இரண்டாம் பாகம் : மழை

     "மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
     காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?"     -கபிலர்

12. வெள்ளம்

     சாவித்திரிக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணம் நடந்த வருஷத்தில், அந்தப் பிரதேசத்தில் வெகு நாள் வரையில் மழை பெய்யவில்லை.

     புரட்டாசிக் காய்ச்சல் அந்த வருஷத்தைப் போல் கொடுமையாக எப்போதும் இருந்ததில்லையென்று ஜனங்கள் சொன்னார்கள். ஐப்பசி பிறந்து பத்துத் தேதி ஆயிற்று. அப்படியும் மழை இருக்கிற இடமே தெரியவில்லை.

     குடமுருட்டியிலும் ஜலம் குறைந்துவிட்டபடியால், தண்ணீர் மடைச் சண்டைகள் அதிகமாயின.

     "சாமி! இந்த மாதிரி இன்னும் நாலு நாள் காய்ஞ்சால் இந்த வருஷம் பஞ்சந்தான். இப்பவே, விளைச்சல் ஒண்ணுக்குப் பாதிதான் எதிர்பார்க்கலாம்" என்றான் நல்லான்.

     "இப்படியே இருந்துவிடாதப்பா! பகவான் கிருபை பண்ணுவர். மழை சீக்கிரம் வரும்" என்றார் சம்பு சாஸ்திரியார்.

     "மழை எங்கே வரப் போறதுங்க, இந்த ஐயமாரு பண்ணுகிற அக்கிரமத்திலே!" என்றான் நல்லான். ஊரில் அந்த வருஷம் மிராசுதார்களுக்கும், குடியானவர்களுக்கும் மனைக்கட்டுச் சண்டை ஏற்பட்டு, கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோபத்தைத்தான் நல்லான் அப்படி வெளியிட்டான்.

     "அப்படிச் சொல்லாதே, நல்லான்! ஔவையார் என்ன சொல்லியிருக்கா? 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' அந்த மாதிரி, நீதான் நல்லானாச்சே, உனக்காகத்தான் மழை பெய்யட்டுமே?"

     நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.

     "ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.

     சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.

     பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.

     மறுநாள் பொழுது விடிந்த பிறகும் மழை நிற்கவில்லை. மழையுடன் காற்றும் பலமாக அடித்தபடியால் ஊரில் எல்லாரும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பாமல் இருந்தார்கள். ஆனால் நல்லானுக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. நேற்று வரை தண்ணீருக்கு ஏங்கிக் கிடந்த வயல்களை இன்று போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. கீத்துக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். ஊரைத் தாண்டி அப்பால் போனதும், எங்கே பார்த்தாலும், ஒரே ஜலப் பிரளயமாயிருந்தது! குளத்திலே ஜலம் அலை மோதிக் கொண்டிருந்தது. வயல்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து பெரும்பாலான வரப்புகளை மறைத்துவிட்டது. அவற்றில் நெற்பயிரின் நுனி மட்டும் தெரிந்தும் தெரியாமலும் காணப்பட்டது. வாய்க்கால்களில் ஜலம் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிற்று! ஆகா! குடமுருட்டியின் காட்சியை என்னவென்று சொல்வது? அப்போது அந்த நதியில் சுழிகளுடனும் சுழல்களுடனும் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம் குடத்தை மட்டுந்தானா உருட்டும்? மலையைக் கூடவல்லவா உருட்டிக் கொண்டுபோய்விடும்? ஆனால், மலை என்ற நாமதேயம் தஞ்சாவூர் ஜில்லாவில் இல்லாத காரணத்தினால்தான் போலும், அப்போது அந்நதியில் வேருடன் பிடுங்கப்பட்ட மரங்களும் வைக்கோற் போர்களும் மிதந்து போய்க் கொண்டிருந்தன.

     நல்லான் இந்தக் காட்சியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆற்றில் இன்னும் ஒரு சாண் தண்ணீர் அதிகமானால், வெள்ளம் கரை மீறிவிடும் என்று எண்ணினான். பிறகு அங்கிருந்து சற்றுத் தூரத்திலிருந்த சேரியின் வழியாகச் சென்றான். அந்தச் சேரி அப்போது நாலு பக்கம் ஜலத்தினால் சூழப்பட்ட ஒரு தீவைப் போல் விளங்கிற்று. அந்தத் தீவிற்குள்ளும் ஒரு பகுதியில் ஜலம் வழிந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்கே, சில ஆட்கள் நின்று மண்ணை வெட்டிப் போட்டு அணை கோலிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நல்லான், 'ஐயோ! பாவம்! சாஸ்திரி ஐயா சொல்றாப்பலே, மழை பெய்தா எல்லாருக்குந்தான் பெய்யறது. ஆனால், சில பேருக்கு, அது சாதகமாயிருக்கு; சில பேருக்கு கெடுதலா முடியுறது' என்று எண்ணினான். அதே சமயத்தில் இன்னோர் எண்ணம் அவன் மனத்தில் தோன்றி அவனுக்கு ஒரு க்ஷணம் நடுக்கம் உண்டாக்கிற்று. அந்தச் சேரிக்குக் கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியில் ஒரு குத்தல் இருந்தது. தப்பித் தவறி அங்கே உடைப்பு எடுத்து விட்டால் சேரி அரோகரா! 'சாமி! ஆண்டவனே! அப்படி ஒண்ணும் வர வேண்டாம்!' என்று பிரார்த்தித்த வண்ணம் நல்லான் வீடு திரும்பினான்.

     நல்லானைப் போலவே சம்பு சாஸ்திரியும் அன்று காலை அந்த மழையிலும் காற்றிலும் வெளிப் புறப்பட்டார். ஆனால், அவர் வயல்களுக்குப் போகவில்லை. தடாகத்தில் போய்ப் பிராத ஸ்நானம் செய்துவிட்டு, நந்தவனத்தில் புகுந்தார். அன்று ஏகாதசியாகையால், பஜனை மடத்தில் படங்களின் அலங்காரத்துக்காக அகப்பட்ட வரையில் புஷ்பங்களைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்பாவுக்குப் பெண்ணாகிய சாவித்திரி அந்தப் புஷ்பங்களையெல்லாம் அழகான மாலைகளாகத் தொடுத்து வைத்தாள்.

     சாயங்காலம் கொஞ்சம் மழை விட்டிருந்தபோது, சம்பு சாஸ்திரி சாவித்திரியை அழைத்து, "அம்மா! நல்ல வேளையாய் மழை குறைந்திருக்கிறது. சிறு தூற்றல் தான் போடுகிறது. பஜனை மடத்துக்குப் போய்க் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு வா, அம்மா! இன்று சீக்கிரமாகவே பஜனையை ஆரம்பித்து முடித்துவிடவேணும்" என்றார். "இதோ போகிறேன், அப்பா!" என்றாள் சாவித்திரி.

     பிறகு, "மங்களம்! இன்னிக்கு ஏகாதசின்னு ஞாபகம் இருக்கோல்யோ? சுண்டலுக்குக் கடலை ஊறப் போட்டிருக்கையா?" என்று கேட்டார்.

     "ஊறப் போடுவானேன்? அதுதான் மழையிலே ஊறிப் போய்க் கிடக்கே!" என்றாள் மங்களம்.

     "வைத்தி! வைத்தி!" என்று இரைந்து கூப்பிட்டார் சாஸ்திரி. அவன் காதில் விழவில்லை. கிட்டப் போய், ஜாடை காட்டிக் கொண்டே, "வைத்தி! அக்கிரகாரத்திலே எல்லாரிட்டயும் போய், இன்னிக்கு ஏழு மணிக்கே பஜனை ஆரம்பிச்சுச் சுருக்க முடிச்சுடலாம்னு சொல்லிட்டு வா!" என்று சொன்னார்.

     வைத்தி அவர் சொன்னதை ஒருவாறு தெரிந்து கொண்டு "இந்த மழையிலே வீடு வீடா யார் போறது? என்னால் முடியாது!" என்றான்.

     சிறிது நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரி தாமே புஷ்பக் குடலை முதலியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.