![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு இருபத்தைந்தாம் அத்தியாயம் - மகேந்திரர் சொன்னார்! சிவகாமி விம்மி ஓய்வதற்குச் சிறிது நேரம் கொடுத்து விட்டுக் குண்டோதரன் "தாயே! தென் தமிழ்நாட்டில் 'ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையா?' என்று ஒரு பழமொழி உண்டு. தாங்களும் ஒருவேளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இத்தனை நாள் பொறுத்திருந்தவர்கள், காரிய சித்தியடையப் போகும் சமயத்தில் பொறுமையிழக்கலாமா?" என்றான். "குண்டோ தரா! எனக்கா நீ பொறுமை உபதேசம் செய்கிறாய்? ஒன்பது வருஷ காலம் பகைவர்களின் நகரில் நிர்க்கதியாய், நிராதரவாய் உயிரை வைத்துக் கொண்டிருந்தவளுக்கா பொறுமையை உபதேசிக்கிறாய்?" என்று சிவகாமி தாங்காத மனக் கொதிப்புடன் கேட்டாள். "தாயே! தங்களுக்குப் பொறுமையை உபதேசிக்கவில்லை. என்னுடைய சக்தியின்மையைத்தான் அவ்விதம் வெளியிட்டேன். இராமாயணக் கதையில் இன்னொரு கட்டத்தைத் தங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அசோக வனத்தில் சீதையைக் கண்ட அனுமார், பிராட்டியைத் தன்னுடன் புறப்பட்டு வந்து விடும்படி கோரினார். இராமனிடம் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகச் சொன்னார். ஆனால், சீதாதேவி அனுமாருடன் வருவதற்கு மறுத்து விட்டார்...!" என்றான் குண்டோதரன். "குண்டோ தரா! சீதாதேவியின் உபமானத்தை எதற்காகச் சொல்லுகிறாய்? நான் சீதாதேவி அல்ல; மிதிலையை ஆண்ட ஜனக மகாராஜாவின் புத்திரியும் அல்ல; ஏழைச் சிற்பியின் மகள்...!" "அம்மா! நானும் அனுமார் அல்ல. உருவத்திலே ஏதோ அந்த இராம தூதனை ஒத்திருக்கிறேன்! ஆனால், அவருடைய சக்தியிலே லட்சத்தில் ஒரு பங்கு கூட எனக்குக் கிடையாது. இந்த வாதாபி நகரத்தைத் தனியாகக் கொளுத்தி எரித்து விட்டுத் தங்களை அழைத்துப் போகும் சக்தி எனக்கு இல்லையே! என் செய்வேன்?" "ஆ! மறுபடியும் என் பாழும் சபதத்தைக் குறிப்பிடுகிறாய். அதைத்தான் நான் கைவிட்டு விட்டேன் என்று சொன்னேனே? என்னை உன்னோடு அழைத்துப் போகும்படிதானே சொல்கிறேன்?..." "அம்மா! இதே வீட்டில் இதே இடத்தில் நின்று, மாமல்லர் தம்முடன் வந்து விடும்படி தங்களை வருந்தி வருந்தி அழைத்தார். தாங்கள் பிடிவாதமாக மறுத்து விட்டீர்கள். 'என் சபதத்தை நிறைவேற்றி விட்டு என்னை அழைத்துப் போங்கள்' என்றீர்கள். அதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். இப்போது மாமல்லர் சபதத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்மா! நாளை விஜயதசமியன்று கிளம்புவதற்கு நாள் பார்த்திருக்கிறது. எல்லாம் உத்தேசப்படி நடந்தால் சரியாக இன்னும் ஒரு மாதத்துக்குள் வாதாபி கோட்டையைப் பல்லவ சைனியம் சூழ்ந்து முற்றுகையிடும். தங்கள் கண்முன்னால் தங்களுடைய சபதம் நிறைவேறுவதைப் பார்ப்பீர்கள். அதைரியத்துக்கு இடங்கொடாமல் இன்னும் சிறிது காலம் பொறுமையாயிருங்கள்..." "குண்டோதரா! நான் சொல்வதை நீ புரிந்து கொள்ளவில்லை. என் மனத்தையும் நன்றாய் அறிந்து கொள்ளவில்லை. அதைரியத்தினாலோ, அல்லது பொறுமை இழந்தோ நான் பேசவில்லை. எனக்காக இன்னொரு பயங்கர யுத்தம் நடப்பதைத் தடுக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததெல்லாம் போதாதா? அந்தச் சமயம் ஏதோ ஆத்திரமாயிருந்தது, அதனால் அப்படிச் சபதம் செய்து விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது மூடத்தனம் என்று தோன்றுகிறது. யுத்தம் என்றால் என்னென்ன பயங்கரங்கள் நடக்கும்? எத்தனை பேர் சாவார்கள்? எத்தனை குற்றமற்ற ஜனங்கள் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள்? வெற்றி தோல்வியைப் பற்றித்தான் நிச்சயம் என்ன சொல்ல முடியும்? இந்தத் துரதிர்ஷ்டக்காரியின் மூடப் பிடிவாதத்துக்காக அம்மாதிரிக் கஷ்டங்கள் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அதனாலேதான் என்னை உன்னோடு அழைத்துப் போகச் சொல்லுகிறேன்!" என்றாள் சிவகாமி. இதற்கு என்ன மறுமொழி சொல்லுவது என்று தெரியாமல் குண்டோதரன் திகைத்து நின்றான். சிறிது நேரம் யோசித்து, "அம்மா! இனிமேல் தங்களுடைய சபதத்தைத் தாங்கள் மாற்றிக் கொண்டபோதிலும், மாமல்லர் வாதாபிப் படையெடுப்பைக் கைவிட முடியாது. மகேந்திர பல்லவர் மரணத் தறுவாயில் மாமல்லருக்கு இட்ட கட்டளையை அவர் நிறைவேற்றியே தீருவார்!" என்றதும், சிவகாமி, "ஆ! மகேந்திரர் என்ன கட்டளையிட்டார்?" என்றாள். "ஆயனச் சிற்பியின் மகள் செய்த சபதத்தை எப்படியாவது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று கட்டளையிட்டார்! வாதாபியைச் சுட்டு எரித்துச் சிவகாமி அம்மையைக் கொண்டு வந்தால்தான் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரும் என்று வற்புறுத்திக் கூறினார். அதற்காக இடைவிடாத பிரயத்தனம் செய்யும்படி மாமல்லரையும் மந்திரிமார்களையும் கேட்டுக் கொண்டார்!" என்று குண்டோதரன் கூறியதும், "ஆகா! சக்கரவர்த்திக்கு என்பேரில் அவ்வளவு கருணை இருந்ததா! அவரைப் பற்றி என்னவெல்லாம் நான் தவறாக எண்ணினேன்?" என்று கூறிச் சிவகாமி மறுபடியும் கலகலவென்று கண்ணீர் விட்டாள். பிறகு மகேந்திர பல்லவரின் மரணத்தைப் பற்றியும் இன்னும் காஞ்சியில் சென்ற ஒன்பது வருஷமாக நடந்த சம்பவங்களைப் பற்றியும் விவரமாகச் சொல்லும்படி கேட்டாள். குண்டோதரன் எல்லாச் சம்பவங்களையும் பற்றிக் கூறினான். ஆனால், ஒரு சம்பவத்தைப் பற்றி மட்டும் அவன் பிரஸ்தாபிக்கவே இல்லை. அதைச் சொல்ல அவனுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. குண்டோதரன் விடைபெற்றுக் கிளம்ப வேண்டிய சமயம் வந்த போது, சிவகாமி ஏக்கம் நிறைந்த குரலில், "அப்பனே! மாமல்லர் நிச்சயம் வருவாரா? அல்லது எனக்கு வீண் ஆசை காட்டுகிறாயா?" என்று கேட்டாள். "நிச்சயமாக வருவார், அம்மா! பல்லவ குலத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக அவசியம் வந்தே தீருவார்!" என்றான் குண்டோதரன். "உண்மைதான்! பல்லவ குலத்தின் கௌரவந்தான் அவருக்குப் பெரிது. அதற்காகத்தான் இவ்வளவு காலம் கழித்து வருகிறார். என்பேரில் உள்ள அன்புக்காக வருவதாயிருந்தால், முன்னமே வந்து என்னை அழைத்துப் போயிருக்க மாட்டாரா?" என்றாள். குண்டோதரன் தன் மனத்திற்குள், "ஆ! ஸ்திரீகளைத் திருப்தி செய்வது மிகவும் கடினமான காரியம். இப்படி திருப்தி செய்ய முடியாத ஸ்திரீகளுக்காகச் சிலர் இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு இப்படி உயிரை விடுகிறார்களே? என்ன பைத்தியக்காரத்தனம்?" என்று எண்ணினான். பிறகு, "அம்மா! பல்லவ குலத்தின் கௌரவத்தைக் காட்டிலும் தங்களுடைய அன்பே பெரிதென்று கருதி மாமல்லர் இங்கு ஒருநாள் மாறுவேடத்தில் வரவில்லையா? அவருடன் புறப்பட்டு வந்து விடும்படி தங்களை எவ்வளவோ மன்றாடி வேண்டிக் கொள்ளவில்லையா?" என்று வெளிப்படையாகக் கேட்டான். "ஆம், குண்டோ தரா! அப்போது நான் செய்தது பெரிய தவறுதான். அந்தத் தவறுக்காக ஒன்பது வருஷம் என்னைத் தண்டித்தது போதும் என்று மாமல்லரிடம் சொல்லு! அவரை மீண்டும் ஒருமுறை பார்த்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்காகத்தான் இத்தனை நாள் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லு!" என்றாள் சிவகாமி. நல்லவேளையாக, அந்தப் பேதை தனக்கு இன்னும் எவ்வளவு கடூரமான தண்டனைகள் காத்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால், எந்தக் காரணத்துக்காகவேனும் உயிரை வைத்துக் கொண்டிருக்க உடன்பட்டிருக்கக் கூடுமா? குண்டோதரன் கடைசியாகப் புறப்பட வேண்டிய சமயத்தில் தயங்கித் தயங்கி நின்றான். அவனைப் பார்த்தால் ஏதோ சொல்ல விரும்பியவன் போலவும், அதற்குத் துணிச்சல் வராமல் சங்கடப்படுவதாகவும் தோன்றியது. சிவகாமி அவனைத் தைரியப்படுத்தி, "இன்னும் ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா? தயங்காமல் சொல்லு!" என்றாள். "தேவி வேறு ஒன்றுமில்லை. 'ஸ்திரீகளிடம் இரகசியம் தங்காது' என்பதாக ஒரு வழக்கு உண்டு. மகாபாரதத்திலே கூட அந்த மாதிரி ஒரு கதை இருக்கிறது. அம்மா! கோபித்துக் கொள்ளாதீர்கள், நான் வந்து போன விஷயமோ, மாமல்லர் படையெடுத்து வரும் விஷயமோ இங்கே பிரஸ்தாபம் ஆகக் கூடாது!" சிவகாமியின் முகத்தில் சோகம் கலந்த புன்னகை அரும்பியது. "குண்டோதரா! மாமல்லருக்கு இத்தனை நாளும் என்னால் ஏற்பட்ட சங்கடமெல்லாம் போதாதா? இந்த வஞ்சகப் பாதகர்களிடம் இன்னமும் அவரை நான் காட்டிக் கொடுப்பேனா? இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் நாகநந்தி பிக்ஷுவைத் தவிர யாரும் இல்லை. அவரும் அஜந்தாவுக்குப் போகிறார். ஆகையால் நீ கவலையில்லாமல் திரும்பிச் செல்!" என்றாள் சிவகாமி. பிறகு, "குண்டோதரா! நீ உன்னை அனுமார் என்று சொல்லிக் கொண்டாய். அந்தப் பெயருக்குத் தகுதியாக நடந்து கொள். மாமல்லரை விட்டு ஒரு க்ஷணமும் பிரியாமல் இருந்து அவரைக் காப்பாற்று! இந்தப் பாவிகள் நெஞ்சிலே விஷம் உள்ளவர்கள். விஷம் தோய்ந்த கத்தி எறிந்து கொல்கிறவர்கள். ஐயோ! என்னுடைய மூடப் பிடிவாதத்தினால் அவருக்கு மறுபடியும் ஆபத்து வர வேண்டுமா?" என்றாள் சிவகாமி. சிவகாமி ஏன் யுத்தத்தை விரும்பவில்லை என்பது அப்போதுதான் குண்டோ தரனுக்குத் தெளிவாயிற்று. மாமல்லருக்குப் போர்க்களத்தில் ஏதாவது அபாயம் வரப் போகிறதோ என்று அவள் கவலைப்பட்டது தான் காரணம் என்று தெரிந்து கொண்டாள். சிவகாமி தேவியிடம் அவனுடைய பக்தியும் அபிமானமும் முன்னை விடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. |