நாலாம் பாகம் : இளவேனில்

62. சந்திப்பு

     சம்பு சாஸ்திரி முன் தடவை நெடுங்கரையிலிருந்து கிளம்பிச் சென்றதற்கும், இப்போது கிளம்பியதற்கும் ரொம்பவும் வித்தியாசம் இருந்தது. முன்னே அவர் தன்னந்தனியாகக் கிளம்பிச் சென்றார். ஊரிலுள்ளவர்கள் யாரும் ஏனென்று கேட்கவில்லை. ஆனால் இம்முறை அவர் சாருவுடன் கிளம்பியபோது, கிராம ஜனங்கள் பாதிப்பேர் அவர் பின்னோடு வெகு தூரம் வந்து வழி அனுப்பினார்கள். சாஸ்திரிகள், "நில்லுங்கள், நில்லுங்கள்" என்று பல தடவை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

     "இனிமேல் நீங்கள் குழந்தையோடே இங்கேயே இருப்பயள், முன்மாதிரி பஜனையெல்லாம் நடத்தலாம்னு இருந்தோம்; அதுக்கு நாங்கள் கொடுத்து வைக்கலை" என்று முத்துசாமி ஐயர் சொன்னார்.

     "அதுக்கென்னடா செய்யறது? நாம் செய்த பாக்கியம் அவ்வளவுதான்" என்றார் சாமாவய்யர்.

     முத்துசாமி அய்யரும் சாமாவய்யரும் இவ்வளவு அன்பு காட்டினார்களென்றால், மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அதிலும், குடியானவர்களுக்குத்தான் சாஸ்திரி ஐயா போவது ரொம்பவும் மன வருத்தத்தை அளித்தது.

     "சாமி, எங்களை மறந்துடாதீங்க!"

     "திரும்பிக் கட்டாயம் வந்துடணும்!"

     "பட்டிக்காரர் கிட்டே, நாங்க ரொம்ப அவரை விசாரிச்சோம் என்று சொல்லுங்க, சாமி!" என்று இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு குடியானவர்கள் வண்டியைத் தொடர்ந்து வந்தார்கள்.

     கடைசியாக, ஊரின் எல்லையைத் தாண்டும் சமயத்தில், சாஸ்திரியார் அவர்களைப் படிவாதமாக நிற்கச் சொன்னார். பிற்பாடு, வண்டி துரிதமாகச் சென்றது.

     வண்டி போய்க்கொண்டிருக்கையில், சாரு, "நான் போன ஜன்மத்திலே ரொம்பப் பாவம் பண்ணியிருப்பேன் போலிருக்கு, தாத்தா! இத்தனை நாளைக்கப்புறம், என்னை இடுப்பிலே எடுத்துக்கறதற்கு ஒரு பாட்டி கிடைச்சான்னு நினைச்சுண்டிருந்தேன். அவளையும் ஸ்வாமி அழைச்சுண்டுட்டாரே!" என்றாள்.

     "உன் வாக்குப் பலிக்கட்டும், சாரு! ஸ்வாமி மங்களத்தினுடைய பாவத்தையெல்லாம் மன்னித்துத் தன்கிட்ட அழைச்சுக்கட்டும்" என்றார் சாஸ்திரி.

     "என்ன தாத்தா, பாட்டியும் அப்படியே சொன்னா; நீங்களும் அப்படியே சொல்றேள்? பாட்டி என்ன பாவம் பண்ணினா?" என்று சாரு கேட்டாள்.

     இதையெல்லாம் எப்படிக் குழந்தையிடம் சொல்வது என்று சாஸ்திரி தவித்தார். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு சொன்னார்: "ரொம்ப நாளைக்கு முன்னாலே உன்னைப்போல் ஒரு குழந்தை எனக்கு இருந்தா, அவ பேர் சாவித்திரின்னு சொன்னேனோ, இல்லையோ, அந்தக் குழந்தையைப் பாட்டி ரொம்பக் கஷ்டப்படுத்திண்டிருந்தா. அது அவள் மனத்திலே உறுத்திண்டே இருந்திருக்கு. அதனாலே தான் ஸ்வாமி என்னை மன்னிப்பாரான்னு கேட்டுண்டே இருந்தா. சாகிற சமயத்திலே உன்னைப் பார்த்ததும், சாவித்திரி குழந்தையாயிருந்தது மாதிரி அவளுக்குத் தோணித்துப் போலிருக்கு. அதனாலேதான், தன் மேலே கோபமில்லைன்னு உன்னைச் சொல்லச் சொன்னாள்..."

     இப்படிச் சிரமத்துடன் கூறிவந்த சாஸ்திரி சட்டென்று நிறுத்தினார். அவர் மனத்தில் பளீரென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. சாருவை உற்றுப் பார்த்தார். அப்படியும் இருக்குமோ? அப்பேர்ப்பட்ட அதிசயம் நடக்கக் கூடியதா?...

     "தாத்தா! என்ன யோசிக்கிறேள்?" என்று சாரு கேட்டாள்.

     "ஒன்றுமில்லை, அம்மா! கெட்டுப் போன பெண் எனக்குக் கிடைத்தாள். உனக்கும் அம்மா கிடைக்கக் கூடாதா என்று யோசிக்கிறேன்" என்றார்.

     "எனக்கு அம்மாதான் பராசக்தின்னு நீ சொல்லியிருக்கயே?" என்றாள் சார்.

     "பராசக்தி நம் எல்லோருக்கும் அம்மா, குழந்தை! ஆனால் பூலோகத்து அம்மா வேணும்னு நீ ஒரு நாளைக்கு அம்பாளை வேண்டிண்டயே? அந்தப்படி பூலோகத்து அம்மாவே உனக்குக் கிடைச்சா நல்லதுதானே?"

     "என்னமோ, நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலை தாத்தா!" என்றாள் குழந்தை.

     மறுநாள் சென்னை 'வஸந்த விஹார'த்தில் சம்பு சாஸ்திரியும் உமாராணியும் சந்தித்தபோது நடந்த சம்பாஷணையும் குழந்தைக்கு நன்றாய்ப் புரியவில்லை.

     முன்னெல்லாம், "சாஸ்திரிகளே! வாருங்கோ!" என்று சொல்லி அவரை வரவேற்ற உமாராணி, இன்று அவரைக் கண்டதும் ஓடிவந்து அவர் காலில் விழுந்தாள்.

     அவளைத் தூக்கி எடுத்தபடி சாஸ்திரி, "இப்படி என்னை ஏமாற்றினயே? நியாயமா, சாவித்திரி?" என்று கேட்டார்.

     சாவித்திரி விம்மலுடன், "என் பேரில் தப்புத்தான். அப்பா! ஒவ்வொரு நிமிஷமும் உங்கள் காலிலே விழுந்து நான் தான் சாவித்திரி என்று சொல்லணுமென்று என் மனது துடித்துக் கொண்டிருந்தது. நீங்கள் என்ன நினைச்சுக்குவேளோ என்னமோன்னு தயங்கித் தயங்கிண்டு இருந்துட்டேன்" என்றாள். பிறகு அப்பாவை நிமிர்ந்து பார்த்து, "நான் தான் பைத்தியக்காரி, சொல்லலை; உங்கள் பொண்ணை உங்களுக்கு எப்படி அப்பா அடையாளம் தெரியாமல் போச்சு?" என்று கேட்டாள்.

     "மனத்துக்குள்ளே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது; பாசம் இழுத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், பராசக்தியின் மாயையைப் போல் உன் மாயையும் என்னை மயக்கி விட்டது" என்றார் சாஸ்திரி.

     மறுபடியும் சாவித்திரி, "நான் உங்களை ஏமாற்றினேன் என்று சொல்கிறீர்களே, அப்பா! நீங்கள் மட்டும் என்னை ஏமாற்றிச் சாருவை ராத்திரிக்கு ராத்திரியே அழைச்சுண்டு போய்விடவில்லையா? எப்படி அப்பா உங்களுக்கு மனசு வந்தது?" என்று கேட்டாள்.

     இந்தச் சமயத்தில் சாரு சோகமான குரலில், "தாத்தாவுக்குப் பொண் கிடைச்சுட்டா, மாமிக்கு அப்பா கிடைச்சுட்டா! நான் தான் அநாதையாய்ப் போய்ட்டேன்" என்றாள்.

     சாவித்திரி அவளைக் கட்டித் தழுவிக்கொண்டு, "என் கண்ணே! நீ அநாதையாய்ப் போகவில்லை. தாத்தாவுக்குப் பொண்ணும், மாமிக்கு அப்பாவும் கிடைச்சா என்ன? உனக்கு யார் வேணும், சொல்லு, நான் கிடைக்கப் பண்றேன்" என்றாள்.

     சாரு பேசாமல் நிற்கவும், "ஆனால் உனக்கு நன்றாய் வேணும்! நீ துஷ்டப் பொண்! எங்கிட்டச் சொல்லிக்காமே ராத்திரியிலே எழுந்து தாத்தா கிட்ட ஓடிப் போனயோல்லியோ? உன் தாத்தா என் அப்பாவாய்ப் போய் விட்டாரே? இப்ப என்ன பண்ணுவே!" என்று சாவித்திரி பரிகசிக்கும் குரலில் கேட்டாள்.

     இந்தக் கேள்வி குழந்தையின் மனத்தை எவ்வளவு தூரம் புண்படுத்தியதென்பதைச் சாவித்திரி தெரிந்து கொள்ளவில்லை. தாய் தகப்பனாரின் அன்பை அனுபவிக்கக் கொடுத்து வைக்காத அந்தக் குழந்தை தாத்தாவின் பேரிலேயே தன்னுடைய முழு அன்பையும் சொரிந்திருந்தாள். தாத்தா தனக்கே முழுக்க முழுக்கச் சொந்தம் என்றும் நம்பியிருந்தாள். அப்படியில்லை, தாத்தாவின் மேல் இந்த மாமிக்குத் தன்னைவிட அதிக பாத்தியதை உண்டு என்று ஒருவாறு அவளுக்கு இப்போது புலப்பட்டதும் துக்கம் பொத்துக் கொண்டு வந்தது. சாவித்திரியினுடைய ஆலிங்கனத்திலிருந்து விடுவித்துக் கொண்டு குழந்தை வெளியே சென்றாள்.

     மேற்சொன்ன சம்பவத்தின் போது, சாவித்திரியையும் சாருவையும் சம்பு சாஸ்திரி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு பேருடைய முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார். குழந்தை வெளியில் போனதும், "சாவித்திரி! என்னைத்தான் ஏமாற்றினாய்! அந்தக் குழந்தையை ஏன் ஏமாற்றுகிறாய்?" என்று கேட்டார்.

     சாவித்திரியை அந்தக் கேள்வி திடுக்கிடச் செய்தது என்பதற்கு அவளுடைய கண்களில் ஒரு க்ஷண நேரம் உண்டான திகைப்பு அறிகுறியாயிருந்தது. அடுத்த க்ஷணத்தில் திகைப்பு மாறிவிட்டது.

     "என்ன அப்பா சொல்கிறீர்கள்? குழந்தையை நான் ஏமாற்றுகிறேனா? எதற்கு? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்றாள்.

     "புரியவில்லையா? இந்தக் குழந்தைக்கு அம்மா யார், சாவித்திரி! உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்.

     "இந்தக் குழந்தைக்கு அம்மாவா? எனக்கு எப்படித் தெரியும்!" என்றாள் சாவித்திரி.

     சாஸ்திரி சற்று நேரம் சும்மா இருந்தார். பிறகு "குழந்தை! உனக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம். ஏழு வருஷத்துக்கு முன்னாலே நெடுங்கரைக்கு நீ தனியா வந்துட்டுப் போனதெல்லாம் இப்பதான் அம்மா எனக்குத் தெரிஞ்சுது. அப்புறம் நீ என்ன செய்தே, எங்கே போனே, குழந்தை எங்கே பிறந்தது, யார் உனக்கு ஒத்தாசை பண்ணினா, இத்தனை நாளா எங்கே இருந்தே - இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு என் மனசு துடியாய்த் துடிக்கிறது, சாவித்திரி!" என்றார்.

     "அப்பா! இதெல்லாம் இப்ப என்னைக் கேக்காதேங்கோ, அப்பா! கொஞ்சம் பொறுத்துக்குங்கோ. இந்தக் கேஸ் முடியட்டும். அப்புறம் எல்லாம் சொல்றேன்" என்றாள் சாவித்திரி.

     பிறகு சாஸ்திரி, சாவித்திரி புக்ககத்திலிருந்து தமக்கு எழுதிய கடிதத்தையெல்லாம் மங்களமும் அவள் தாயாரும் சேர்ந்து தம்மிடம் காட்டாமல் மறைத்த விஷயத்தைச் சொன்னார். மங்களம் இறந்து போன செய்தியையும், அந்திம காலத்தில் அவள், "ஸ்வாமி என்னை மன்னிப்பாரா?" என்று அடிக்கடி புலம்பியதையும், சாருவைப் பார்த்து, "சாவித்திரி! என் மேலே உனக்குக் கோபமா?" என்று கேட்டதையும் பற்றிச் சொன்னார். இதையெல்லாம் கேட்கக் கேட்கச் சாவித்திரிக்குக் கண்ணில் ஜலம் ததும்பிற்று. "ஐயோ! என் சித்தியை ஒரு தடவையாவது பார்க்காமல் போய்விட்டேனே?" என்று உள்ள உருக்கத்துடன் கூறினாள்.

     அச் சமயத்தில், சாரு நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு மறுபடியும் அந்த அறைக்குள் வந்தாள். "தாத்தாவுக்குப் பொண் கிடைச்சா, மாமிக்கு அப்பா கிடைச்சா, எனக்கு ஜில்லி கிடைச்சுது" என்றாள் குழந்தை.