நாலாம் பாகம் : இளவேனில்

60. 'மாட்டேன்! மாட்டேன்!'

     சாரு, மங்களத்துக்கு முன்னால் சாவித்திரியின் ரூபமாகத் தோன்றி, "எனக்கு உன் பேரில் கோபமில்லை" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயத்தில், உண்மையான சாவித்திரி சென்னை ஐகோர்ட்டில் சாட்சிக் கூண்டில் கோபமே உருவெடுத்தவள் போல் நின்றாள்.

     ஸ்ரீதரன் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டான். உமாராணியின் மேல் நிஜமாகவே தாம்பத்திய உரிமைக்கு வழக்குத் தொடுத்து அவளைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

     கோர்ட்டில் அப்போது உமாராணியின் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல் மிஸ்டர் நாராயணன், பி.ஏ., பி.எல்., குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். இந்த நாராயணன் தான் ஸ்ரீதரனுடைய பழைய சிநேகிதனாகிய நாணா என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. நாணாவின் மாமனார் காலஞ்சென்ற பிறகு அவன் பாடு ரொம்பவும் கஷ்டமாய்ப் போயிருந்தது. பெரிய பெரிய வக்கீல்கள் எல்லாம், "காலங்கெட்டுப் போச்சு; கேஸுகள் குறைஞ்சு போச்சு!" என்று சொல்லிக் கொண்டிருக்கையில், கத்துக்குட்டி நாணாவை யார் கவனிக்கிறார்கள்? "எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்" என்ற தோரணையில்தான் அவன் கோர்ட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தது.

     இப்படிப்பட்ட நிலைமையில், ஸ்ரீதரனுடைய கேஸ் அவனுக்குப் பெரியதொரு வரப் பிரசாதமாக வந்து சேர்ந்தது. இதன் மூலம் தான் பெயரும் பிரஸித்தியும் அடையலாம் என்றெண்ணினான். "ஸ்ரீதரா! இப்போதைக்கு, பீஸ், கீஸ் ஒன்றும் நான் கேட்கவில்லை. கேஸ் ஜயிச்சுதோ, அப்புறம் என்னைக் கவனிச்சுக்கோ, போரும்-ஓ! இந்தக் கேஸ் மட்டும் ஜயிச்சுதுன்னா அப்புறம் உனக்கு என்ன குறைச்சல், எனக்குத்தான் என்னடா குறைச்சல்?" என்று ஸ்ரீதரனை உற்சாகப்படுத்தினான்.

     இப்படியாக, இந்தத் தாம்பத்திய உரிமை வழக்கு ஜயமடைய வேண்டுமென்பதில் ஸ்ரீதரனுக்கு இருந்த கவலையைக் காட்டிலும் நாராயணன், பி.ஏ.,பி.எல்., அவர்களுக்குக் கவலை அதிகமாயிருந்தது. ஆகவே, மிகவும் சிரத்தையுடன் கேஸை நடத்தினார். அந்தச் சிரத்தையை இப்போது, உமாராணியைத் தாறுமாறாகக் கேள்வி கேட்டு, அவளுடைய மனம் கலங்கும்படி அடிப்பதில் காட்டினார்.

     "புருஷன் வீட்டிலே நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதாகச் சொல்கிறீர்களல்லவா? அந்தக் கஷ்டங்களை அந்தக் காலத்திலேயே யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா? உதாரணமாக, உங்கள் தகப்பனார் சம்பு சாஸ்திரியிடமாவது சொல்லியதுண்டா?" என்று கேட்டார்.

     உமா சற்று யோசித்துவிட்டு, "இல்லை" என்று பதில் சொன்னாள்.

     "அவ்வளவு கஷ்டம் நீங்கள் பட்டிருந்தால் ஏன் ஒருவரிடமும் அப்போது சொல்லவில்லை?"

     "இஷ்டமில்லை; அதனால் சொல்லவில்லை."

     "நீங்கள் கஷ்டப்பட்டதாகச் சொல்வதெல்லாம் பொய்; அதனால் தான் சொல்லவில்லையென்று நான் ஊகிக்கிறேன்."

     "எனக்குப் பொய் சொல்ற வழக்கம் கிடையாது; உங்களுக்குத்தான் அதுவே தொழில்" என்று உமாராணி பளீரென்று பதில் கூறினாள். இதைக் கேட்டு, கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் சிலர் சிரித்தார்கள்.

     நீதிபதி கோபமாக மேஜையைத் தட்டினார்.

     ஆனால், அட்வகேட் நாராயணன் ஒரு ஸ்திரீக்குச் சளைத்து விடுவாரா? அவர் ஒரு கோணல் புன்னகை புரிந்து, "ஆனால், உங்கள் பெயரே ஒரு பொய்யாச்சே?" என்றார். அப்போது, வக்கீல்களிடையே சிரிப்பு உண்டாயிற்று.

     "அநாவசியமான விவாதம் வேண்டாம்; குறுக்கு விசாரணையை நடத்தும்!" என்று வாதி வக்கீலைப் பார்த்து நீதிபதி சொன்னார்.

     மிஸ்டர் நாராயணன் மறுபடி கேட்டார்: "சரி, நீங்க சொன்னதெல்லாம் நிஜமென்றே நினைச்சுக்குவோம். புருஷன் வீட்டிலே நீங்க ரொம்ப ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டதாகவே வச்சுக்குவோம். ஆனா, நீங்கதான் அவரை அவ்வளவு தூரம் தெய்வமாகப் பாவிச்சுண்டிருந்தேன்னு சொன்னேளே? இப்போ, அவர், 'போனதையெல்லாம் மறந்துடலாம்; புருஷன் மனைவியாகத் தாம்பத்தியம் நடத்தலாம்' என்று சொல்கிறபோது, ஏன் அதை மறுக்கிறீர்கள்?"

     உமா அப்போது ஆவேசத்தோடு பதில் சொன்னாள்: "ஆமாம்; ஒரு காலத்தில் இவரைத் தெய்வமாக நினைத்தேன்; வாஸ்தவந்தான். அப்போது என்னை இவருக்குப் பிடிக்கவில்லை, என்னைப் பார்ப்பதற்கும் கசப்பாயிருந்தது. நான் இருக்கிறேனா, செத்தேனா என்று கூடக் கவனிக்கவில்லை. இப்போது வந்து கூடி வாழலாமென்று சொல்கிறார். எதற்காக? என்பேரில் இவருக்குத் திடீரென்று பிரியம் வந்துவிட்டதா? இல்லை! என்னிடம் இருக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு சொல்கிறார்..."

     இதுவரையில் உமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டும் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுமிருந்த ஸ்ரீதரன் இப்போது ஆத்திரத்துடன், "பொய்! பொய்!" என்றான். அவன் மெதுவாகத்தான் சொன்னானென்றாலும், நீதிபதி உள்படக் கோர்ட்டிலிருந்த பெரும்பாலோருக்கு அது கேட்டது.

     உமா, ஸ்ரீதரன் பக்கம் திரும்பி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் தீக்ஷணியத்தைச் சகிக்க முடியாமல் ஸ்ரீதரன் தலை குனிந்து கொண்டான்.

     "ஆமாம்; மறுபடியும் சொல்கிறேன். என்னிடமுள்ள பணத்துக்கு ஆசைப்பட்டுக்கொண்டு தான் இப்போது கிருகஸ்தாசிரமம் நடந்த வந்திருக்கிறார்" என்றாள் உமா.

     உடனே, நீதிபதியின் பக்கமாகத் திரும்பிப் பார்த்துச் சொன்னாள்: "இது நியாயமா? இது தர்மமா? நீங்களே சொல்லுங்கள். ஒரு பெண்ணை அவள் பேரில் இஷ்டமில்லாத புருஷனுடன் வாழும்படி நிர்பந்தப்படுத்துவது நீதியா? தெய்வத்துக்குத்தான் அடுக்குமா? உலகமெல்லாம் 'சுதந்திரம், சுதந்திரம்' என்று முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாளில் ஒரு பெண் பேதையைச் சட்டத்தின் பேரால் இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கலாமா? மனைவியைப் புருஷன் தள்ளி வைத்தால், மனைவி கோரக்கூடிய பாத்தியதை என்ன? ஜீவனாம்சந்தானே? அந்த மாதிரி நானும் இவருக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். ஆனால் இவருடன் சேர்ந்து வாழ்வதற்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன்! ஒரு நாளும் மாட்டேன்!"

     இந்த மாதிரி உமாராணி உரத்த குரலில் ஆவேசம் வந்தவள் போல் கூறியபோது, கோர்ட்டில் வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் திடுதிடுவென்று பெஞ்சிகளைத் தட்டியும் கைகொட்டியும் ஆர்ப்பரித்தார்கள்.

     நீதிபதி மிகவும் கோபமாக நிமிர்ந்து உட்கார்ந்தார். கோர்ட் ஸார்ஜெண்ட் "ஸயலென்ஸ்!" என்று கத்தினான்.

     மிஸ்டர் நாராயணன் மறுபடியும் உமாவைப் பார்த்து, "ரொம்பப் பதட்டப் படாமல் பதில் சொல்லுங்கள்; உங்களைக் கல்கத்தாவிலிருந்து வழி போக்கர்களுடன் கூட்டி அனுப்பியபோது எட்டு மாதம் கர்ப்பம் என்று சொன்னீர்களல்லவா? அது நிஜந்தானே?" என்று கேட்டார்.

     "ஆமாம்; நிஜந்தான்!" என்றாள் உமா. அவளுக்குப் பழைய ஞாபகங்கள் குமுறிக்கொண்டு வந்தன. உடம்பில் படபடப்பு அதிகமாயிற்று. காலும் கையும் நடுங்கத் தொடங்கின. முன்னொரு தடவை, இதே சென்னை நகரில் போலீஸ் ஸ்டேஷனில் தனக்கு இம்மாதிரி படபடப்பு வந்ததும், தான் மூர்ச்சித்துக் கீழே விழுந்ததும் அவளுடைய நினைவில் வந்தன.

     "சரி; அப்படின்னா, அந்தக் குழந்தை என்ன ஆச்சு?" என்று வாதி வக்கீல் கேட்டார்.

     உமா திகைத்து நின்றாள். பிரதிவாதி வக்கீல் ஆபத்சகாயமய்யர் பளிச்சென்று எழுந்திருந்து, "நான் ஆட்சேபிக்கிறேன். இந்தக் கேள்வி கேஸுக்கு சம்பந்தமில்லை, யுவர் லார்ட்ஷிப்" என்றார்.

     "ரொம்ப அவசியமான கேள்வி, யுவர் லார்ட்ஷிப்! பிரதிவாதி சொல்றது அவ்வளவும் கற்பனைக் கதை என்று நான் ருசுப் பண்றேன்" என்றார் நாராயணன் பி.ஏ., பி.எல்.

     நீதிபதி, "ஆல் ரைட்!" என்று சொல்லி, உமாவைப் பார்த்து, "கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார்.

     அப்போது உமாவுக்கு நிஜமாகவே வெறி வந்துவிட்டது. உரத்த குரலில், "மாட்டேன்! மாட்டேன்! இதுவும் ஒரு சூழ்ச்சியா? பெண்டாட்டி பேரில் இருக்கும் ஆத்திரத்தை குழந்தை பேரில் காட்டலாம் என்ற உத்தேசமா? முடியாது; முடியாது!" என்று கத்தினாள். அப்படியே நின்ற இடத்தில் திடீரென்று மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்தாள்.

     உடனே, கோர்ட்டில் பெரிய குழப்பம் உண்டாயிற்று எல்லாரும் எழுந்திருந்து தலைக்கு ஒரு பக்கமாக ஓடினார்கள். "தண்ணி தண்ணி!" என்று சிலரும், "டாக்டர்! டாக்டர்!" என்று வேறு சிலரும் கத்தினார்கள். வக்கீல் ஆபத்சகாயமய்யர் தான் கொஞ்சம் புத்தியுடன் காரியம் செய்தார். ஓடிப் போய் உமாராணியைப் பிடித்துக் கொண்டு கீழே உட்கார வைத்தார். இன்னொரு வக்கீல் கொண்டு வந்த ஜலத்தை முகத்தில் தெளித்தார்.

     நீதிபதி, "அந்த அம்மாளை அப்புறப்படுத்தி வீட்டுக்குக் கொண்டு போங்கள்; கேஸைத் தள்ளிப் போடலாம்" என்றார்.

     இதற்குள், உமாவும் கொஞ்சம் தெளிவடைந்து எழுந்திருக்கவே, அவளை அழைத்துக்கொண்டு போய் வெளியில் உள்ள மோட்டாரில் ஏற்றினார்கள்.

     ஸ்ரீதரன், பாவம், இதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றான். உமாவினுடைய நிலைமை அவனுக்கு ஒரு பக்கம் பரிதாபத்தை உண்டாக்கிற்று. மற்றொரு பக்கத்தில், தனக்கு ஜீவனாம்சம் கொடுப்பதாக அவள் சொன்னதை எண்ணி எண்ணி ஆத்திரப்பட்டான்.

     உமாராணி வெளியே சென்றதும், வாதி வக்கீல் நாராயண அய்யர், நீதிபதியைப் பார்த்து, "யுவர் லார்ட்ஷிப்! இந்தக் குழந்தை விஷயம் கேஸின் போக்கையே மாற்றக் கூடியதாயிருக்கிறது. பிரதிவாதியின் தகப்பனார் சம்பு சாஸ்திரிக்குக் கோர்ட் சாட்சியாக ஆஜராகும்படி அர்ஜெண்ட் ஸம்மன்ஸ் அனுப்பவேண்டும். அவர் மூலமாக இந்தக் கேஸில் ரொம்ப உண்மை வெளியாகக் கூடும்" என்றார்.

     "ஆல் ரைட்!" என்றார் நீதிபதி.