![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் நாற்பத்து நாலாம் அத்தியாயம் - நள்ளிரவுப் பிரயாணம் மணிமங்கலம் போர் நடந்து ஏறக்குறைய ஒருமாத காலம் மகேந்திர பல்லவர் உணர்வற்ற நிலையில் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். போர்க்களத்தில் அவர் மீது பாய்ந்து காயப்படுத்திய கத்தி விஷந்தோய்ந்த கத்தி, என்று தெரியவந்தது. அரண்மனை வைத்தியர்கள் சக்கரவர்த்தியைக் குணப்படுத்த எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் தக்க பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருவெண்காடு நமசிவாய வைத்தியர் வந்து சேர்ந்தார். தளபதி பரஞ்சோதி திருவெண்காட்டுக்கு ஆள் அனுப்பி அவரை வரவழைத்தார். நமசிவாய வைத்தியருடைய சிகிச்சை விரைவில் பலன் தந்தது. மகேந்திரருடைய அறிவும் தெளிவு பெற்றது. அறிவு தெளிந்ததும் மகேந்திர பல்லவர் முதன்முதலாக ஆயனர் - சிவகாமியைப் பற்றி விசாரித்தார். ஆயனர் கால் ஒடிந்து கிடக்கிறார் என்றும், சிவகாமியைச் சளுக்கர்கள் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்றும் தெரிந்ததும் அவர் அடைந்த மனக் கலக்கத்திற்கு அளவே இல்லை. அதனால் குணமான உடம்பு மறுபடியும் கெட்டு விடுமோ என்று பயப்படும்படி இருந்தது. மாமல்லர் தந்தையைப் பார்க்கச் சென்றபோது, அவரை முன்னொரு நாள் ஆயனர் என்ன கேள்வி கேட்டாரோ, அதையே மகேந்திரரும் கேட்டார். "நரசிம்மா! சிவகாமி எங்கே?" என்றார். நரசிம்மர் மிக்க வேதனையடைந்தவராய், "அப்பா! அதைப் பற்றி இப்போது என்ன கவலை? முதலில் தங்களுக்கு உடம்பு நன்றாய் குணமாகட்டும்!" என்றார். "மாமல்லா! சிவகாமியிடம் நீ காதல் கொண்டதாகச் சொன்னதெல்லாம் வெறும் வார்த்தை என்று இப்போது தெரிகிறது. இதோ நான் கிளம்புகிறேன், சிவகாமியைக் கண்டுபிடித்துக் கொண்டுவர!" என்று சொல்லிய வண்ணம் மகேந்திர பல்லவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார். மாமல்லர் வெட்கமும் பரபரப்பும் கொண்டவராய்க் கூறினார்: "அப்பா! தங்களுக்கு உடம்பு குணமாவதற்காகவே காத்திருந்தேன். தாங்கள் என்ன சொல்வீர்களோ என்று சந்தேகமாயிருந்தது தாங்களே இப்படி சொல்லும் போது..." "வேறு என்ன நான் சொல்வதற்கு இருக்கிறது மாமல்லா? ஆயனருடைய சிற்பத் திறமையும், சிவகாமியின் நடனத்திறமையும் இமயத்திலிருந்து இலங்கை வரையில் பரவியிருக்கின்றன. அப்படிப்பட்ட சிவகாமியை அந்த வாதாபி ராட்சதன் கொண்டு போய்விட்டான் என்றால், அதைக் காட்டிலும் பல்லவ குலத்துக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்? அப்படிப்பட்ட அவமானத்தைச் சகித்துக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும், போர்க்களத்திலேயே என் உயிர் போயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்." "தந்தையே! இப்படியெல்லாம் பேசவேண்டாம். தங்களுக்கு உடம்பு குணமானதும் தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுவதற்கு நானும் தளபதியும் ஆயத்தம் செய்திருக்கிறோம்..." "என்ன ஆயத்தம் செய்திருக்கிறீர்கள்?" "படை திரட்டிச் சேர்த்திருக்கிறோம்." "புத்திசாலிகள்தான்! படைகளுடன் சென்றால் சிவகாமியையும் கொண்டுவரமாட்டீர்கள். நீங்களும் திரும்பி வரமாட்டீர்கள்." மாமல்லர் வியப்புடன், "அப்பா! வேறு என்ன செய்வது? தங்களுடைய யோசனை என்ன?" என்றார். "பரஞ்சோதியையும், சத்ருக்னனையும் அழைத்துக் கொண்டு வா! என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்" என்றார் மகேந்திரர். அவ்விதமே மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன் ஆகியவர்கள் அன்று மாலை சக்கரவர்த்தியிடம் வந்தபோது, அவர் தமது யோசனையைக் கூறினார். பரஞ்சோதியும் சத்ருக்னனும் மாறுவேடம் பூண்டு வாதாபிக்குப் போய்ச் சிவகாமியை அழைத்துவர வேண்டும் என்பதுதான் அந்த யோசனை. அப்படித் திருட்டுத்தனமாய்ப் போய்ச் சிவகாமியை அழைத்துக் கொண்டு வருவது பற்றி முதலில் மாமல்லர் ஆட்சேபித்தார். திருட்டுத்தனமாய்க் கொண்டு போகப்பட்டவளை அதே முறையில் திருப்பிக் கொண்டு வருவதில் தவறில்லை என்று மகேந்திரர் சொன்னார். அதோடு அவ்விதம் இப்போது ஒருதடவை வாதாபிக்குப் போய்விட்டு வருவது பின்னால் அவர்கள் வாதாபி மேல் பகிரங்கமாகப் படையெடுத்துப் போவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்று மகேந்திர சக்கரவர்த்தி தெரிவித்தார். வாதாபி மீது படையெடுக்கும் யோசனை மகேந்திர பல்லவருக்கு இருப்பது தெரிந்ததும் மாமல்லருக்கும் உற்சாகம் உண்டாகித் தம்முடைய ஆட்சேபங்களையெல்லாம் நிறுத்திக் கொண்டார். எல்லாம் பேசி முடிந்ததும் மாமல்லர் எழுந்து, தந்தைக்குச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, "அப்பா! தளபதியுடன் நானும் போய் வருகிறேன். கருணை கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்!" என்று கெஞ்சுகிற குரலில் விண்ணப்பம் செய்தார். மகேந்திரர் முதலில் இதை மறுதலித்தார். கடைசியில், மாமல்லரிடம் முரட்டுத்தனமான காரியங்களில் இறங்குவதில்லை என்பதாகவும், எல்லா விஷயங்களிலும் தளபதி பரஞ்சோதியின் ஆலோசனைப்படி நடப்பதாகவும் உறுதி பெற்றுக்கொண்டு, விடை கொடுத்தார். இரண்டு தினங்களுக்குப் பிறகு நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனை முற்றத்தில் ஆறு குதிரைகள் மீது ஆறு பேர் ஆரோகணித்துப் பிரயாணத்துக்கு ஆயத்தமாய் நின்றார்கள். தாடி, மீசை வைத்துக் கட்டிக்கொண்டிருந்த அந்த வேஷதாரிகள் மாமல்லர், பரஞ்சோதி, சத்ருக்னன், குண்டோ தரன், கண்ணபிரான், அவனுடைய தந்தை அசுவபாலர் ஆகியவர்கள்தான். அப்படி நின்ற அறுவரும் அரண்மனை மேல்மாடத்தின் முன்றிலை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் அந்த முன்றிலுக்கு மகேந்திர சக்கரவர்த்தியும் புவனமகாதேவியும் வந்து சேர்ந்தார்கள். "புறப்படுங்கள்; ஜயத்துடன் சீக்கிரம் திரும்புங்கள்" என்று மகேந்திர பல்லவர் கூறியதும் மாமல்லரும் பரஞ்சோதியும் அவர்களைப் பார்த்து வணங்கிவிட்டுக் குதிரைகளைத் தட்டிவிட்டார்கள். குதிரைகள் அரண்மனை வெளி வாசலைக் கடந்து வீதிக்குப் போனதும், புவனமகாதேவியை மகேந்திர பல்லவர் பார்த்து, "தேவி! இராஜ குலத்தில் பிறந்ததற்குத் தண்டனை இது!" என்று சோகம் ததும்பும் குரலில் கூறினார். |