-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்




நாலாம் பாகம் : இளவேனில்

53. 'அவள் என் மனைவி'

     வக்கீல் ஆபத்சகாயமய்யர் உமாராணியின் பங்களாவை அடைந்ததும், உமாராணி அவருக்கு விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்டாள். "உடனே போய்ப் போலீஸிலே எழுதி வைப்பதுதான் சரி" என்று ஆபத்சகாயமய்யர் சொன்னதும் இருவரும் போலீஸ் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குச் சென்றார்கள்.

     உமாராணியைப் பற்றித் தெரியாதவர்கள் சென்னையில் இல்லையாதலால், டிபுடி கமிஷ்னருக்கும் உமாராணியைத் தெரிந்திருந்தது. எனவே, அவர்களை அவர் மரியாதையுடன் வரவேற்று உட்காரவைத்து, அவர்கள் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார். வக்கீல் விவரங்களைச் சொன்னார். கடைசியாக, உமாராணி கமிஷ்னரைப் பார்த்து, "தாத்தாவும் பேத்தியுமாகத்தான் எங்கேயோ போயிருக்கிறார்கள். எப்படியாவது அவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அதற்காக என்ன செலவானாலும் நான் ஒத்துக் கொள்கிறேன். இந்த ஒத்தாசை எனக்காகச் செய்யவேணும்" என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு டிபுடி கமிஷ்னர், "உங்களுக்கு ஒத்தாசை செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம், அம்மா! ஆனால் இந்த விஷயத்திலே எனக்கு ஒன்றும் அதிகாரமில்லையேயென்றுதான் பார்க்கிறேன். நீங்கள் சொல்கிற சம்பு சாஸ்திரி குற்றம் ஒன்றும் செய்து விடவில்லை. அவர் வளர்த்த குழந்தையைத் தான் அவர் அழைச்சிண்டு போயிருக்கிறார். நகை, கிகை ஒன்று கூட எடுத்துக் கொண்டு போகவில்லை. அப்படியிருக்கிறபோது 'அரெஸ்ட்' பண்ணியோ வேறு விதத்திலோ அவர்களைக் கொண்டு வருவதற்குச் சட்டம் இடங்கொடுக்காதே!" என்றார்.

     "அரெஸ்ட்" என்று சொன்னதும் உமாவுக்குப் பகீர் என்றது.

     "நீங்கள் அப்படியெல்லாம் அரெஸ்ட் கிரஸ்ட் ஒன்றும் பண்ண வேண்டாம். அந்தக் குழந்தை சௌக்கியமாயிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சால் போதும். அவா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ! அதற்குமேலே அவாளை அழைச்சுண்டு வர்றதற்கு நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்றாள்.

     டிபுடி கமிஷ்னர், "ஆகட்டும், அம்மா! நீங்க மட்டும் 'பார்மல் பெடிஷன்' ஒன்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போங்கோ" என்றார்.

     உமா, வக்கீலை விண்ணப்பம் எழுதும்படி கேட்டுக் கொண்டாள். வக்கீல் விண்ணப்பம் எழுத ஆரம்பித்ததும், டிபுடி கமிஷ்னர், "இந்தக் காலத்திலேயே நல்லது ஆகிறதில்லை, பாருங்கள். ஏதோ ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கப் போக, இந்த மாதிரி தொல்லை நேர்ந்தது" என்றார். அதற்கு உமா பதில் சொல்வதற்குள் டெலிபோனில் மணி அடித்தது.

     டிபுடி கமிஷ்னர் டெலிபோனில் பின் வருமாறு பேசினார்: "ஹலோ - எஸ்! - பாங்கி போர்ஜரி கேஸா? - கல்கத்தாக்காரனா? - ஐஸீ! - சென்ட்ரல் ஸ்டேஷன்லேயா 'அரெஸ்ட்' ஆச்சு? - பேரென்ன? ஸ்ரீ...? ஓஹோ! - ஸ்ரீதரன்..."

     இதுவரையில் மேற்படி பேச்சை அசட்டையாக கவனித்துக் கொண்டிருந்த உமாராணி, "ஸ்ரீதரன்!" என்று அழுத்தந்திருத்தமாய் டிபுடி கமிஷ்னர் சொன்னதும், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

     டிபுடி கமிஷ்னர், மேஜை மீதிருந்த நோட் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டு, மறுபடியும் டெலிபோனில், "ஆல் ரைட்! - இங்கே அனுப்பு - ரிமாண்டுக்கு ஆர்டர் பண்றேன்!-" என்று சொல்லிவிட்டு, டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்தார். வக்கீலைப் பார்த்து, "பெடிஷன் எழுதியாச்சா?" என்று கேட்டார்.

     உமாவின் உள்ளமோ அளவிலாத குழப்பத்தை அடைந்திருந்தது. அவளால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை. 'ஸ்ரீதரன்...பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்...' - இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தன. இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவள் மனத்தில் தெளிவாகத் தோன்றியது. தான் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடவேண்டும். அவரை இங்கே கொண்டு வரப் போகிறார்கள்! அப்போது தான் இங்கே இருக்கக்கூடாது! - இப்படி அவள் மனம் பரபரப்பு அடைந்திருக்கையில், வக்கீல் ஆபத்சகாயமய்யர் தாம் எழுதிய விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தார். கையெழுத்துப் போடப் போகையில் உமாவின் கை நடுங்கிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு கையெழுத்துப் போட்டாள். அதை டிபுடி கமிஷ்னரிடம் கொடுக்கக்கூட அவளுக்குத் துணிவு இல்லை. அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு எழுந்திருந்தாள்.

     டிபுடி கமிஷ்னர், "நீங்க போயிட்டு வாருங்கோ அம்மா! ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே தெரிவிக்கிறேன்" என்றார்.

     உமா நடுங்கிய குரலில் அவருக்கு வந்தனம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

     டிபுடி கமிஷ்னர் ஆபீஸ் அந்தக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்தது. உமா மாடிப் படியில் இறங்க ஆரம்பித்தபோது, கீழே ஒரு மனிதனைப் போலீஸ்காரர்கள் சூழ்ந்து அழைத்து வருவதைப் பார்த்தாள். அவனுடைய கையில் விலங்கு போட்டிருந்தது. முதலில் உமாவின் பார்வை அந்த விலங்கின் மேல் தான் விழுந்தது. பிறகு அளவிலாத மன வேதனையுடன் அந்த மனுஷனுடைய முகத்தைப் பார்த்தாள். ஆமாம்! அவர் தான். தன்னைத் தொட்டுத் தாலி கட்டிய கணவன் தான்! உமா, ஸ்ரீதரனுடைய முகத்தைப் பார்த்த அதே நேரத்தில் ஸ்ரீதரனும் உமாவின் முகத்தைப் பார்த்தான். உடனே, தலையைக் குனிந்து கொண்டான். ஒரு பெண் பிள்ளையின் முன்னால், அதுவும் இவ்வளவு நாகரிகமான ஸ்திரீயின் முன்னால், கையில் விலங்குடன் காணப்பட நேர்ந்ததைக் குறித்து ஏற்பட்ட வெட்கந்தான் அவனை அப்படித் தலை குனியச் செய்தது. குனிந்த தலை நிமிராமல் மாடிப் படிகளில் அவன் ஏறினான். அந்த ஸ்திரீ தனக்கு வெகு சமீபமாக வந்து தன்னைத் தாண்டிப் போனபோது கூட அவளை அவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை. ஆனால், மேல்படிக்கு ஏறினதும் மறுபடியும் அவளைப் பார்க்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிற்று. திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில், கீழே தரையை அடைந்துவிட்ட உமாராணியும் மேல் நோக்கி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை பளிச்சென்று மின்னலைப்போல் அவனுடைய உள்ளத்தில் பாய்ந்தது. அதனால் அவனுடைய மனத்தை மூடியிருந்த இருள் சட்டென்று விலகியது போல் இருந்தது.

     'இது யார்? இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?-ஆஹா, அப்படியும் இருக்க முடியுமோ?'

     இதற்குள், பின்னே வந்த போலீஸ்காரர்கள், "போ அப்பா, போ!" என்று சொல்லி அவனைப் பிடித்துத் தள்ளினார்கள். உமாராணியும் மறைந்தாள்.

     அடுத்த நிமிஷம் டிபுடி கமிஷ்னரின் முன்னிலையில் பின்வரும் சின்ன நாடகம் நடைபெற்றது.

     கையில் விலங்குடன் வந்த கைதி அவருடைய மேஜைக்கு வெகு சமீபமாக வந்து, மிகவும் நயமான குரலில், "ஸார்! கீழே இறங்கிப் போகிறாளே, அந்த லேடி யார்?" என்று கேட்டான்.

     "ஷட் அப்! உனக்கு என்ன அதைப் பற்றிக் கவலை?" என்றார் டிபுடி கமிஷ்னர்.

     உமாராணியிடம் எவ்வளவோ இனிமையாகவும் மரியாதையாகவும் பேசிய டிபுடி கமிஷ்னர் இப்போது நெருப்பாக இருந்தார்.

     அவருடைய அதட்டலில் மிரண்டு போன கைதி தலையைக் குனிந்து கொண்டான். குனிந்தவனுடைய பார்வை தற்செயலாக மேஜையின் மீது வைத்திருந்த காகிதத்தின் மேல் விழுந்தது. அது சற்று முன், வக்கீல் ஆபத்சகாயமய்யர் எழுதிய விண்ணப்பக் காகிதம். அதில் முதல் வரியில், சம்புசாஸ்திரி என்ற பெயரைக் கண்டதும் ஸ்ரீதரன் திடுக்கிட்டான். உடனே, கடைசியில் பார்த்தான். கீழே, "உமாராணி (அலயஸ்) சாவித்திரி" என்று எழுதியிருந்தது.

     இதைப் பார்த்தானோ இல்லையோ, ஸ்ரீதரன் திடீரென்று திரும்பி ஓட யத்தனித்தான். ஜவான்கள் அவனைப் பிடித்து நிறுத்தினார்கள்.

     டிபுடி கமிஷ்னர், மேஜையில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி, "இது என்ன கலாட்டா?" என்று கர்ஜித்தார்.

     அப்போது ஸ்ரீதரனும், குரலை உயர்த்தி, "She is my wife, Sir! She is my wife! (அவள் என் மனைவி! அவள் என் மனைவி)" என்று கத்தினான்.

     "நான்ஸென்ஸ்! அடுத்தாப்பலே, என்னை உன் பேரன் என்று சொல்வே போலிருக்கே!" என்றார் டிபுடி கமிஷ்னர்.

     ஸ்ரீதரன் மறுபடியும் ஏதோ பேச ஆரம்பித்தான். அப்போது பக்கத்திலிருந்த போலீஸ்காரன், "உம்" என்று அதட்டி, இடுப்பில் ஒரு குத்துக் குத்தவே, ஸ்ரீதரனுக்குத் தன்னுடைய நிலைமை நன்கு ஞாபகம் வந்தது. தலையைக் குனிந்து கொண்டு மௌனமாய் நின்றான்.