உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
நாலாம் பாகம் : இளவேனில் 63. 'ஜட்ஜு மாமா!' சாருவுக்கு ஜில்லி கிடைத்ததில் உண்மையாகவே சந்தோஷந்தான். ஆனாலும், முன்னையெல்லாம் போல் அவளுடைய மனத்தில் குதூகலம் ஏற்படவில்லை. 'மாமியும் தாத்தாவும் உறவாய்ப் போய்விட்டார்கள்; நாம் தனியாய்ப் போய்விட்டோ ம்' என்ற எண்ணம் அவளுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. தானும் தாத்தாவுமாய் ஊர் ஊராய்ப் போய்க் கொண்டேயிருக்கக் கூடாதா, எதற்காக இங்கே வந்தோம் என்று கூடத் தோன்றியது. முன்னைப்போல் சாரு இப்போது பங்களாவின் தோட்டத்தில் திரிந்து விளையாடுவதில்லை. பங்களாவுக்குள் தனியாக எங்கேயாவது ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்வாள். சோகபாவம் ததும்பும் முகத்தோற்றத்துடன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பாள். அல்லது, ஜில்லியை மடியில் வைத்துக் கொண்டு அதனிடம் தன்னுடைய மனக்குறையை வெளியிடுவாள். "மாமியும் தாத்தாவும் ஒண்ணு; நீயும் நானும் ஒண்ணு" என்பாள். இந்த மாதிரி ஒரு நாள் சாரு ஜில்லியை வைத்துக் கொண்டு சோகமான குரலில் அதனுடன் பேசிக் கொண்டிருந்த போது சாவித்திரி அங்கே வந்தாள். "சாரு! ஏன் இப்படித் தனியாகத் தனியாக வந்து உட்கார்ந்து கொள்கிறாய்? ஓடித் திரிந்து விளையாடறதுக்கென்ன?" என்று கேட்டாள். "என்னோடு விளையாடறதுக்கு யார் இருக்கா? நான் தான் தனிப்பட்டவளாய்ப் போய்ட்டேனே?" என்றாள் சாரு. "என்ன சாரு! பெரிய பாட்டி மாதிரி பேசறே! நீ தனிப்பட்டவளாய்ப் போகவாவது? உன்னோட விளையாடறதற்கு நான் இருக்கேனே! வா! நாம் இரண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள் சாவித்திரி. சாரு, சாவித்திரியின் பின்னால் வந்து அவளுடைய புடவைத் தலைப்பை மடித்துக் கண்ணைக் கட்டினாள். அப்போது, சாவித்திரி, "இதோ பாரு! என் கண்ணைக் கட்டிவிட்டு, முன்னே ராத்திரியிலே எழுந்து ஓடிப் போனயே, அந்த மாதிரி ஓடிவிடக் கூடாது!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். மறுபடியும், "ஆனால் இப்ப நீ எங்கே ஓடறது! தாத்தாதான் இங்கேயே இருக்காரே?" என்றாள். சாரு, இதற்குள் கண்ணைக் கட்டிவிட்டு, "ஊம்; ஒண்ணு, இரண்டு சொல்லுங்கோ!" என்றாள். சாவித்திரி, "ஒண்ணு, இரண்டு, மூணு..." என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, சாரு அந்த அறையிலிருந்து ஓடி ஆபீஸ் அறைக்குள் போனாள். அங்கே வக்கீல் ஆபத்சகாயமய்யர் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சாரு அவருக்குத் தெரியாமல் சத்தமில்லாமல் நடந்து ஒரு ஸோபாவுக்குப் பின்புறத்தில் ஒளிந்து கொண்டாள். ஒளிந்து கொண்டவள் மறுபடியும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். 'தாத்தாவும் மாமியும் ஒண்ணாய்ப் போய்விட்டா. எனக்கு இப்போ ஓடறதுக்குக் கூட இடமில்லை' என்று எண்ணி அவள் மனம் ஏங்கிற்று. சற்று நேரத்துக்கெல்லம் அந்த அறைக்குள் சாவித்திரி வந்தாள். "வக்கீல் ஸார்! சாரு இங்கே வந்தாளா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள். "இல்லையே, இங்கே வரலையே?" என்றார் வக்கீல். பிறகு, "பத்திரம் எழுதியாச்சு; கையெழுத்துப் போடலாம்" என்றார். உமா மேஜைக்கருகில் உட்கார்ந்து, "எங்கே வாசிங்கோ! கேட்கிறேன்" என்றாள். ஆபத்சகாயமய்யர் அடிக்கடி, "என்னிடம் நம்பிக்கை வையுங்கள்" என்று உமாராணியிடம் சொல்லிக் கொண்டிருந்தாரல்லவா? அதற்குரிய சந்தர்ப்பம் இப்போது வந்திருந்தது. ஸ்ரீதரனுடைய வக்கீல், கோர்ட்டில் குழந்தையைப் பற்றிக் கேள்வி கேட்டதிலிருந்து சாவித்திரி பெரிதும் கலக்கமடைந்து போயிருந்தாள், யாரிடமாவது யோசனை கேட்டே ஆகவேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே, ஆபத்சகாயமய்யரிடம் தன் வரலாறு முழுவதையும் விவரமாகச் சொன்னாள். சாருதான் தன்னுடைய குழந்தை என்று கூறி, சாஸ்திரியிடம் அவருக்குத் தெரியாமல் குழந்தையை விட்டுவிட்டுப் போனதையும் விவரித்தாள். பிறகு, தகப்பனாருக்குக் குழந்தைமேல் உள்ள பாத்தியதைப் பற்றிச் சட்டம் என்ன சொல்கிறது என்று கேட்டாள். ஆபத்சகாயமய்யர் சட்ட புஸ்தகங்களையெல்லாம் நன்றாய்ப் புரட்டிப் பார்த்துவிட்டு, "குழந்தை மேலே கட்டாயம் தகப்பனாருக்குப் பாத்தியதை உண்டு. இப்போ நடக்கிற கேஸிலே நீங்கள் ஜயித்த போதிலும், குழந்தையைத் தம்மிடம் ஒப்புவிக்க வேணுமென்று அவர் உங்க மேலே மறுபடியும் கேஸ் போடலாம்" என்றார். சட்டம் இந்த மாதிரிதான் இருக்கும் என்று சாவித்திரிக்கு ஏற்கெனவே ஒருவாறு தெரிந்திருந்தது. அது இப்போது உறுதியாகவே, "வக்கீல் ஸார்! என்னுடைய கதி எப்படியாவது ஆகட்டும். ஆனால் என் குழந்தையை அவரிடம் ஒரு நாளும் ஒப்புவிக்க மாட்டேன். அதைவிட அவள், நான் இரண்டு பேரும் செத்துப் போய்விட்டால் கூட பாதகமில்லை" என்றாள். பிறகு, சாருவுக்குத் தன்னுடைய சொத்தையெல்லாம் எழுதி வைத்து 'ஸெட்டில்மெண்ட்' பத்திரம் செய்ய வேண்டுமென்றும், சம்பு சாஸ்திரியைக் கார்டியனாக நியமிக்க வேண்டுமென்றும், "சம்பு சாஸ்திரி வளர்ப்புப் பெண்" என்று பத்திரத்தில் குறிப்பிட வேண்டுமென்றும் உமாராணி சொன்னதின் பேரில், அதன்படியே, வக்கீல் ஆபத்சகாயமய்யர் பத்திரம் எழுதினார். உமா சாருவைத் தேடிக் கொண்டு ஆபீஸ் அறைக்குள் வந்த போது, வக்கீல் மேற்சொன்ன பத்திரந்தான் தயாராகி விட்டதென்று சொல்லிக் கையெழுத்திடச் சொன்னார். பத்திரத்தைப் படிக்கக் கேட்டிவுட்டுச் சாவித்திரி கையொப்பம் இட்டாள். பிறகு, "வக்கீல் ஸார்! எனக்கு நீங்கள் எத்தனையோ ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். அதையெல்லாம் விட முக்கியமான ஓர் ஒத்தாசை கேட்கப் போகிறேன். அதைச் செய்ய வேணும்" என்றாள். "கட்டாயம் செய்கிறேன்" என்றார் வக்கீல். "சாருவுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருக்கேன். அதில் அவள் என் குழந்தை என்கிறதையும், அவளை அடையாறு புத்தர் கோவிலுக்குப் பக்கத்தில் தாத்தா தூங்கிண்டிருந்த போது விட்டுவிட்டுப் போனதையும் பற்றி எழுதியிருக்கேன். அவ அப்பாவைப் பற்றியும், ஏன் அவள் என் குழந்தை என்கிறதை மறைச்சு வைச்சேன் என்பதையும் பற்றிக் கூட எழுதியிருக்கேன். அந்தக் கடுதாசை நீங்க பத்திரப்படுத்தி வச்சிருந்து, குழந்தை மேஜரானதும் அவள் கிட்டக் கொடுக்கணும்..." "என்னத்துக்காக அம்மா இவ்வளவெல்லாம் யோசனை பண்ணிக் காரியம் செய்யறயள்? குழந்தை மேஜராகிறபோது, நீங்களே சொல்லிண்டாப் போராதா? கடுதாசி என்னத்திற்கு?" "வக்கீல் ஸார்! என் கதி என்ன ஆகுமோ, யார் கண்டா? எதுவும் எழுத்திலே இருக்கிறது நல்லது. நான் சொல்றபடி செய்யறதாக வாக்குக் கொடுப்பேளா, மாட்டேளோ?" என்றாள். "அவசியம் செய்யறேன், அம்மா!" "சாரு என் குழந்தை என்கிறதை யாரிடமும் சொல்ல மாட்டேளே?" "சொல்லவே மாட்டேன்." "எங்க அப்பாகிட்ட கூடச் சொல்ல மாட்டேளே?" "சொல்ல மாட்டேன், அம்மா!" "அப்படி, சத்தியமாய்ச் சொல்லுங்கள்" என்றாள் உமாராணி. "சத்தியமாக யார் கிட்டயும் சொல்றதில்லை" என்றார் ஆபத்சகாயமய்யர். அதே அறையில் ஸோபாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த சாரு இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். மாமி உண்மையில் தன்னுடைய அம்மா தான் என்றும், தாத்தா தன்னுடைய நிஜத் தாத்தாதான் என்றும் அறிந்த போது குழந்தைக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதோடு கூட, ஒரு மிக முக்கியமான இரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதில் அவளுக்கு ரொம்பப் பெருமையாகவும் இருந்தது. "ஓகோ! மாமியே எனக்கு அம்மாவா இருந்துண்டு இப்படியா ஏமாத்தினா? இருக்கட்டும், இருக்கட்டும்" என்று கறுவிக் கொண்டாள். ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் போது தனக்கு இந்த இரகசியம் தெரிந்திருப்பதை வெளிப்படுத்த வேண்டுமென்னும் ஆசையும் அவளுடைய குழந்தை உள்ளத்தில் குடி கொண்டது. அத்தகைய சந்தர்ப்பமும் சீக்கிரம் வந்தது. குறிப்பிட்ட தேதியில் கோர்ட்டில் மறுபடியும் ஸ்ரீதரன், உமாராணி கேஸ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பு சாஸ்திரி விசாரிக்கப்பட்டார். ஆனால், அவர் மூலமாகப் புதிய உண்மை ஒன்றும் வெளியாகவில்லை. சாவித்திரி பூரண கர்ப்பவதியாக இருந்த நிலைமையில், நெடுங்கரைக்கு வந்து விட்டுத் திரும்பினாள் என்று சமீபத்தில் ஊரில் தாம் கேள்விப்பட்டதாக மட்டுமே சொன்னார். குழந்தை என்ன ஆயிற்று என்று தமக்குத் தெரியாது என்றும், சாவித்திரி தம்மிடம் கூடச் சொல்ல மறுப்பதாகவும் கூறினார். நாராயணன், பி.ஏ.,பி.எல்., சாஸ்திரியை இலேசில் விட்டு விடவில்லை. இப்போது அவர் வளர்த்து வரும் குழந்தை ஏது என்று கேட்டார். சாஸ்திரி வழக்கம் போல், பராசக்தி எனக்குக் கொடுத்த குழந்தை" என்று சொன்னபோது, கோர்ட்டில் எல்லாரும் சிரித்தார்கள். "இது கோர்ட்டு, ஸ்வாமி! விளையாடாமல் உள்ளது உள்ளபடி சொல்லும்" என்றார் வாதி வக்கீல். இதன் மேல் சாஸ்திரியும் நிலைமையை உணர்ந்து, தாம் புத்தர் கோவிலுக்கருகில் படுத்துத் தூங்கியதையும், கண் விழித்தபோது இந்தக் குழந்தை அழுதுகொண்டு கிடந்ததையும், சுற்று முற்றும் தேடியதில் ஒருவரும் இல்லாதபடியால், பராசக்தியினுடைய ஆக்ஞை என்பதாக எண்ணிக் குழந்தையை எடுத்துக் கொண்டு சாவடிக் குப்பம் போனதையும் விவரமாகச் சொன்னார். இதையெல்லாம் கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் எல்லாரும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, உமாராணி என்ற சாவித்திரி மறுபடியும் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டாள். அன்று கேட்டதைத் தொடர்ந்து வாதி வக்கீல், "இன்றைக்காவது சொல்லுங்கள்; குழந்தை என்னதான் ஆயிற்று?" என்று கேட்டார். கையைக் கட்டிக் கொண்டு கம்பீரமாய் நின்ற உமா, "சொல்ல முடியாது" என்றாள். "கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆகணும்; மறுப்பது சட்ட விரோதம்." "மறுத்தால்...?" "மறுத்தால், குழந்தையைக் கொன்றுவிட்டீர்களென்று இங்கேயே உங்களை 'அரெஸ்ட்' பண்ணும்படி கோர்ட்டார் உத்தரவிடலாம்" என்றார் வாதி வக்கீல். சாவித்திரியின் முகத்தில் புன்னகை உண்டாயிற்று. 'ரொம்ப நல்லதாய்ப் போச்சு. அப்படி ஏதாவது நடந்தால், எத்தனையோ தொல்லைகள் தீர்ந்து போகும். முக்கியமாக, இந்தப் புருஷனுடன் சேர்ந்து வாழ வேண்டியிராது' என்று எண்ணிக் கொண்டாள் கோர்ட்டுக்கு அன்று வந்தது முதல், ஸ்ரீதரனைப் பார்க்கப் பார்க்க அவளுடைய கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. தனக்கு முன்னே கொடுத்த கஷ்டமெல்லாம் போதாதென்று, இப்போது என்னவெல்லாம் கஷ்டப் படுத்துகிறார்! தன்னைப் படுத்துவது போதாதா? அப்பாவைக் கூடவா சாட்சிக் கூண்டில் ஏற்றி இப்படித் தொந்தரவு படுத்தவேணும்? - கேஸில் ஒரு வேளை தோற்றுவிட்டால், இந்த மனுஷருடன் தான் சேர்ந்து வாழும்படி நேரிடுமோ என்று எண்ணியபோது, அவளுக்குச் சொல்ல முடியாத வேதனையும் ஆத்திரமும் உண்டாயின. எனவே, வக்கீல், மேற்கண்டவாறு சொன்னதும், உமா ஒரு நிமிஷம் சும்மா இருந்துவிட்டு, "ஆமாம்; எனக்குப் பிறந்த குழந்தையைக் கொன்றுவிட்டேன். என்னை 'அரெஸ்ட்' செய்யுங்கள், இதோ ரெடி!" என்றாள். கோர்ட்டில் திடீரென்று ஒரு வெடி குண்டு விழுந்தது போல் எல்லாரும் அதிர்ச்சியடைந்து போனார்கள். ஆபத்சகாயமய்யர் சட்டென்று எழுந்திருந்து, "வாட் இஸ் திஸ்!" என்றார். சம்பு சாஸ்திரி, "சாவித்திரி! உனக்கு என்ன பைத்தியமா?" என்றார். நீதிபதிக்கு இந்தக் கேஸின் ஆரம்பத்தில் சாவித்திரியிடம் ரொம்ப அநுதாபம் இருந்தது. ஆனால், வர வர அவள் மேல் கோபம் அதிகமாகிக் கொண்டு வந்தது. அவளுடைய அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுக்களும், அடிக்கடி கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. இதெல்லாம் கோர்ட்டில் தம்முடைய கௌரவத்துக்குப் பங்கம் விளைவிப்பதாக அவர் எண்ணினார். இப்போது குழந்தையைக் கொன்றுவிட்டதாக உமாராணி சொல்வது சுத்தப் பொய்; வேண்டுமென்றே சொல்கிறாள் என்பது அவருக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. அதனாலேயே அவருக்குக் கோபம் அதிகமாய் வந்தது. எனவே, கோர்ட்டில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து, "இன்ஸ்பெக்டர்! இந்த அம்மாவை 'அரெஸ்ட்' பண்ணி, கேஸை 'இன்வெஸ்டிகேட்' பண்ணுங்கோ!" என்றார். இன்ஸ்பெக்டரும், இன்னொரு போலீஸ்காரனும் சாட்சிக் கூண்டினருகில் சென்றார்கள். சாரு எதிர் பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் அப்போது வந்தது. குழந்தை ஒரு தாவுத் தாவி மேஜை மீது ஏறி நின்றாள். நீதிபதியைப் பார்த்து, "ஸ்டாப்! ஸ்டாப்! ஜட்ஜு மாமா! இந்த மாமி சொன்னதெல்லாம் பொய்! அவ கொழந்தையைக் கொல்லவே இல்லை. நான் தான் அந்தக் கொழந்தை! என்னைக் கொன்னுட்டிருந்தா, நான் எப்படி உசிரோட இருக்க முடியும்?" என்றாள். "வாட் இஸ் ஆல் திஸ்?" என்றார் நீதிபதி. "இதோ இருக்காரே, எங்க தாத்தா - அவர் புத்தர் கோவில்லே தூங்கிண்டிருந்த போது, எங்க அம்மா என்னைப் போட்டுட்டுப் போயிட்டாளாம். இதையெல்லாம் ஒரு பெரிய கடுதாசியிலே எழுதி, நான் மேஜரான அப்புறம் எங்கிட்டக் கொடுங்கோன்னுட்டு, இந்த வக்கீல் மாமாகிட்ட எங்க அம்மா கொடுத்தா. நான் அவாளுக்குத் தெரியாம ஸோபா மறைவிலெ உட்கார்ந்துண்டு, எல்லாவற்றையும் கேட்டிண்டிருந்தேன்!..." இப்படிச் சொல்லி விட்டு, சாரு மேஜையின் மேலேயே இரண்டடி நடந்து சாவித்திரியின் அருகில் சென்றாள். "அம்மா! அப்பா உங்க மேலே கேஸ் போட்டிருக்காரேன்னு என்னை உங்க குழந்தைன்னு சொல்லிக்கிறதுக்கு வெட்கமாயிருக்கா?" என்றாள். சாவித்திரி உடனே சாட்சிக் கூண்டிலிருந்து இறங்கி ஓடிவந்து, "என் கண்ணே, சாரு!" என்று சொல்லிக் கொண்டே, குழந்தையைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். கோர்ட்டில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி மேஜையை மறுபடியும் ஓங்கித் தட்டினார். ஸார்ஜெண்ட், "ஸைலன்ஸ்!" என்று கத்தினான். போலீஸ்காரர்கள் சாவித்திரியை 'அரெஸ்ட்' பண்ணுகிறதா, இல்லையா என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். சாரு, சாவித்திரியின் ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கினாள். நேரே, ஸ்ரீதரன் இருக்கும் இடத்துக்குப் போனாள். ஸ்ரீதரன் பிரமைப் பிடித்தவனைப் போல் குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்ததும் சாரு, "நானும் எத்தனையோ அப்பா பார்த்திருக்கேன். உங்களைப்போலே அம்மா மேலே கேஸ் போடற அப்பாவைப் பார்த்ததேயில்லை" என்றாள். அப்போது கோர்ட்டில் உண்டான கலகலப்பு அடங்குவதற்கு வெகு நேரம் ஆயிற்று. |