![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு இருபத்திரண்டாம் அத்தியாயம் - பவளமல்லி மலர்ந்தது வாதாபி மாளிகையில் சிவகாமி சௌக்கியமாகத்தான் இருந்தாள். அதாவது அவளுடைய தேகம் சௌக்கியமாக இருந்தது. ஆனால், அவளுடைய உள்ளமோ ஒரு கணமேனும் சாந்தி காணாமல் அமைதி இன்றி அலைந்து கொண்டிருந்தது. வருஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு வருஷமும் வசந்தம், வேனில் முதலிய பருவ காலங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. வருஷங்களையும், பருவ காலங்களையும் கணக்கிடுவதற்குச் சிவகாமி ஒரு வழி கண்டுபிடித்திருந்தாள். அவள் வசித்த மாளிகையின் பின் முற்றத்தில் கிணற்றின் அருகில் ஒரு பவளமல்லி மரம் இருந்தது. சிவகாமி வாதாபிக்கு வந்த வருஷத்திலே அந்தப் பவளமல்லிச் செடியை அவள் தன் கையாலேயே கிணற்றின் அருகில் நட்டாள். நாகநந்தி அடிகள் அஜந்தா மலைப் பிராந்தியத்தைப் பற்றி வர்ணனை செய்த போது, அந்தப் பிரதேசத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்களில் கணக்கில்லாத பாரிஜாத மரங்கள் புஷ்பித்துக் குலுங்கும் என்றும், அந்த நறுமலர்களின் இனிய மணம் நெடுந்தூரம் காற்றிலே பரவி அந்தப் பக்கம் வருவோர்க்கெல்லாம் இன்ப போதையை உண்டாக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்ட சிவகாமி அந்தச் செடிகளில் ஒன்றைத் தனக்காகக் கொண்டு தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அவளுடைய வேண்டுகோளைக் கட்டளையாக மதித்த புத்த பிக்ஷு சீக்கிரத்தில் அஜந்தா மலைப் பிராந்தியத்திலிருந்து பவளமல்லிச் செடி ஒன்று தருவித்துக் கொடுத்தார். அந்தச் செடியை சிவகாமி நட்டுக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். கண்ணீருடன் தண்ணீரும் விட்டு வளர்த்து வந்தாள். அந்தப் பவளமல்லிச் செடியில் முதன் முதலில் இளந்தளிர் விட்ட போது சிவகாமியின் உள்ளம் துள்ளிக் குதித்தது. புதிய கிளை ஒன்று கிளம்பிய போது, துயரத்தால் வெதும்பிய அவள் உள்ளம் குதூகலத்தினால் பொங்கியது. முதன் முதலில் அந்தச் செடியிலே மொட்டு அரும்பிய போதும் அது பூவாக மலர்ந்த போதும் சிவகாமி சிறிது நேரம் தன் துயரங்களையெல்லாம் மறந்து ஆனந்தக் கடலில் மிதந்தாள். கிளி மூக்கின் வடிவமான அதன் அழகிய இதழ்களையும், செம்பவள நிறம் கொண்ட காம்பையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். நேரம் ஆக ஆக, சூரியன் வான மார்க்கத்தில் ஏற ஏற, அந்த மெல்லிதழ் மலர் வர வர வாடிச் சுருங்கிக் கடைசியில் கருகி உதிர்ந்த போது, தற்காலிகமாகக் குளிர்ந்து தளிர்த்திருந்த அவளுடைய இருதயமும் வாடிக் கருகித் தீய்ந்தது. செடி நன்றாக வேரூன்றிக் கிளைத்துத் தழைத்த பிறகு அதைக் கவலையுடன் பராமரிக்கும் வேலை சிவகாமிக்கு இல்லாமல் போயிற்று. அந்தச் செடியைக் கொண்டு பருவங்களையும் வருஷங்களையும் சிவகாமி கணக்கிட்டு வரத் தொடங்கினாள். மனிதர்களின் எலும்பு வரை குளிரச் செய்த பனிக் காலத்தில் அந்தப் பவளமல்லிகை மரத்தின் இலைகள் எல்லாம் காய்ந்து உலரத் தொடங்கும். இளவேனிற் காலத்தில் புதிய இளந்தளிர்கள் துளிர்க்கத் தொடங்கும், முதுவேனிற் காலத்தில் இலைகள் முற்றுவதோடு மொட்டுகளும் அரும்ப ஆரம்பிக்கும். உக்கிரமான மேல் காற்றோடு மழையும் கொட்டும். ஆனி, ஆடி மாதங்களில் அந்தப் பவளமல்லிச் செடி பேயாட்டம் ஆடிப் படாத பாடுபடும். அதைப் பார்க்கவும் சகிக்காமல் சிவகாமி வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருப்பாள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் அந்தப் பவளமல்லிகைச் செடி, பச்சைப் பசேல் என்ற இலைகளை அடியோடு மறைத்து விடுவதற்குப் போட்டி போடும் மலர்கள் குலுங்கப் பெற்று விளங்கும். அந்தக் காலங்களில் சிவகாமி முற்றத்தின் படிக்கட்டின் மீது உட்கார்ந்து அந்தச் செடியை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். நவராத்திரியின் போதும் விஜயதசமி அன்றைக்கும் தமிழகத்தின் ஆலையங்களில் விக்கிரகத்துக்குப் பவளமல்லி மலர்களைக் கொண்டு புஷ்பப் பாவாடை அலங்காரம் செய்வார்கள் என்பதை நினைவுகூர்வாள். அதோடு தான் வாதாபிக்கு வந்து ஒரு விஜயதசமி ஆயிற்று என்றும் கணக்கிடுவாள். இவ்வாறு கணக்கிட்டு வந்ததில், சிவகாமி வாதாபி நகரத்துக்கு வந்து, இப்போது ஒன்பது வருஷங்கள் ஆகி விட்டன. |