![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 23. ‘விடுதலை’ |
நாலாம் பாகம் - சிதைந்த கனவு ஆறாம் அத்தியாயம் - ஏகாம்பரர் சந்நிதி பரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள். அவர்கள் யார் யார் என்பதைச் சற்றுக் கவனிப்போம். எல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது. அவருக்கு இருபுறத்திலும் இலங்கை இளவரசர் மானவன்மரும் சேனாதிபதி பரஞ்சோதியும் நின்றார்கள். பரஞ்சோதிக்கு அடுத்தாற்போல், பல்லவ வம்சத்தின் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவனும், வேங்கி நாட்டை மீண்டும் புலிகேசிக்குப் பறி கொடுத்து விட்டுக் காஞ்சியில் வந்து அடைக்கலம் புகுந்தவனுமான அச்சுதவர்மன் அடக்க ஒடுக்கத்துடன் நின்றான். அவனுக்குப் பின்னால் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் தோன்றிய உண்மையான வஜ்ரபாஹுவும் நின்றார்கள். இன்னும் பின்னால், பல்லவ சாம்ராஜ்யத்துப் பிரதம மந்திரி சாரங்கதேவ பட்டர், முதல் அமைச்சர் ரணதீர பல்லவ ராயர், மற்ற மந்திரி மண்டலத்தார், கோட்டத் தலைவர்கள் முதலியோர் ஒருவரையொருவர் நெருங்கியடித்துக் கொண்டு நின்றார்கள். நல்லது! எதிர்ப்பக்கத்தில் நிற்கும் பெண்மணிகளை இனி பார்க்கலாம். முதற்பார்வைக்கு, அந்தப் பெண்மணிகள் எல்லாரும் சௌந்தர்ய தேவதையின் பலவித வடிவங்களாகவே தோன்றுகிறார்கள். சிறிது நிதானித்துப் பார்த்துத்தான், அவர்களில் யார் இன்னவர் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் காலம் சென்ற மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டமகிஷி புவனமகாதேவி சாந்தமும் பக்தியுமே உருக்கொண்டாற் போன்ற தெய்வீகத் தோற்றத்துடன் நின்றார். அவருக்கு அருகில் மாமல்ல சக்கரவர்த்தியின் தர்மபத்தினியும் பாண்டிய ராஜன் திருக்குமாரியுமான வானமாதேவி நின்றாள். சக்கரவர்த்தினியோடு இணைந்து நின்று இளவரசி குந்தவிதேவி தன் கரிய விழிகளினால் குறுகுறுவென்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். வானமாதேவிக்கு அருகில் பக்தியும் தூய்மையும் சௌந்தரியமுமே உருக்கொண்டவள் போல் நின்ற மற்றொரு பெண் தெய்வத்தைச் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் பதினெட்டுப் பிராயம் உடைய இந்த இளமங்கைதான் சோழ வம்சத்தின் கொடும்பாளூர்க் கிளையைச் சேர்ந்தவனான செம்பியன் வளவனுடைய திருப்புதல்வியான மங்கையர்க்கரசி. பிற்காலத்தில் பாண்டியன் நெடுமாறனின் தேவியாகி, ஞானசம்பந்தரை மதுரைக்குத் தருவித்து, சிவனடியார் கூட்டத்தில் என்றும் அழியாத புகழ்பெறப் போகிறவர். இன்னும் பல அந்தப்புரமாதரும் அங்கே இருந்தார்கள். அவர்களையெல்லாம் பற்றி நாம் தனித்தனியாகத் தெரிந்து கொள்வது அவசியமில்லையாதலால், மேலே செல்வோம். டண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன. தீபாராதனை சமயத்தில் பலர் பக்தியுடன் கைகூப்பி நின்றனர். பலர் கன்னத்தில் அடித்துக் கொண்டனர். இளவரசன் மகேந்திரனும் இளவரசி குந்தவியும் மற்றவர்களைப் பார்த்து விட்டுச் சடசடவென்று தங்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டது, வெகு வேடிக்கையாயிருந்தது. தீபாராதனை முடிந்ததும் குமார சிவாச்சாரியார் கையில் விபூதிப் பிரஸாதத்துடன் கர்ப்பக்கிருஹத்துக்குள்ளிருந்து வெளியே வந்தார். சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்: "காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக! ஜய விஜயீபவா!" இவ்விதம் சிவாச்சாரியார் சொல்லி விபூதிப் பிரஸாதத்தைச் சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அதை மாமல்லர் பக்தியுடன் பெற்று நெற்றியிலே தரித்த போது, உள்ளே சிவலிங்கத்துக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த தீபம் திடீரென்று சுடர் விட்டு எரிந்து அதிக ஒளியுடன் பிரகாசித்தது. அப்படி எரிந்த தீபப்பிழம்பிலிருந்து ஒரு சுடர் சடசடவென்ற சப்தத்துடன் கீழே விழுந்தது. சில வினாடி நேரம் பிரகாசமான ஒளி வீசி விட்டு மங்கி அணைந்தது. இந்தச் சம்பவமானது, சக்கரவர்த்தி எந்த நோக்கத்துடன் கிளம்புகிறாரோ அந்த நோக்கம் நன்கு நிறைவேறும் என்பதற்கு ஒரு நன்னிமித்தம் என்ற எண்ணம் அங்கே கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் ஏக காலத்தில் தோன்றவே, 'ஜய விஜயீபவா!" "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷங்கள் கிளம்பிக் கர்ப்பக்கிருஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் எல்லாம் அதிரச் செய்தன. பல்லவேந்திரரின் திக் விஜயத்துக்கு ஏகாம்பரநாதர் அனுமதி கொடுத்து விட்டார் என்ற செய்தி வெளி மண்டபங்களிலும் கோயில் பிராகாரங்களிலும் கோயிலுக்கு வெளியே வீதிகளிலும் கூடியிருந்த ஜனங்களிடையே பரவி எங்கெங்கும், "ஹர ஹர மகாதேவா!" என்ற கோஷத்தைக் கிளப்பிற்று. அப்படிக் காஞ்சி நகரையே மூழ்கடித்த உற்சாக ஆரவார ஜயகோஷத்தில் கலந்து கொள்ளாமல் மௌனம் சாதித்தவன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். அவன் பல்லவ சக்கரவர்த்தியின் ரதசாரதியான கண்ணபிரான்தான். |