உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
நாலாம் பாகம் : இளவேனில் 64. கர்வ பங்கம் பாரத் விலாஸ் ஹோட்டலின் அறையொன்றில் ஸ்ரீதரன் முன்னும் பின்னுமாக உலாத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனம் பெரிதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது என்பது நன்றாய்த் தெரிய வந்தது. அவனுடைய தலைமயிர் எப்போதும் போல் படிந்து அழகாக வாரிவிடப் பட்டிருக்கவில்லை. முகத்திலும் கவலைக் குறி காணப்பட்டது. அடிக்கடி வாய்க்குள்ளாக, "என்ன முட்டாள்தனம்! என்ன முட்டாள்தனம்?" என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு சமயம் மேஜையருகில் நின்று மேஜைமீது கிடந்த ஒரு பத்திரிகையை எடுத்துப் பார்த்தான். அதில், சம்பு சாஸ்திரி, சாரு இவர்களுடைய படங்கள் வெளியாகியிருந்தன. படங்களுக்குக் கீழே பின்வருமாறு எழுதியிருந்தது: "நேற்று உமாராணி - ஸ்ரீதரன் வழக்கில் ஒரு முக்கியமான விஷயம் வெளியாயிற்று. சம்பு சாஸ்திரியின் வளர்ப்புக் குழந்தையான சாரு உண்மையில் அவருடைய பேத்தி, அதாவது உமாராணியின் குழந்தை என்று தெரிய வந்தது. விசாரணையின் போது, உமாராணிமேல் குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சமயத்தில், குழந்தை சாருவே மேற்படி இரகசியத்தை வெளிப்படுத்தியதும் கோர்ட்டில் பெரிய கலகலப்பு ஏற்பட்டது..." ஸ்ரீதரன் இதைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடி நடக்கத் தொடங்கினான். சுவரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய பிரதிபிம்பத்தைப் பார்த்துவிட்டு, "ஸ்ரீதரா! நீ மகா கெட்டிக்காரன்! உன்னைப் போன்ற கெட்டிக்காரன் உலகத்திலேயே கிடையாது. உன் குழந்தையேதான் உனக்கு சர்டிபிகேட் கொடுத்து விட்டாளே? இனிமேல் உனக்கு என்ன குறை?" என்றான். நேற்று கோர்ட்டில் சாரு, "நானும் எத்தனையோ அப்பா பார்த்திருக்கேன். ஆனா, உங்களைப்போலே, அம்மா மேலே கேஸ் போட்ட அப்பாவைப் பார்த்ததேயில்லை" என்று சொன்னது அவன் மனத்தை அப்படி உறுத்திக் கொண்டிருந்தது. இதே சமயத்தில், உமாரணியின், வீட்டு டிராயிங் ரூமில் இதே விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்துகொண்டிருந்தது. உமாவும், சம்பு சாஸ்திரியும் ஸோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். நல்லானும், அவனுடைய மனைவியும் கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்கள். நல்லான், உமாவைப் பார்த்து, "குழந்தையைக் கொன்னுட்டேன்னு ஒரே புளுகாய்ப் புளுகினீங்களே! எப்படி அம்மா உங்களுக்கு மனஸு வந்தது?" என்று கேட்டான். "இருக்கட்டும், நல்லான்! நான் ஊரைவிட்டுக் கிளம்பறபோது, இனிமேல் நீதான் ஐயாவைக் கவனிச்சுக்கணும்னு சொன்னேன், நீயும் சரி இன்னயே, அந்த வாக்கை நீ காப்பாத்தினயா?" என்றாள் உமா. "அது எம்மேலே தப்புத்தான். எஜமான் நிலத்தை வித்துட்டாங்க என்கிற கோபத்திலே புறப்பட்டு வந்துட்டேங்க. ஆனா, நீங்கமட்டும் இத்தனை நாளாய் அப்பாவை அடியோடு மறந்துட்டு இருந்தீங்களே? அது மாத்திரம் சரியா?" என்றான் நல்லான். அப்போது சம்பு சாஸ்திரி குறுக்கிட்டு, "சரியாப் போச்சு! மறுபடியும் பழைய கதையையே எடுத்துட்டேளா? சந்தோஷமாயிருக்கிற சமயத்திலே போனதையெல்லாம் பத்தி ஏன் பேசறே, நல்லான்?" என்றார். "எல்லாம் சந்தோஷந்தாங்க. ஆனா, கோர்ட்டு, கீர்ட்டு, கேஸு, கீஸுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்களே அதுதான் நல்லா இல்லைங்க. மாப்பிள்ளை ஐயா முன்னப் பின்னே எதுவாச்சும் செய்திருந்தாலும், அதையெல்லாம் கொழந்தை பொறுத்துக்கிட்டுத்தான் போகணுங்க" என்றான் நல்லான். அப்போது நல்லான் மனைவி, "சரிதான், சும்மா இரு, அவங்களுக்குத் தெரியாததுக்கு நீதான் ரோசனை சொல்ல வந்துட்டே!" என்றாள். "இந்தா! உன்னை யாரு கேட்டா? நீ வாயை மூடிக்கிட்டிரு" என்றான் நல்லான். "அடாடா! எனக்காக பாவம், நீங்க சண்டை போட்டுக்காதேங்கோ" என்றாள் உமா. அப்போது சாரு, "இதையா சண்டைன்னு சொல்றே அம்மா! ஒவ்வொரு சமயம் இவா ரெண்டு பேரும் சண்டை போடறதைப் பார்த்தா, பயமாயிருக்கும். மறுபடியும் உடனே சிநேகமாய்ப் போயிடுவா" என்றாள். "ஆமாம், குழந்தை! எங்களைப்போலே ஏழை ஜனங்கள்ளாம் அப்படித்தான் சண்டை போட்டுக்குவோம்; உடனே சிநேகமாய்ப் போய்டுவோம்" என்றான் நல்லான். பிறகு எழுந்து நின்று, உமாவைப் பார்த்து, "நான் போயிட்டு வர்றேன், அம்மா! எங்க சாவடிக் குப்பத்தை மறந்துடக் கூடாதுங்க. அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருக்கணும்" என்றான். "கட்டாயம் வர்றேன், நல்லான்! நீயும் என்னை மறந்துடக்கூடாது. அடிக்கடி இங்கே வரணும்." நல்லானும் அவனுடைய மனைவியும் வெளியே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து சாருவும் போனாள். சற்று நேரம் சாவித்திரியும் சம்பு சாஸ்திரியும் மௌனமாயிருந்தார்கள். சம்பு சாஸ்திரி தொண்டையைக் கனைத்துக் கொண்டார். ஏதோ பேசுவதற்கு இரண்டு மூன்று தடவை வாயெடுத்தார். ஆனால் தொண்டையை அடைத்துக் கொண்டபடியால், பேச்சு வரவில்லை. சாவித்திரி, "என் பேரில் உங்களுக்கு ரொம்பக் கோபமா, அப்பா?" என்று கேட்டாள். "எனக்கு உன் பேரில் கோபமா? இல்லை, அம்மா! எனக்குக் கோபமில்லை. ஆனா, நீதான் பழைய கோபத்தையெல்லாம் விட்டுடணும். நல்லான் சொன்னதைக் கேட்டயோ, இல்லையோ? ஏழை ஜனங்கள் எல்லாம் சண்டை போட்டுண்டா உடனே சமாதானமாப் போயிடுவா என்று சொன்னானே! எவ்வளவு பணம் எவ்வளவு ஐசுவரியம் இருந்தால்தான் என்ன? - மனத்திலே கருணை, தயாளம் இல்லாமற் போனா, இந்தப் பணத்தினாலே எல்லாம் என்ன பிரயோஜனம்..." சாவித்திரிக்கு இந்த உபதேசம் பிடிக்கவில்லையென்று அவளுடைய முக பாவத்திலிருந்து நன்றாய்த் தெரிந்தது. அவள் குறுக்கிட்டு, "அப்பா! கருணையும், தயாளமும் யாருக்கு வேணுமோ அவாளுக்கு இந்த உபதேசமெல்லாம் பண்ணுங்கோ! - பணம், பணம் என்று கரிக்காதேங்கோ! குழந்தைக்குக் கார்டியனாயிருந்து நீங்க தான் இந்தச் சொத்தையெல்லாம் வச்சுக் காப்பாத்தணும்" என்றாள். "இதுதான் எனக்குப் பிடிக்கவேயில்லை. குழந்தைக்கு நான் கார்டியனாவது, நீ உயில் எழுதுவதாவது! எதுக்காக அம்மா இந்த ஏற்பாடெல்லாம்?..." சாவித்திரி ஒரு நிமிஷம் சும்மா இருந்தாள். மறுபடியும் பேசியபோது சாஸ்திரியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. "ஆமாம், அப்பா! இந்த ஐசுவரியமெல்லாம் எனக்கு எப்படி வந்தது என்று நீங்க கேட்கவே இல்லையே, ஏன்?" என்றாள். "நான் என்னத்துக்கு அம்மா கேட்கணும்? கேட்க எனக்கு என்ன பாத்தியதை?" என்றார் சாஸ்திரி. "உங்களுக்குப் பாத்தியதை உண்டு, அப்பா! இந்தப் பணமெல்லாம் எனக்குக் கொடுத்தவா, உங்களுக்குத் தெரிஞ்சவாதான்." சாஸ்திரி வியப்புடன், "எனக்குத் தெரிஞ்சவாளா?" என்றார். "ஆமாம், அப்பா! உங்களுக்குத் தெரிஞ்சவாதான்." "எனக்குத் தெரிஞ்சவா, யார் அம்மா! எனக்கு பணக்காராள் ஒத்தரையுமே தெரியாதே! சாவடிக் குப்பத்து ஏழைகளைத்தானே எனக்குத் தெரியும்?" "அடியே பிடிச்சு எல்லாம் சொல்றேன், கேக்கறேளா, அப்பா?" "பேஷாய்ச் சொல்லம்மா, கேட்கிறேன். நீயே சொல்லாமப் போனா நான் ஒண்ணுமே உன்னைக் கேட்க வேண்டாம்னு நினைச்சுண்டிருந்தேன். நாங்க எல்லாருமாச் சேர்ந்து உன்னைச் சந்தியிலே விட்டுட்டோ ம். அப்படி விட்டுட்ட எங்களுக்கு உன்னைப் பத்திக் கேக்க என்ன பாத்தியதைன்னு பேசாமே இருந்தேன்." "ஐயோ! அப்பா! உங்க மாதிரி மனசு எல்லாருக்கும் இருக்கப்படாதா?" என்று சாவித்திரி சொல்லிப் பெருமூச்சு விட்டாள். பிறகு சொன்னாள்: "ஆமாம்; எல்லாருமாய்ச் சேர்ந்து என்னைச் சந்தியிலேதான் நிறுத்தினயள். இந்தச் சென்னைப் பட்டணத்துத் தெருக்களிலே இரண்டு தடவை நான் அநாதையாய் அலைஞ்சேன். ஒரு தடவை, 'பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி விலாசம் தெரியுமா'ன்னு கேட்டுண்டு அலைஞ்சேன். இன்னொரு தடவை, கையிலே குழந்தையையும் எடுத்துண்டு, எங்கேயாவது வேலை கிடைக்குமான்னு தேடி அலைஞ்சேன். கடைசியிலே, குழந்தையும் நானுமா ஜலத்திலே மூழ்கிச் செத்துப் போறதுன்னு தண்ணியிலே இறங்கினேன். அப்போ, எங்களைக் காப்பாத்தறதற்கு நீங்க வந்து சேர்ந்தேள். உங்களுடைய குரலைக் கேட்டுக் கரையேறினேன். குரல் வந்த திக்கைப் பிடிச்சுண்டு வந்தேன். புத்தர் கோவில்கிட்ட அப்பத்தான் நீங்க மேடையிலே படுத்துண்டேள். கொஞ்ச நேரம் மறைவா இருந்துட்டு, நீங்க தூங்கின அப்புறம் குழந்தையை உங்க பக்கத்திலே கொண்டு போட்டுட்டு, தூரத்திலே போய் ஒளிஞ்சுண்டு பார்த்தேன்..." "சாவித்திரி! என்னைப் பார்த்துவிட்டுப் பேசாமே போக உனக்கு எப்படி மனசு வந்தது? குழந்தையை விட்டுட்டுப் போறதுக்குத்தான் எப்படி உன் மனசு துணிந்தது?..." "அதுக்கு முன்னாலே மூணு மாதம் நான் பட்ட கஷ்டம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, இப்படி கேட்க மாட்டேள், அப்பா! என் மனசு அப்போ கல்லாய்ப் போயிருந்தது. நீங்க முழிச்சுண்டு எழுந்திருந்து, அழற குழந்தையை எடுத்துண்டு தவியாய்த் தவிச்சேளே, அதைப் பார்த்தா எனக்குச் சிரிப்புக் கூட வந்தது. 'அப்பாவாலே தானே நமக்கு இவ்வளவு கஷ்டமும் வந்தது? குழந்தையை வச்சிண்டு அவரே திண்டாடட்டும்' என்று விட்டுட்டுப் போயிட்டேன். உங்க மனசும் உங்க தயாள குணமும் எனக்கு நன்னாத் தெரியுமோல்லியோ, அப்பா! அதனாலே, நீங்க குழந்தையைக் கைவிடமாட்டேள், காப்பாத்துவேள் என்று நிச்சயமாய் நம்பினேன். அது நிஜமாப் போச்சு, அப்பா!" "சாவித்திரி! குழந்தை சாரு என் பேத்தின்னு தெரிஞ்சதிலே எனக்கு ஒரு கர்வபங்கம் ஆச்சுன்னு உனக்குத் தெரியுமோ? சாரு அநாதைக் குழந்தை, அவளை எடுத்து வளர்த்துக் காப்பாத்தினோம் என்று கொஞ்சம் கர்வப்பட்டிண்டிருந்தேன். 'நமக்கு என்னத்துக்குத் தொந்தரவு? போலீஸிலே கொண்டு போய்க் கொடுத்துடுவோம்' என்று கொடுக்காமே, பராசக்தி ஆக்ஞைன்னு நினைச்சுக் குழந்தையை வளர்த்தேன். இப்போ தெரியறது, இரத்த பாசத்தினாலேதான் அப்படி எனக்கு எண்ணம் உண்டாச்சுன்னு. இன்னொத்தர் குழந்தையாயிருந்தா, அந்த மாதிரி எனக்குத் தோணியிருக்குமோ, என்னமோ?" "இரத்த பாசம் விடாது என்றும் நம்பிண்டுதான் குழந்தையை விட்டுட்டுப் போனேன், அப்பா!" "ஆனால், நீ என்னத்துக்குப் போனே, அதுதானே எனக்குத் தெரியலை, சாவித்திரி?" "சொல்றேன், அப்பா! கல்கத்தாவிலேயும், பட்டணத்திலேயும் பட்ட கஷ்டத்தினாலே என் மனசு ரொம்ப வெறுத்துப் போயிருந்தது. ஆஸ்பத்திரிலே நான் கிடந்தபோது, லேடி டாக்டர்களையும், நர்ஸுகளையும் பார்க்கப் பார்க்க, அவாளைப் போலே நாமும் ஏன் சுதந்திரமாய் ஜீவனம் பண்ணப்படாது, எதுக்காகப் புருஷாளையே நம்பிண்டு இருக்கணும்னு தோண ஆரம்பிச்சுது. எங்கிட்ட ரொம்பப் பிரியமாயிருந்த நர்ஸுகிட்ட அதைச் சொன்னேன். அவள் ஒரு நாள் ஒரு பத்திரிகை கொண்டு வந்து காட்டினாள். அதிலே ஒரு விளம்பரம் போட்டிருந்தது. பம்பாயிலே யாரோ ஒரு பணக்காரி இருக்காள், அவளுக்குத் தோழியாயிருக்க நம்ப பக்கத்துப் பெண் வேணும். ஆனால் குழந்தை கிழந்தையிருக்கக் கூடாது என்று விளம்பரத்திலேயிருந்தது. ஆஸ்பத்திரியிலேயிருந்து வெளியே வந்ததும், எத்தனையோ பணக்கார வீடுகளிலே வேலைக்கு அலைஞ்சேன். எல்லாரும் குழந்தைக்காரி வேண்டாம், குழந்தைக்காரி வேண்டாம்னு சொன்னா. அதுமேலே தான் செத்துப் போயிடலாம்னு தீர்மானிச்சேன். அப்போ, உங்களைப் பார்த்ததும், குழந்தையை உங்க கிட்ட விட்டுட்டுப் போய்ட்டா எங்கேயாவது வேலை சம்பாதிச்சுக்கலாம்னு தோணித்து. இந்த ஊரிலேயே இருந்தா, எப்படியும் உங்களைப் பார்க்கும்படியா ஆயிடும் என்று, பம்பாயிலே விளம்பரம் பண்ணியிருந்தவாளின் விலாசத்தைத் தெரிஞ்சுண்டு பம்பாய்க்குப் போனேன்." "என்ன துணிச்சல், சாவித்திரி, உனக்கு? யாரோ முன்னப் பின்னே தெரியாதவாளின் விளம்பரத்தை நம்பிண்டா பம்பாய்க்குப் போனே?" "அப்படி நான் நம்பிண்டு போனது வீணாப் போகலை, அப்பா! தாலி கட்டிய புருஷன் கைவிட்டு விட்டார், பெற்ற அப்பா கைவிட்டு விட்டார், கடவுளும் கைவிட்டுவிட்டார்னு நினைச்சுண்டிருந்த எனக்கு அந்தப் பெரிய மனுஷி அடைக்கலம் கொடுத்து ஆதரித்தாள்..." "ஆமாம், பம்பாயிலிருக்கிறவா எதுக்காக மெனக்கெட்டுத் தமிழ்நாட்டுப் பெண் வேணும்னு விளம்பரம் பண்ணினா?" "அந்த அம்மாள் பம்பாயிலே இருந்தபோதிலும், உண்மையிலே அவாள் நம்ம பக்கத்து மனுஷ்யாள்தான். அவாளுக்குக் குழந்தை குட்டிகள் இல்லை. அந்த அம்மாளின் புருஷனுக்கு உடம்பு சரியா யில்லாதபடியால், கப்பல் பிரயாணம் செய்தால் நல்லது என்று வைத்தியர்கள் சொன்னார்கள். அதன்மேல் அவர்கள் ஐரோப்பாவுக்குப் பிரயாணம் புறப்பட இருந்தார்கள். போகிற போது, அந்த அம்மாவுக்குப் பேச்சுத் துணைக்குத் தமிழ் பேசற பெண்ணாய் ஒருத்தியை அழைச்சுண்டு போகணும்னு நினைச்சாளாம். அதனாலேதான் குழந்தை உதவாதுன்னு விளம்பரத்திலே எழுதியிருந்தாளாம்." "சரி அப்புறம்?" "அவர்களுடனே நான் சீமைக்கெல்லாம் போய்விட்டு வந்தேன், அப்பா! அந்த அம்மாள் நான் போனது முதலே என் பேரில் ரொம்பப் பிரியமாயிருந்தாள். தன் வயத்திலே பிறந்த குழந்தை மாதிரி என்னை வச்சுக் காப்பாத்தினாள். அவர்கள் வெகு காலமாக இங்கிலீஷ்காரா தோரணையிலே வாழ்ந்தவர்கள். எனக்கு இந்த நாகரிகமெல்லாம் அவர்கள் தான் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த அம்மாளின் புருஷன் உடம்பு தேறாமல் இறந்து போனார். அந்த அம்மாளும் அது முதல் நாளுக்கு நாள் மெலிந்து, போன வருஷத்தில் இறந்து போனாள். அவர்கள் தானப்பா எனக்கு இந்தச் சொத்தையெல்லாம் கொடுத்தது." "ஆனால், யாரோ எனக்குத் தெரிஞ்சவான்னு சொன்னயே, அம்மா?..." "ஆமாம்; உங்களுக்குத் தெரிஞ்சவள் தான்; உறவு கூட." "உறவா? எனக்கா? குழந்தை! நீ என்ன சொல்றே? எனக்கு ஒண்ணுமே புரியலையே?" "ரொம்ப நாள் வரையில் நான் யாரு, இன்னார்னு ஒண்ணும் அவாளுக்குச் சொல்லவேயில்லை. புருஷன் கைவிட்டுவிட்டு எங்கேயோ போய்ட்டார்னு மட்டும் சொல்லியிருந்தேன். இரண்டு வருஷத்துக்கு முன்னால், அந்த அம்மாள் ஒரு நாளைக்கு என்னை ரொம்ப வற்புறுத்திக் கேட்டாள். அதுக்கு மேலே, ஊரு பேரு எல்லாம் விவரமாய்ச் சொன்னேன். உங்க பேரைச் சொல்லி, நான் உங்க பொண்ணு என்றதும் அந்த அம்மாள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சுட்டா... அந்த அம்மாள் யார் தெரியுமா, அப்பா?" "சாவித்திரி! சாவித்திரி! நீ என்ன சொல்லப் போறே? என் உடம்பெல்லாம் நடுங்கறதே!" என்றார் சாஸ்திரி. "ஆமாம், அப்பா! அந்த அம்மாள் என் அத்தை மீனா தான்!" என்றாள் சாவித்திரி. |