![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு பத்தொன்பதாம் அத்தியாயம் - அன்னையின் ஆசி மறுநாள் பாண்டியன் நெடுமாறன் புவனமகாதேவியிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக அந்த மூதாட்டியின் அரண்மனைக்குச் சென்றான். மகேந்திர பல்லவரின் பட்ட மகிஷி அக மகிழ்ந்து முகமலர்ந்து நெடுமாறனை வரவேற்றாள். அச்சமயம் அங்கிருந்த மங்கையர்க்கரசி வெளியேற யத்தனித்த போது, "குழந்தாய்! ஏன் போகிறாய்? பாண்டிய குமாரனுடன் நான் பேசக் கூடிய இரகசியம் ஒன்றும் இல்லை" எனக் கூறி அவளைப் போகாமல் நிறுத்தினாள். பிறகு நெடுமாறனை உட்காரச் சொல்லி, "அப்பனே! எல்லா விவரமும் அறிந்து கொண்டேன். வானமாதேவி நேற்றிரவே வந்து கூறினாள். இருந்தாலும் அந்த உத்தமியின் மனத்தை நீ ரொம்பவும் கலக்கி விட்டாய்!" என்றாள். நெடுமாறனுடைய மௌனத்தைக் கண்டு, "நீ காஞ்சிக்கு வந்தது முக்கியமாக எனக்குத்தான் பெரிய அனுகூலமாகப் போயிற்று. இந்தப் பெண்ணைத் தகுந்த வரனுக்கு மணம் செய்து கொடுப்பதாக இவளுடைய தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்திருந்தேன். அது விஷயத்தில் நான் பிரயத்தனம் செய்ய இடமில்லாமல் நீங்களே முடிவு செய்து கொண்டு விட்டீர்கள். எனக்கு அது விஷயமான பொறுப்பு இல்லாமல் போயிற்று" என்றாள் புவனமகாதேவி. "தாயே! அப்படிச் சொல்ல வேண்டாம். தங்களுடைய சுவீகாரப் பெண்ணின் கலியாண விஷயமாகத் தங்களுடைய பொறுப்பு தீரவில்லை. தாங்கள் பிரயத்தனம் செய்வதற்கு இடம் இருக்கிறது. கொஞ்சம் மங்கையர்க்கரசியைக் கேட்டு விடுங்கள், அவள் என்னை மணந்து கொண்டு தங்களுடைய பொறுப்பைத் தீர்த்து வைக்கப் போகிறாளா என்று!" இவ்விதம் நெடுமாறன் சொன்னதும், புவனமகாதேவி, "அவளைப் புதிதாய்க் கேட்பானேன்? ஏற்கெனவே எல்லாம் அவள் என்னிடம் சொல்லியாயிற்று" என்று கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்த்த தேவி, மங்கையர்க்கரசியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு, "இது என்ன? குழந்தைகள் அதற்குள்ளே ஏதேனும் சண்டை போட்டுக் கொண்டீர்களா?" என்று நெடுமாறனைப் பார்த்து வினவினாள். "சாதாரணச் சண்டை போடவில்லை, அம்மா! பெரிய யுத்தம்! வாதாபி யுத்தத்துக்கு நான் போகவில்லையே என்று இங்கே அரண்மனைக்குள்ளேயே யுத்தம் ஆரம்பித்தாயிற்று. இவ்வளவு தூரம் என்னை பைத்தியம் பிடிக்க அடித்து விட்டு, என் சொந்தத் தமக்கையே எனக்கு விஷங்கொடுத்துக் கொல்ல நினைக்கும் வரையில் கொண்டு வந்து விட்டு, இப்போது என்னை மணந்து கொள்ளமாட்டேனென்று சொல்லுகிறாள்! இதன் நியாயத்தை நீங்களே கேளுங்கள்!" என்றான் நெடுமாறன். புவனமகாதேவி மங்கையர்க்கரசியைப் பார்த்தாள். ஏதோ அனாவசியமான தடையை இவர்களே ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று தெரிந்து கொண்டாள். "குழந்தாய்! பாண்டிய குமாரன் சொல்வது வாஸ்தவமா? உன்னைத் தேடி வந்திருக்கும் மகத்தான பாக்கியத்தை நீயே வேண்டாமென்று மறுதலிக்கிறாயா?" என்று கேட்டாள். மங்கையர்க்கரசி விம்மிக் கொண்டே வந்து அவள் பாதத்தில் நமஸ்கரித்து, "அம்மா! இவருக்கு நான் என் உள்ளத்தைப் பறிகொடுத்து இவரை என் பதியாக வரித்தபோது இவர் சமணர் என்பது எனக்குத் தெரியாது...." என்று சொல்லி மேலே பேச முடியாமல் தேம்பினாள். நெடுமாறன் பெரும் கவலைக்குள்ளானான். "இது என்ன? கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே?" என்று அவன் திகைத்து நிற்கையில், புவனமகாதேவி அவனைப் பார்த்து, "அப்பனே! இந்தக் குழந்தை சைவர் குலத்தில் பிறந்தவள். சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறவள் என்று உனக்குத் தெரியுமல்லவா? அதற்கு ஒன்றும் தடைசெய்ய மாட்டாயே?" என்று கேட்டாள். நெடுமாறன் அந்தச் சங்கடமான நிலையிலிருந்து விடுபட வழிகிடைத்தது என்ற உற்சாகத்துடன், "அம்மா! அப்படிப்பட்ட மூர்க்கன் அல்லன் நான். சமண சமயத்தில் நான் பற்றுக் கொண்டவனானாலும் சைவத்தை வெறுப்பவன் அல்லன். என் ஆருயிர் நண்பனான குலச்சிறை அபாரமான சிவபக்தன். நான் சுரமாய்க் கிடந்த போது இங்கே வந்து திருநாவுக்கரசர் பெருமானிடம் திருநீறு வாங்கி வந்து எனக்கு இட்டான். அதை நான் ஆட்சேபிக்கவில்லை. மதுரையில் இருக்கும் போது அவன் காலை, மத்தியானம், மாலை மூன்று வேளையும் ஆலயத்துக்குச் சென்று மீனாக்ஷி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்து விட்டு வருவான். அம்மாதிரியே இவளும் செய்யட்டும், நான் தடை சொல்லவில்லை!" என்றான். அப்போதுதான் மங்கையர்க்கரசியின் முகம் முன்போல் பிரகாசமடைந்தது. அந்த அபூர்வமான காதலர் இருவரையும் புவனமகாதேவி தன் எதிரில் தம்பதிகளைப் போல் நிற்கச் செய்து ஆசி கூறி வாழ்த்தினாள். இன்னும் சிறிது நேரம் மேலே நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நெடுமாறன் அவ்விருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் சென்ற பிறகு புவனமகாதேவி மங்கையர்க்கரசியை அன்போடு அணைத்துக் கொண்டு, "குழந்தாய்! நீ கவலைப்படாதே! நீ சில நாளாக அடிக்கடி கண்டு வரும் கனவைப் பற்றிச் சொன்னாயல்லவா? உன் கனவு நிச்சயம் பலிக்கும். நெடுமாறன் சிவபக்தியில் சிறந்தவனாவான். அந்தப் புண்ணியத்தை நீ கட்டிக் கொள்வாய்!" என்று ஆசி கூறினாள். நெடுமாறனிடமும் மங்கையர்க்கரசியிடமும் இந்தக் கதையைப் பொறுத்தவரையில் நாமும் இப்போது விடைபெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி விடைபெறுமுன், நெடுமாறன் விஷயத்தில் புவனமகாதேவியின் வாக்கு முழுதும் உண்மையாயிற்று என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறோம். பிற்காலத்தில் நெடுமாறன் ஸ்ரீசம்பந்தப் பெருமானின் பேரருளினால் சிறந்த சிவநேசச் செல்வனானான். யுத்தம் சம்பந்தமான அவனுடைய கொள்கையும் மாறுதல் அடைய நேர்ந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வாதாபிப் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து பாண்டிய நாட்டை அடைந்த போது நெல்வேலிப் போர்க்களத்தில் அவனைப் பாண்டியன் நெடுமாறன் முறியடித்துத் தமிழகத்தின் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றான். |