உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
நாலாம் பாகம் : இளவேனில் 47. சங்கம் ஒலித்தது! அந்த வருஷத்தில் பாரத நாட்டில் ஒரு யுகப் புரட்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரம் வருஷங்களாக அறியாமையில் மூழ்கி, சோம்பலுக்கு ஆளாகி, வீரமிழந்து, அடிமைத்தனத்தில் ஆழ்ந்திருந்த பாரத மக்கள் விழித்தெழுந்து கொண்டிருந்தார்கள். காந்தி மகானுடைய அஹிம்சா மந்திரத்தின் சக்தியால் அவர்களை மூடியிருந்த மாயை ஒரு நொடியில் பளிச்சென்று விலகிப் போனது போல் இருந்தது. அவர்களைப் பீடித்திருந்த அடிமைத்தளைகள் படீர் படீர் என்று முறிந்து விழும் சப்தம் நாலு பக்கங்களிலும் எழுந்தது. "வீர சுதந்திரம் வேண்டி
நின்றார் - பின்னர்
என்னும் ஆவேசம் தேசமெங்கும் உண்டாயிற்று. நாட்டின் விடுதலைக்காக ஜனங்கள்
எந்த விதமான கஷ்டங்களையும் அநுபவிக்கவும், எவ்விதத் தியாகங்களையும் செய்யவும்
தயாரானார்கள். தேசப் பணியில் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்வதற்கும்
சித்தமானார்கள்.வேறொன்று கொள்வாரோ?" அன்னையின் கைவிலங்குகளைத் தகர்க்க முயன்றவர்கள் அதே சமயத்தில் தங்களைப் பிணைத்திருந்த தளைகளையும் அறுத்தெறிந்தார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற மடமை தகர்ந்தது. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள்" என்னும் உணர்ச்சி பரவிற்று. ஒரு தன்னந் தனி மனுஷர் தள்ளாத கிழவர் கையில் கோல் ஊன்றி - "சத்தியமே ஜயம்" என்று சொல்லிக் கொண்டு சுதந்திர யாத்திரை தொடங்கினார். அவரைப் பின்பற்றி அந்தப் புண்ணிய வருஷத்தில் பாரத மக்கள் ஆயிரம், பதினாயிரம் லட்சம் என்ற கணக்கில், "கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
என்று பாடிக்கொண்டு கிளம்பினார்கள்.சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" இத்தகைய சுதந்திர சங்கநாதத்தின் ஒலி சாவடிக் குப்பத்துக்கும் வந்து எட்டித்தான் இருந்தது. சம்பு சாஸ்திரிக்குச் சில காலமாக மனத்தில் அமைதி கிடையாது. 'தேசத்தில் இப்படிப்பட்ட மகத்தான இயக்கம் நடக்கின்றது. என்னவெல்லாமோ ஆச்சரியங்கள், கனவிலும் எதிர்பாராத அற்புதங்கள் நிகழ்கின்றன, - நாம் மட்டும் இந்தச் சாவடிக் குப்பத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோமே?' என்ற தாபம் அவர் மனத்தில் அடிக்கடி உண்டாகும். அப்போதெல்லாம், 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இந்த ஆசைகளெல்லாம் நமக்கு எதற்கு? எவ்வளவோ பெரிய மகான்கள், வீர புருஷர்களெல்லாம் சேர்ந்து செய்யும் காரியத்தில் நாம் ஈடுபட்டு என்ன செய்து விடப் போகிறோம்? நம்மால் என்ன முடியும்? ஏதோ இந்தச் சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு நம்மாலான ஊழியம் செய்து கொண்டிருந்தால், அதுவே பெரிய காரியம்' என்று எண்ணி மனஸை சமாதானப்படுத்திக் கொள்வார். இந்த மாதிரி சம்பு சாஸ்திரி நினைத்ததற்கு அவருடைய இருதய அந்தரங்கத்தில் குழந்தை சாருவினிடம் கொண்டிருந்த அளவிலாத அபிமானமும் ஒரு முக்கிய காரணமாகும். ஒவ்வொரு சமயம் அவர் இது விஷயமாகத் தம்மைத் தாமே நிந்தித்துக் கொள்வதுமுண்டு. 'என்ன? உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவா பார்க்கிறாய்? உன்னைவிடப் பலவீனர்கள் எத்தனையோ பேர் தேச சேவை செய்யவில்லையா? சிறைக்குப் போகவில்லையா? உயிரையும் கொடுக்கவில்லையா? உனக்கு மட்டும் என்ன வந்தது? இந்தக் குழந்தை மேலுள்ள பாசத்தினால் தானே நீ வெளியே கிளம்பாமல், தேசப் பணியில் ஈடுபடாமல் உட்கார்ந்திருக்கிறாய்?' என்று அவருடைய ஒரு மனஸு சொல்லும். உடனே இன்னொரு மனஸு, "ஆமாம்; அதனால் என்ன? இந்தக் குழந்தையைப் பராசக்தி என்னிடம் ஒப்புவித்தாள். அந்தப் பொறுப்பை நான் எப்படித் தட்டிக் கழிக்க முடியும்? 'ஸ்வதர்மந்தான் செய்வதற்குரியது; பரதர்மம் விநாசத்தை அளிக்கும்' என்று கீதாசாரியன் சொல்லியிருக்கவில்லையா?" என்று தேறுதல் கூறும். இந்த மாதிரி சாஸ்திரியின் உள்ளத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் சென்ற அத்தியாயங்களில் கூறிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆகவே சாருவை உமாராணி வளர்ப்பதாக ஏற்றுக் கொண்டது பராசக்தியின் விருப்பத்தினாலே என்று சாஸ்திரி தீர்மானித்தார். தம்மைத் தாய்நாட்டின் பணி செய்யும்படி அம்பிகை ஆக்ஞாபித்திருப்பதாகவும் அவர் நம்பினார். ஊர் ஊராகப் போய்த் தேச யாத்திரை செய்ய வேண்டுமென்பதாக அவர் மனத்தில் நெடுங்காலமாகக் குடி கொண்டிருந்த ஆசையும் இப்போது நிறைவேறக் கூடியதாயிற்று. எனவே, சாவடிக் குப்பத்திலிருந்து கிளம்புவதென்று சாஸ்திரி முடிவு செய்துகொண்டார். ஆனால், இதை நல்லானிடமும் மற்றவர்களிடமும் எப்படித் தெரிவிப்பது? தெரிவித்தால், அவர்கள் கட்டாயம் ஆட்சேபிப்பார்களே? இம்மாதிரி யோசித்துக் கொண்டு ஒருநாள் குடிசையின் திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது, குப்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் சிலர் அங்கே வந்தார்கள். சாஸ்திரியார் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர்கள் அவர் அருகில் வந்து நின்றார்கள். "என்ன காந்திமதி! எங்கே வந்தீங்க எல்லாரும்?" என்று சாஸ்திரி கேட்டார். "ஏன், சாமி! சாரு இனிமே இங்கே வரவே வராதுங்களா?" என்றாள் காந்திமதி. "சாரு இனிமே வரமாட்டாள், அம்மா! அவள் இப்போது பெரிய பணக்காரியாய்ப் போய்விட்டாள்" என்றார் சாஸ்திரி. உமாராணி அன்று, "என்னோடே இருக்கயா?" என்று கேட்டதும், சாரு அதற்குச் சம்மதித்துவிட்டது சாஸ்திரியின் மனத்தைப் புண்ணாக்கியிருந்தது. இந்த வருத்தத்தைத்தான் மேற்கண்ட வார்த்தைகளில் அவர் தெரிவித்தார். ஆனால், உடனே, 'சீ! குழந்தையைப் பற்றி என்ன சொல்கிறோம்? அவளுக்கு என்ன தெரியும்! பாவம்!' என்று எண்ணினார். அந்தப் பெண்களில் இன்னொருத்தி, "ஏங்க? சாரு இப்போ போயிருக்கிற இடத்திலே சோறே சாப்பிட மாட்டாங்களாம்; ரூபாயைச் சமைச்சுச் சாப்பிடுவாங்களாமே; அது நிஜங்களா?" என்று கேட்டாள். சாஸ்திரி, "அப்படி யார் சொன்னா, உனக்கு? ரூபாயைச் சாப்பிட முடியாது, அம்மா! எவ்வளவு பணக்காரனாயிருந்தாலும் முடியாது. உங்க பள்ளிக்கூடத்திலே, 'உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்' என்று பாட்டுக் கூடச் சொல்லிக் கொடுத்திருப்பாளே; இல்லையா?" என்றார். "அதுதானுங்க கேட்டேன், காளியம்மாதான் அப்படிச் சொன்னா; நான் இருக்காதுன்னேன்" என்றான். அப்போது காளியம்மா, "சாரு இல்லாமே எங்களுக்கெல்லாம் போதே போலிங்க. ரொம்பக் கஷ்டமாயிருக்குதுங்க" என்றாள். "எனக்குக்கூடக் கஷ்டமாய்த்தானம்மா இருக்கு. அதனாலேதான் நான் கூட இந்த ஊரை விட்டே போய் விடலாமென்று யோசிச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரி. இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு நல்லானும் இன்னும் நாலைந்து பேரும் கும்பலாகச் சாஸ்திரியிடம் வந்தார்கள். நல்லான் சிறிது ஆத்திரத்துடனே, "எஜமான் இது என்ன நாங்க கேள்விப்படறது? நீங்க குப்பத்தை விட்டுப் போகப் போறதாச் சொன்னீங்களாமே? பசங்கள் சொல்லிக்கிட்டிருக்குதே! அது நெசந்தானா?" என்று கேட்டான். "ஆமாம், நல்லான்! போகலாம்னுதான் உத்தேசம் பண்ணியிருக்கேன். நானே உங்கிட்ட சொல்லணும்னு இருந்தேன். அதுக்குள்ளே நீயே கேட்டுட்டே!" என்று சாஸ்திரி சாந்தமாக பதில் கூறினார். "அது ஏனுங்க அப்படி? எங்க மேலே ஏதாவது கோபங்களா, சாமி?" என்று நல்லான் இன்னும் ஆத்திரத்துடன் கேட்டான். "கோபமா? உங்க மேலே எனக்குக் கோபமா? உங்க மேலே நான் கோவிச்சுண்டேன்னா, எனக்கு விமோசனமே கிடையாது, அப்பா!" "பின்னே ஏன் போறேங்கறீங்க, சொல்லுங்க" என்றான் நல்லானின் மச்சான். "நிர்க்கதியாய், கையிலே ஒரு குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்த என்னை வைத்து ஆதரித்தீர்கள். நீங்கள் எனக்குச் செய்திருக்கிற ஒத்தாசைக்கு, தோலைச் செருப்பாத் தைத்துப் போடணும் என்பார்களே, அந்த மாதிரி செய்தால் கூட ஈடாகாது..." "சாமி! சாமி! அந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க" என்று நல்லான் காதைப் பொத்திக் கொண்டான். "நான் குப்பத்தை விட்டுப் போகிறேனென்கிறது வேறு காரியத்துக்காக" என்றார் சாஸ்திரி. "அது என்ன, அப்படிப்பட்ட காரியம்? அதையுந்தான் சொல்லுங்களேன்!" என்றான் நல்லானுடன் வந்தவர்களில் ஒருவன். "ஆகா சொல்கிறேன், இந்தத் தேசத்திலே இப்போது மகா ஆச்சரியமான காரியமெல்லாம் நடந்து வருகிறதே, உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ? பாரத தேசம் அடியோடு விழுந்துவிட்டது, இனிமேல் அதற்கு மோட்சமே கிடையாது என்று அநேகம் பேர் எண்ணியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தின்னு ஒரு பெரியவர் கிளம்பி மகா அற்புதங்களையெல்லாம் செய்து வருகிறார். அவரால் தேசமெல்லாம் ஒரு புதிய சக்தி - ஒரு புதிய ஆவேசம் - ஏற்பட்டிருக்கிறது. என்றும் நடக்காத காரிய மெல்லாம் நடந்து வருகிறது. ஆயிரக் கணக்கான ஜனங்கள் தங்கள் சொந்தக் காரியங்களையெல்லாம் விட்டுத் தேசத்துக்காக உழைத்து வருகிறார்கள். எத்தனையோ பேர் தங்கள் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில், இராமருடைய பாலத்துக்கு அணிற்பிள்ளை மணலை உதிர்த்தது போல, என்னாலான தேச சேவையை நானும் செய்ய உத்தேசித்திருக்கிறேன். பெரிய காரியம் ஒன்றும் என்னால் செய்ய முடியாது. ஆனால், ஊர் ஊராய்ப் பஜனை செய்து கொண்டு போவேன். கள்ளை ஒழியுங்கள், கதரை உடுத்துங்கள், சுத்தமாயிருங்கள், என் சாதி பெரிது உன் சாதி பெரிது என்றெல்லாம் சண்டை போடாதீர்கள் என்று போதிப்பேன். ஆனால், நான் எங்கே போனாலும் என்ன செய்தாலும் உங்களை மட்டும் மறக்க மாட்டேன், நல்லான்! நீங்கள் இந்தச் சாவடிக் குப்பத்தில் செய்திருப்பதை நான் போகுமிடங்களிலெல்லாம் உதாரணமாய் எடுத்துச் சொல்லப் போகிறேன்." சாஸ்திரியார் உருக்கத்துடன் செய்த இந்தப் பெரிய பிரசங்கத்தைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள் நல்லானும் அவனுடைய தோழர்களும். அது முடிந்ததும், நல்லான், "அதெல்லாம் சரிதானுங்க. ஆனால், இந்தக் குப்பத்தை விட்டுப் போற பேச்சை மட்டும் மறந்துடுங்க. இங்கேயே இருந்துகிட்டு என்னென்ன தேச சேவை செய்யணுமோ, செய்யுங்கள். நாங்களும் செய்யறோம்" என்றான். "இந்த வயசிலே நீங்களாவது, ஊர் ஊரா நடந்து போகவாவது, சாமி; அதெல்லாம் நடக்காத காரியங்க" என்றான் நல்லானின் மைத்துனன். "நீங்க போயிட்டா, எங்க பஜனையெல்லாம் என்னமாய்ப் போறதுங்க" என்று ஒருவன் கேட்டான். "அதெல்லாம் முடியாது, சாமி! உங்களை விடவே மாட்டோ ம். மீறிக் கிளம்பினால் குறுக்கே விழுந்து மறிப்போம்" என்றான் இன்னொருவன். "சத்தியாக்கிரஹம் பண்ணுவோம்" என்றான் நல்லான். சம்பு சாஸ்திரி புன்னகையுடன், "சத்தியாக்கிரஹம் என்பது ரொம்பவும் சக்தி வாய்ந்த ஆயுதம், அப்பா! அதை யார் வேணுமானாலும் எந்தக் காரியத்துக்கு வேண்டுமானாலும் உபயோகித்துவிட முடியாது. தவறுதலாக உபயோகித்தால் அது சத்தியாக்கிரஹம் அல்ல; துராக்கிரஹம்" என்றார். |