உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் நாற்பத்தோராம் அத்தியாயம் - அஜந்தா குகையில் புலிகேசியின் உணர்ச்சி மிகுதியையோ கண்ணீரையோ, கவனியாதவராய்ப் புத்த பிக்ஷு கீழ்வானத்தில் மிதந்து வந்த பூரண சந்திரனைப் பார்த்துக் கொண்டே மேலும் கூறினார்: "அந்தக் கிராதகர்கள் என்னை நீ என்றே எண்ணிக் கொண்டு பிடித்துப் போனார்கள். வனப் பிரதேசங்களையெல்லாம் தாண்டி அப்பால் கொண்டு போனதும் என்னைக் குதிரை மேல் ஏறச் சொன்னார்கள். நான் குதிரை ஏறத் தெரியாமல் தவித்ததைப் பார்த்ததும் அவர்களுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. நான் பாசாங்கு செய்கிறேனோ என்று அவர்கள் முதலில் எண்ணினார்கள். பிறகு உண்மையாகவே எனக்குக் குதிரை ஏறத் தெரியவில்லை என்று அறிந்ததும் அவர்களுடைய தலைவன் என்னை என்னவெல்லாமோ கேள்விகள் கேட்டான். என்னுடைய விடைகளைக் கேட்டு அவர்கள் திகைத்தார்கள். உன்னுடைய காதுகளில் நீ குண்டலம் போட்டுக் கொண்டிருந்தாய், அதற்காகத் துவாரங்களும் இருந்தன. என் காதுகளில் துவாரமே இல்லையென்பதைப் பார்த்ததும் அவர்களுக்கு நான் நீ இல்லையென்பது நிச்சயமாய்த் தெரிந்து விட்டது. உன்னைப் பிடிக்க முடியாததனால் ஏற்பட்ட கோபத்தையெல்லாம் என்பேரில் காட்டி உபத்திரவப்படுத்தினார்கள். என்னை அடித்த அடியின் தழும்புகள் இதோ இன்னும் இருக்கின்றன!" என்று புத்த பிக்ஷு தம் முதுகைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். "ஐயோ! அண்ணா! அந்தத் தழும்புகளைப் பார்த்து எத்தனையோ நாள் நான் தூக்கமின்றித் தவித்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் எதற்காக இப்போது ஞாபகப்படுத்துகிறாய்?" என்று புலிகேசி அலறினார். "தம்பி! உனக்கு ஞாபகப்படுத்தவில்லை. எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். அதையெல்லாம் இன்றைக்கு எண்ணிப் பார்த்தால் எனக்கு மனக் கஷ்டம் உண்டாகவில்லை, குதூகலந்தான் உண்டாகிறது. பரோபகாரம் செய்வதில் உள்ள பலன் இதுதான். ஒருவருக்கு ஒத்தாசை செய்வதற்காக நாம் கஷ்டப்பட்டோ மானால், கஷ்டம் அதை அனுபவிக்கும் போது மட்டுமே நீடிக்கிறது. சீக்கிரத்தில் அது போய் விடுகிறது. அப்புறம் வாழ்நாள் உள்ளவரை நாம் செய்த உதவியை நினைத்து நினைத்துச் சந்தோஷப்படுகிறோம். ஆனால், தம்பி! அந்தப் பழைய கதையையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்துவது உனக்கு ஒருவேளை மனக்கஷ்டத்தை உண்டாக்கினால் நான் சொல்லவில்லை" என்று நாகநந்தி நிறுத்தினார். "அண்ணா, என்ன சொல்கிறாய்? எனக்கும் அந்தக் காலத்தை நினைத்தால் எத்தனையோ மகிழ்ச்சி உண்டாயிற்று!" "அப்படியானால் சரி, கொஞ்ச நேரம் வரையில் அந்தக் கிராதகர்கள் துன்புறுத்தியதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். பொறுக்க முடியாமற்போன பிறகு, நான் அஜந்தா புத்த சங்கிராமத்தைச் சேர்ந்தவன் என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் பயந்து விட்டார்கள். நான் அணிந்திருந்த உடைகள் எப்படிக் கிடைத்தன என்று கேட்டார்கள். பொய்கைக் கரையிலே அவை கிடைத்தனவென்றும், நான் அவற்றை வெறுமனே உடுத்திக் கொண்டு பார்க்க ஆசைப்பட்டு உடுத்திக் கொண்டதாகவும் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டு திரும்பி அதே பொய்கைக் கரைக்கு வந்தார்கள். சுற்றியிருந்த வனப் பிரதேசமெங்கும் தேடிப் பார்த்தார்கள். கடைசியில் ஏதோ காட்டு மிருகம் உன்னைக் கொன்று தின்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு என்னை விட்டு விட்டுத் திரும்பிப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, நீ வழி கண்டுபிடித்துப் பத்திரமாய்ப் போய்ச் சேர்ந்தாயோ என்னவோ என்ற கவலையுடன் நானும் அஜந்தாவை நோக்கிக் கிளம்பினேன்." வாதாபிச் சக்கரவர்த்தி அப்போது குறுக்கிட்டுக் கூறினார்: "நீ சொல்லியிருந்தபடியே நான் நதி வழியைப் பிடித்துக் கொண்டு போனேன். வளைந்து வளைந்து போன நதியோடு எத்தனை தூரம் போனாலும் மனித சஞ்சாரமே இல்லை. அடிக்கடி எதிரே சுவர் வைத்தது போல் மலை நின்று அப்பால் வழியே இல்லையென்று தோன்றியது. போகப் போக இப்படியே இருந்தது. ஒருவேளை நீ சொன்னதை நான் நன்றாய்த் தெரிந்து கொள்ளாமல் தப்பான வழியைப் பிடித்துக் கொண்டு போகிறேனோ என்று எண்ணினேன். அதைவிடப் பயங்கரமான எண்ணம் ஒன்று தோன்றியது. நீ ஒருவேளை என்னை ஏமாற்றி விட்டாயோ, சித்தப்பன் மங்களேசனிடம் போய்ச் சமாதானம் செய்து கொண்டு இராஜ்யம் ஆளப் பார்க்கிறாயோ என்று நினைத்தேன். கடைசியில் அஜந்தாவின் அற்புதச் சித்திரக் குகைகளை அடைந்தேன். நீ சொன்னபடியே அங்கு யாரோடும் பேச்சுக் கொடாமல் சிற்பியின் சீடனாக நடித்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் கழித்து நீ வந்து சேர்ந்தாய். உன்னுடைய கதையைக் கேட்டு, உன்னுடைய முதுகிலிருந்த காயங்களையும் பார்த்து விட்டு, உனக்கு நான் மனத்தினால் செய்த அநீதியை எண்ணி 'ஓ'வென்று அழுதேன்..." "தம்பி! என் விஷயத்தில் உன்னுடைய மனம் அப்போது கூட முழு நிம்மதி அடையவில்லை. சங்கிராமத்தின் தலைமை பிக்ஷு நம்மை ஒருநாள் சேர்ந்தாற்போல் பார்த்து விட்டார். நாம் நதியில் தனி இடத்திற்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த போது அவர் பார்த்தார். உன்னைப் பற்றி விசாரித்தார். நான் உண்மையைச் சொன்னேன். அஜந்தா சட்டத்துக்கு நேர்விரோதமாக அந்நியனாகிய உன்னை நான் அங்கே கொண்டு வந்ததற்காக என்னை எவ்விதம் தண்டிப்பாரோ என்று பயந்தேன். ஆனால், குரு என்னைக் கோபிக்கவும் இல்லை; தண்டிக்கவும் இல்லை. அன்று சாயங்காலம் அவருடைய தலைமை விஹாரத்தில் ஒருவரும் வராத சமயத்தில் நம்மை அழைத்து வைத்துக் கொண்டு நம்மைப் பற்றிய கதையைச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு உன்னுடைய மனநிம்மதி இன்னும் அதிகமாகக் குலைந்தது. தம்பி! என் விஷயமாக உன் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டு, வரவரப் பெரிதாகிக் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது." "ஆம், அண்ணா! அது உண்மைதான். ஆனால் அதே சமயத்தில் என்னுடைய நீச குணத்தைப் பற்றியும் நான் அடிக்கடி எண்ணமிட்டு வெட்கமடைந்தேன்." "உன் பேரில் தவறில்லை, தம்பி! சிறிதும் தவறில்லை. அப்போதும் நான் அவ்வாறுதான் எண்ணினேன். நீயும் நானும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், இரண்டு பேரில் நான் முதலில் பிறந்தவன் என்றும் தலைமைப் பிக்ஷு நமக்குத் தெரியப்படுத்தினார். நம் தந்தை நான் பிறந்தவுடனேயே என்னை அப்புறப்படுத்தி வைத்திருந்து ஐந்தாவது வயதில் என்னைப் பிக்ஷுவிடம் ஒப்புவித்தார். உன்னுடைய உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்ததாகத் தெரிந்தால், அப்போது மட்டும் என்னைப் பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தி என்னை இராஜ்யத்துக்குரியவனாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். இதையெல்லாம் பிக்ஷு குரு நமக்குச் சொல்லி, உன்னை நானே காப்பாற்றும்படியாக நேர்ந்த விதியைக் குறித்து வியந்தார். என்னுடைய உத்தம குணத்தை வெகுவாகச் சிலாகித்தார். நான் பிறந்து அரை நாழிகைக்குப் பிறகு நீ பிறந்ததாகவும், ஜாதக ரீதியாக நீயே இராஜ்யமாளப் பிறந்தவன் என்று ஏற்பட்டபடியால் நம் தந்தை உன்னைச் சிம்மாசனத்துக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இது தெரிந்ததும் உன் பேரில் எனக்கு ஏற்கெனவே இருந்த அன்பு பன்மடங்கு ஆயிற்று. ஆனால், அதே செய்தியினால் உன்னுடைய மனத்தில் விஷம் பாய்ந்து விட்டது. அந்த நிமிஷம் முதல் நீ என்னை மனத்திற்குள் துவேஷிக்கத் தொடங்கினாய். அதைக் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. உன் பேரில் கோபம் கொள்ளவும் இல்லை. நியாயமாக வாதாபிப் பட்டத்துக்குரியவன் நான் என்று ஏற்பட்டபடியால் நீ என் பேரில் சந்தேகப்படுவது இயற்கை என்பதை உணர்ந்தேன். உன்னுடைய சந்தேகத்தை அறவே போக்கத் தீர்மானித்தேன். பிக்ஷு குருவின் காலில் விழுந்து என்னையும் பிக்ஷு மண்டலத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். குரு முதலில் ஆட்சேபித்தார், கடைசியில் ஒப்புக் கொண்டார். உன்னுடைய முன்னிலையில் நான் தலையை மொட்டை அடித்துக் கொண்டு காவி வஸ்திரம் தரித்த புத்த பிக்ஷு ஆனேன். என்றென்றைக்கும் உலக வாழ்க்கையைத் துறந்து விட்டதாகச் சத்தியம் செய்தேன். உன் உள்ளத்தில் மூண்டிருந்த தீ அணைந்தது. முன்போல் என்னிடம் அன்பும் விசுவாசமும் கொண்டாய்." "அண்ணா! அது முதல் உன்னையே நான் தெய்வமாகக் கொண்டேன். எந்தக் காரியத்திலும் உன் இஷ்டப்படியே நடந்து வந்தேன். நீ சொன்ன சொல்லைத் தட்டி நடந்ததில்லை." "அதனால் நீ எவ்வித நஷ்டமும் அடையவில்லை, தம்பி! உன்னை அஜந்தாவில் விட்டு விட்டு நான் வெளியேறினேன். மூன்று வருஷ காலம் நாடெங்கும் சுற்றினேன். இராஜ்யத்தின் அதிகாரிகள், இராணுவத் தலைவர்கள் எல்லாரையும் உன்னுடைய கட்சியில் சேரச் செய்தேன். பொது ஜனங்களையும் மங்களேசனுக்கு எதிராகக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தேன். பக்குவமான காலம் வந்த போது உன்னை அஜந்தாவிலிருந்து வரவழைத்தேன். பெரிய சைனியத்துக்குத் தலைமை வகித்து நீ வாதாபி நோக்கிச் சென்றாய். மங்களேசன் போரில் உயிரை விட்டான். நம்முடைய புகழ்பெற்ற பாட்டனார் சத்யாச்ரயப் புலிகேசி வீற்றிருந்து ஆட்சி புரிந்த சளுக்க சிம்மாசனத்தில் நீ ஏறினாய்." "அண்ணா! உன்னுடைய ஒத்தாசையினாலேதான் வாதாபிச் சிம்மாசனம் ஏறினேன். உனக்கு நியாயமாக உரிய சிம்மாசனத்தை நீ எனக்காகத் துறந்தாய். என் மனத்தில் சிறிதும் களங்கம் இருக்கக் கூடாது என்பதற்காக உலக வாழ்க்கையையே துறந்து பிக்ஷு ஆனாய். உன்னுடைய மகத்தான பிரயத்தனங்களினாலேதான் மங்களேசனைக் கொன்று நான் சிம்மாசனம் ஏறினேன். அதற்குப் பிறகு, இருபது வருஷ காலமாக நீ எனக்கு அன்னை, தந்தையாகவும், மதி மந்திரியாகவும், இராணுவ தந்திரியாகவும் இருந்து வந்திருக்கிறாய். இன்று நர்மதையிலிருந்து வடபெண்ணை வரையில் வராகக் கொடி பறந்து வருவதெல்லாம் உன்னாலேதான். இதையெல்லாம் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒப்புக் கொண்டு உனக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால், இந்தப் பழைய கதையையெல்லாம் எதற்காக இப்போது ஞாபகப்படுத்துகிறாய்? உன்னிடம் எனக்குள்ள நன்றியை எந்த விதத்திலாவது நான் தெரிவித்துக் கொள்ள இடமிருக்கிறதா?" என்று புலிகேசி கேட்டு விட்டு ஆவலுடன் நாகநந்தியின் முகத்தை நிலா வெளிச்சத்தில் பார்த்தார். கடுமையான விரதங்களினால் வற்றி உலர்ந்திருந்த பிக்ஷுவின் முகத்தில் புலிகேசி என்றும் காணாத கனிவு தென்பட்டது. "ஆம்; தம்பி! நான் உனக்குச் செய்திருப்பதற்கெல்லாம் பிரதியாக நீ எனக்குச் செய்யக்கூடியது ஒன்று இருக்கிறது" என்றார் பிக்ஷு. "அப்படியானால் உடனே அதைச் சொல்லு, இருபத்தைந்து வருஷமாக உனக்கு நான் பட்டிருக்கும் நன்றிக் கடனில் ஒரு பகுதியையாவது கழிக்கிறேன்." "தம்பி! நீ வாதாபியை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே உனக்கு ஓர் ஓலை அனுப்பியிருந்தேனல்லவா? அதில் என்ன எழுதியிருந்ததென்பது ஞாபகம் இருக்கிறதா?" "எவ்வளவோ விஷயம் எழுதியிருந்தாய். எதைச் சொல்கிறாய்?" "காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள்; சிவகாமி சுந்தரியை எனக்குக் கொடு! என்று எழுதியிருந்ததைச் சொல்கிறேன்." "ஆமாம்; அதைப் பற்றி இப்போது என்ன?" "அப்போது கேட்டதையே இப்போதும் கேட்கிறேன்." "அண்ணா! இது என்ன? காஞ்சி சுந்தரியைத்தான் நம்மால் கைப்பற்ற முடியவில்லையே?" "காஞ்சி சுந்தரி உனக்குக் கிடைக்கவில்லை! ஆனாலும், சிவகாமியை எனக்குக் கொடு என்று கேட்கிறேன்." "அதெப்படி முடியும்? உண்மையில் மகேந்திர பல்லவனுடைய சபையில் அந்தப் பெண் நாட்டியம் ஆடிய போது நீ ஓலையில் எழுதியிருந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அவளை என்னுடன் அனுப்ப முடியுமா என்று பல்லவனைக் கேட்டேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? கலை உணர்ச்சியேயில்லாத என்னுடன் அவள் வர மாட்டாள் என்று சொன்னான்! இப்போது மறுபடியும் திரும்பிக் காஞ்சி மீது படையெடுக்கச் சொல்லுகிறாயா?" "வேண்டாம், தம்பி! மறுபடியும் படையெடுக்க வேண்டாம். காஞ்சி சுந்தரி உனக்குக் கிட்டவில்லை; ஆனால், சிவகாமி சுந்தரி எனக்குக் கிடைத்தாள், அவளைக் கொண்டு வந்தேன்." "என்ன? என்ன? உண்மையாகவா?" "தம்பி! அவளுக்காகவே நான் உன்னைப் போல வேஷந்தரித்தேன். அவள் தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். சிவகாமிக்காகவே படைத் தலைமை வகித்து மகேந்திர பல்லவனுடன் மணிமங்கலத்தில் போர் செய்தேன். அவளை முன்னிட்டே போரை நடுவில் நிறுத்தி விட்டுப் பின்வாங்கினேன்." "அண்ணா! எல்லாம் விவரமாகச் சொல்லு!" என்று புலிகேசி கேட்க, நாகநந்தி தாம் மூன்று வருஷத்துக்கு முன்னால் தென்னாட்டுக்கு வந்ததிலிருந்து செய்ததை எல்லாம் விவரமாய்க் கூறினார். எல்லாவற்றையும் கேட்ட புலிகேசி, "அண்ணா! அந்த நாட்டியப் பெண்ணின் மீது உண்மையாகவே நீ காதல் கொண்டிருப்பதாகவா சொல்கிறாய்?" என்று நம்பிக்கையில்லாத குரலில் வினவினார். "ஆமாம் தம்பி! சத்தியமாகத்தான்." "ஆனால், நீ அஜந்தாவில் புத்த குருவின் முன்னால் செய்த பிரதிக்ஞை என்ன ஆவது? நாடெங்கும் காவித் துணி அணிந்து ஸ்திரீலோலர்களாய்த் திரியும் கள்ளப் பிக்ஷுக்களின் கூட்டத்தில் நீயும் சேர்ந்து விடப் போகிறாயா, அண்ணா?" "தம்பி! இந்தக் கேள்வியை எதிர்பார்த்தேன். இதற்கு மறுமொழி சொல்லவும் ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால், இரண்டொரு வார்த்தையிலே சொல்ல முடியாது. விவரமாகச் சொல்ல வேண்டும், கேட்கிறாயா?" "கட்டாயம் கேட்கிறேன், ஆனால் சொல்லத்தான் வேண்டுமென்று உன்னை நான் கட்டாயப்படுத்தவில்லை. உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லு. இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்!" என்றார் வாதாபிச் சக்கரவர்த்தி. உண்மையில் மேற்படி விவரத்தைக் கேட்கப் புலிகேசியின் உள்ளம் துடிதுடித்தது. அதே கணத்தில் அவருடைய மனத்தில் அசூயையின் விதையும் விதைக்கப்பட்டது. இத்தனை நாளும் புத்த பிக்ஷுவின் இருதயத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் இடம்பெற்றதில்லை. அவருடைய அன்புக்கெல்லாம் தாமே உரியவராயிருந்தார். தம்முடைய நன்மையைத் தவிரப் பிக்ஷுவுக்கு வேறு எந்த விஷயத்திலும் கவலையும் கவனமும் இல்லாமலிருந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்போது பெண் ஒருத்தி, நாட்டியக்காரி, அவருடைய உள்ளத்தில் இடம்பெற்று விட்டாள்! "ஆம்! இப்போது என்னைக் காட்டிலும் அந்தப் பெண்ணிடந்தான் பிக்ஷுவுக்கு அபிமானம்! அவள் படுநீலியாயிருக்க வேண்டும்!" என்று புலிகேசி தம் மனத்திற்குள் அசூயையுடன் எண்ணமிட்டார். |