உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
நாலாம் பாகம் : இளவேனில் 39. 'ஸ்ரீமதி சாருமதி தேவி' "வலது கையால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாதபடி கொடுக்க வேண்டும்" என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? இது எவ்வளவு அருமையான ஆப்த வாக்கியம் என்பதை உமாராணி வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொண்டாள். புகழ்ச்சிக்கு ஆசைப் பட்டுத் தர்மம் செய்வதில் பலன் குறைவு என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் உண்மைக் கருத்து. ஆனால், வேறொரு விதத்திலும் அது மிகவும் உபயோகமான உபதேசமாகும். இந்த நாளில் ஒருவர் செய்யும் தர்மம் பிரசித்தியாகிவிட்டால் அதைக் காட்டிலும் அவருக்கு உபத்திரவம் உண்டாக்கக் கூடியது வேறொன்றுமில்லை. அப்புறம் அவருக்கு மனநிம்மதி என்பதே இல்லாமற் போய் விடுகிறது. இந்த ஏழைத் தேசத்தில் தர்மத்தை எதிர்பார்க்கும் ஸ்தாபனங்களும், காரியங்களும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நடத்துவோரெல்லாம் மேற்படி தர்மப் பிரபுவைத் தேடி வருகின்றனர். 'இவர்தான் இந்தப் பெரிய தர்மத்தைச் செய்தாரே வேறு தர்மங்களுக்கு வேறு மனுஷர்களைத் தேடிப் போவோம்' என்று யாரும் நினைப்பதில்லை. ரயிலில் ஏற்கெனவே கூட்டமாயுள்ள வண்டியிலேயே இன்னும் கூட்டமாக ஜனங்கள் ஏறுவதைப் பார்த்திருக்கிறோமல்லவா? அந்த மாதிரி ஒரு நல்ல காரியத்துக்குப் பணம் கொடுத்தவரிடமேதான் மற்றவர்களும் வருகிறார்கள். உண்மையான தர்மத்தை நடத்துவோரைத் தவிர, போலி மனிதர்களும் மோசக்காரர்களும் வருகிறார்கள். வந்து அவருடைய பிராணனை வாங்கிவிடுகிறார்கள். அந்தத் தர்மப் பிரபு இல்லையென்று சொன்னாலோ வருகிறவர்களுக்குக் கோபம் பொங்குகிறது. "ஒரு நாளும் கொடுக்காத மகாலக்ஷ்மிதான் இன்றைக்கும் இல்லை என்று சொல்லிவிட்டாள், தினமும் கொடுக்கிற மூதேவி, உனக்கென்ன வந்தது?" என்ற கொள்கையின்படி, தர்மம் செய்தவர்களுக்கு முடிவில் எப்போதும் வசவுதான் கிடைக்கிறது. உமாராணியின் அநுபவமும் இந்த மாதிரிதான் இருந்தது. 'அடாடா! நாம் மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு ஐந்து லட்சம் கொடுத்ததை ஏன் விளம்பரப்படுத்தினோம்? அநாமதேயமாகக் கொடுத்திருக்கக் கூடாதா?' என்று அடிக்கடி அவள் எண்ணமிட்டாள். சென்னையில் எவ்வளவு தர்ம ஸ்தாபனங்கள், பொது நலக் கழகங்கள் உண்டோ அவ்வளவிலிருந்தும் நன்கொடை கோரி அவளுக்குக் கடிதங்கள் வந்தன. ஒரு நகரத்தில் இவ்வளவு அநாதாசிரமங்களும், இலவசக் கல்வி ஸ்தாபனங்களும், மாதர் முன்னேற்றக் கழகங்களும், அமெச்சூர் நாடக சபைகளும், சங்கீத சபாக்களும், ஜீவகாருண்ய சங்கங்களும் இருக்கக் கூடுமென்று உமாராணி கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தினந்தோறும் புதிய புதிய ஸ்தாபனங்களிலிருந்து அவளுக்குக் கடிதங்கள் வந்து குவிந்தன. திறப்பு விழாக்கள், வருஷபூர்த்திக் கொண்டாட்டங்கள் முதலியவற்றுக்கு அவளுக்கு வந்த அழைப்புக் கடிதங்களுக்கோ அளவில்லை. கடிதங்களை அனுப்பிவிட்டு, அந்தந்த ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் உமாராணியை நேரில் பார்ப்பதற்கும் வந்தார்கள். உண்மையாக வந்தவர்களுடன் போலி மனிதர்களும் வந்தார்கள். சிலர், ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு உமாராணியுடன் பேசிவிட்டு வரலாமென்று வந்தார்கள். இம்மாதிரி ஒரு இளம்பெண் - பெரிய பணக்காரி - நவநாகரிகத்தில் சிறந்தவள் - அழகோ சொல்ல வேண்டாம் - ஒரு புன்சிரிப்புக்கு உலகம் மூன்றையும் கொடுக்கலாம் - இப்படிப்பட்டவள் புருஷன் முதலிய தொந்தரவு ஒன்றுமில்லாதவளாய், சுதந்திரமாயிருக்கிறாள் என்றால், அவளைப் பார்ப்பதற்கும் அவளுடன் சிநேகம் செய்து கொள்வதற்கும் இஷ்டப்படுகிறவர்கள் ஒரு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ பேர் இருப்பார்கள் அல்லவா? ஆகவே, உமாராணியின் பங்களாவில் எப்போதும் வருகிறவர்களும் போகிறவர்களுமாய் ஜே ஜே என்று இருந்தது. ஒரு நாள் காலை சுமார் பத்து மணி இருக்கும். ஒரு பெரிய மோட்டார் வண்டி வந்து, உமாராணி பங்களாவின் போர்ட்டிக்கோ முகப்பில் நின்றது. வண்டியில் ஒரு பெரிய மனுஷர் இருந்தார். பங்களாவின் வாசல் சேவகன், மோட்டார் வண்டியினருகில் வந்ததும், "அம்மா இருக்காங்களா ?" என்று பெரிய மனுஷர் கேட்டார். சேவகன் "இருக்காங்க; ஆனால், இன்னிக்கு இனிமே யாரையும் பார்க்கிறதில்லைன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு வந்தாப் பார்க்கலாம்" என்றான். வந்த பெரிய மனுஷர், "ஓ! ஐ ஆம் ஸாரி" என்றார். உடனே, தம்முடைய சட்டைப் பையிலிருந்து பெயர் அச்சிட்ட விஸிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துச் சேவகனிடம் கொடுத்து, "இதை அம்மாவிடம் கொடு" என்றார். பிறகு, மோட்டார் அங்கிருந்து நகர்ந்தது. அந்தப் பெரிய மனுஷரின் வண்டி வந்து நின்ற அதே சமயத்தில் நாலு பெண் குழந்தைகள் அங்கே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி சாரு. மோட்டாரில் இருந்தவருக்கும் சேவகனுக்கும் நடந்த பேச்சை அவள் கவனித்துக்கொண்டிருந்தாள். மோட்டார் நகரத் தொடங்கியதும் சாரு அவசரமாய் ஒரு காகிதத்தை எடுத்து, பென்ஸிலால் அதில் ஏதோ எழுதினாள். சேவகன், "நீங்கள்ளாம் எங்கே வந்தீங்க இங்கே, போங்க!" என்று அதட்டினான். சாரு, "நாங்க உமாராணியைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கோம்" என்றான். சேவகன், "அதெல்லாம் நீங்க பார்க்க முடியாது. போங்கோ!" என்றான். சாரு, தன் கையில் வைத்திருந்த காகிதத்தை நீட்டி, "தர்வான்! தர்வான்! இந்தக் காகிதத்தை மாத்திரம் நீ உமாராணியிடம் கொண்டு போய்க் கொடுத்துடு. அவங்க வரச் சொன்னா வர்றோம்; இல்லாட்டாப் போறோம்" என்றாள். தர்வான் அந்தக் காகிதத்தைக் கையில் வாங்கிக் கொண்டு, "நீங்க இப்போ போறயளா? இல்லையா? அப்புறம் நாயை அவிழ்த்து விட்டுடுவேன்; கடிச்சுடும்" என்றான். "காகிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்க மாட்டயோ? அப்படின்னா நான் அழுவேன்" என்றாள் சாரு. உடனே, அழத் தொடங்கிவிட்டாள். மற்றக் குழந்தைகளும் அவளுடைய கை ஜாடையைப் பார்த்துக் கொண்டு அழத் தொடங்கின. அப்போது, வீட்டுக்குள்ளே மாடியிலிருந்து, "தர்வான்! அங்கே என்ன கூச்சல்? இங்கே வா!" என்று உமாராணியின் குரல் கேட்டது. தர்வான் அவசரமாக மாடிப்படி மீது ஏறிச் சென்றான். அவன் மேல் மாடியிலிருந்த டிராயிங் ரூமுக்குள் போன போது, உமாராணி தன் கண்களில் ததும்பிக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். "என்னடா, அது?" என்று கேட்டாள். "ஒண்ணுமில்லைங்க, நாலைஞ்சு பெண் குழந்தைங்க வந்து எஜமானியைப் பார்க்கணுங்கறதுங்க" என்றான். "அது என்ன கையிலே காகிதம்?" தர்வானுக்கு அப்போதுதான் கையில் இருந்த காகிதம் ஞாபகம் வந்தது. அதை எஜமானியிடம் கொடுத்தான். காகிதத்தில், 'ஸ்ரீமதி சாருமதி தேவி' என்று எழுதியிருந்தது. ஆனால், அது குழந்தை எழுத்தில் எழுதியிருந்தபடியால் உமாராணிக்கு வேடிக்கையாக இருந்தது. முகமலர்ச்சியுடன், "ஸ்ரீமதி...சாருமதி...தேவி! இது யாரப்பா இது?" என்றாள். அப்போது, "நான் தான் சாருமதி!" என்று ஒரு குழந்தையின் குரல் கேட்டது. உமா வியப்புடன் தலை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையின் வாசற்படிக்கு அருகில் சாருவும் அவளுடைய தோழிகள் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். |