மூன்றாம் பாகம் : பனி

28. அக்னயே ஸ்வாஹா!

     சாவித்திரி புக்ககம் போன பிறகு நடுவில் ஒரு பனிக் காலம் வந்து போய்விட்டது. மறுபடியும் மாரிக் காலம் சென்று இன்னொரு பனிக் காலம் வந்தது.

     கடந்த நாலு வருஷத்தில், சோழ நாட்டிலுள்ள எல்லாக் கிராமங்களையும் போல் நெடுங்கரையும் பெரிதும் க்ஷீணமடைந்திருந்தது. நெல் விலை மளமளவென்று குறைந்து போகவே, ஊரில் அநேகம் பேர், 'இனிமேல் கிராமத்தில் உட்கார்ந்திருந்தால் சரிப்படாது' என்று பிழைப்புத் தேடிப் பட்டணங்களுக்குப் புறப்பட்டார்கள்.

     இங்கிலீஷ் படித்து விட்டுச் சும்மா இருந்த வாலிபர்கள் உத்தியோகம் தேடுவதற்காகப் போனார்கள். இங்கிலீஷ் படிக்காதவர்கள், ஏதாவது வெற்றிலைப் பாக்குக் கடையாவது வைக்கலாம், இல்லாவிட்டால் காப்பி ஹோட்டலிலாவது வேலை பார்க்கலாம் என்று எண்ணிச் சென்றார்கள்.

     இப்படிப் போகாமல் ஊரிலே இருந்தவர்களின் வீடுகளில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று.

     இந்த மாறுதல் சம்பு சாஸ்திரியின் வீட்டிலேதான் மிகவும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. எப்போதும் நெல் நிறைந்திருக்கும் களஞ்சியத்திலும் குதிர்களிலும், இப்போது அடியில் கிடந்த நெல்லைச் சுரண்டி எடுக்க வேண்டியதாயிருந்தது.

     மாட்டுக் கொட்டகை நிறைய மாடுகள் கட்டியிருந்த இடத்தில் இப்போது ஒரு கிழ எருமையும், ஒரு நோஞ்சான் பசுவும் மட்டும் காணப்பட்டன.

     தென்னை மரம் உயரம் பிரம்மாண்டமான வைக்கோற் போர் போட்டிருந்த இடத்தில் இப்போது ஓர் ஆள் உயரத்திற்கு நாலு திரை வைக்கோல் கிடந்தது.

     நெல் சேர் கட்டுவதற்காக அமைத்திருந்த செங்கல் தளங்களில், இப்போது புல் முளைத்திருந்தது.

     ஆனால், குறைவு ஒன்றுமில்லாமல் நிறைந்திருந்த இடம் ஒன்று நெடுங்கரையில் அப்போதும் இல்லாமற் போகவில்லை. அந்த இடம் சம்பு சாஸ்திரியின் உள்ளந்தான். தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலைக் குறித்துச் சாஸ்திரி சிறிதும் சிந்திக்கவில்லை. முன்னை விட இப்போது அவருடைய உள்ளத்தில் அதிக அமைதி குடி கொண்டிருந்தது. பகவத் பக்தியில் முன்னைவிட அதிகமாக அவர் மனம் ஈடுபட்டது.

     குழந்தை சாவித்த்ரியைப் பற்றி இடையிடையே நினைவு வரும்போது மட்டும் அவருடைய உள்ளம் சிறிது கலங்கும். ஆனால் உடனே, "குழந்தை புருஷன் வீட்டில் சௌக்கியமாயிருக்கிறாள். நாம் ஏன் கவலைப்படுகிறோம்?" என்று மனத்தைத் தேற்றிக்கொள்வார்.

     சாவித்திரி கல்கத்தாவுக்குப்போய் ஐந்தாறு மாதம் வரையில் அடிக்கடி அவளிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. அப்புறம், இரண்டு மாதத்துக்கொரு தரம் வந்தது. இப்போது சில மாதமாய்க் கடிதமே கிடையாது. அதனால் என்ன? கடிதம் வராத வரையில் க்ஷேமமாயிருக்கிறாள் என்றுதானே நினைக்க வேண்டும்? மேலும் இனிமேல் சாவித்திரிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அவளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்குத் தான் அவளால் என்ன ஆகவேண்டும்? "இனி உனக்கு மாதா பிதா தெய்வம் எல்லாம் புருஷன் தான்" என்று நாம் தானே உபதேசம் செய்து அனுப்பினோம்? எப்படியாவது குழந்தை சந்தோஷமாயிருந்தால் சரி. கடிதம் போடாமல் போனால் என்ன? - இப்படி எண்ணியிருந்தார் சம்பு சாஸ்திரி.

     அன்று தை வெள்ளிக்கிழமை. சாஸ்திரி அம்பிகையின் பூஜைக்குப் புஷ்பம் சேகரித்து வைத்துவிட்டு ஸ்நானம் செய்யக் குளத்துக்குப் போயிருந்தார்.

     வாசலில் "தபால்" என்ற சத்தம் கேட்டது. சமையலுள்ளில் கைவேலையாயிருந்த சொர்ணம்மாள், "மங்களம்! மங்களம்! சுருக்கப் போய்த் தபாலை வாங்கிண்டு வா!" என்றாள்.

     மங்களம் போய்த் தபாலை வாங்கிக் கொண்டு வந்தாள். வரும்போது வாசற்கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வந்தாள்.

     சொர்ணம்மாள், மங்களம், வைத்தி மூன்று பேரும் அடுப்பைச் சுற்றி உட்கார்ந்தார்கள். "வைத்தி! கடுதாசை வாங்கி வாசி!" என்றாள் சொர்ணம்மாள்.

     மங்களம், "அடே! சத்தம் போடாமே மெதுவாய் வாசி. உனக்குத்தான் காது செவிடு. எங்களுக்குக் காது கேக்கறது!" என்றாள்.

     வைத்தி, "சாவித்திரிதான் போட்டிருக்கா! வேறே யார் போடப் போறா?" என்றான்.

     "இப்படி வரிந்து வரிந்து கடுதாசி எழுதறதுக்கு இந்தப் பொண்ணுக்குக் கையைத்தான் வலிக்காதா?" என்றாள் சொர்ணம்மாள்.

     வைத்தி வாசிக்கத் தொடங்கினான்:

     'மகா-௱-௱-ஸ்ரீ அப்பா அவர்களுக்கு, சாவித்திரி அநேக நமஸ்காரம்.

     தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்களா? நான் போட்ட ஒரு கடிதத்திற்காவது பதில் இல்லையே? இங்கு நான் படுகிற கஷ்டம் சகிக்க முடியவில்லை. வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் பண்ணிச் சீர் செய்யவில்லையென்று மாமியார் ரொம்பவும் கோபித்துக் கொள்கிறாள். பிரசவத்திற்கு ஊருக்குப் போ போ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். தாங்கள் வந்து என்னை உடனே அழைத்துக் கொண்டு போகாவிட்டால் என் பாடு அதோ கதிதான். உங்களுக்குத் துன்பமாகவும் பூமிக்குப் பாரமாகவும் நான் ஏன் பிறந்தேன்?

     அப்பா! எனக்கும் நெடுங்கரைக்கு வந்து உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ரொம்பவும் ஆசையாயிருக்கிறது. சித்தி கையினால் ஒருவேளையாவது சாப்பிட்டால் என் உடம்பு சொஸ்தமாகும். இந்தக் கடிதத்தைத் தந்தியாகப் பாவித்துத் தாங்கள் புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவேண்டியது. இல்லாவிட்டால் என்னை நீங்கள் மறுபடியும் உயிரோடு பார்ப்பது நிச்சயம் இல்லை.

இப்படிக்கு,
தங்கள் அன்புள்ள புத்திரி
சாவித்திரி'

     "எழுதுகிற வக்கணயைப் பார்த்தயோல்லியோ?" என்றாள் மங்களம்.

     "அதுக்குத்தாண்டி அம்மா பொம்மனாட்டிகளுக்குப் படிப்பு உதவாதுன்னு சொல்றது?" என்றாள் சொர்ணம்மாள். பிறகு, வைத்தியைப் பார்த்து "இன்னொரு தடவை வாசிடா!" என்றாள்.

     வைத்தி மறுபடி வாசிக்கத் தொடங்கி, "சித்தி கையால் ஒரு வேளையாவது சாப்பிட்டால், என் உடம்பு சொஸ்தமாகும்..." என்று படித்ததும், சொர்ணம்மாள் அவன் கையிலிருந்து கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டாள்.

     "ஆமாண்டி, அம்மா! சித்தி உனக்குப் பொங்கிக் கொட்டத்தான் காத்திண்டிருக்கா!" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தைக் கிழித்து நெருப்பில் போட்டாள்.

     வைத்தி, "ஏம்மா! சாவித்திரி பிள்ளையாண்டிருக்கிறது அத்திம்பேருக்குத் தெரியாதோன்னோ? வந்த கடுதாசையெல்லாம் நீதான் கிழிச்சுக் கிழிச்சு எறிஞ்சுடறயே" என்றான்.

     "சீச்சீ! வாயைப் பொத்திக்கோடா, இரையாதேடா!" என்றாள் சொர்ணம்மாள். பிறகு, "என்னமோ, நினைச்சுண்டா, எனக்கு வயத்தை பத்திண்டுதான் எரியறது. என் பொண் வயத்திலே ஒரு பிள்ளைக் குழந்தைன்னு பிறந்திருந்தா, இப்படியெல்லாம் ஆயிருக்குமா?" என்று பிரலாபிக்கத் தொடங்கினாள்.

     இந்தப் பேச்சுப் பிடிக்காத மங்களம், "அது இருக்கட்டண்டி, அம்மா! நீ பாட்டுக்கு இந்த மாதிரி பண்ணிண்டிருக்கயே? அவாளுக்குத் தெரிஞ்சு போய்ட்டா என்ன பண்றது?" என்றாள்.

     "ஆகா! வேணும்னாப் பொண்ணைப் பிரசவத்துக்கு அழைச்சுண்டு வந்து பத்தியம் வடிச்சுக் கொட்டேன். நானா வேண்டாங்கறேன்! பணந்தான் இங்கே கிடந்து இறையறது..."

     "அதுக்குச் சொல்லலேடி, அம்மா!..."

     "பின்னே, எதுக்குச் சொல்றே? அடி போடி பைத்தியமே! பணச் செலவைப் பார்க்காமே, அழைச்சுண்டுதான் வந்து, ராப்பகலா உழைச்சுக் கொட்டறேன்னு வச்சுக்கோ - அந்தப் பொண்ணுக்கு ஏதாவது தலையைக் கிலையை வலிச்சா, ஊரிலே நாலு பேர் என்னடி சொல்வா? நீ வேணும்னு ஏதோ செய்துட்டேன்னுதானேடி சொல்வா?"

     "நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு சொல்றயே, அம்மா! அவாள் ஆத்திலே இருக்கிறபோது கடுதாசி, கிடுதாசி வந்துட்டா என்ன பண்றதுன்னுட்டுன்னா கேக்கறேன்? இல்லை, கடுதாசிக்குப் பதில் வல்லையேன்னு ஒரு தந்தி அடிச்சு வச்சாள்னு வச்சுக்கோ, அப்போ என்ன செய்யறது?"

     "அதுக்கெல்லாம் நான் யோசனை பண்ணி வச்சிருக்கேன்; நீ பேசாமே இரு!" என்றாள் மங்களத்தின் தாயார்.

     வழக்கம் போல் அன்று சாஸ்திரி பூஜை செய்து முடியும் சமயத்தில், மங்களமும் அவள் தாயாரும் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு, தீர்த்தம் வாங்கிக் கொண்டார்கள். "மங்களம்! இன்று தை வெள்ளிக்கிழமையாச்சே! நைவேத்யத்துக்கு ஏன் வடை பாயஸம் பண்ணலை? வெறும் அன்னம் மட்டும் வச்சுட்டே?"" என்றார் சாஸ்திரி.

     மங்களம் பதில் சொல்வதற்குள், சொர்ணம்மாள், "அவள் என்ன பண்ணுவள்? நானும் பேசப்படாது பேசப்படாதுன்னு பாத்துண்டிருக்கேன். வடை பாயஸம் பண்ணறதுன்னா இலேசாவா இருக்கு? வெல்லம் வேண்டாமா? பயத்தம் பருப்பு வேண்டாமா? இதெல்லாம் வாங்கறத்துக்குப் பணத்துக்கு எங்கே போறது? மாதம் பிறந்ததும் ரூபாயை எண்ணிக் கொடுக்கறாப்பலே பேசியாயிடறது! இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த வெறும் அன்னத்துக்கே ஆபத்து வந்துடும்போல் இருக்கு! ஆனாலும் இப்படி மூக்கைப் புடிச்சுண்டு மணியை ஆட்டிண்டு இருந்தாக்கே, காலட்சேபம் எப்படி நடக்கும்?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.

     "நீங்க என்னத்துக்கு அதுக்காகக் கவலைப்படறேள்? இத்தனை நாளும் காப்பாத்தின ராமன் இன்னமும் காப்பாத்துவன்" என்றார் சாஸ்திரி.

     "ஆமாமாம்; 'ராமா ராமா'ன்னு சொல்லிச் சொல்லித்தான் இந்தக் குடித்தனம் இப்படிப் பாலாப் போச்சு. இப்பவாவது நான் சொல்றதைக் கேளுங்கோ. சென்னைப் பட்டணத்திலே எவ்வளவோ பேர் பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறாளாம். நீங்களும் போய் ஏதாவது சம்பாதிக்கிற வழியைப் பாருங்கோ!"

     சாஸ்திரிக்குத் தம் மாமியாரிடம் விசுவாசமோ மரியாதையோ அதிகம் கிடையாது. மங்களத்தின் தாயார் என்பதற்காகத்தான் அவள் வீட்டில் இருப்பதைச் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவள் சொன்ன வார்த்தை அம்பிகையின் வாக்கு என்றே அவருக்குத் தோன்றிற்று. ஏற்கெனவே, அவருடைய மனம் அமைதி இழந்திருந்தது. எங்கேயாவது யாத்திரை போகவேண்டுமென்று எண்ணியிருந்தார். இப்போது, சொர்ணம்மாள் இப்படிச் சொன்னதும், அவருடைய மனத்திலும் அதே விருப்பம் இருந்தபடியால், "அதற்கென்ன? அப்படியே செய்துட்டாப் போச்சு! ஆனால், மங்களம் இங்கே தனியாயிருக்கவேணுமேன்னுதான் யோசிக்கிறேன்" என்றார்.

     அதற்குச் சொர்ணம்மாள், "மங்களத்தைப் பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். நான் அவளை என்னோடே ஊருக்கு அழைச்சுண்டு போறேன். கொஞ்ச நாளைக்காவது அவள் கஷ்டப்படாமே எங்களோடே இருக்கட்டும்" என்றாள்.

     "மங்களத்தை நீங்க பாத்துக்கறதாயிருந்தா எனக்கென்ன கவலை? ஜாக்கிரதையாய் அழைச்சுண்டு போய் வச்சுக்குங்கோ! நான் நாளைக்கே கிளம்பறேன்" என்றார் சாஸ்திரி.

     "பட்டணத்திலே நாலு பெரிய மனுஷாள் வீட்டிலே பாட்டுச் சொல்லிக் கொடுக்கறதுன்னு ஏற்பட்டு, குடித்தனம் போடலாம்னு தோணினாக் கடுதாசி போடுங்கோ; புறப்பட்டு வந்து சேரறோம்."

     "அதுக்கென்ன, அப்படியே செய்றேன்" என்றார் சாஸ்திரி. ஆனால், அவர் மனத்தில் மட்டும் சொரேல் என்றது. காசிக்கு போயும் பாவம் தொலையவில்லை என்பார்களே, அந்த மாதிரி பட்டணத்துக்குப் போன அப்புறமும் இவர்களுடன் வாழவேண்டுமா என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். 'நம் செயலில் என்ன இருக்கிறது? பகவானுடைய சித்தப்படி நடக்கட்டும்' என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டார்.