![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - சிம்மக் கொடி உயிர்க்களை இழந்து மரணத்தின் அமைதி குடிகொண்டிருந்த கண்ணபிரானுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் சிவகாமி கண்ணீர் விட்டுத் தேம்பி அழுது கொண்டிருந்தாள். "அம்மா! எத்தனை நேரம் அழுது புலம்பினாலும் கண்ணனுடைய உயிர் திரும்பி வரப்போவதில்லை. யுத்தம் என்றால் அப்படித்தான். கண்ணபிரான் ஒருவன் தானா இறந்தான்? இவனைப் போல் பதினாயிரக்கணக்கான வீரர்கள் பலியானார்கள். தயவு செய்து புறப்படுங்கள், இந்த வீட்டுக்குப் பக்கத்தில் தீ வந்து விட்டது" என்று பரஞ்சோதி கூறினார். கண்ணீர் ததும்பிய கண்களினால் சிவகாமி அவரைப் பரிதாபமாகப் பார்த்து, "தளபதி! யுத்தம் வேண்டாம் என்று தங்களுக்கு ஓலை எழுதி அனுப்பினேனே!" என்று விம்மினாள். "ஆம், அம்மா! யுத்தத்தைத் தடுப்பதற்கு நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். என் முயற்சி பலிதமாகும் சமயத்தில் அந்தக் கள்ள பிக்ஷு வந்து எல்லாக் காரியத்தையும் கெடுத்துவிட்டான். வாதாபி நகரம் அழிய வேண்டும் என்று விதி இருக்கும்போது யார் என்ன செய்ய முடியும்?" "ஐயா! விதியின் பேரில் ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் காரணம் இந்தப் பாதகிதான். அன்றைக்குத் தாங்களும் அவரும் வந்து எவ்வளவோ பிடிவாரமாக என்னை அழைத்தீர்கள். மூர்க்கத்தனத்தினால், 'வரமாட்டேன்' என்று சொன்னேன்..." "அம்மா! எவ்வளவோ காரியங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். அதையெல்லாம் பற்றி இப்போது யோசித்து என்ன பயன்? தயவு செய்து புறப்படுங்கள். மாமல்லரும் தங்கள் தந்தையும் தங்களைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்." "தளபதி! அவருடைய முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? என்னால் முடியாது. நான் இங்கேயே இருந்து உயிரை விடுகிறேன். ஆயிரந் தடவை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக அவரிடம் சொல்லுங்கள்!" என்று சிவகாமி சொல்லிக் கொண்டிருக்கும்போது வாசலில் பெருஞ் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் மாமல்லர் உள்ளே பிரவேசித்தார். அவருக்குப் பின்னால் ஆயனரும் வந்தார். "ஆ! இதோ அவரே வந்துவிட்டார்" என்று பரஞ்சோதி வாய்விட்டுக் கூறி, மனத்திற்குள், "இத்துடன் என் பொறுப்புத் தீர்ந்தது!" என்று சொல்லிக் கொண்டார். "அவரே வந்துவிட்டார்!" என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும் சிவகாமியின் தேகம் புல்லரித்தது. குனிந்திருந்த தலையை நிமிர்த்தி வாசற் பக்கம் பார்த்தாள். கண நேரத்திலும் மிகச் சிறிய நேரம் மாமல்லருடைய கண்களும் சிவகாமியின் கண்களும் சந்தித்தன. அடக்க முடியாத உணர்ச்சி பொங்கச் சிவகாமி மறுபடியும் தலை குனிந்தாள். அவளுடைய அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி மேலே வந்து மார்பையும் தொண்டையையும் அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமலும் தேம்பி அழுவதற்கு முடியாமலும் செய்தது. அப்புறம் சிறிது நேரம் அங்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் சிவகாமி உணர்வற்றிருந்தாள். "ஆ! கண்ணபிரானா? ஐயோ!" என்று அவளுடைய தந்தையின் குரல் அலறுவது காதில் விழுந்ததும் உணர்வு பெற்றாள். "ஆமாம் கண்ணன்தான்! கமலியின் சிநேகிதியைச் சிறை மீட்டு ரதத்தில் வைத்து அழைத்து வர வந்த கண்ணன்தான் மார்பில் விஷக்கத்தி பாய்ந்து செத்துக் கிடக்கிறான், ஆயனரே! உம்முடைய மகளைக் கேளும். அவளுடைய சபதம் நிறைவேறிவிட்டதல்லவா? அவளுடைய உள்ளம் குளிர்ந்து விட்டதல்லவா? கேளும், ஆயனரே! கேளும்!" மாமல்லரின் மேற்படி வார்த்தைகள் சிவகாமியின் காதில் உருக்கிய ஈயத் துளிகள் விழுவதுபோல் விழுந்தன. ஆஹா! இந்தக் குரல் எத்தனை அன்பு ததும்பும் மொழிகளை இன்பத் தேன் ஒழுகும் வார்த்தைகளை ஒரு காலத்தில் சொல்லியிருக்கிறது? அதே குரலில் இப்போது எவ்வளவு கர்ண கடூரமான சொற்கள் வருகின்றன? ஆஹா! இதற்குத்தானா இந்த ஒன்பது வருஷ காலமும் பொறுமையுடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்தோம்? மாமல்லரின் கொடுமையான வார்த்தைகள் பரஞ்சோதிக்கும் பெருந்துன்பத்தை உண்டாக்கின. "சக்கரவர்த்தி! சிவகாமி அம்மை ரொம்பவும் மனம் நொந்து போயிருக்கிறார்..." என்று அவர் சொல்லுவதற்குள் மாமல்லர் குறுக்கிட்டு, "சிவகாமி எதற்காக மனம் நோக வேண்டும்? இன்னும் என்ன மனக்குறை? சபதந்தான் நிறைவேறி விட்டதே? சந்தேகமிருந்தால் வீதி வழியே போகும் போது பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ளட்டும். வீடுகள் பற்றி எரிவதையும், வீதிகளில் பிணங்கள் கிடப்பதையும் ஜனங்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்துக் களிக்கட்டும். ஆயனச் சிற்பியாரே! உம்முடைய குமாரியை அழைத்துக் கொண்டு உடனே கிளம்பும்!" சிவகாமியின் மார்பு ஆயிரம் சுக்கலாக உடைந்தது. அவளுடைய தலை சுழன்றது. அச்சமயம் ஆயனர் அவளுக்கு அருகில் சென்று இரக்கம் நிறைந்த குரலில், "அம்மா, குழந்தாய்! என்னை உனக்குத் தெரியவில்லையா?" என்றார். "அப்பா!" என்று கதறிக் கொண்டே சிவகாமி தன் தந்தையைக் கட்டிக் கொண்டு விம்மினாள். அன்று அதிகாலையில் சேனாதிபதி பரஞ்சோதி வாதாபிக்குள் பிரவேசித்ததிலிருந்து மாமல்லருடைய உள்ளப் பரபரப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கு ஏதோ விபரீதமான அபாயம் நேரப் போகிறதென்றும் நாம் இங்கே வெறுமனேயிருப்பது பெரிய பிசகு என்றும் அவருக்குத் தோன்றி வந்தது. புலிகேசிச் சக்கரவர்த்தி அரண்மனையில் அகப்படவில்லையென்று மானவன்மரிடமிருந்து செய்தி வந்த பிறகு கோட்டைக்கு வெளியே அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆயனரையும் அழைத்துக் கொண்டு வாதாபி நகருக்குள் பிரவேசித்தார். சிவகாமியைச் சந்தித்தவுடனே அவளிடம் அன்பான மொழிகளைக் கூற வேண்டும் என்பதாகத்தான் யோசனை செய்து கொண்டு சென்றார். ஆனால் அவருடைய அன்புக்கும் அபிமானத்துக்கும் பெரிதும் பாத்திரமாயிருந்த கண்ணபிரான் செத்துக் கிடந்ததைக் கண்டதும் மாமல்லரின் மனம் கடினமாகி விட்டது. அதனாலேதான் அத்தகைய கடுமொழிகளைக் கூறினார். இரதத்தில் ஆயனரும் சிவகாமியும் முன்னால் செல்ல, பின்னால் சற்று தூரத்தில் மாமல்லரும் பரஞ்சோதியும் குதிரைகளின் மீது ஆரோகணித்துச் சென்றார்கள். மாமல்லரின் விருப்பத்தின்படி பரஞ்சோதி தாம் சிவகாமியின் வீட்டு வாசலை அடைந்ததிலிருந்து நடந்த சம்பவங்களையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதையெல்லாம் கேட்கக் கேட்கச் சக்கரவர்த்தியின் நெஞ்சில் குரோதாக்கினி சுடர் விட்டு எரியத் தொடங்கியது. முக்கியமாக நாகநந்தியைப் பரஞ்சோதி கொல்லாமல் உயிரோடு விட்டு விட்டார் என்பது மாமல்லருக்குப் பெரும் கோபத்தை உண்டாக்கியது. சிவகாமியைப் பெரும் துன்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகவே அவளைக் கொல்ல எத்தனித்ததாக நாகநந்தி சொன்னாரல்லவா? அதைக் கேட்டபோது, அந்தக் கூற்றில் அடங்கியிருந்த உண்மையை மாமல்லரின் அந்தராத்மா உடனே உணர்ந்தது. அது காரணமாக அவருடைய குரோதம் பன்மடங்கு அதிகமாகிக் கொழுந்து விட்டெரிந்தது. சிவகாமி தன் அருமைத் தந்தையின் மீது சாய்ந்த வண்ணம் வாதாபி நகரின் பயங்கர வீதிக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சென்றாள். அந்தக் கோரங்களைப் பார்க்கச் சகிக்காமல் சில சமயம் கண்களை மூடிக் கொண்டாள். ஆனால், கண்களை மூடிக் கொண்ட போதிலும் காதுகளை மூடிக்கொள்ள முடியவில்லை. ஜுவாலை விட்டுப் பரவிய பெருந்தீயிலே வீடுகள் பற்றி எரியும் சடசடச் சத்தமும், காற்றின் 'விர்'ரென்ற சத்தமும், குழந்தைகளின் கூக்குரலும் ஸ்திரீகளின் ஓலமும், சளுக்க வீரர்களைப் பல்லவ வீரர்கள் துரத்தி ஓடும் சத்தமும், ஜயகோஷமும், ஹாஹாகாரமும் அவளுடைய செவிகளை நிரப்பி அடிக்கடி கண்களைத் திறந்து பார்க்கச் செய்தன. அந்த நிலையில் ஒரு முறை மாமல்லர் சிறிது முன்னேறி வந்து இரதத்தின் ஓரமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்த போது சிவகாமி ஆவலுடன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனால், மாமல்லரோ அவள் பக்கம் தம் பார்வையைத் திருப்பவேயில்லை. ஆயனர் முகத்தை நோக்கிய வண்ணம், "சிற்பியாரே! நாங்கள் எல்லாரும் இங்கிருந்து புறப்பட்டு வர இன்னும் ஒரு மாதம் ஆகலாம். உங்களுக்கு இஷ்டமிருந்தால் உம்மையும் உமது மகளையும் முன்னதாகத் தக்க பாதுகாப்புடன் காஞ்சிக்கு அனுப்பி வைக்கிறேன். அல்லது நாகநந்தி பிக்ஷு உம்மையும் உமது குமாரியையும் அஜந்தாவுக்கு அழைத்துப் போக விரும்புவதாகச் சொன்னாராம். அது உங்களுக்கு இஷ்டமானால் அப்படியும் செய்யலாம்!" என்றார். அத்தனை கஷ்டங்களுக்கும் யுத்த பயங்கரங்களுக்கும் இடையிலேயும் ஆயனருக்கு "அஜந்தா" என்றதும் சபலம் தட்டியது. அஜந்தா வர்ண இரகசியத்தைப் பரஞ்சோதி நாகநந்தியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவரம் இன்னமும் ஆயனருக்குத் தெரியாது. எனவே, அவர் சிவகாமியைப் பார்த்து, "அம்மா! உனக்கு என்ன பிரியம்? காஞ்சிக்குப் போகலாமா? அல்லது அஜந்தாவுக்குப் போகலாமா?" என்றார். சிவகாமியின் உள்ளம் அந்த நிமிஷத்தில் வயிரத்தை விடக் கடினமாயிருந்தது. "அப்பா! நான் காஞ்சிக்கும் போகவில்லை! அஜந்தாவுக்கும் போகவில்லை. பல்லவ குமாரரை என் பேரில் கருணை கூர்ந்து அவர் கையிலுள்ள வாளை என் மார்பிலே பாய்ச்சி என்னை யமபுரிக்கு அனுப்பிவிடச் சொல்லுங்கள். பழைய அபிமானத்துக்காக எனக்கு இந்த உதவி செய்யச் சொல்லுங்கள்!" என்றாள். இவ்விதம் சொல்லிவிட்டு ஆயனரின் மடியின் மீது சிவகாமி மறுபடியும் ஸ்மரணையிழந்து வீழ்ந்தாள். மாமல்லர் திரும்பிச் சென்று பரஞ்சோதியின் பக்கத்தை அடைந்தார். சிவகாமியின் மீது அத்தகைய குரூரமான சொல்லம்புகளைச் செலுத்திய பிறகு அவருடைய மனம் சிறிது அமைதி அடைந்திருந்தது. "நண்பரே! அதோ புலிகேசியின் பொய்யான ஜயஸ்தம்பத்தைப் பார்த்தீர் அல்லவா? ஒன்பது வருஷத்துக்கு முன்பு ஒரு நாள் நாம் அந்த ஸ்தம்பத்தின் அடியில் நின்று, செய்து கொண்ட சங்கல்பத்தை இன்று நிறைவேற்றி விட்டோ ம். அந்தப் பொய்த் தூணை உடனே தகர்த்தெறிந்து விட்டுப் பல்லவ சைனியத்தின் ஜயஸ்தம்பத்தை நாட்டச் செய்யுங்கள். புதிய ஜயஸ்தம்பத்திலே பல்லவ சேனையின் வெற்றிக் கொடி வானளாவப் பறக்கட்டும்! மகத்தான இந்த வெற்றிக்கு அறிகுறியாக நமது கொடியிலும் விருதுகளிலும் உள்ள ரிஷபச் சின்னத்தை மாற்றிச் சிம்மச் சித்திரத்தைப் பொறிக்கச் செய்யுங்கள்!" என்று ஆக்ஞாபித்தார். |