உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
இரண்டாம் பாகம் : மழை 20. நாளை தீபாவளி தீபாவளிக்கு முதல் நாள் காலையில் சாவித்திரி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போதே, 'நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி' என்று எண்ணிக்கொண்டு எழுந்தாள். 'இன்னிக்கு ராத்திரி இவாள் வரப்போறா!' என்ற எண்ணமும் கூட வந்து, அவளுக்கு என்றும் இல்லாத உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளித்தது. இரண்டு நாளாகக் கடும் மழை விட்டுச் சற்று நேரம் இளம் வெயில் எரிப்பதும் சற்று நேரம் சிறு தூற்றல் போடுவதுமாக இருந்தது. தீபாவளிக்கு மாப்பிள்ளை வரப் போவதை உத்தேசித்துத்தான் இப்படி இருப்பதாகச் சாவித்திரி எண்ணிக் கொண்டாள். ஆனால், மழை பலமாகப் பெய்தாலும் அவளுக்கு இப்போது பயம் கிடையாது. ஏனென்றால் அப்பாவினிடம் அடிக்கடி சொல்லி, பெருமழையின் போது ஒழுகிய இடத்தையெல்லாம் ஓடுமாற்றிச் செப்பனிடும்படி செய்துவிட்டாள். அன்று காலை நேரமெல்லாம் சாவித்திரி, வீட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சுத்தம் செய்வதிலும், அழகுபடுத்துவதிலும் ஈடுபட்டிருந்தாள். சுவரில் மாட்டியிருந்த படங்களை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக மாற்றிக் கொண்டிருந்தாள். இன்னும், கோட் ஸ்டாண்டுகள், நிலைக் கண்ணாடிகள் - இவையெல்லாம் எங்கெங்கேயிருந்தால் நன்றாயிருக்குமென்று பார்த்துப் பார்த்து மாட்டினாள். சுவர் மூலையில் எங்கேயாவது கொஞ்சம் ஒட்டடை காணப்பட்டால், உடனே அதை எடுத்துக் கொல்லையில் தூரக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அலமாரியில் புத்தகங்களை ஒழுங்காக எடுத்துத் தட்டி அடுக்கி வைத்தாள். இடையிடையே, முற்றத்தில் காக்காய் கத்தும் சத்தம் கேட்டால், ஓடிப் போய்க் காக்காயைப் பார்த்து, "ஓகோ! இன்னிக்கு மாப்பிள்ளை வரப்போறார்னு உனக்குத்தான் அதிசயமாய்த் தெரியுமோ? எனக்குத் தெரியாதோ?" என்று அதனுடன் பேசிவிட்டு வந்தாள். குறுக்கே நெடுக்கே செவிட்டு வைத்தி போனால், அவனைப் பார்த்து, "அடே! இரண்டு நாளைக்கு கண்ட இடத்தில் எல்லாம் மூக்கைச் சிந்திப் போடாமலிரு! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்!" என்றாள். ஆயிற்று; சூரியன் உச்சி வானத்தைக் கடந்து மேற்புறம் சாயத் தொடங்கிற்றோ, இல்லையோ, சாவித்திரியின் பரபரப்பும் பதின்மடங்கு அதிகமாயிற்று. சம்பு சாஸ்திரியிடம் போய், "அப்பா! ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்ப வேண்டாமா?" என்று கேட்டாள். அவர், "நீ கவலைப்படாதே, அம்மா! எனக்குத் தெரியாதா? நானே ஸ்டேஷனுக்குப் போய் மாப்பிள்ளையை அழைச்சுண்டு வர்றேன்!" என்றார். ஆனாலும் இன்னும் அரை மணி ஆனதும், சாவித்திரி மறுபடியும் அவரிடம் வந்து, "ஏனப்பா! வண்டி ஓட்டிண்டு போறதுக்கு நல்லான் இன்னும் வர்றலையே?" என்று கேட்டாள். "வந்தாச்சு, அம்மா! வண்டி பூட்டிண்டு வர்றதுக்குத் தான் போயிருக்கான்" என்றார் சாஸ்திரியார். சுமார் மூன்று மணிக்குச் சம்பு சாஸ்திரியார் வண்டியில் ஏறிக்கொண்டு புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்குக் கிளம்பிய பிறகுதான் சாவித்திரியின் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. வண்டி தெருக்கோடி வரையில் சென்று மறைந்த பிறகு சாவித்திரி உள்ளே வந்து, அவசர அவசரமாகத் தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தொடங்கினாள். கல்யாணத்தின்போது, "பெண் ரொம்பப் பட்டிக்காடு; அதனால் மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை" என்ற பேச்சு சாவித்திரியின் காதில் விழுந்ததென்று சொன்னோமல்லவா? "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று அப்போது சாஸ்திரி சொன்னதை அவள் பூரணமாய் நம்பினாள். ஆனால், கல்யாணத்திற்குப் பிறகும் ஊரில் சிலர் இம்மாதிரி பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆகையால், இந்த ஞாபகம் அடிக்கடி சாவித்திரிக்கு வந்து கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்கப் பார்க்க, ஊரார் சொல்வது வாஸ்தவந்தானே என்றும் தோன்றிற்று. மாப்பிள்ளையின் நாகரிகத்தையும், தன்னுடைய பட்டிக்காட்டு நடை உடை பாவனைகளையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து வெட்கம் அடைந்தாள். கல்யாணமாகி நாலாம் நாள் அன்று ஸ்ரீதரன் 'புல் ஸுட்' அணிந்திருந்த போது எடுத்த போட்டோ படம் ஒன்று வீட்டில் இருந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு சாவித்திரி அடிக்கடி பார்ப்பாள். கல்யாணத்தின்போது தனக்குச் செய்திருந்த கர்நாடக அலங்காரத்தை நினைத்தால் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'அவாளுடைய நாகரிகம் எங்கே? இந்தப் பட்டிக்காட்டுக் கர்நாடகம் எங்கே? என்னைப் பட்டிக்காடு என்பதாக அவாள் வெறுத்தால்தான் எப்படிப் பிசகு ஆகும்?' என்று எண்ணுவாள். அதே புருஷனுக்குத் தகுந்த மனைவியாக வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொள்வாள். ஆனால், நாகரிகம் கற்றுக் கொள்வதற்குச் சாவித்திரிக்கு அதிக வசதி இருக்கவில்லை. அந்தத் தாயில்லாப் பெண்ணுக்கு, பட்டிக்காட்டு வழக்கப்படி அழகு செய்து விடுபவர்களே கிடையாது. "தலைவாரிப் பின்னி விடறயா?" என்று கேட்டாலே சித்தி எறிந்து விழுவாள். கல்யாணத்துக்கு முன்னெல்லாம் சாவித்திரி இதை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. அப்போது தன்னுடைய சொந்த அலங்காரத்தில் அவளுக்குக் கவனமே கிடையாது. பூஜை அறையை அழகு படுத்துவதிலும், படங்களுக்கு அலங்காரம் செய்வதிலுமே அவளுடைய புத்தியெல்லாம் சென்று கொண்டிருந்தது. கல்யாணத்திற்குப் பிறகுதான் தன்னை அழகு செய்து கொள்வதில் சிரத்தை உண்டாயிற்று. தான் புடவை கட்டிக் கொண்டால் நன்றாயிருக்கிறதா, அல்லது பாவாடையும் தாவணியும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்கிறதா, தலைப் பின்னலைத் தொங்கவிட்டுக் கொண்டால் அழகாயிருக்கிறதா எடுத்துக் கட்டிக் கொண்டால் அழகாயிருக்கிறதா என்றெல்லாம் நேரம் போவதே தெரியாமல் அவள் சிந்தனை செய்து கொண்டிருப்பாள். எங்கேயாவது கல்யாணம், கார்த்திகைக்குப் போனால், டவுனிலிருந்து வந்திருக்கும் பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்று அவளுடைய கண்கள் உடனே தேடத் தொடங்கும். அப்படி யாராவது இருந்தால், அவர்கள் எப்படித் தலைவாரிப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள், எப்படி ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனமாய்ப் பார்ப்பாள். ஒரு தடவை, அத்தகைய பட்டணவாசத்துப் பெண் ஒருத்தி தலை மயிரைக் கோணலாக வகிடு எடுத்துப் பின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அது ரொம்ப அழகாயிருந்தது. வீட்டுக்குப் போனதும், காமிரா உள்ளின் கதவைச் சாத்திக் கொண்டு அந்தப் பெண் மாதிரி தானும் கோண வகிடு எடுத்துக் கொண்டாள். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அது அழகாயிருந்ததே தவிர, தனக்கு அவ்வளவு அழகாயில்லையென்று தோன்றிற்று. வேறு யாரிடமாவது கேட்கலாமென்றால், யாரைக் கேட்பது? சித்தியிடம் போய்க் கேட்டால், கட்டாயம் விறகுக் கட்டையால் அடி விழும். 'அம்மா, அத்தை, பெரியம்மா, பாட்டி யாராவது ஒருவர் எனக்கு இருக்கக் கூடாதா? என் அதிர்ஷ்டம், எல்லாரும் போய்விட வேண்டுமா?' என்று அப்போது அவளுக்கு ஏக்கம் உண்டாகும். மேலும், நாகரிக வாழ்க்கையென்றால் இலேசாயிருக்கிறதா? பணம் செலவழிக்காமல் சாத்தியமாகும் காரியமில்லையே? தனக்கு வேண்டிய சாமான்களைப் பற்றி அப்பாவிடம் பிரஸ்தாபிப்பதற்கும் சாவித்திரிக்கு ரொம்ப சங்கோசமாய்த்தான் இருந்தது. ஆனாலும், அப்பா கும்பகோணம் அல்லது தஞ்சாவூர் போனால், வரும் போது விநோலியா ஸோப்பு, தலை பின்னிக் கொள்வதற்கு டேப்பு - இதெல்லாம் வாங்கிக் கொண்டு வரச் சொல்வாள். அவரும் மறக்காமல், துணியில் முடிச்சுப் போட்டு வைத்திருந்து, குழந்தை கேட்டதை வாங்கிக் கொண்டு வருவார். அவளுடைய கையில் ஏற்கனவே போட்டுக் கொண்டிருந்த தங்கக் காப்பு, கொலுஸு எல்லாவற்றையுங்கூட அழித்துவிட்டு மெல்லிய தங்க வளைகளாகப் பண்ணிப் போட்டுவிட்டார். இப்படியாக சாவித்திரி நாகரிக வாழ்க்கையில் அபிவிருத்தியடைந்து கொண்டு வந்தாள். யாரை உத்தேசித்து, யார் பார்த்துச் சந்தோஷப்படவேண்டுமென்பதற்காக, சாவித்திரி ஆடை அலங்காரங்களில் இவ்வளவு கவனம் செலுத்தினாளோ, அப்படிப் பட்டவர் இன்று ராத்திரி வருவதற்கு இருந்தார். எனவே சாவித்திரி பூமியிலேயே நிற்காமல் குதித்துக் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா? அவாள் வருவதற்காக 'ஸ்பெஷ'லாய் அலங்காரம் செய்து கொண்டதாகவும் இருக்கக்கூடாது. ஆனால் அவாள் பார்த்ததும், 'இது யாரோ புது சாவித்திரி' என்று பிரமித்துப் போகும்படியாகவும் இருக்க வேண்டும் என்று சாவித்திரி எண்ணினாள். ஏற்கனவே, வாரிப் பின்னியிருந்த தலையை மறுபடியும் வாரிவிட்டுச் சரிப்படுத்திக் கொண்டாள். காலையிலிருந்து முப்பது தடவை அலம்பியான முகத்தை மறுபடி ஸோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பிக் கொண்டாள். முதலில் சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். அதை அழித்துவிட்டுக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டாள். அது பெரிதாய்ப் போய்விட்டதென்று அழித்துவிட்டு மறுபடி சின்னதாய் இட்டுக்கொண்டாள். பாவாடை, தாவணியை அவிழ்த்து எறிந்துவிட்டுக் கல்யாணப் புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். அப்புறம், அவாள் வரும் போது பதினெட்டு முழப் புடவையைப் புஸு புஸு என்று கட்டிக்கொண்டு நிற்கவேண்டாம், காலையில் தான் எப்படியும் புதுப் புடவை கட்டிக் கொள்ள வேணுமே யென்று எண்ணி மறுபடியும் பாவாடை தாவணியையே உடுத்திக் கொண்டாள். ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை சுவரில் மாட்டியிருந்த நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று அழகு பார்த்துக் கொண்டாள். இப்படி என்னவெல்லாமோ செய்தும் பொழுது போகிற வழியாயில்லை. அப்போது பட்டாசுக் கட்டு ஞாபகம் வந்தது. பட்டாசு, மத்தாப்பூ என்றால் சாவித்திரிக்கு அளவில்லாத பிரியம். அவாள் வந்த பிறகு பட்டாசு கொளுத்தலாமோ, என்னமோ? அவாளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ? மேலும் அவாள் மட்டும் தனியாய் வரவில்லையே? மாமியாரும் கூட வருகிறாள் அல்லவா? "பச்சைக் குழந்தையா பட்டாசு கொளுத்துவதற்கு?" என்று மாமியார் கோபித்துக் கொண்டாலும் கோபித்துக் கொள்ளலாம். ஆகையால், இப்போதே கொஞ்சம் பட்டாசுக் கட்டுகளை எடுத்துக் கொளுத்திப் போட்டாள். அவை படபடவென்று வெடித்த போது அவளுக்கு வெகு உற்சாகமாயிருந்தது. அப்புறம் தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றி அவள் இட்டுக்கட்டியிருந்த பாட்டைப் பாடிக்கொண்டே மத்தாப்புக்களைக் கொளுத்தினாள். அப்போதுதான் சூரியன் அஸ்தனமாகி விளக்கு ஏற்றும் சமயமாயிருந்தபடியால், மத்தாப்பூக்கள் அவ்வளவு பிரகாசமாய் எரியவில்லை. 'இன்னும் கொஞ்ச நேரமானால் இருட்டி விடும்; மத்தாப்பூ நன்றாக எரியும்' என்று எண்ணிக் கொண்டாள். இருட்டிச் சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்டேஷனுக்குப் போன வண்டியும் வந்துவிடும் என்பது ஞாபகம் வந்தது. வண்டி வாசலில் வந்து நின்று, மாப்பிள்ளை வண்டியிலிருந்து இறங்கும்போது, இரண்டு பட்டாசுக் கட்டை முற்றத்தில் கொளுத்திப் போட்டுப் படபடவென்று வெடிக்கப் பண்ணலாமா என்ற எண்ணம் தோன்றியபோது அவளுக்குக் கலகலவென்று சிரிப்பு வந்தது. இப்படி எண்ணியதும், உடனே இன்னொரு ஞாபகமும் உண்டாயிற்று. மாப்பிள்ளை வந்து இறங்கியதும் அவரை வீதியில் நிற்க வைக்காமல் உடனே ஆலாத்தி எடுக்க வேண்டுமே? சித்தி மஞ்சள் நீர் கரைத்துத் தயாராய் வைத்திருக்கிறாளோ, என்னவோ? போய் விசாரிக்கலாம் என்று நினைத்து, சாவித்திரி சமையலறைக்குச் சென்றாள். |