![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு இருபத்து நான்காம் அத்தியாயம் - பவள வியாபாரி நாகநந்தியும் சீன யாத்திரீகரும் போன பிறகு சிவகாமி சற்று நேரம் கற்சிலையாக சமைந்து உட்கார்ந்திருந்தாள். பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக வந்து போய்க் கொண்டிருந்தன. திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்ததும், அந்தப் பெருவெள்ளத்தில் தான் முழுகி இறப்பதற்கு இருந்ததும், மாமல்லர் நல்ல தருணத்தில் வந்து பானைத் தெப்பத்தில் தன்னை ஏற்றிக் கொண்டு காப்பாற்றியதும் நேற்று நடந்தது போல் நினைவு வந்தன. அந்தப் பெருவெள்ளத்தில் முழுகி உயிர் துறக்காத தான் இந்த வீட்டு முற்றத்திலிருந்த கிணற்றுத் தண்ணீரில் மூழ்கி உயிர் விடப் போவதை நினைத்த போது, சிலையை ஒத்திருந்த அவளுடைய அழகிய முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. கிணற்றிலே விழும் போது எப்படியிருக்கும்? விழுந்த பிற்பாடு எப்படியிருக்கும்? தண்ணீருக்குள் மூச்சடைத்துத் திணறும் போது தனக்கு என்னென்ன நினைவுகள் உண்டாகும்? மண்டபப்பட்டுக் கிராமத்தருகில் பானைத் தெப்பம் மோதிக் கவிழ்ந்து தான் தண்ணீரில் மூழ்கிய போது, தன்னை மாமல்லர் காப்பாற்றினாரே, அந்தச் சம்பவம் நினைவுக்கு வருமா? இப்படி எண்ணிய போது வீதியில், "பவளம் வாங்கலையா, பவளம்!" என்று கூவும் சப்தம் கேட்டது. சிவகாமி சிறிதும் சம்பந்தமில்லாமல், 'ஆமாம்! பவளமல்லி மலர்ந்துதான் இருக்கிறது! நான் கிணற்றில் விழுந்து இறந்த பிறகும் அது மலர்ந்து கொண்டுதானிருக்கும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். மறுபடியும் வீட்டு வாசலில், "பவளம் வாங்கலையா பவளம்!" என்று சப்தம் கேட்டது. ஏனோ அந்தக் குரல் சிவகாமிக்கு மெய்சிலிர்ப்பை உண்டாக்கியது. ஏற்கெனவே எப்போதாவது கேட்ட குரலா என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் பவள வியாபாரி வீட்டுக்குள்ளேயே வந்து, "அம்மா! பவளம் வேண்டுமா? அபூர்வமான உயர்ந்த பவளம்! அஜந்தா வர்ணத்தையும் தோற்கடிக்கும் அழகிய பவளம்!" என்றான். அஜந்தா என்றதும் மறுபடியும் சிவகாமி திடுக்கிட்டு அந்த வியாபாரியின் முகத்தை - தாடியும் மீசையும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த முதிர்ந்த முகத்தை உற்று நோக்கினாள், ஆ! அந்தக் கண்கள்! அன்போடும் பக்தியோடும் அவளை உற்றுப் பார்த்த அந்தக் கண்கள்....! "அம்மா! என்னைத் தெரியவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே பவள வியாபாரி நெருங்கி வந்து உட்கார்ந்து தான் கொண்டு வந்த பவள மூட்டையை அவிழ்த்தான். குண்டோ தரனுடைய குரல்தான் அது என்பதைச் சிவகாமி தெரிந்து கொண்டாள். இருந்தாலும், தன் கண்களையும் காதுகளையுமே நம்ப முடியாதவளாய், "யார், குண்டோ தரனா?" என்றாள். "ஆம்! நான்தான், அம்மா! அடியேனை மறந்து விட்டீர்களா?" என்று குண்டோ தரன் பணிவுடன் கேட்டான். "ஆமாம், அப்பனே! மறந்துதான் போயிற்று. நீங்கள் திரும்ப வருவதாகச் சொல்லி விட்டுப் போய் வருஷம் கொஞ்சமாக ஆகவில்லையே?" என்றாள் சிவகாமி சிறிது எரிச்சலுடன். "அம்மா! வெறுமனே திரும்பி வந்தால் போதுமா? தங்களுடைய சபதத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாய் வர வேண்டாமா?" என்றான் குண்டோ தரன். "ஆகா சபதம்! பாழும் சபதம்!" என்றாள் சிவகாமி, குண்டோ தரனைப் பார்த்து. "சபதத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டு விட்டேன், குண்டோ தரா!" என்றாள். குண்டோ தரன் விஷயம் விளங்காதவனைப் போல் வெறித்துப் பார்த்து, "அம்மா! என்ன சொல்கிறீர்கள்?" என்று வினவினான். "வேறு ஒன்றுமில்லை, அப்பா! நான் செய்த சபதந்தானே? அதை நானே கைவிட்டு விட்டேன்!" "அப்படிச் சொல்ல வேண்டாம், அம்மா! தாங்கள் செய்த சபதம் தமிழகமே செய்த சபதம், அதை நிறைவேற்றி வைப்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட பொறுப்பு!" "சபதத்தை நிறைவேற்றத்தான் நீ இந்த வேஷத்தில் வந்திருக்கிறாயா? அதற்காகத் தான் பவளம் கொண்டு வந்திருக்கிறாயா?" என்று ஏளனப் புன்னகையுடன் சிவகாமி கேட்டாள். "தாயே! இராம தூதனாகிய அனுமான் சீதாதேவியிடம் வந்தது போல் நான் வந்திருக்கிறேன். இராமபிரான் பின்னால் ஒரு பெரிய சேனா சமுத்திரத்துடன் வரப் போகிறார்!" என்றான். சிவகாமியின் தேகம் உணர்ச்சி மிகுதியினால் நடுங்கிற்று. ஆகா! ஒன்பது வருஷம் காத்திருந்தது உண்மையிலேயே பயனுள்ளதாகப் போகிறதா? மாமல்லர் தன்னை அழைத்துப் போக வரப் போகிறாரா? தன்னை விழுங்கி ஏப்பம் விடலாமென்று எண்ணியிருந்த முற்றத்துக் கிணறு ஏமாற்றமடையப் போகிறதா? "ஆம், அம்மா! தென்னாடு இது வரையில் என்றும் கண்டிராத மகத்தான பல்லவ சைனியம் ஆயத்தமாயிருக்கிறது. அந்தச் சைனியத்தின் முன்னணியில் நின்று மாமல்ல சக்கரவர்த்தியும் சேனாதிபதி பரஞ்சோதியும் வரப் போகிறார்கள்!" என்று குண்டோ தரன் தொடர்ந்து சொன்னான். "என்ன மாமல்ல சக்கரவர்த்தியா?" என்று சிவகாமி திடுக்கிட்டுக் கேட்டாள். "மன்னிக்க வேண்டும், அம்மா! தாங்கள் திடுக்கிடும்படி செய்து விட்டேன். மாமல்லப் பிரபுதான் இப்போது பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. மகேந்திர பல்லவர் கைலாசவாசியாகி இன்றைக்குப் பல ஆண்டுகள் சென்று விட்டன." இதைக் கேட்டதும் சிவகாமியின் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் பொழிந்தது. மகேந்திர பல்லவர் மீது பிற்காலத்தில் அவள் பல காரணங்களினால் கோபப்பட நேர்ந்தது உண்மைதான். ஆனாலும் குழந்தைப் பருவத்தில் அவர் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த அபரிமிதமான அன்பும் பக்தியும் அழிந்து போய் விடவில்லை. சிவகாமியின் துக்கத்தினிடையே குறுக்கிட மனமில்லாமல், குண்டோ தரன் சற்று நேரம் சும்மா இருந்தான். சிவகாமி திடீரென்று விம்மலை நிறுத்தி, "குண்டோ தரா! உன்னை ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். என்னால் இனி ஒரு கணநேரமும் இந்த நகரில் இருக்க முடியாது. இப்போதே என்னை அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றாள். குண்டோ தரன் திகைத்து நிற்பதைச் சிவகாமி பார்த்து, "என்ன யோசிக்கிறாய்? அதற்கு வசதியும் இப்போது நேர்ந்திருக்கிறது. புலிகேசி, கள்ள பிக்ஷு எல்லாம் இன்னும் இரண்டு நாளில் அஜந்தாவுக்குப் போகிறார்களாம். இப்போதெல்லாம் இங்கே கட்டுக் காவல் ஒன்றும் அதிகமாகக் கிடையாது. சுலபமாகத் தப்பித்துக் கொண்டு போகலாம். அப்படி என்னை அழைத்துப் போக உனக்கு இஷ்டமில்லாவிட்டால், இந்த வீட்டுக் கொல்லை முற்றத்தில் பவளமல்லிச் செடிக்கருகில் ஆழமான கிணறு ஒன்று இருக்கிறது. என் மேல் கருணை வைத்து அதில் என்னைத் தள்ளி விட்டுப் போய் விடு...!" என்று சொல்லி விட்டு மீண்டும் விம்மத் தொடங்கினாள். |