![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு இருபத்தாறாம் அத்தியாயம் - நீலகேசி உதயம் குண்டோதரன் வந்து விட்டுப் போனதிலிருந்து சிவகாமியின் சித்தக் கடலில் கொந்தளிப்பு அதிகமாயிற்று. மலை போன்று எண்ண அலைகள் எழுந்து விழுந்து நாற்புறமும் மோதிப் பாய்ந்து அல்லோலகல்லோலம் செய்தன. பொழுது போவது மிகவும் சிரமமாகி, ஒவ்வொரு கணமும் ஒரு முடிவில்லாத யுகமாகத் தோன்றியது. குண்டோதரன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவனிடம் நாம் உசிதமான முறையில் பேசினோமோ இல்லையோ என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றியது. மாமல்லரிடம் போய் அவன் என்ன சொல்கிறானோ என்னவோ என்ற கவலையும் அடிக்கடி ஏற்பட்டது. மாமல்லர் வரப் போவது பற்றிய இரகசியத்தை வெளியிட்டு விட வேண்டாம் என்று குண்டோதரன் தனக்கு எச்சரிக்கை செய்ததைப் பற்றி நினைத்துக் கொண்ட போது மட்டும் சிவகாமியின் சோகம் குடிகொண்ட வதனத்தில் புன்னகை தோன்றிற்று. ஆயினும், அந்த எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்பது வெகு சீக்கிரத்திலே அவளுக்குத் தெரியவந்தது. குண்டோதரன் வந்து சென்ற மூன்றாம் நாள் வாதாபி நகரம் அளவில்லாத அல்லோல கல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. அன்றைய தினம் புலிகேசிச் சக்கரவர்த்தி அஜந்தா கலை விழாவுக்காகப் பயணமாகிறார் என்பதும், பக்கத்திலுள்ள இராஜவீதி வழியாக அவருடைய ஊர்வலம் போகும் என்பதும் சிவகாமிக்குத் தெரிந்திருந்தது. தன் வீட்டின் பலகணியின் வழியாகவே மேற்படி ஊர்வலக் காட்சியைக் காணலாம் என்று அவள் அறிந்திருந்தாள். கடைசியாக, பிற்பகலில் மூன்றாவது ஜாமத்தில் சக்கரவர்த்தியின் பிரயாண ஊர்வலம் வந்தது. பட்டத்து யானை மீது புலிகேசிச் சக்கரவர்த்தி கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் சிவிகைகளில் நாகநந்தி பிக்ஷுவும் சீன யாத்திரிகரும் சென்றார்கள். அழகிய தங்க ரதத்தில் சக்கரவர்த்தியின் இளம் புதல்வர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். இன்னும், சக்கரவர்த்தியின் முன்னாலும் பின்னாலும் சாம்ராஜ்யத்தின் பிரதான அமாத்தியர்கள், மந்திரிமார்கள், சாமந்தர்கள், சேனா நாயகர்கள் முதலியோர் பலவித வாகனங்களில் பெருமிதத்துடன் அமர்ந்து சென்றார்கள். பொது ஜனங்களின் கோலாகல கோஷங்களோடு வாத்திய முழக்கங்களும் சேர்ந்து காது செவிடுபடும்படிச் செய்தன. இதையெல்லாம் பார்த்த சிவகாமிக்குக் காஞ்சியில் மகேந்திர பல்லவர் மாமல்லபுரத்துக் கலை விழாவிற்கு கிளம்பும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா! முன்னொரு காலத்தில் இந்தப் புலிகேசி எத்தகைய கலை உணர்வே இல்லாத மூர்க்கனாயிருந்தான்! இப்போது எப்பேர்ப்பட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது? இதற்கெல்லாம் என்ன காரணம்? காஞ்சியைப் பார்த்து விட்டு வந்ததுதானோ? அந்த ஊர்வலக் காட்சியைப் பற்றி பிறகு நினைத்த போதெல்லாம் சிவகாமிக்கு எரிச்சல் உண்டாயிற்று. 'இந்தப் புலிகேசியின் ஆடம்பரமும் இறுமாப்பும் கூடிய சீக்கிரத்தில் அடங்கப் போகிறதல்லவா?' என்பதை எண்ணிய போது ஓரளவு ஆறுதல் உண்டாயிற்று. இவர்கள் அஜந்தாவிலிருந்து திரும்பி வருவதற்குள்ளே மாமல்லர் இங்கு வந்து விடக்கூடுமல்லவா? அதை அறிந்தவுடனே இவர்களுக்கெல்லாம் எத்தகைய திகில் உண்டாகும்!' "யுத்தம் வேண்டாம்" என்று தான் குண்டோ தரனிடம் சொன்னது தவறு என்று சிவகாமிக்கு அப்போது தோன்றியது. அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த இன்னொரு காரணமும் சேர்ந்தது. பட்டத்து யானைக்குப் பின்னால் சிவிகையில் சென்ற பிக்ஷு சிவகாமி இருந்த வீட்டின் பக்கம் ஒருகணம் முகத்தைத் திருப்பிப் பார்த்ததாகத் தோன்றியது. ஆனாலும், நாகநந்தி பிரயாணம் கிளம்புவதற்கு முன்னால் தன்னிடம் மறுபடியும் வந்து விடைபெறுவார் என்று அவள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. "ஆ! இந்தக் கள்ளப் பிக்ஷுவுக்கு இவ்வளவு அகங்காரமா?" என்று எண்ணி ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள். எனவே, அன்று மாலை இருட்டுகிற சமயத்தில் நாகநந்தி அவள் வீட்டு வாசலில் குதிரை மீது வந்து இறங்கி, உள்ளேயும் பிரவேசித்து வந்த போது சிவகாமி எல்லையற்ற வியப்பு அடைந்தவளாய், "சுவாமி! இதென்ன? தாங்கள் அஜந்தா மார்க்கத்தில் போய்க் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்தேன்? போகவில்லையா என்ன?" என்றாள். "கட்டாயம் போகிறேன், சிவகாமி! அஜந்தாவில் எனக்கு மிகவும் முக்கியமான காரியம் இருக்கிறது, அதில் உனக்குச் சம்பந்தம் உண்டு. அதைப் பற்றி உன்னிடம் சொல்லி விட்டுப் போக வேண்டும் என்றுதான் திரும்பி அவசரமாக வந்தேன். இன்றிரவே சக்கரவர்த்தி தங்கியிருக்கும் இடம் போய்ச் சேர்ந்து விடுவேன்!" என்று சொல்லி விட்டு, சிவகாமிக்குப் பேச இடங்கொடாமல், "இன்று பிற்பகலில் அந்தப் பக்கம் போன ஊர்வலத்தைப் பார்த்தாயா?" என்று கேட்டார் நாகநந்தி பிக்ஷு. "ஓ! பார்த்தேன், மகேந்திர பல்லவர் கலைத் திருநாளுக்காகக் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் புறப்படும் காட்சி ஞாபகம் வந்தது. ஏதேது? புலிகேசிச் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவரைக் கூடத் தோற்கடித்து விடுவார் போலிருக்கிறதே?" என்றாள் சிவகாமி. "நிச்சயமாகத் தோற்கடிப்பார், சந்தேகமில்லை! வாதாபிச் சக்கரவர்த்தி இப்போது பழைய இரத்தவெறி கொண்ட புலிகேசி அல்ல. கலை மோகமும் ரஸிகத்தன்மையும் கொண்ட புதிய புலிகேசி" என்றார் நாகநந்தி. "அப்படியானால் அஜந்தாவிலும் கலைவிழா கோலாகலமாய்த்தானிருக்கும்" என்றாள் சிவகாமி. "அதிலும் சந்தேகமில்லை, அஜந்தாவின் புத்த பிக்ஷுக்கள் சக்கரவர்த்தியை ஒப்பற்ற முறையில் வரவேற்று உபசரிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த வைபவத்தை முன்னிட்டு புகழ்பெற்ற நாலந்தாவிலிருந்தும் ஸ்ரீபர்வதத்திலிருந்தும் இன்னும் பல புத்த பீடங்களிலிருந்தும் ஆசாரிய புருஷர்கள் பலர் வந்திருக்கிறார்களாம். உனக்குத் தெரியுமோ, இல்லையோ! வாதாபிச் சக்கரவர்த்திக்கு இளம்பிராயத்தில் அடைக்கலம் தந்து காப்பாற்றியது அஜந்தா சங்கிராமம்தான். ஆயினும் வெகு காலம் வரையில் அஜந்தா சங்கிராமத்துக்குச் சக்கரவர்த்தி எந்தவித உதவியும் செய்யவில்லை. அதற்கு ஜைன முனிவர்கள் இடம் கொடுக்கவில்லை. இராஜாங்கத்திலிருந்து செய்யும் உதவியெல்லாம் சமண மடங்களுக்கும் சமணக் கோயில்களுக்கும்தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். ஆனால், இப்போது சக்கரவர்த்தியின் மனம் மாறி விட்டது. சமணர், பௌத்தர், சைவர், வைஷ்ணவர், சாக்தர் ஆகிய எந்த மதத்தினரானாலும், சிற்ப - சித்திரக் கலைகளை வளர்ப்பவர்களுக்கெல்லாம் இராஜாங்கத்திலிருந்து மானியங்களைக் கொடுத்து வருகிறார். இது காரணமாக இப்போது இந்தச் சளுக்க சாம்ராஜ்யம் இந்தியாவிலேயே கலை வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. கன்யாகுப்ஜத்தையும் காஞ்சியையும் வாதாபி தோற்கடித்து விட்டது!" என்று நாகநந்தி பெருமிதத்தோடு கூறியதைச் சிவகாமி உண்மையான ஆவலோடு கேட்டுக் கொண்டு வந்தாள். "சிவகாமி! வாதாபிச் சக்கரவர்த்தியின் இந்த மன மாறுதலுக்கு யார் காரணம் என்று உனக்குத் தெரியுமா?" என்று நாகநந்தி கேட்ட போது, "சந்தேகம் என்ன சுவாமி! சகல கலைகளிலும் வல்ல மகா ரஸிகரான நாகநந்தியடிகள்தான்!" என்று சிவகாமி பளிச்சென்று விடையளித்தாள். நாகநந்தியின் முகம் ஒன்பது வருஷத்துக்கு முன்பு நாம் பார்த்தபோதிருந்ததைக் காட்டிலும் இப்போது களை பொருந்தி விளங்கிற்று. முன்னே அந்த முகத்தில் நாம் கண்ட கொடூரம் இப்போது கிடையாது. சிவகாமியின் மறுமொழி அவருடைய முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கி, மேலும் களை பொருந்தியதாகச் செய்தது. அத்தகைய முகமலர்ச்சியோடு கனிவு ததும்பிக் காந்த சக்தி வீசிய கண்களினால் சிவகாமியை அவர் நோக்கி, "கலைவாணி! நீ கூறியது உண்மை. இரத்த தாகமும் யுத்த வெறியும் கொண்டிருந்த புலிகேசியைக் கலைமோகம் கொண்ட ரஸிகனாகச் செய்தது நான்தான். ஆனால், அதற்கு முன்னால், என்னை அத்தகைய கலைப் பித்தனாகப் பண்ணியது யார்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் நாகநந்தியடிகள். பிக்ஷு குறிப்பிடுவது தன்னைத்தான் என்று சிவகாமி மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள். ஆயினும், வெளிப்படையாக "எனக்கு எப்படித் தெரியும் சுவாமி?" என்று கூறினாள். "ஆம், உனக்குத் தெரியாதுதான். இது வரையில் உனக்கு நான் சொல்லவும் இல்லை. அஜந்தா சங்கிராமத்துச் சுவர்களிலே எத்தனையோ அற்புதச் சித்திரங்கள் அழியா வர்ணங்களில் தீட்டிய தெய்வீகச் சித்திரங்கள் இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமல்லவா? அந்தச் சித்திரங்களிலே பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் சித்திரம் ஒன்றும் இருக்கிறது. அந்தச் சித்திரந்தான் முதன் முதலில் எனக்குக் கலை மோகத்தை உண்டாக்கிற்று. சிவகாமி! அந்த அற்புதச் சித்திரத்தை என்றைக்காவது ஒருநாள் நீ அவசியம் பார்க்க வேண்டும்...." "வீண் ஆசை எதற்காக? அஜந்தா அதிசயங்களைப் பார்க்கும் பாக்கியம் இந்த ஜன்மத்தில் எனக்குக் கிட்டப் போவதில்லை!" என்றாள் சிவகாமி. "அப்படிச் சொல்லாதே! இந்தத் தடவை நீ எங்களுடன் வராததில் எனக்கும் ஒருவிதத்தில் திருப்திதான். ஏனெனில் இந்தத் தடவை நீ எங்களுடன் வந்தாயானால், எனக்கும் மன நிம்மதியிராது. உனக்கும் மன நிம்மதியிராது. ஆனால் காலம் எப்போதும் இப்படியே இருந்து விடாது. சீக்கிரத்தில் மாறியே தீரும்." நாகநந்தி இவ்விதம் சொன்ன போது, சிவகாமியின் நெஞ்சில் 'சுரீர்' என்றது. நாகநந்தியை அவள் கூர்ந்து நோக்கி, "காலம் எப்படி மாறும்? என்ன விதத்தில் மாறும்?" என்று கேட்டாள். "நீ இந்தக் கூண்டிலேயிருந்து விடுதலையடைந்து வானவெளியில் உல்லாசமாகப் பாடிக் கொண்டு சஞ்சரிக்கும் காலம் சீக்கிரத்தில் வரலாம்!" "ஒருநாளும் வரப் போவதில்லை" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி. "அப்படியானால், உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையே உனக்கு இல்லையா?" என்று நாகநந்தி கேட்டார். சிவகாமி பல்லைக் கடித்துச் சமாளித்துக் கொண்டு, "இல்லை; அந்த நம்பிக்கையை நான் இழந்து எத்தனையோ நாளாயிற்று!" என்றாள். ஆனால், அவளுடைய மனத்தில் பெரும் பீதியும் கலக்கமும் குடிகொண்டன. இந்த வஞ்சகப் பிக்ஷு ஏதாவது சந்தேகிக்கிறாரா? நம்மிடம் உண்மை அறிய பார்க்கிறாரா? ஒருவேளை குண்டோதரன் இவரிடம் சிக்கிக் கொண்டிருப்பானோ? "சிவகாமி! உன்னுடைய சபதம் நிறைவேறும் என்ற நம்பிக்கையை நீ இழந்து விட்டாய். ஆனால், சபதம் நிறைவேறாமல் நீ இந்த ஊரை விட்டுக் கிளம்பவும் மாட்டாய். அப்படித்தானே?" "ஆம், சுவாமி! அப்படித்தான்!" என்று சிவகாமி தயக்கமின்றி மறுமொழி கூறினாள். அப்போதுதான் குண்டோ தரனுடைய எச்சரிக்கையை அவள் நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். "ஆகா! உன்னை இந்தக் கதிக்கு உள்ளாக்க ஒருநாளும் நான் உடன்படேன், சிவகாமி! நேற்றுச் சீனப் பெரியாரிடம் சொன்னது போலச் செய்ய வேண்டியது தான். மாமல்லர் வந்து உன் சபதத்தை நிறைவேற்றிவைக்காவிடில், நானே நிறைவேற்றி வைக்கிறேன். இந்த நகருக்கு என் கையாலேயே நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுகிறேன்!" "ஆ! இது என்ன பேச்சு? இந்தப் பைத்தியக்காரியின் பிடிவாதத்துக்காகத் தாங்கள் ஏன் அத்தகைய கொடிய காரியத்தைச் செய்ய வேண்டும்? வேண்டவே வேண்டாம்." "அப்படியானால் நீயாவது உன்னுடைய அர்த்தமற்ற சபதத்தை விட்டு விட வேண்டும்." பேச்சை மாற்றத் தீர்மானித்த சிவகாமி, "சுவாமி! என்னைப் பற்றி இவ்வளவு பேசியது போதும். தங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அஜந்தாவைப் பற்றிப் பேசுங்கள்!" என்றாள். "ஆம்! முக்கியமாக என்னைப் பற்றிப் பேசுவதற்குத்தான் வந்தேன். அஜந்தாவில் நான் புனர்ஜன்மம் எடுக்கப் போகிறேன். திரும்பி வரும் போது காவி உடை தரித்த புத்த பிக்ஷுவாக வர மாட்டேன். பட்டுப் பீதாம்பரம் அணிந்த நீலகேசி மகாராஜாவாக வருவேன்!" என்று நாகநந்தி கூறியதும், சிவகாமி வியப்புடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். |