![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் இருபத்து நான்காம் அத்தியாயம் - அட்டூழியம் ஆயனரின் உள்ளம் சிந்தனா சக்தியை அடியோடு இழந்திருந்தது. தன் கண்ணால் பார்த்தது, காதால் கேட்டது ஒன்றையுமே அவரால் நம்ப முடியவில்லை. இவையெல்லாம் கனவிலே நடக்கும் நிகழ்ச்சிகளா, உண்மையில் நடக்கும் சம்பவங்களா என்பதையும் அவரால் நிர்ணயிக்கக் கூடவில்லை! உலகத்தில் மாநிலத்தை ஆளும் மன்னர்கள் யுத்தம் செய்வது இயற்கைதான், அதில் நம்பமுடியாதது ஒன்றுமில்லை. அப்படி யுத்தம் செய்யும் அரசர்கள் போருக்கு அனுப்பும் வீரர்களுக்கு, "ஸ்திரீகளையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் பசுக்களையும், கலைஞர்களையும் ஹிம்சிக்கக்கூடாது" என்று கட்டளையிடுவதுண்டு. அரசர்கள் பொல்லாத மூர்க்கர்களாயும் கருணையற்றவர்களாயுமிருந்தால், அவ்வளவு சிரத்தை எடுத்துக் கட்டளையிட மாட்டார்கள். ஆனால், சாம்ராஜ்யம் ஆளும் சக்கரவர்த்தி ஒருவர் தம் படை வீரர்களுக்கு, 'சிற்பிகளையெல்லாம் காலையும் கையையும் வெட்டிப் போட்டுவிடு!' என்று ஆக்ஞை இடுவது நடக்கக்கூடிய சம்பவமா? அம்மாதிரிக் கட்டளையிடக்கூடிய ராட்சதர்கள் இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறி வீற்றிருக்க முடியுமா? அந்த நாட்டின் பிரஜைகள் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பார்களா?" அதிலும், புலிகேசிச் சக்கரவர்த்தியா அப்படிப்பட்ட கட்டளை பிறப்பித்திருப்பார்? எவருடைய இராஜ்யத்தில் உலகத்திலேயே இல்லாத கலை அதிசயங்கள் என்றும் அழியாத வர்ணங்களில் தீட்டப்பட்ட அற்புத ஜீவ சித்திரங்கள் உள்ளனவோ, அந்த இராஜ்யத்தின் மன்னரா அப்படிப்பட்ட கொடூரமான கட்டளையை இட்டிருப்பார்? அப்படி அவர் கட்டளையிட்டிருப்பதாக அந்தக் குரூர முகம் படைத்த தளபதி கூறியது உண்மையாயிருக்க முடியுமா? அவன் சொன்னதாகத் தம் காதில் விழுந்தது மெய்தானா? அவனுடைய கொடூர மொழிகளைக் கேட்டுச் சிவகாமி உணர்விழந்து தரையில் விழுந்தது உண்மையா? அவளைத் தாங்கிக் கொள்ளத் தாம் ஓடியபோது வாதாபி வீரர்கள் தங்களுடைய இரும்புக் கரங்களினால் தம்மைப் பிடித்துக் கொண்டதும் உண்மையாக நடந்ததுதானா? பிறகு அந்தப் படைத் தலைவன் இட்ட கட்டளை மெய்தானா? 'அதோ அந்தப் பாறை முனைக்கு அழைத்துப் போய்க் கோட்டையிலுள்ளவர்களுக்குத் தெரியும்படி காலையும் கையையும் வெட்டிக் கீழே உருட்டி விடுங்கள்!' என்ற மொழிகள் தாம் உண்மையாகக் கேட்டவைதானா? அல்லது இவ்வளவும் ஒரு பயங்கரக் கனவில் நடந்த சம்பவங்களா? இந்தப் பாறைமீது தாம் ஏறுவதும், தம் கால்கள் களைத்துத் தள்ளாடுவதும் நிஜமா? அல்லது வெறும் சித்தப் பிரமையா? இவையெல்லாம் வெறும் பிரமை தான்! அல்லது கனவுதான். ஒருநாளும் உண்மையாக இருக்க முடியாது. ஆனால், அதோ தெரிகிறதே, காஞ்சிக் கோட்டை, அதுகூடவா சித்தப்பிரமையில் தோன்றும் காட்சி? இல்லை, இல்லை! காஞ்சிக் கோட்டை உண்மைதான். தம்மைப் பாறை முனையில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பதும் உண்மைதான். இதோ இந்த ராட்சதர்கள் தம் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதும், கைகளை வெட்டுவதற்காகக் கத்தியை ஓங்குவதும் நிச்சயமாக நடக்கும் சம்பவங்கள்தான். ஆ! சிவகாமி! என் அருமை மகளே! இந்தப் பாவி உன்னை என்ன கதிக்கு உள்ளாக்கிவிட்டேன்! என் அஜந்தா வர்ணப் பைத்தியத்துக்கு உன்னைப் பலிகொடுத்தவிட்டேனே, ஐயோ! என் மகளே! மகளே! வீரர்களில் ஒருவன் கத்தியை ஓங்கியபோது ஆயனர் தம் கண்களை இறுக மூடிக் கொண்டார். ஆனால், ஓங்கிய கத்தி அவர் எதிர்பார்த்தபடி அடுத்தகணம் அவருடைய கையை வெட்டவில்லை. "நிறுத்து!" என்று அதிகாரக் குரலில் ஓர் ஒலி கேட்டது. ஆயனர் கண்ணைத் திறந்து பார்த்தபோது... ஆஹா! இதென்ன? புலிகேசிச் சக்கரவர்த்தியல்லவா இவர்? இங்கு எப்படி வந்து சேர்ந்தார்? சக்கரவர்த்தியைப் பார்த்த வியப்பினால் ஆயனரைப் பிடித்துக் கொண்டிருந்த வீரர்கள் திடீரென்று கைப்பிடியை விட்டார்கள். பக்கத்திலிருந்த பள்ளத்தில் ஆயனருடைய கால் நழுவிற்று. கீழே பூமி வரையில் சென்று எட்டிய அந்த மலைச் சரிவில் ஆயனர் உருண்டு உருண்டு போய்க் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் தம் உணர்வை இழந்தார். ஆயனருக்குச் சுய உணர்வு வந்தபோது, அருகில் ஏதோ பெருங் கலவரம் நடப்பதாகத் தோன்றியது. பல மனிதர்களின் கூச்சலும் கற்கள் மோதும் சத்தமும் கலந்து கேட்டன. முன்னம் கேட்ட அதே அதிகாரக் குரலில், "நிறுத்து!" என்ற கட்டளை எழுந்தது. ஆயனர் கண்களைத் திறந்து பார்த்தார். அரண்ய மத்தியில் இருந்த தமது பழைய சிற்பக் கிருஹத்துக்குள் தாம் இருப்பதைக் கண்டார். சுற்றுமுற்றும் பார்த்தார்; வாதாபிச் சக்கரவர்த்தி கம்பீரமாய் நின்று கையினால், "வெளியே போங்கள்!" என்று சமிக்ஞை செய்ய, மூர்க்க வாதாபி வீரர்கள் கும்பலாக வாசற் பக்கம் போய் கொண்டிருப்பதைப் பார்த்தார். வீட்டுக்குள்ளே தாம் அரும்பாடு பட்டுச் சமைத்த அற்புதச் சிலைகள் - அழகிய நடன வடிவங்கள் தாறுமாறாய் ஒன்றோடொன்று மோதப்பட்டு அங்கஹீனம் அடைந்து கிடப்பதைக் கண்டார். அப்போது அவருடைய உடம்பின்மேல் யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல் இருந்தது. பழுதடைந்த சிலைகளை அருகில் போய்ப் பார்க்கலாமென்று எழுந்தார். அவருடைய வலது காலில் ஒரு பயங்கரமான வேதனை உண்டாயிற்று, எழுந்திருக்க முடியவில்லை. தமது வலது கால் எலும்பு முறிந்து போய்விட்டது என்பது அப்போதுதான் ஆயனருக்குத் தெரிந்தது. அச்சமயம் பின்கட்டிலிருந்து ஆயனருடைய சகோதரி உடல் நடுங்க, கண்களில் நீர் பெருக, ஓடிவந்து ஆயனர் அருகில் விழுந்தாள். பாவம் சற்று முன்னால் அந்தச் சிற்பக் கிருஹத்தில் வாதாபி வீரர்கள் செய்த அட்டகாசங்களைப் பார்த்து அவள் சொல்ல முடியாத பீதிக்கு ஆளாகியிருந்தாள். எல்லா வீரர்களும் வீட்டுக்கு வெளியே போன பிறகு, வாதாபிச் சக்கரவர்த்தி சாந்தமாக நடந்து ஆயனர் கிடந்த இடத்துக்கு அருகில் வந்தார். ஆயனர், "பிரபு! தங்களுடைய வீரர்கள் இம்மாதிரி அட்டூழியங்களைச் செய்யலாமா?" என்று கதறினார். |