மூன்றாம் பாகம் : பனி

32. “அப்பா எங்கே?”

     சாவித்திரி அதிகாலையில் புதுச் சத்திரம் ஸ்டேஷனில் வந்து இறங்கினாள். இன்னும் பனிபெய்து கொண்டிருந்தபடியால், ஸ்டேஷன் கட்டிடம், அதற்கப்பாலிருந்த சாலை, தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் மங்கலாகக் காணப்பட்டன.

     தன்னை அழைத்துப் போக அப்பா வந்திருக்கிறாரோ என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தாள். பிளாட்பாரத்தில் ஒரு பிராணியும் இல்லை. வெளியே ஒரு வண்டி மட்டும் கிடந்தது. அதிகாலையானதால் ஒரு வேளை நல்லானை மட்டும் வண்டியுடன் அனுப்பியிருப்பார் என்று சாவித்திரி எண்ணினாள்.

     நல்ல வேளையாக, அவளிடமிருந்த கொஞ்சம் பணத்தையும், டிக்கட்டையும் பெட்டியில் வைக்காமல் ஒரு பர்ஸில் போட்டு இடுப்பில் செருகிக் கொண்டிருந்தாள். ஆகையால் அவை கெட்டுப் போகாமல் பிழைத்தன.

     சாவித்திரி, டிக்கட்டை எடுத்துக் கொடுத்தபோது, தனக்குத் தெரிந்த பழைய ஸ்டேஷன் மாஸ்டரோ என்று ஒரு க்ஷணம் உற்றுப் பார்த்தாள். இல்லை. அவர் இல்லை. இவர் யாரோ புதுசு! மீசையும் கீசையுமாயிருக்கிறார். சாவித்திரி வெளியில் போன பிறகு அவர் டிக்கட் குமாஸ்தாவிடம், "வர வரப் பெண்பிள்ளைகள் எல்லாம் துணிந்து போய்விட்டார்கள்! கொஞ்ச நாள் போனால், நாமெல்லாம் சேலை கட்டிக்க வேண்டியதுதான்" என்றார்.

     அதற்கு டிக்கட் குமாஸ்தா, "ஆமாம், ஸார்! ஆனால் குழந்தை பெறுகிற காரியம் மட்டும் அவர்கள்தானே செய்ய வேண்டும் போலிருக்கு!" என்று நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.

     இதைக் கேட்டுக்கொண்டே வெளியில் போன சாவித்திரி, அங்கே கிடந்த ஒரே வண்டியின் அருகில் சென்றாள். வண்டிக்காரன், "எங்கே, அம்மா, போகணும்? வண்டி பூட்டட்டுமா?" என்றான். அவன் நல்லான் இல்லை. வண்டி, நெடுங்கரை வண்டியும் இல்லை. அது ஓர் ஒற்றை மாட்டு வண்டி.

     "ஏனப்பா, நெடுங்கரையிலிருந்து வண்டி ஒன்றும் வர்றலையா?" என்று சாவித்திரி கேட்டாள்.

     "இன்னிக்கு வர்றலீங்க; ஒருவேளை நாளைக்கு வருமோ, என்னமோ!" என்றான் வண்டிக்காரன்.

     சாவித்திரிக்கு ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. அப்பாவா இப்படி அலட்சியமாயிருக்கிறார்? நம்பவே முடியவில்லையே? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்தாயிருக்குமோ? இல்லாமற் போனால் இப்படி இருக்கமாட்டாரே?

     வண்டியைப் பூட்டச் சொல்லி, சாவித்திரி அதில் ஏறிக் கொண்டு நெடுங்கரைக்குப் பிரயாணமானாள்.

     வண்டி நெடுங்கரை அக்கிரகாரத்துக்குள் நுழைந்த போது, சாவித்திரிக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. நெடுங்கரையை மறுபடி பார்க்க வேண்டுமென்று அவள் எவ்வளவு ஆவல் கொண்டிருந்தாள்? புறப்படும்போது எவ்வளவு குதூகலமாயிருந்தாள்? அந்தக் குதூகலம் இப்போது எங்கே போயிற்று? நெடுங்கரைக்கு வந்ததில் ஏன் கொஞ்சங் கூடச் சந்தோஷம் உண்டாகவில்லை?

     சாவித்திரியின் கண்களுக்கு நெடுங்கரை அக்கிரகாரம் இப்போது பழைய தோற்றம் கொண்டிருக்கவில்லை. வீடுகள், தென்னை மரங்கள், கோவில், மண்டபம் எல்லாம் முன் மாதிரியேதான் இருந்தன. ஆனாலும், வீதி மட்டும் களை இழந்து காணப்பட்டது.

     வீடு நெருங்க நெருங்க அவளுடைய மனம் அதிகமாகப் பதைபதைத்தது. அப்பாவை எப்படிப் பார்ப்பது, என்ன சொல்வது? சித்தியின் முகத்தில் எப்படித்தான் விழிப்பது? ஒரு வேளை ஆத்தில் பாட்டியும் இருப்பாளோ? இருந்தால், அவள் ஏதாவது வெடுக்கென்று சொல்வாளே? அப்புறம் ஊரார்தான் என்ன சொல்வார்கள்? என்ன நினைத்துக் கொள்வார்கள்? தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்த பசங்களை ஏறிட்டுப் பார்க்கக்கூடச் சாவித்திரிக்கு வெட்கமாயிருந்தது.

     இதோ, வீடு வந்து விட்டது, "நிறுத்தப்பா!" என்றாள் சாவித்திரி. வண்டி நின்றது. தன்னுணர்ச்சி இல்லாமலே சாவித்திரி வண்டியிலிருந்து இறங்கினாள். சற்று விரைவாகவே வீட்டை நோக்கிச் சென்றாள்.

     வாசற் கதவு பூட்டியிருந்ததைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் சாவித்திரிக்கு இருதயமே நின்றுவிட்டதுபோல் தோன்றிற்று! அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

     நெடுங்கரை தன்னை எப்படி வரவேற்கும் என்பது பற்றி சாவித்திரி என்னவெல்லாமோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், இந்த மாதிரி வரவேற்பை அவள் எதிர்பார்க்கவேயில்லை. வீட்டுக் கதவு பூட்டியிருக்குமென்று அவள் நினைக்கவேயில்லை.

     சாவித்திரிக்கு யோசனை செய்யும் சக்தி வருவதற்குச் சில நிமிஷம் பிடித்தது. ஒருவரும் ஊரில் இல்லைபோல் இருக்கிறது. ஆனால், எங்கே போயிருப்பார்கள்? அப்பா ஊரில் இல்லாததனால் தான் தன்னுடைய கடிதங்களுக்குப் பதில் இல்லையோ?

     இந்தச் சமயத்தில் வீதியில் பசங்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து சாவித்திரிக்கு அருகில் வந்து விழுந்தது. பந்தைத் தொடர்ந்து ஒரு பையன் ஓடி வந்தான். அவனைப் பார்த்துச் சாவித்திரி, "ஏண்டாப்பா, குழந்தை, இந்தாத்து மாமா எல்லாரும் எங்கே?" என்று கேட்டாள். அந்தப் பையன் விளையாட்டின் சுவாரஸ்யத்தில், "எனக்குத் தெரியாது, அம்மாமி! அதோ தீக்ஷிதர் மாமா இருக்கார் கேளுங்கோ!" என்று சொல்லி, பந்தை வீசி எறிந்து, "அடே பிடிடா!" என்று கூவிக் கொண்டே ஓடிவிட்டான்.

     அப்போது அறுவடைக் காலமாதலால், சாவித்திரி வந்த நேரத்திற்கு அக்கிரகாரத்தில் புருஷர்கள் எல்லாரு வயல் வெளிக்குச் சென்றிருந்தார்கள். தீக்ஷிதருக்கு அந்த உபத்திரவம் ஒன்றும் இல்லாதபடியால் அவர் மட்டும் வீட்டில் இருந்தார். வாசலில் வண்டிச் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தார். சாவித்திரி தனியாக வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும், அவருக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. 'இது என்ன கூத்து?' என்று எண்ணிக் கொண்டே இந்த வேடிக்கையைப் பூராவும் பார்த்து விடுவதற்காக அவருடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கையில் ஜப மாலையுடன் ஜபம் செய்யத் தொடங்கினார்.

     சாவித்திரி கையில் ஒரு கொசுவிய புடவையுடன் மட்டும் இறங்கிப் போனது அவருக்கு இன்னும் வியப்பையளித்தது. அவள் இருந்த கோலமோ சொல்ல வேண்டியதில்லை. 'சரிதான், சரிதான். நாம் நினைத்தபடிதான் ஆயிற்று. இந்தப் பெண் புக்ககத்திலே இருந்து பேர் சொல்லாது என்று நாம் அப்போதே சொல்லவில்லையா? அது பலிச்சுப் போச்சு. ஏதோ கெட்ட நடவடிக்கியிலே இறங்கியிருக்கவேண்டும். இவளாகத்தான் கிளம்பிவிட்டாளோ, அவாளேதான் அடிச்சு விரட்டிட்டாளோ, தெரியலை. இதையெல்லாம் ஒரு மாதிரி தெரிஞ்சுண்டு தான், சம்பு சாஸ்திரி ரொம்ப நாளாய்ப் பொண்ணு என்கிற பேச்சை எடுக்காதிருந்தான் போலிருக்கு...' என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தார் தீக்ஷிதர்.

     வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு சாவித்திரி திரும்பியபோது அவள் முகத்தில் தோன்றிய ஏமாற்றமும் துக்கமும் தீக்ஷிதருக்கு மிக்க மகிழ்ச்சியளித்தன. 'வேண்டும், வாயாடிக் கழுதைக்கு நன்றாய் வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார்.

     இதற்குள் சாவித்திரி வீதியைக் கடந்து அவர் இருந்த இடத்துக்கு வந்தாள். "தீக்ஷிதர் மாமா, எங்ககம் ஏன் பூட்டிக் கிடக்கு? எங்க அப்பா எல்லாரும் எங்கே?" என்று கேட்டாள்.

     "உங்கப்பன் எங்கே போனானோ, நான் என்னத்தைக் கண்டேன்? எங்கிட்டச் சொல்லிண்டா போறான்?" என்றார் தீக்ஷிதர்.

     சாவித்திரிக்கு அழுகை வரும்போல் இருந்தது. அப்பா எங்கே என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள அவள் மனம் துடிதுடித்தது. தீக்ஷிதருக்கும் தெரியும், ஆனால், சொல்ல மறுக்கிறார் என்பதும் ஒருவாறு தெரிந்தது.

     அவளுடைய ஆங்காரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, பரிதாபமான குரலில், "தீக்ஷிதர் மாமா! எங்கப்பா மேலே உங்களுக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் எனக்காகவாவது சொல்லப்படாதா?" என்றாள். அப்புறம் இன்னொரு பயங்கரமான எண்ணம் தோன்றவே, "எங்கப்பாவுக்கு... உடம்பு கிடம்பு...ஒன்றுமில்லையே?" என்று கேட்டாள்.

     "அவனுக்கும் எனக்கும் உடம்புக்கு என்ன வரப் போகிறது? போன சனிக்கிழமை கூட இருந்தான் கொட்டறாப்புளி மாதிரி. சென்னைப் பட்டணத்துக்குப் போறதாகச் சொல்லிண்டிருந்தான். ஒரு வேளை அங்கேதான் போயிருப்பான்."

     "சென்னைப் பட்டணத்துக்கா? என்னத்துக்கு மாமா?"

     "பாட்டுச் சொல்லிக் கொடுத்து, பணம் சம்பாதிச்சுண்டு வரப்போறானாம், பணம்!"

     உடனே சாவித்திரிக்குப் பழைய ஞாபகம் உண்டாயிற்று. அப்பா ஏற்கெனவே கடன்பட்டிருந்தது, மறுபடியும் தன்னைக் கல்கத்தாவுக்குக் கூட்டி அனுப்பப் பணம் வாங்கிக் கொண்டு வந்தது, அப்போதே நிலத்தை விற்றிருப்பாரோ என்று தான் சந்தேகித்தது - எல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனால் இதையெல்லாம் பற்றி இவரைக் கேட்பதற்கு மனம் வராமல், "எங்க சித்தி? - அவ கூடவா பட்டணத்துக்குப் போயிருக்கா?" என்று கேட்டாள்.

     "உங்க சித்தி - பிறந்தாத்துக்குப் போய்ட்டா, பிறந்தாத்துக்கு" என்று சொல்லிவிட்டு, தீக்ஷிதர் எழுந்திருந்தார்.

     இவ்வளவு நேரமும் வாசலில் வண்டி நின்று கொண்டிருந்தது. தான் சவாரி ஏற்றிக் கொண்டு வந்த அம்மாளின் நிலைமையைப் பார்த்ததும், சத்தம் வருமோ வராதோ என்ற சந்தேகம் வண்டிக்காரனுக்கு உண்டாகி விட்டது.

     "என்னம்மா, எத்தனை நேரம் அம்மா காத்திருக்கிறது?" என்று அவன் கேட்டான்.

     சாவித்திரி வண்டியை நோக்கி நடந்தாள். சட்டென்று மறுபடியும் திரும்பி வந்து, வீட்டுக்குள் போய்க் கொண்டிருந்த தீக்ஷிதரிடம், "மாமா, பட்டணத்திலே, எங்கப்பா விலாசம் தெரியுமா?" என்று கேட்டாள்.

     "விலாசம் யார் கண்டா? எங்கிட்டச் சொல்லிட்டா போயிருக்கான்? அங்கே போய், பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடுன்னு விசாரிச்சா தானே தெரியறது!" என்று சொல்லிவிட்டுத் தீக்ஷிதர் உள்ளே போய்ச் சேர்ந்தார்.

     இன்னும் கொஞ்ச நேரம் அவளிடம் பேச்சுக் கொடுத்தால், அப்படி இப்படி என்று உறவு கொண்டாடிக் கொண்டு சாப்பாட்டுக்கு உட்கார்ந்துவிடப் போகிறாளே என்று அவருக்குப் பயம். ஒரு வேளைச் சாப்பாடு போடுவது ஒன்றும் பிரமாதமில்லை; வாஸ்தவந்தான். ஆனால் இந்த மாதிரி சாதி கெட்டு, நெறி கெட்டு ஓடி வந்திருப்பவளுக்குச் சாப்பாடு எப்படிப் போடுவது? போட்டுவிட்டு அந்தப் பாவத்தை எங்கே கொண்டுபோய்த் தொலைப்பது?

     சாவித்திரி மறுபடியும் வண்டியில் ஏறிக் கொண்டாள். வண்டி திரும்பி வந்த வழியோடு போயிற்று. இதற்குள் சமாசாரம் எப்படியோ பரவி, அக்கிரகாரத்தில் பல வீடுகளில் ஸ்திரீகள் வாசற்படியண்டை நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும் வண்டியினருகில் வந்து விசாரிக்கவில்லை. இதுவும் ஒரு காலமா என்று ஆச்சரியப்படும் மனோபாவம் அவர்களுடைய முகத்தில் பிரதிபலித்தது.

     வண்டி அக்கிரகாரத்தைத் தாண்டிச் சென்று அப்பால் இருந்த குடியானத் தெருவின் ஒரு முனை வழியாகப் போயிற்று. சாவித்திரிக்கு அப்போது நல்லானின் ஞாபகம் வந்தது; வண்டியை நிறுத்தச் சொல்லி, அங்கே நின்ற ஒரு குடியானவ ஸ்திரீயிடம், "பட்டிக்கார நல்லான் ஊரிலேயிருக்கானா?" என்று கேட்டாள். அந்த ஸ்திரீ, "இது யாரு? நம்ப சாஸ்திரி ஐயா பொண்ணு சாவித்திரி மாதிரியில்லேயிருக்கு?" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள். இதைக் கேட்டு இன்னும் சில ஸ்திரீகளும் வண்டியின் பக்கம் வந்தார்கள். மறுபடியும், சாவித்திரி நல்லானைப் பற்றிக் கேட்டாள். "அவரு அப்பவே ஊரைவிட்டுப் போய்ட்டாரே, அம்மா. உனக்குத் தெரியாதா? சாஸ்திரி ஐயா நிலத்தை வித்தாரோ, இல்லையோ, இந்த ஊர்லே இனிமே இருக்க மாட்டேன்னு போய்ட்டாரு. இப்ப சாவடிக் குப்பத்திலே, அவரு மச்சானோடேயல்ல இருக்காரு!" என்றாள் அந்தக் குடியானவ ஸ்திரீ.

     சாவித்திரிக்கு இப்போது நிலைமை ஒருவாறு தெரிந்தது. அப்பா நிலத்தை விற்றுவிட்டார். வேறு வருமானமும் இல்லை. ஆகையால், தன்னை வந்து அழைத்து வரக் கையில் பணம் இல்லாமையால் தான் வரவில்லை. சங்கோசப்பட்டுக் கொண்டு, போட்ட கடுதாசிக்குப் பதில் போடாமல் இருந்துவிட்டார். இப்போது பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கப் பட்டணத்துக்குப் போயிருக்கார். அப்பா! அப்பா! ஒருவேளை என்னை அழைத்து வருவதற்குத் தான் பணம் சம்பாதிக்கப் புறப்பட்டீர்களோ?

     தகப்பனாரைப் பார்க்கும் ஆவல் சாவித்திரிக்கு இன்னும் அதிகம் ஆயிற்று. "வண்டியை ஓட்டப்பா!" என்றாள்.

     குடியானவ ஸ்திரீகள் கொஞ்ச தூரம் வண்டி பின்னால் நடந்து கொண்டே, "ஏம்மா எங்கே வந்தே?", "இப்படித் தனியா வந்துட்டுப் போறயே?", "பாவம்! அப்பா ஊரிலே இருக்காருன்னு நினைச்சுட்டு வந்தயாக்கும்!", "பட்டினியாப் போறே போல் இருக்கே", "ஆனாலும் இந்தப் பாப்பாரச் சாதியைப்போல பார்த்ததில்லை. வந்த பொண்ணைச் சாப்பிட்டயான்னு கேக்காத கூட அனுப்பிச்சுட்டாங்களே?", "கொஞ்சம் இறங்கி ஒரு குவளை மோராவது சாப்பிட்டுட்டுப் போயேம்மா!" என்று இந்த மாதிரி சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

     சாவித்திரி, "ஒன்றும் வேண்டாம், அம்மா! எனக்குப் பசிக்கவே இல்லை. ஊருக்குப் போய்ச் சாப்பிட்டுக்கிறேன். எங்க அப்பாவை அவசரமாய்ப் பார்க்கணும். அதுக்காகத்தான் போறேன்" என்று சொல்லி, அவர்களை நிற்கச் செய்தாள்.

     மேலே வண்டி போனபோது, "இந்தக் குடியானவ ஸ்திரீகள் சொன்னது எவ்வளவு உண்மை! இவர்களுக்கு இருக்கிற ஈவிரக்கம், பச்சாதாபம் அக்கிராகாரத்திலே யாருக்கும் இல்லையே? யாராவது வந்து 'தீர்த்தம் வேண்டுமா?' என்று கூடக் கேட்கவில்லையே?" என்று சாவித்திரி எண்ணமிட்டாள்.

     அதே சமயத்தில் அக்கிரகாரத்து ஸ்திரீகள், ஒருவருக்கொருவர், "ஏண்டி, அம்மா! அவள் பெரிய மனுஷியோல்லியோ! பெரிய இடத்திலே பிறந்தவள்; பெரிய இடத்திலே வாழ்க்கைப்பட்டவள். நம்மை எல்லாம் இலட்சியம் பண்ணி வண்டியை விட்டிறங்கி வந்து ஒரு வார்த்தை பேசுவளோ?" என்று பேசிக்கொண்டார்கள்.