது தென்பட்டது. நாகநந்தியடிகள் உண்மையில் யாராயிருக்கலாம்?... இவ்விதம் பற்பல எண்ணங்களினால் அலைப்புண்ட ஆயனர் அன்றிரவு தூங்கவே இல்லை. பொழுது புலரும் சமயத்தில் யோக மண்டபத்திலிருந்து வீட்டுக்கு வந்த அசுவபாலர் ஆயனரைப் பார்த்தார். "என்ன சிற்பியாரே! இரவெல்லாம் நீர் தூங்கவில்லை போலிருக்கிறது!" என்றார். "ஆம் ஐயா! தோட்டத்தில் உங்களுடைய யோக மண்டபத்தில் இரவெல்லாம் ஒரே கலகலப்பாயிருந்ததே! என்ன விசேஷம்?" என்று ஆயனர் கேட்டார். அசுவபாலர், "கலகலப்பாவது, ஒன்றாவது? ஒருவேளை நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்" என்று சொல்லிவிட்டு, "நண்பரே, ஆனால் ஒன்று உண்மை. நேற்றிரவு யோக சாதனத்தில் நான் ஓர் அபூர்வமான அனுபவத்தை அடைந்தேன். அதை உடனே போய்ச் சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு வரவேண்டும்!" என்று கூறி விரைந்து வெளியே சென்றார். அவர் போய்ச் சில நிமிஷத்துக்கெல்லாம் கமலி வந்து ஆயனர், சிவகாமி இருவரையும் அவசரப்படுத்தினாள். ஏற்கெனவே முடிவு செய்திருந்தபடி முக்கியமான துணிமணிகளை ஒரு ஓலைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு, எந்த நிமிஷமும் கிளம்புவதற்கு அவர்கள் சித்தமாக இருந்தார்கள். எனவே, உடனே மூவரும் கிளம்பி அரண்மனைத் தோட்டத்திலிருந்த மண்டபத்துக்குள் சென்றார்கள். மண்டபத்தின் மத்தியில் இருந்த சிவலிங்கத்தைக் கமலி லாகவமாக அப்புறம் நகர்த்தினாள். லிங்கம் இருந்த இடத்தில் சுரங்க வழியின் படிக்கட்டுக் காணப்பட்டது. கமலி ஆயத்தமாக வைத்திருந்த தீபத்தை எடுத்து ஆயனரிடம் கொடுத்து, "சித்தப்பா, சீக்கிரம்!" என்றாள். ஆயனர் தீபத்தை வாங்கிக் கொண்டு சுரங்க வழியின் படிக்கட்டில் இறங்கினார். சிவகாமி கமலியை ஆர்வத்துடன் கட்டிக் கொண்டாள். இருவருடைய கண்களிலும் கண்ணீர் ததும்பிற்று. "அக்கா! போய்வருகிறேன்!" என்று தழுதழுத்த குரலில் கூறினாள் சிவகாமி. "தங்கச்சி! போய்வா! மறுபடி காஞ்சிக்குத் திரும்பி வரும் போது பல்லவ குமாரரின் பட்ட மகிஷியாகத் திரும்பி வர வேண்டும்!" என்று கமலி ஆசி கூறினாள். "அக்கா! நான் திரும்பி வரும்வரை எனக்காகச் சின்னக் கண்ணனுக்குத் தினமும் ஆயிரம் முத்தம் கொடு!" என்றாள் சிவகாமி. கமலி சிரித்துக் கொண்டே, "அவன் மூச்சு முட்டிச் சாக வேண்டியதுதான்!" என்றாள். சிவகாமி சுரங்கப் படியில் இறங்கிய போது அவளுடைய உள்ளம் பதை பதைத்தது. மார்பு படபட என்று அடித்துக் கொண்டது. ஒளி நிறைந்த குதூகலமான உலகத்திலிருந்து இருளும் ஐயமும் பயங்கரமும் நிறைந்த ஏதோ பாதாள உலகத்துக்குப் போவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அந்த உணர்ச்சியை மனோதிடத்தினால் போக்கிக் கொண்டு ஆயனரின் பின்னால் நடந்தாள். இருளடர்ந்த சுரங்கப் பாதையில் ஆயனரும் சிவகாமியும் ஏறக்குறைய ஒரு முகூர்த்த நேரம் நடந்தார்கள். இவ்வளவு நேரமும் அவர்களுக்குள் அதிகமான பேச்சு ஒன்றும் நடைபெறவில்லை. அடிக்கடி ஆயனர் நின்று சிவகாமியின் கையைப் பிடித்து "இனி அதிக தூரம் இராது, அம்மா! சீக்கிரம் வழி முடிந்து விடும்!" என்று தைரியப்படுத்திக் கொண்டு போனார். ஒரு முகூர்த்த நேரத்துக்குப் பிறகு, திடீரென்று வெப்பம் மாறி ஜில்லிப்பு உணர்ச்சி ஏற்பட்டது. "அம்மா, சிவகாமி! கோட்டைக்கு வெளியே வந்து விட்டோ ம், அகழியை கடக்கிறோம்!" என்றார். ஒரு கணம் அங்கே நின்று, "குழந்தாய்! இங்கேதான் நான் வேலை செய்ததாக ஞாபகம் இருக்கிறது. அகழித் தண்ணீர் உள்ளே வராமல் வெகு சாதுரியமாக இங்கே வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு இல்லை, ஏதாவது ஆபத்துக் காலங்களில் இந்தச் சுரங்க வழியை மூடிவிடவும் இங்கேதான் உபாயம் இருக்கிறது. அதோ, பார்த்தாயா? அந்த அடையாளமிட்ட இடத்தில் ஒரு கல்லை இலேசாகப் பெயர்த்தால், அகழி ஜலம் கடகடவென்று உள்ளே புகுந்து விடும். அப்புறம் வெளியிலிருந்தும் உள்ளே போக முடியாது, உள்ளேயிருந்தும் வெளியே போக முடியாது!" என்றார். "நல்ல வேளை! அப்படி ஏதாவது ஏற்படுவதற்கு முன்னால் நாம் வெளியே போய்விடுவோமல்லவா?" என்றாள் சிவகாமி. அதற்குப் பிறகு இன்னும் ஒரு முகூர்த்த நேரம் வழி நடந்த பிறகு, மேலேயிருந்து வெளிச்சம் வருவதைக் கண்டார்கள். "ஆ! சுரங்க வழி முடிந்துவிட்டது!" என்றார் ஆயனர். இருவரும் படிகள் வழியாக மேலே ஒளிவந்த இடத்தை நோக்கி ஏறிச் சென்றார்கள். அவர்கள் ஏறி வந்து நின்ற இடம் ஒரு சின்ன மலைப்பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட சமணர்களின் குகைக் கோயில். ஜைன தீர்த்தங்கரர்களின் பெரிய பிரதிமைகள் மூன்று அங்கே காணப்பட்டன. ஆனால் என்ன பயங்கரம்? காபாலிகர்கள் அந்தச் சமணக் குகையை ஆக்கிரமித்து விட்டதாகத் தோன்றியது. எங்கே பார்த்தாலும் மண்டை ஓடுகள் சிதறிக் கிடந்தன. போதாதற்கு, மூன்று தீர்த்தங்கரர்களின் சிலைகளுக்கு அப்பால் நாலாவது சிலையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு காபாலிகன் உட்கார்ந்திருந்தான். உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு மண்டை ஓட்டு மாலை அணிந்திருந்த அவனுடைய தோற்றம் பார்ப்பதற்கு மிகக் கோரமாயிருந்தது. ஆனால், நல்ல வேளையாக அவன் கண்களை இறுக மூடிக் கொண்டு யோக நிஷ்டையில் உட்கார்ந்திருந்தான். ஆயனரும், சிவகாமியும் இரண்டாவது தடவை அவனைப் பார்க்காமல் பாறையின் படிகள் வழியாக இறங்கி விரைந்து சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்ற பிறகு, "அப்பா! இதென்ன? சமணர் குகைக் கோவிலில் காபாலிகன் வந்து உட்கார்ந்திருக்கிறானே?" என்று சிவகாமி கேட்டாள். "அம்மா! இந்தப் பாறை ஒரு காலத்தில் சமணப் பள்ளியாக இருந்தது. மகேந்திர பல்லவரிடம் கோபித்துக் கொண்டு சமணர்கள் இந்த நாட்டை விட்டுப் போய்விட்டார்களல்லவா? கோட்டை முற்றுகைக்கு முன்னால் காஞ்சி நகரிலுள்ள காபாலிகர்களையெல்லாம் வெளியில் துரத்தியபோது இந்தக் குகையை அவர்கள் பிடித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது! அவர்களுக்கு யுத்தம் என்றால் கொண்டாட்டந்தானே! கபாலங்கள் ஏராளமாய்க் கிடைக்குமல்லவா?" இப்படிப் பேசிக்கொண்டு ஆயனரும், சிவகாமியும் காட்டுப் பிரதேசத்தின் வழியே நடந்து போனார்கள். கொஞ்ச தூரம் போவதற்குள்ளே, அவர்களுக்கு எதிர்ப்புறத்திலிருந்து பலர் கும்பலாக வரும் பெரு முழக்கம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம், ஒரு பெரும் கும்பல் அவர்கள் கண் முன்னால் எதிர்ப்பட்டது. அப்படி வந்தவர்கள் வாதாபிப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான்! அவர்களுக்கு மத்தியில் தூக்கிப் பிடிக்கப்பட்டிருந்த வராகக் கொடியிலிருந்து இது தெளிவாகத் தெரிந்தது! |