மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்

இருபத்து மூன்றாம் அத்தியாயம் - அபயப் பிரதானம்

     "சிவகாமி! மெய்யாகவே நீதானா? அல்லது என் கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா?" என்று நாகநந்தியடிகள் போலி அவநம்பிக்கையுடன் கேட்டார்.

     "அடிகளே! நான்தான்; அனாதைச் சிவகாமிதான்; இந்த ஏழைச் சிற்பியின் மகளைக் காப்பாற்றுங்கள் சுவாமி!"

     "அப்படிச் சொல்லாதே, அம்மா! நீயா அனாதை? நீயா ஏழை? பல்லவ ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி மாமல்லப் பிரபுவின் காதலுக்குரிய பாக்கியசாலியல்லவா நீ? மண்டலாதிபதியான மகேந்திர பல்லவரின் மருமகளாகப் போகிறவளல்லவா?"

     "சுவாமி! என்மேல் பழி தீர்த்துக் கொள்ள இது சமயமல்ல! தங்களை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன்; காப்பாற்ற வேண்டும்" என்று சிவகாமி அலறினாள்.

     "பெண்ணே! காவித் துணி தரித்த ஏழைப் பரதேசி நான்! என்னால் உன்னை எப்படிக் காப்பாற்ற முடியும்?"

     "தங்களால் முடியும், சுவாமி! தங்களால் முடியும்! தாங்கள் மனது வைத்தால் கட்டாயம் காப்பாற்ற முடியும்."

     "இவர்களிடம் நீ எப்படிச் சிக்கிக் கொண்டாய்? கோட்டைக்குள்ளிருந்து ஏன் வெளியே வந்தாய்? எப்படி வந்தாய்?"

     "அதையெல்லாம் இப்போது கேட்க வேண்டாம், சுவாமி! மூடத்தனத்தினால் வெளியே வந்தேன். என் அருமைத் தந்தைக்கு நானே யமனாக ஆனேன்!... நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன்; என் தந்தையைக் காப்பாற்றுங்கள்...."

     "உன் தந்தை எங்கே, அம்மா? அவருக்கு என்ன ஆபத்து வந்திருக்கிறது?" என்றார் பிக்ஷு.

     "ஐயோ! இவர்களைக் கேளுங்கள்; அப்பா எங்கே என்று இவர்களைக் கேளுங்கள்! சற்று முன்னால் ஏதோ பயங்கரமான வார்த்தை என் காதில் விழுந்தது. அதோ அந்தக் குதிரை மேல் இருப்பவர் சொன்னார். ஆயனர் எங்கே என்று அவரைக் கேளுங்கள் சுவாமி! சீக்கிரம் கேளுங்கள்!"

     இப்படிச் சிவகாமி சொல்லிக் கொண்டிருந்தபோதே சற்றுப் பின்னால் குதிரை மேல் வீற்றிருந்தபடி மேற்கூறிய காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த தளபதி சசாங்கன் குதிரையைச் செலுத்திக் கொண்டு அவர்கள் அருகில் வந்து சேர்ந்தான்.

     "புத்தம் சரணம் கச்சாமி!" என்று நாகநந்தியைப் பார்த்துப் பரிகாசக் குரலில் கூறி வணங்கினான்.

     வாதாபிச் சக்கரவர்த்தியிடம் நாகநந்தி பிக்ஷுவுக்கு இருந்த செல்வாக்கைக் குறித்துப் பொறாமை கொண்டவர்களில் தளபதி சசாங்கனும் ஒருவன்.

     "புத்தம் சரணம் கச்சாமி!" என்று நாகநந்தியும் கடுகடுத்த குரலில் கூறினார்.

     "ஆ! நாகநந்தி பிக்ஷுவே! திடீரென்று இங்கே எப்படி முளைத்தீர்? நாகம் இத்தனை நாளும் எந்த வளையில் ஒளிந்து கொண்டிருந்தது. இப்போது ஏன் வெளியில் தலையை நீட்டுகிறது?" என்று தளபதி சசாங்கன் கேட்டான்.

     கேட்டவர்கள் நடுங்கும்படியான நாகப்பாம்பின் சீறல் சத்தம் அப்போது திடீரென்று கேட்டது.

     அதே சமயத்தில் "பாம்பு பாம்பு!" என்று ஒரு கூக்குரல், அதைக்கேட்ட அங்கே கூடியிருந்த வீரர்கள் சிதறி ஓடினார்கள்.

     நாகப்பாம்பு ஒன்று சரசரவென்ற சப்தத்துடன் தளபதி சசாங்கன் ஏறியிருந்த குதிரையின் கால்மீதேறி ஊர்ந்து அப்பாலிருந்த புதருக்குள் விரைந்து சென்று மறைந்தது.

     "தளபதி! ஜாக்கிரதை! சாதாரணமாய் நாகப்பாம்பு கடிக்காது. ஆனால் கடித்து விட்டால் அதன் விஷம் ரொம்பப் பொல்லாதது!" என்றார் பிக்ஷு.

     சசாங்கன் பல்லைக் கடித்துக் கொண்டு, "பிக்ஷு...இந்த அருமையான உண்மையைச் சொன்னதற்காக மிகவும் வந்தனம். எனக்கு அலுவல் அதிகம் இருக்கிறது. தங்களுடன் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரமில்லை. மன்னிக்க வேண்டும்..... அடே! இந்தப் பெண்ணைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று சற்று விலகிப் போய் நின்ற வீரர்களைப் பார்த்துச் சசாங்கன் சொன்னான்.

     அதைக் கேட்ட வீரர்கள் சிவகாமியை நெருங்கி வந்தார்கள்.

     "தளபதி! தென்னாட்டின் புகழ்பெற்ற நடன கலைவாணியைச் சிறைப் பிடித்தது உம்முடைய அதிர்ஷ்டந்தான். இந்த விசேஷ சம்பவத்தைச் சக்கரவர்த்தியிடம் நான் கூடிய சீக்கிரம் தெரியப்படுத்துகிறேன்..."

     "ஓஹோ! அப்படியானால் பிக்ஷுவும் வாதாபியை நோக்கித்தான் பிரயாணம் கிளம்பியிருப்பது போல் தெரிகிறது...."

     "ஆம், சசாங்கரே! ஆனால் சக்கரவர்த்தியிடம் இந்த விசேஷச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வாதாபி வரையில் நான் போக வேண்டியதில்லை. சற்று முன்னால் இந்தக் காட்டில் இன்னொரு புறத்தில் சக்கரவர்த்தியைப் பார்த்தேன்..."

     "பொய்! பொய்! வாதாபிச் சக்கரவர்த்தி இதற்குள் வடபெண்ணை நதியை அடைந்திருப்பார்."

     "பொய்யும் மெய்யும் விரைவிலே தெரியும், தளபதி! ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளும். புலி தனக்கு இரையாகக் கொள்ள எண்ணிய மானின் மீது பூனை கண்ணைப் போட்டால் விபரீதம் விளையும், ஞாபகமிருக்கட்டும்!" என்று நாகநந்தி கம்பீரமான குரலில் கூறியபோது, தளபதி சசாங்கனின் வாயிலிருந்து 'உம்', 'உம்' என்ற உறுமல் ஒலியைத் தவிர வேறெதுவும் வரவில்லை.

     பின்னர், நாகநந்தி சிவகாமியைப் பார்த்து, "பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அதன்படி நடந்து கொண்டால் உனக்கு ஒரு அபாயமும் நேராது. இவர்களுடன் தடை சொல்லாமல் போ! நீ நடனக் கலை பயின்றவளாதலால், உன் கால்களில் வேண்டிய பலம் இருக்கும், நடப்பதற்கு நீ அஞ்சமாட்டாயல்லவா?" என்றார்.

     இதுவரை சசாங்கனுக்கும் நாகநந்திக்கும் நடந்த சம்பாஷணையைக் கவனித்த வண்ணம் கற்சிலைபோல் அசைவற்று நின்ற சிவகாமி சட்டென்று உணர்வு வரப் பெற்றவளாய், "சுவாமி! என்னைப் பற்றி எனக்கு ஒரு கவலையுமில்லை. இந்தப் பாவியினால் தங்கள் சிநேகிதர் ஆயனர் பெரும் அபாயத்துக்கு உள்ளாகி விட்டார், ஐயோ! அவரைக் காப்பாற்றுங்கள்!" என்று கதறினாள்.

     உடனே நாகநந்தி பிக்ஷு, "தளபதி! இந்தப் பெண்ணின் தந்தை எங்கே?" என்று கேட்க, சசாங்கன் ஒரு கோரச் சிரிப்புச் சிரித்தவண்ணம், "ஆஹா! உங்களுக்கு அது தெரிய வேண்டுமா? சொல்கிறேன். பல்லவ நாட்டிலுள்ள சிற்பிகளையெல்லாம் ஒரு காலையும் ஒரு கையையும் வெட்டிப் போடும்படி சக்கரவர்த்தியின் கட்டளை; இவளுடைய தந்தை பெரிய மகா சிற்பியல்லவா? அதற்காக அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு இரண்டு கையையும் இரண்டு காலையும் வெட்டிப் போடச் சொல்லியிருக்கிறேன்! அதோ தெரியும் அந்தப் பாறைமேல் கொண்டு போய்ச் சுற்றுப் பக்கமெல்லாம் தெரியும்படியாகக் காலையும் கையையும் வெட்டிக் கீழே உருட்டிவிடச் சொல்லியிருக்கிறேன். காஞ்சிக் கோட்டை மதிலிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமென்றுதான் பாறை உச்சிக்குக் கொண்டு போகச் சொன்னேன்" என்றான் சசாங்கன். இவ்விதம் சொல்லிவிட்டு மீண்டும் அவன் பயங்கரமாகச் சிரித்தான்.

     சசாங்கன் பேசுகிற வரையில் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி அவன் பேசி முடித்ததும், விவரிக்க முடியாத பயங்கரமும் வேதனையும் நிறைந்த கண்களினால் நாகநந்தியைப் பார்த்து, "அடிகளே!" என்று கதறினாள்.

     அப்போது நாகநந்தி, "பெண்ணே! என் வார்த்தையில் நம்பிக்கை வை; உன் தந்தையை நான் காப்பாற்றுகிறேன். மன நிம்மதியுடன் நீ இவர்களோடு போ!" என்றார்.

     அப்போது சசாங்கன், "பிக்ஷு! வாதாபிச் சக்கரவர்த்தியின் கட்டளைக்குக் குறுக்கே நிற்பவருக்கு என்ன தண்டனை தெரியுமல்லவா? அது தங்களுக்கும் ஞாபகம் இருக்கட்டும்!" என்று கூறி விட்டுச் சிவகாமியைப் பார்த்து, "பெண்ணே! இந்தப் பிக்ஷு உனக்குச் சொன்ன புத்திமதி நல்ல புத்திமதிதான். அதன் பிரகாரம் தடை ஒன்றும் சொல்லாமல் எங்களுடன் வந்து விடு!" என்றான்.