நாலாம் பாகம் : இளவேனில்

40. பசுவும் கன்றும்

     அட்வகேட் ஆபத்சகாயமய்யர் தமக்கு இந்த மாதிரி அதிர்ஷ்டம் வரப்போகிறதென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. உமாராணி இப்போது குடியிருந்த பங்களா ஆபத்சகாயமய்யருடைய கட்சிக்காரன் ஒருவனுக்குச் சொந்தமானது. அந்தப் பங்களாவுக்கு வாடகைப் பத்திரம் எழுதுவது சம்பந்தமாக, அவர் உமாராணியைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவருடைய நல்ல சுபாவத்தைக் கண்ட உமாராணி அவரையே தன்னுடைய மற்ற காரியங்களையும் கவனிப்பதற்கு வக்கீலாக அமர்த்திக் கொண்டாள். இதன் காரணமாக ஆபத்சகாயம் அடைந்த பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. 'உலகத்திலே பெண்ணாய்ப் பிறந்தால் உமாராணியைப் போல் பிறக்கவேண்டும்! வக்கீலாயிருந்தால் நம்மைப் போல் கொடுத்து வைத்தவனாயிருக்க வேண்டும் என்பது தற்சமயம் அவருடைய தீர்ந்த அபிப்பிராயமாயிருந்தது. அந்தச் சமயத்தில் அவருக்கு ஹைகோர்ட் ஜட்ஜு பதவி கிடைப்பதாயிருந்தால் கூடத் தயங்காமல் மறுத்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜு ஆகிவிட்டால், உமாராணிக்கு வக்கீலாயிருக்கும் பாக்கியத்தை இழந்து விட வேண்டுமல்லவா? இதைக் காட்டிலும் அது என்ன ஒசத்தி?

     அன்று காலை உமாராணி டெலிபோனில் கூப்பிட்டதன் மேல் ஆபத்சகாயமய்யர் அவளுடைய பங்களாவுக்கு வந்திருந்தார்.

     "ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று உமாராணி கேட்டாள்.

     "இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை; நானும் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்றார் வக்கீல்.

     "உங்க கிட்டச் சொல்லி ஒரு மாதம் போலிருக்கிறதே; இன்னுமா கண்டுபிடிக்க முடியலை?" என்றாள் உமா.

     ஆபத்சகாயமய்யர் புன்னகை புரிந்தார்.

     "என் மேலே தான் தப்பு என்று உங்கள் எண்ணம் போல் இருக்கு. சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயா என்கிறாப் போலே, சென்னைப் பட்டணத்திலே சம்பு சாஸ்திரி எங்கே இருக்கார் என்று கேட்டால் யாருக்குத் தெரிகிறது? ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை" என்றார்.

     இதைக் கேட்ட உமாராணி சற்று நேரம் மௌனமாயிருந்தாள். ஏதோ பழைய ஞாபகங்கள் அவள் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்ததாக முக பாவத்திலிருந்து தெரிந்தது.

     பிறகு, தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, "என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டாள்.

     "ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை என்றேன்."

     "ஓர் அடையாளங் கூடத்தான் சொல்லியிருக்கிறேனே? ஆறு ஏழு வயதிலே அவரோட ஒரு குழந்தையிருக்கும்னு சொல்லலையா?" என்றாள் உமா.

     அதற்கு வக்கீல், "இந்த அடையாளம் போதுமா அம்மா? முதலிலே சம்பு சாஸ்திரியைக் கண்டுபிடிச்சின்னா, அப்புறம் அவர்கிட்டக் குழந்தை இருக்கான்னு பார்க்கணும்? எனக்குத் தெரிந்த வரையிலே, இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணிப் பார்க்கலாம்" என்றார்.

     "வக்கீல் ஸார்! இந்த யோசனை எனக்குத் தெரியாதுன்னா நினைச்சுட்டேள்; பத்திரிகைகளிலே விளம்பரம் பண்ணக்கூடாது. பண்ணினால், யார் விளம்பரம் பண்ணினா, எதுக்காகப் பண்ணினா என்கிற கேள்வியெல்லாம் கிளம்பும். நான் யாரைத் தேடறேனோ, அவருக்கு நான் தேடுகிறேன் என்கிற விஷயம் தெரியக் கூடாது. அப்படித் தெரியாமல் அவரைக் கண்டு பிடிக்கிறதற்கு வழி என்ன என்று தான் பார்க்கவேணும். இந்தச் சென்னைப் பட்டணத்திலே அவர் இல்லாவிட்டால், வேறு எங்கே இருந்தாலும் கண்டு பிடித்தாக வேணும்" என்றாள் உமா.

     வக்கீல் ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்து இருந்துவிட்டு, "அம்மா! ஒரு விஷயம் சொல்ல உத்தரவு கொடுத்தால் சொல்கிறேன்" என்றார்.

     "பேஷாய்ச் சொல்லுங்கள்" என்றாள் உமா.

     "உங்கள் மனஸிலே ஏதோ துக்கம் இருக்கிறது. என்னத்தையோ நினைத்துக்கொண்டு அடிக்கடி வருத்தப்படுகிறீர்கள். அது என்ன என்கிறதை மனத்தைத் திறந்து என்னிடம் சொன்னால் என்னாலான ஒத்தாசை செய்யக் காத்திருக்கிறேன். என்னிடத்திலே நீங்கள் பூரணமாய் நம்பிக்கை வைக்கலாம். உங்களுக்கு ஏதாவது என்னால் உதவி செய்ய முடிந்தால், அதை என்னுடைய பாக்கியம் என்று நினைப்பேன்" என்றார்.

     அப்போது உமா, உருக்கத்தினால் கனிந்த குரலில், "வக்கீல் ஸார்! உங்களைப் பார்த்தவுடனேயே உங்களுடைய நல்ல குணம் எனக்குத் தெரிந்து போய்விட்டது. அதனால்தான் உங்களிடம் இந்த விஷயத்தையே பிரஸ்தாபித்தேன். எனக்கு உங்களிடம் பூரண நம்பிக்கை இருக்கிறது. ஆனால், எந்தெந்த விஷயத்தை எப்போது சொல்லவேணுமோ, அப்போது சொல்கிறேன். அதுவரையிலே நீங்கள் பொறுமையாயிருந்து, நான் சொல்கிறதை மட்டும் செய்கிறதற்கு முயற்சி செய்தால் போதும். இப்போதைக்குச் சம்பு சாஸ்திரிகளைக் கண்டு பிடிக்கப் பாருங்கள்" என்றாள்.

     "அப்படியே ஆகட்டும், அம்மா! கட்டாயம் என்னால் முடிந்தவரையிலே பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டு வக்கீல் ஆபத்சகாமய்யர் உமாராணியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றார்.

     அவருக்கு விடை கொடுப்பதற்கு எழுந்த உமா, அவர் போன பிறகு, அந்த விஸ்தாரமான, ஹாலின் ஜன்னல் ஒன்றுக்குச் சமீபமாகச் சென்று வெளியே பார்த்தாள், எங்கும் ஆனந்த மயமாக இருந்தது. பங்களாவைச் சுற்றியிருந்த தோட்டத்தில் விதவிதமான வர்ணப் பூஞ்செடிகள் இளந்தென்றல் காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. வண்டுகளும் தேனீக்களும் அந்தப் புஷ்பங்களின் மேல் 'ஙொய்' என்று மொய்த்து ரீங்காரம் செய்து கொண்டிருந்தன. ஒரு குயில் மாமரத்தில் எங்கேயோ மறைந்து கொண்டு 'கக்கூ' 'கக்கூ' என்று கத்திற்று. குருவிகள் 'ரிகிங்' 'ரிகிங்' என்று சுருதி கூட்டிக் கொண்டிருந்தன.

     உமாராணியின் பார்வை தற்செயலாகத் தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்ற பசுமாட்டின் மீது விழுந்தது. அந்தப் பசு அப்போது தன்னுடைய மடியில் ஊட்டிக் கொண்டிருந்த கன்றுக் குட்டியை நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. சாதாரணமாக, தோல் கன்றுக் குட்டியைக் காட்டிப் பால் கறக்கும் பாழும் சென்னைப் பட்டணத்தில் இம்மாதிரி கன்றுக் குட்டிக்குப் பசு ஊட்டும் காட்சியைப் பார்த்தால் யாருக்கும் சந்தோஷம் உண்டாகக் கூடுமல்லவா? ஆனால், எக் காரணத்தினாலோ, உமாராணிக்கு இந்தக் காட்சி துக்கத்தை அளித்தது போல் காணப்பட்டது. ஒரு நொடிப் போதில் அவள் கண்ணில் ஜலம் ததும்பி நின்றது. அவள் அங்கிருந்து திரும்பி வந்து, ஸோபாவில் தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டு தேம்பினாள்.

     இந்தச் சமயத்தில், அவளுடைய விம்மலின் எதிரொலியே போல் கீழேயிருந்து குழந்தைகளின் அழுகைக் குரல் கேட்கவே, உமா உடனே தன்னுடைய அழுகையை நிறுத்திச் சமாளித்துக் கொண்டு, தர்வானைக் கூப்பிட்டாள்.