![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு பதினான்காம் அத்தியாயம் - படை கிளம்பல் மறுநாள் விஜயதசமி அன்று காலையில் வழக்கம் போல் கீழ்த்திசையில் உதயமான சூரியன், காஞ்சி மாநகரம் அன்றளித்த அசாதாரணக் காட்சியைக் கண்டு சற்றுத் திகைத்துப் போய் நின்ற இடத்திலேயே நின்றதாகக் காணப்பட்டது. பூர்விகப் பெருமை வாய்ந்த பல்லவ அரண்மனை வாசலில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி யாத்ராதானம், கிரகப் ப்ரீதி ஆகிய சடங்குகளைச் செய்து விட்டு, குலகுரு ருத்ராச்சாரியார் முதலிய பெரியோர்களின் ஆசிபெற்று, தாயார் புவனமகாதேவியிடமும் பட்டமகிஷி வானமாதேவியிடமும் விடைபெற்றுக் கொண்டு பட்டத்துப் போர் யானையின் மீது ஏறிப் போர் முனைக்குப் புறப்பட்டார். அப்போது காஞ்சி நகரத்தின் மாடமாளிகைகளெல்லாம் அதிரும்படியாகவும், மண்டபங்களிலேயெல்லாம் எதிரொலி கிளம்பும்படியாகவும் அநேகம் போர் முரசுகளும் எக்காளங்களும் ஆர்த்து முழங்கின. சக்கரவர்த்தி ஏறிய பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் அணிஅணியாக நின்ற யானைகளும் குதிரைகளும் ரதங்களும் ஏக காலத்தில் நகரத் தொடங்கிக் காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசலை நோக்கிச் செல்லத் தொடங்கின. இந்த ஊர்வலம் காஞ்சியின் இராஜ வீதிகளின் வழியாகச் சென்ற போது இருபுறத்திலும் இருந்த மாளிகை மேல்மாடங்களிலிருந்து பூரண சந்திரனையும் பொன்னிறத் தாமரையையும் ஒத்த முகங்களையுடைய பெண்மணிகள் பல வகை நறுமலர்களையும் மஞ்சள் கலந்த அட்சதையையும் சக்கரவர்த்தியின் மீது தூவி, 'ஜய விஜயீபவ!' என்று மங்கல வாழ்த்துக் கூறினார்கள். இப்படி நகர மாந்தரால் குதூகலமாக வழி அனுப்பப்பட்ட சக்கரவர்த்தியின் போர்க்கோல ஊர்வலம் ஒரு முகூர்த்த காலத்தில் வடக்குக் கோட்டை வாசலை அடைந்தது. நன்றாகத் திறந்திருந்த கோட்டை வாசல் வழியாகப் பார்த்தபோது, கோட்டைக்கு வெளியிலே சற்றுத் தூரத்தில் ஆரம்பித்துக் கண்ணுக்கெட்டிய வரை பரவிய ஒரு பெரிய சேனா சமுத்திரம் காணப்பட்டது. அந்த சேனா சமுத்திரத்தின் இடையிடையே கணக்கில்லாத கொடிகள் காற்றிலே பறந்த காட்சியானது, காற்று பலமாய் அடிக்கும் போது சமுத்திரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வெண்ணுரை எறிந்து பாயும் அலைகளை ஒத்திருந்தது. வடக்குக் கோட்டை வாசலில், அகழிக்கு அப்புறத்தில் நின்று மாமல்ல சக்கரவர்த்தி கடைசியாக விடைபெற்றுக் கொண்டது, மானவன்மரிடமும் தம் அருமைக் குழந்தைகள் இருவரிடமுந்தான். மகேந்திரனையும் குந்தவியையும் தமது இரு கரங்களாலும் வாரி அணைத்துத் தழுவிக் கொண்ட போது, 'இந்தக் குழந்தைகளை இனிமேல் எப்போதாவது காணப்போகிறோமோ, இல்லையோ?' என்ற எண்ணம் தோன்றவும், மாமல்லரின் கண்கள் கலங்கிக் கண்ணீர் ததும்பின. குழந்தைகளைக் கீழே இறக்கி விட்டு மானவன்மரைப் பார்த்து மாமல்லர் சொன்னார்: "என் அருமை நண்பரே! இந்தக் குழந்தைகளையும் இவர்களுடைய தாயாரையும் பல்லவ இராஜ்யத்தையும் உம்மை நம்பித்தான் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். நீர்தான் இவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து நான் திரும்பி வரும் போது ஒப்படைக்க வேண்டும். மானவன்மரே! பரஞ்சோதியின் அபிப்பிராயப்படி திருக்கழுக்குன்றத்தில் திரண்டிருந்த படையில் ஒரு பகுதியை நிறுத்தி விட்டுப் போகிறேன். பாண்டிய குமாரனாலோ, அவனுடைய படையினாலோ காஞ்சிக்கு அபாயம் நேர்வதாயிருந்தால், நம் படையைப் பயன் படுத்தத் தயங்க வேண்டாம்." "ஆகட்டும், பிரபு! தங்களுக்கு இவ்விடத்துக் கவலை சிறிதும் வேண்டாம்!" என்றான் மானவன்மன். "ரொம்ப சந்தோஷம், கடைசி நேரத்தில் எங்கே நீங்களும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். இதுதான் உண்மையான சிநேகத்துக்கு அழகு!" என்று உள்ளம் உவந்து கூறினார் மாமல்லர். அப்போது மகேந்திரன் ஆயிரத்தோராவது தடவையாக, "அப்பா! நானும் வாதாபிப் போருக்கு வருகிறேன், என்னையும் அழைத்துப் போங்கள்!" என்றான். புதல்வனைப் பார்த்து மாமல்லர், "மகேந்திரா! இந்த வாதாபி யுத்தம் கிடக்கட்டும். இதைவிடப் பெரிய இலங்கை யுத்தம் வரப் போகிறது. உன் மாமாவின் இராஜ்யத்தை அபகரித்துக் கொண்டவனைப் போரில் கொன்று இராஜ்யத்தைத் திரும்பப் பெற வேண்டும். அந்த யுத்தத்துக்கு நீ போகலாம்!" என்றார். இவ்விதம் கூறி விட்டு மாமல்லர் சட்டென்று குழந்தைகளைப் பிரிந்து சென்று போர் யானை மீது ஏறிக் கொண்டார். அவ்வளவுதான்! அந்தப் பெரிய பிரம்மாண்டமான சைனியம் சமுத்திரமே இடம் பெயர்ந்து செல்வது போல் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. அவ்வளவு பெரிய சைனியம் ஏககாலத்தில் நகரும் போது கிளம்பிய புழுதிப் படலமானது வானத்தையும் பூமியையும் ஒருங்கே மறைத்தது. அந்தப் புழுதிப் படலத்தில் பல்லவ சைனியம் அடியோடு மறைந்து போகும் வரையில் மானவன்மரும், மகேந்திரனும் குந்தவியும் கோட்டை வாசலில் நின்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். |