உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
முதல் பாகம் : கோடை 8. தங்கம்மாள் "உன் அம்மா பேச்சை மீறி உன்னால் ஒரு காரியம் செய்ய முடியுமா?" என்று நாணா கடைசியாகக் கேட்டுவிட்டுப் போனதில் ரொம்பவும் உண்மை அடங்கியிருந்தது. உலக சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற வீரர்கள், மகான்கள் முதலியோரைப் பற்றி, அவர்கள் "அன்னையிடம் அபார பக்தியுள்ளவர்கள்; தாய் சொல்லை மீறாதவர்கள்" என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோமல்லவா? நம்முடைய ஸ்ரீதரன் ஒரு பெரிய வீரனாகவோ, மகா புருஷனாகவோ ஆவான் என்பதற்கு எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என்றாலும், அவனுக்கும் மேற்கூறிய வீரர்கள் - மகா புருஷர்களுக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமை இருந்தது. அவனுடைய தாயார் தங்கம்மாளின் பேச்சை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடிவதேயில்லை. ஆனால் அவனுடைய இந்த இயல்பு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சாதாரணமாகத் தெரியாது. தாயாருக்கும் பிள்ளைக்கும் ஒற்றுமையே இல்லை என்றுதான் தோன்றும். அப்படி ஓயாமல் அவர்கள் சண்டைபோடுவார்கள். தங்கம்மாள் எது சொன்னாலும் ஸ்ரீதரன் முதலில் அதை மறுத்துத்தான் பேசுவான். "முடியவே முடியாது" என்பான். எரிந்து விழுவான். திட்டுவான், "கழுதை!" "மூடம்!" "இடியட்!" "பிரம்மஹத்தி!" என்றெல்லாம் அஷ்டோ த்தர அர்ச்சனை செய்வான். சில சமயம், கோபம் தலைக்கு மீறிப் போகும்போது அம்மாவை அடித்துக்கூட இருக்கிறான். ஆனால், இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கும் பிறகு கடைசியில், தங்கம்மாள்தான் வெற்றி பெறுவாள். அவள் சொன்னபடிதான் ஸ்ரீதரன் காரியம் செய்வான். இத்தகைய சக்தி தங்கம்மாளுக்கு எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், ஏன், தாயின் அன்புதான் முதன்மையான காரணம் என்பதில் சந்தேகமில்லை; அடுத்தபடியாக, அவளுடைய மனோபலத்தையும் சொல்லவேண்டும். வசவு திட்டு எல்லாவற்றையும் - அடிகளையும் கூட பொறுத்துக்கொண்டு, கடைசியில் காரியத்தை மட்டும் சாதித்துக் கொள்வாள். ஸ்ரீதரன் தங்கம்மாளின் ஒரே பிள்ளை; கடைசிக் குழந்தை. அவனுக்கு முன்னால் மூன்று பெண்கள். அவர்களில் மூத்தவளை நரசிங்கபுரத்திலேயே உறவில் கல்யாணம் செய்து கொடுத்திருந்தது. மற்ற இரண்டு பெண்களின் புருஷர்களும் உத்தியோகஸ்தர்கள். அவர்கள் ஹைதராபாத்திலும், நாகபுரியிலும் இருந்தார்கள். இப்படித் தூர தூரமான இடங்களில் இருந்தும் மூன்று பெண்களின் புக்ககத்தாரும் ஒரு விஷயத்தில் பூரண ஒற்றுமைப்பட்டிருந்தார்கள். ராஜாராமய்யரையும் தங்கம்மாளையும் அவர்கள் படுத்தி வைத்த பாட்டுக்கு அளவேயில்லை. ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, "அந்தப் பெண்ணுக்கு மட்டும் அதைச் செய்தாயே? ஏன் எங்க மாட்டுப் பெண்ணுக்கு மட்டும் செய்யவில்லை?" என்றெல்லாம் பலமான சண்டை பிடிப்பார்கள். ராஜாராமய்யர் சம்பாதித்ததெல்லாம், இந்த மூன்று பெண்களுக்குக் கல்யாணம் செய்துகொடுத்ததற்கும், பிறகு அவர்களுக்குச் சீர் செனத்தி செய்ததற்குமே சரியாய்ப் போய்விட்டது என்று சொல்லலாம். அவர்களுடைய இரண்டாவது பெண் ஐந்து குழந்தைகளைப் பெற்ற பிறகு, ஆறாவது பிரசவத்துக்குக் கூடப் பிறந்தகத்துக்குத்தான் வருவாள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்! இந்தப் பெண்களும், இவர்களுடைய புருஷர்களும், சம்பந்திகளும் கொடுத்து வந்த தொல்லைகளினாலேயே ராஜாராமய்யர் ஒரு மாதிரி கால் பைத்தியமாகிவிட்டார் என்று சொல்லவேண்டும். அவருக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பு வந்துவிட்டது. குடும்ப விவகாரங்களையெல்லாம் தங்கம்மாளே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார். தாம் மனோதத்துவ பரிசோதனைகளிலும், ஆவி உலக ஆராய்ச்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். அந்தக் காலத்தில், "மெஸ்மெரிஸம்", "ஹிப்னாடிஸம்", "டெலிபதி" முதலிய மனோதத்துவ ஆராய்ச்சிகளைப் பற்றிய புஸ்தகங்கள் ஏராளமாக வெளியாகிக் கொண்டிருந்தன. இன்னும், மரணத்திற்குப் பிறகு மனுஷர்கள் என்ன ஆகிறார்கள் என்பது பற்றியும், ஆவிகளுடன் பேசும் ஆச்சரிய அநுபவங்களைப் பற்றியும் சொல்லும் புஸ்தங்கள் பிரபலமாயிருந்தன. ராஜா ராமய்யர் இத்தகைய நூலாராய்ச்சியில் தம்முடைய முழுக்கவனத்தையும் செலுத்தினார். இதற்காகவே அவர் தமது உத்தியோகக் காலம் முடிவடைவதற்கு இரண்டு வருஷம் முன்னதாகவே வேலையை விட்டு விலகி நரசிங்கபுரத்துக்கு வந்து சேர்ந்தார். ராஜாராமய்யர் இம்மாதிரி 'தாமரை இலைத் தண்ணீர்' என்னும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து வந்தபடியால், குடும்ப நிர்வாகம் பெரிதும் தங்கம்மாளின் தலையிலேயே சுமந்தது. மூன்று சம்பந்தி வீட்டுக்காரர்களோடும் மல்லுக்கு நின்று சமாளிக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் அவளுக்கு ஏற்பட்டது. தங்கம்மாள் எவ்வளவு தான் முதலில் பிடிவாதம் பிடித்தாலும், கடைசியில் பெண்கள் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்பார்களே என்ற எண்ணத்தினால், சம்பந்தி வீட்டுக்காரர்களுக்கே விட்டுக் கொடுக்க வேண்டி நேரிடும். அப்போதெல்லாம், அவள் தன் மனத்திற்குள், "ஆகட்டும், ஆகட்டும். ஸ்ரீதரனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; இவ்வளவுக்கிவ்வளவு ஆட்டி வைக்காமல் போனால்..." என்று கர்வங் கட்டிக் கொள்வாள். சென்ற இரண்டு மூன்று வருஷமாக, ஸ்ரீதரனுக்கு 'நல்ல' இடத்தில் கல்யாணம் ஆக வேண்டுமே என்ற ஒரே கவலை தான் தங்கம்மாளுக்கு. 'நல்ல' இடம் என்றால், தான் 'ஆட்டி வைப்ப'தற்குத் தகுந்த இடம் என்று அர்த்தம். பட்டணங்களில், எங்கேயாவது வக்கீல் பெண் கிக்கீல் பெண் வந்து வாய்த்துவிடப் போகிறதேயென்று தங்கம்மாளுக்கு ஒரே பயம். அந்த மாதிரி இடத்தில் சம்பந்தம் அவளுக்குப் பிடிக்கவில்லை; இரண்டு கோண எழுத்துப் படித்துவிட்டு, 'ஹாட் பூட்' என்று இங்கிலீஸ் பேசிக் கொண்டு, தலையைக் கோணவகிடு பிளந்து கொண்டு நிற்கும் பெண்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. 'இடம் பணக்கார இடமாயிருக்கவேண்டும்; பெண் பதவிசாயிருக்கவேண்டும்' என்பதுதான் அவளுடைய விருப்பம். இந்த நோக்கத்துடந்தான் ராஜாராமய்யர் கிராமாந்தரத்துக்குப் போகலாம் என்று சொன்ன யோசனையை அவள் ஒப்புக் கொண்டது; கிராமாந்தரத்தில், அதுவும் 'நம்ம' பக்கத்தில் பெரிய மிராசுதார் பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்ணும் குடித்தனத்தில் தனக்கு ஒத்தாசையாயிருக்கும், சம்பந்திகளும் தன்னுடைய அதிகாரத்துக்கு உட்படுவார்கள் என்று தங்கம்மாள் தன் மனத்திற்குள் தீர்க்காலோசனை செய்து தீர்மானித்திருந்தான். இந்த நோக்கத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரி வீட்டில் சம்பந்தம் ஒத்து வருவதாயிருந்தது. பெண்ணுக்குச் சொந்தத் தாயார் இல்லை; இளைய தாயார் என்பது ஒரு குறைவு. ஆனால் அதுவும் ஒரு நல்லதுதான். பெண்ணுக்கு அம்மா சலுகை இராது. வீட்டில் நாய் மாதிரி படிந்து கிடக்கும். சம்பு சாஸ்திரிக்கு வேறு பெண்ணோ, பிள்ளையோ கிடையாது என்பதும் ஒரு முக்கியமான 'பாயிண்ட்' அல்லவா? அவருக்குப் பிறகு, அந்தச் சொத்தெல்லாம் பெண்ணுக்குத்தானே வந்து சேரும்? இது எல்லாவற்றையும் யோசித்துத் தங்கம்மாள், இந்தப் பெண்தான் தனக்கு மாட்டுப் பெண்ணாக வர வேண்டுமென்று முடிவு செய்துவிட்டாள். அவள் முடிவு செய்தபிறகு, ஸ்ரீதரன் 'வேண்டாம்' என்று சொன்னால் அதற்காகக் கல்யாணம் நின்று போய்விடுமா? அவனுடைய கடுதாசை ராஜாராமய்யர் அவளுக்கு வாசித்துக் காண்பித்து, "இப்போது என்னடி சொல்றே? உன் பேச்சைக் கேட்டுப் பணம் வேறே வாங்கியாச்சே! உன் பிள்ளையானா இப்படிச் சொல்றானே?" என்றதும், தங்கம்மாள், "நன்னாயிருக்கு; அவன் அப்படித்தான் சொல்லுவன். பின்னே, இந்தக் காலத்துப் பிள்ளைகளைப் போலே, கல்யாணம் என்றதும், பல்லை இளிப்பன் என்று நினைச்சுண்டயளோ? ராத்திரி போட் மெயிலிலே பட்டணத்துக்குக் கிளம்பலாம், வாருங்கோ. இரண்டு பேருமாய்ப் போய் அவனையும் அழைச்சுண்டு, இன்னும் துணிமணி நகை நட்டு வாங்க வேண்டியதையும் வாங்கிண்டு வந்துடலாம்" என்றாள். அந்தச் சமயத்தில், வீட்டு வாசலில் காலடிச் சத்தமும் கனைப்புச் சத்தமும் கேட்டன. "ஐயர்வாள் இருக்காளா?" என்று கேட்டுக் கொண்டே நெடுங்கரைச் சங்கர தீக்ஷிதர் உள்ளே வந்தார். |