நாலாம் பாகம் : இளவேனில்

48. 'வஸந்த விஹாரம்'

     உமா தேவியின் இருதய அந்தரங்கத்தில் இத்தனை நாளும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அன்பின் வெள்ளம் இப்போது கரை புரண்டோ டத் தொடங்கியது. அந்தப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்ட சாரு திக்குமுக்காடிப் போனாள்.

     ஆறு வருஷமாகக் குழந்தையை கைவிட்டிருந்ததற்கெல்லாம் இப்போது உமா ஒரேயடியாக ஈடு செய்யலானாள். சாருவுக்கு விதவிதமான விலையுயர்ந்த உடைகளை வாங்கிக் குவித்தாள். பாதாதிகேசம் வரை நகைகளாக வைத்து இழைத்தாள். தினம் மூன்று தடவையாவது குழந்தைக்குப் புதுப் புது அலங்காரம் செய்தாலொழிய அவளுக்குத் திருப்தி உண்டாவதில்லை.

     முதல் தடவை இம்மாதிரி அலங்காரம் செய்து விட்டபோது, சாரு, "மாமி! மாமி! தத்ரூபமாய் டிராமாவிலே வேஷம் போட்டுண்டாப்பலேயே இருக்கே! இதற்கு என்ன வேஷம் என்று பேரு?" என்று கேட்டாள்.

     இப்படியெல்லாம் பளபளப்பாக அலங்கரித்துக் கொள்வது டிராமாவில்தான் என்பது குழந்தையின் எண்ணம். உமாவுக்கு இந்தக் கேள்வி ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அவள் புன்னகையுடன், "இது என்ன வேஷம்னா கேக்கறே? இதற்குச் சாவித்திரி பொண் வேஷம்னு பேரு" என்றாள். அப்போது சாரி, "சாவித்திரி பொண்ணா? சாவித்திரி சத்தியவான் கதை எனக்குத் தெரியும். ஆனால், சாவித்திரிக்கு ஒரு பொண்ணு இருந்ததா, என்ன?" என்று கேட்டாள். "ஆமாம், இருந்தது; அந்தக் கதையை உனக்கு இன்னொரு நாளைக்குச் சொல்கிறேன்" என்றாள் உமா.

     சாருவுக்கு அலங்காரம் செய்து பார்ப்பதுடன் உமா திருப்தியடைந்து மகிழ்ந்துவிடவில்லை. அவளுடைய படிப்பையும் கவனித்தாள். சென்னையில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கான்வெண்ட் ஸ்கூலுக்கு அவளை அனுப்பினாள். வீட்டில் அவளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வெள்ளைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.

     பங்களாவில் சாருவுக்கென்று ஒரு தனி அறை. குழந்தை உட்கார்ந்து படிக்கவும் புத்தகங்கள் வைத்துக் கொள்ளவும் மேஜை நாற்காலி பீரோக்கள் மட்டும் ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கப்பட்டன.

     சாருவுக்காக வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நூறு குழந்தைகள் விளையாடுவதற்குப் போதுமானவை. சென்னைக் கடைகளில் எத்தனை விதமான பொம்மைகள் உண்டோ , அவ்வளவும் வந்துவிட்டன. அந்தப் பொம்மைகளுக்கு உடைகள் தைப்பதற்கே ஒரு தையற்காரனுக்கு வேலை சரியாக இருந்தது.

     பொம்மைக் குதிரையில் ஏறிக் குழந்தை சந்தோஷமாக விளையாடுவதைப் பார்த்த உமாவுக்கு, நிஜக் குதிரையே வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றிற்று. அவ்வளவு தான். மறு நாளைக்கு மட்டக் குதிரை ஒன்று வந்துவிட்டது. பெயர் தான் மட்டக் குதிரையே தவிர, விலையில் மட்டமல்ல; 1200 ரூபாய்! சாரு அன்று முதல் குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.

     சாரு ஒவ்வொரு விதத்திலும் சாவடிக் குப்பத்தில் இருந்ததைவிடத் தன்னிடம் மேன்மை பெற வேண்டும் என்று உமா எண்ணினாள். பாக்கி எல்லாவற்றிலும் இந்த நோக்கம் நிறைவேறிற்று. ஆனால், குழந்தையின் நாட்டியத் திறமையைப் பற்றி என்ன? அதை முன்னைக் காட்டிலும் மேன்மை பெறச் செய்வதற்கு தன்னால் என்ன செய்ய முடியும்? - இந்த எண்ணம் உமாவுக்குச் சங்கடத்தை அளித்தது. சாவடிக் குப்பம் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த வாத்தியார் அம்மாள் மீது உமாவுக்குப் பொறாமை கூட உண்டாயிற்று. கடைசியாக அதற்கும் ஒரு யோசனை கண்டு பிடித்தாள். பரத நாட்டியமாவது, ராதாகிருஷ்ண நடனமாவது? அதெல்லாம் தோற்றுப் போகும்படியாகக் குழந்தைக்கு இங்கிலீஷ் டான்ஸ் சொல்லிக் கொடுக்கத் தீர்மானித்தாள் உமா.

     சாருவின் மனோநிலை எப்படியிருந்தது? உமாராணியின் பங்களாவில் அவள் தொடங்கிய புதிய வாழ்க்கை அவளுக்கு சந்தோஷமாயிருந்ததா? சாவடிக் குப்பத்தைக் காட்டிலும் 'வஸந்த விஹாரம்' அவளுக்கு அதிகம் பிடித்திருந்தா? வெளித் தோற்றத்தைப் பொறுத்த வரையில் அப்படித்தான் காணப்பட்டது. புதிய வீட்டில் அவள் கண்ட புதுமைகள் எல்லாம் குழந்தைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன.

     காலையில் எழுந்ததும், தான் படுத்திருந்த வெல்வெட் மெத்தையையும் தலையணைகளையும் சாரு கையினால் தடவித் தடவிப் பார்ப்பாள். பெரிய நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று, தான் செய்யும் சேஷ்டைகளைப் போலவே தன்னுடைய பிரதிபிம்பமும் செய்வதைக் கண்டு சிரிப்பாள். குளிக்கும் அறையில், 'ஷவர் பாத்'தைத் திறந்து விட்டு, அதிலிருந்து சலசலவென்று ஜலம் கொட்டுவதைப் பார்ப்பதில் அவளுக்கு அளவிலாத ஆனந்தம். எதிர்பாராதபோது தன் மேலேயே அப்படிப் பொழிய ஆரம்பித்துவிட்டால், விழுந்து விழுந்து சிரிப்பாள்.

     மேஜையின் மேல் சாப்பாடு கொண்டு வந்து வைப்பதும், ஸ்பூனினால் எடுத்துச் சாப்பிடுவதும் அவளுக்கு ரொம்ப வேடிக்கை. மோட்டார் சவாரி, குதிரை ஏற்றம் எல்லாம் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தன.

     முதலில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் குழந்தை அதிருப்தி தெரிவித்தாள். கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போய் வந்த அன்று, உமா, அவளை, "குழந்தை! புதுப் பள்ளிக்கூடம் எப்படியம்மா இருக்கு? உனக்குப் புடிச்சிருக்கா?" என்று கேட்டாள்.

     "புடிக்காமல் என்ன? புடிச்சுத்தான் இருக்கு, ஆனாக்கே..."

     "ஆனாக்கே, என்ன?"

     "எங்க பள்ளிக்கூடம் மாதிரி ஆகாது" என்றாள் சாரு.

     உமா சிரித்துக் கொண்டே, "இப்ப அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் போனால், கான்வெண்ட் ஸ்கூலும் சாவடிக் குப்பம் பள்ளிக்கூடம் மாதிரி பிடிச்சுப் போயிடும்" என்றாள்.

     மாமி பரிகாசம் பண்ணுகிறாள் என்பதைச் சாரு தெரிந்து கொண்டு, "நெஜமாகத்தான் சொல்றேன் மாமி! எங்க பள்ளிக்கூடம் ரொம்ப நல்ல பள்ளிக்கூடம்" என்றாள்.

     "உங்க பள்ளிக்கூடத்து ஹெட் மிஸ்ட்ரஸ் ரொம்ப பொல்லாதவள், உன்னைக் கூடப் பிரம்பாலே அடிச்சிருக்கான்னு சொன்னயே?" என்று உமா கேட்டாள்.

     "ஆனா, எங்க கிளாஸ் டீச்சர் ரொம்ப நல்லவராச்சே! அப்புறம், எங்க பள்ளிக்கூடத்துப் பசங்கள்ளாம் ரொம்ப நல்ல பசங்கள். தினம் நான் பள்ளிக்கூடத்துக்குப் போனதும் என்னைச் சுத்திண்டு, 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு!' 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு' அப்படின்னு நெச்சரிக்குங்க. மாமி! நாங்க போட்ட டிராமாவிலே ஒரு சின்னப் பையன் போலீஸ்காரன் வேஷம் போட்டுண்டு வந்தானே, அவனை உங்களுக்கு நினைவிருக்கோ? அவன் பேரு ரங்கன். என் மேலே அவனுக்கு ரொம்ப ஆசை!" என்று சாரு பேசிக் கொண்டே இருந்தாள்.

     உமா, "சாரு, இன்னும் கொஞ்ச நாளிலே கான்வெண்ட் ஸ்கூல் பசங்களும் அந்த மாதிரி உன்கிட்டப் பிரியமாய்ப் போயிடுவா" என்றாள்.

     உமா சொன்னது உண்மையாயிற்று. சில நாளைக்குள் சாருவுக்குக் கான்வெண்ட் ஸ்கூலும் பிடித்துப் போய்விட்டது. ஆகவே, வெளிப் பார்வைக்கு அவள் உற்சாகமாகத்தான் இருந்தாள். குறை எதுவும் இருந்ததாகவே தெரியவில்லை. ஆனால், உண்மையிலோ, சாருவின் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு பெரிய ஏக்கம் குடிகொண்டு தான் இருந்தது. அது தாத்தாவைப் பற்றிய ஏக்கந்தான். எதிர்பாராத சமயங்களில் திடீரென்று குழந்தையின் இந்த மனக்குறை வெளியாகும். எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருக்கும்போது, சம்பந்தமில்லாமல் அவள், "மாமி! தாத்தா ஏன் வரவேயில்லை?" என்று கேட்பாள்.

     "தாத்தாவா? அவர் ஏன் வரப் போறார், சாரு! யார் தலையிலே உன்னைக் கட்டலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தார் போல் இருக்கு. 'நான் வளர்க்கிறேன்' என்று சொன்னதும், எங்கிட்ட விட்டுட்டு அவர் பாட்டுக்குச் சௌக்கியமாயிருக்கார்" என்பாள் உமா.

     சாரு எப்போது தாத்தாவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உமா ஏதாவது காரமாகத்தான் பதில் சொல்வாள். "உன் தாத்தா உன்னை வந்து பார்க்கிறாதை நானா வேண்டாம்னு வழி மறிச்சிண்டிருக்கேன்? நீ இருக்கிற போதே தானே சொன்னேன், எப்ப வேணாலும் வந்து உங்கப் பேத்தியைப் பாத்துட்டுப் போங்கோன்னு? அவர் வராட்டா என்னை என்ன பண்ணச் சொல்றே?" என்பாள்.

     மற்ற எல்லா விஷயங்களிலும் எவ்வளவோ அன்பாகவும், இனிமையாகவும் பேசும் உமா, தாத்தாவைப் பற்றிப் பேச்சு வந்தால் மட்டும் எரிந்து விழுவது சாருவுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதன் காரணம் ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி நாலைந்து தடவை ஆனபிறகு, தாத்தாவைப் பற்றி மட்டும் மாமியிடம் பேசக்கூடாது என்று அவளுடைய மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டாள்.

     அந்தத் தாத்தா விஷயமாக உமாவின் மனம் எவ்வளவு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது என்பது குழந்தைக்கு என்ன தெரியும்? அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு பக்கம் பக்தியும், மற்றொரு பக்கம் ஆத்திரமும் அவளுக்குப் பொங்கிக் கொண்டிருந்தது என்பதைக் குழந்தை என்ன கண்டாள்?