![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு பதினோராம் அத்தியாயம் - கனவும் கற்பனையும் செம்பியன் வளவன் தன் மகளை அணைத்துக் கொண்டு, "அம்மா! கண்ட கனவு எல்லாம் எப்போதும் பலிப்பது கிடையாது. சில சமயம் பலிப்பதும் உண்டு. கனவுகளின் உண்மைக் கருத்தைக் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்வதோ மிக்க கடினம். ஆயினும், நீ கண்ட கனவைக் கூறு. நான் அறிந்த சொப்பன சாஸ்திரத்தை அனுசரித்து உன்னுடைய கனவு பலிக்குமா, பலிக்காதா என்று பார்த்துச் சொல்கிறேன்" என்றான். மகள் கண்டது ஏதாவது துர்ச்சொப்பனமாயிருந்தால் அதற்கு ஏதாவது நல்ல அர்த்தம் கற்பனை செய்து கூறி, அவளுக்குத் தைரியம் சொல்லி விட்டுப் போகலாம் என்று செம்பியன் நினைத்தான். மங்கையர்க்கரசி, "அப்பா! அந்தக் கனவை நினைத்தால் எனக்குச் சந்தோஷமாயுமிருக்கிறது; பயமாகவும் இருக்கிறது. இதோ பாருங்கள், இப்போது கூட என் தேகமெல்லாம் சிலிர்த்திருப்பதை...!" என்று முன் கையில் ஏற்பட்டிருந்த ரோமச் சிலிர்ப்பைச் சுட்டிக்காடி விட்டு, மேலும் கூறினாள்: "சில காலமாகவே என்னுடைய கனவில் அடிக்கடி ஒரு சுந்தரமான யௌவன புருஷர் தோன்றி வருகிறார். அவர் என்னை அன்பு கனிந்த கண்களினால் அடிக்கடி பார்க்கிறார். வெளி உலகத்தில் அத்தகைய ஒருவரை நான் பார்த்ததேயில்லை. நமது மாமல்ல சக்கரவர்த்தியைக் காட்டிலும் அவருடைய முகம் களையானது. அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'நீ எனக்கு உரியவள் அல்லவா? ஏன் என்னுடன் இன்னும் வந்து சேரவில்லை?' என்று கேட்பது போலத் தோன்றும். அப்போது என் நெஞ்சு படபடக்கும்! உடம்பெல்லாம் பதறும். நேற்று நான் கண்ட கனவிலும் அந்தச் சுந்தர புருஷர் தோன்றினார். ஆனால், மிக்க பயங்கரமான சூழலுக்கு மத்தியில் அவரை நேற்றிரவு நான் கண்டேன். அவரைச் சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு பிசாசுகள் அம்மணமாக நின்று ஏதோ கோரமான சப்தம் போட்டுக் கொண்டு கூத்தாடின. அந்தப் பிசாசுகள் ஒவ்வொன்றின் கையிலும் மயில் இறகுக் கத்தை ஒன்று இருந்தது. சில சமயம் அப்பிசாசுகள் தங்கள் மத்தியில் நின்ற சுந்தர புருஷர் மீது மயில் கத்தைகளை வீசி அடிப்பது போல் தோன்றியது! அவர் பாவம், ஏதோ ஒரு தேக உபாதையினால் கஷ்டப்படுகிறவர் போல் காணப்பட்டார். இதற்கிடையில் அவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்து, 'இந்தப் பிசாசுகளிடம் நான் அகப்பட்டுக் கொண்டு விட்டேனே? என்னை நீ காப்பாற்ற மாட்டாயா?' என்று கேட்பது போலிருந்தது. நான் உடனே திரும்பி ஓட்ட ஓட்டமாக ஓடினேன். எங்கே ஓடுகிறோம் என்ற நினைவே இன்றி நெடுந்தூரம் ஓடினேன். கடைசியாக ஒரு கோவில் தென்பட்டது. அதற்குள் பிரவேசித்தேன், கோவிலுக்குள் அப்போது யாரும் இல்லை. அம்பிகையின் சந்நிதியை அடைந்து முறையிட்டேன். 'தாயே! என் உள்ளம் கவர்ந்த புருஷரை நீதான் காப்பாற்ற வேண்டும்!' என்று கதறினேன். 'குழந்தாய்! பயப்படாதே! என் குமாரனை அனுப்புகிறேன். அவன் உன்னுடன் வந்து உன் விருப்பத்தை நிறைவேற்றுவான்!' என்று ஒரு அசரீரி பிறந்தது. அசரீரி சொல்லி நின்றதோ இல்லையோ, அம்பிகை விக்கிரகத்தின் அருகில் திவ்யமோகன ரூபங்கொண்ட ஒரு பாலன் நின்றதைப் பார்த்தேன். 'என் குமாரனை அனுப்புகிறேன்' என்று தேவி சொன்னபடியால் வள்ளி நாயகன்தான் வரப் போகிறார் என்று எண்ணினேன். ஆனால், அங்கே நின்ற பிள்ளையோ விபூதி ருத்ராட்சம் தரித்த சிவயோகியாகக் காணப்பட்டார். இனிமையும் சாந்தமும் நிறைந்த குரலில் அந்தப் பிள்ளை, 'தாயே! என்னுடன் வா! உன் நாயகனைக் காப்பாற்றித் தருகிறேன்!' என்றார். அந்தத் தெய்வீகக் குழந்தையின் திருவாயில் 'உன் நாயகன்' என்ற வார்த்தைகள் வந்ததும், எனக்கு மெய்சிலிர்த்தது. உடனே உறக்கம் நீங்கி எழுந்து விட்டேன்! அந்தச் சுந்தர புருஷர் காப்பாற்றப்பட்டாரோ இல்லையோ என்ற சந்தேகத்தினால் இன்னமும் என் உள்ளம் துடித்துக் கொண்டிருக்கிறது. நான் கண்ட கனவின் பொருள் என்ன, அப்பா? அதனால் எனக்கு ஏதேனும் தீமை விளையுமா? அல்லது நன்மை ஏற்படுமா?" என்று புதல்வி கேட்டு வாய்மூடு முன்னே, "கட்டாயம் நன்மைதான் ஏற்படும்!" என்று செம்பியன் உறுதியாகக் கூறினான். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு அச்சோழர் பெருந்தகை மேலும் கூறியதாவது: "நீ கண்ட கனவு ஏதோ தெய்வீகமாகத் தோன்றுகிறது. உன் மனதுக்கிசைந்த சுந்தர மணவாளனை நீ இங்கேயே அடையப் போகிறாய். அப்படி நீ அடையும் மணாளனுக்கு ஏதோ பெரிய கஷ்டங்கள் நேரலாமென்றும், நமது குல தெய்வமாகிய முருகப் பெருமானின் அருளால் அந்தக் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்றும் உன்னுடைய கனவிலிருந்து ஊகித்து அறிகிறேன். என் அருமை மகளே! ஒரு விஷயத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும். நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தேடி அதிர்ஷ்டம் வந்தால் அதை நீ வேண்டாமென்று தள்ளாதே! இராஜகுலத்தில் பிறந்தவன் எவனாவது உன்னைக் கரம்பிடிக்க விரும்பினால், அப்படிப்பட்டவனை மணந்து கொள்ள இப்போதே உனக்கு நான் அனுமதி கொடுத்து விடுகிறேன். போர்க்களத்திலிருந்து நான் உயிரோடு திரும்பி வந்தால் உன்னையும் உன் மணாளனையும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து ஆசீர்வதிப்பேன். ஒருவேளை போர்க்களத்தில் உயிர் துறக்கும்படி நேரிட்டால், ஆவிவடிவத்திலே திரும்பி வந்து உங்களை ஆசீர்வதித்து விட்டு அப்புறந்தான் வீர சொர்க்கத்துக்குப் போவேன்." இவ்விதம் கூறிய போது செம்பியன் வளவனின் கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகியது. மங்கையர்க்கரசியும் தந்தையின் விசால மார்பில் முகத்தைப் பதித்துக் கொண்டு விம்மினாள். |