நாலாம் பாகம் : இளவேனில்

67. தியாகம்

     அந்தப் புகழ்பெற்ற வருஷத்தில் பாரத புண்ணிய பூமியில் நிகழ்ந்து வந்த அதிசயங்களைப்பற்றி முன் ஓர் அத்தியாயத்தில் கூறினோமல்லவா? அந்த அதிசயங்களில் எல்லாம் மகா அதிசயம், பாரத நாட்டின் நாரீமணிகள் அந்த வருஷத்தில் கண் விழித்தெழுந்த அற்புதமேயாகும். அதற்கு முன்னாலும் தேசத்தில், "ஸ்திரீகளுக்குச் சுதந்திரம் வேண்டும்", "பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்" என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அந்த வருஷத்தில் அந்த மாதர் உரிமைக் கிளர்ச்சி ஒரு புதிய ஸ்வரூபம் பெற்றது. அதற்கு அந்தப் புதிய ஸ்வரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான் தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

     அதுகாறும், பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன் வந்தவர்கள், "உங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்", "ஆண்களுடன் சம உரிமைக்காகச் சண்டை பிடியுங்கள்" என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள். இந்த உபதேசங்களைக் கேட்ட பாரதப் புதல்விகள் சிலர்,

     "கற்புநெறி யென்று சொல்ல வந்தார் - இரு
     கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"

என்றும்,

     "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
          பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
     எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
          இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்றும் சொல்லிப் பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.

     இத்தகைய மனப்பான்மை பரவிக் கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி தோன்றி, தேசத்துக்கு எல்லாத் துறைகளிலும் புதிய வழி காட்டினார். "உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும்; நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள்" என்று அவர் சொன்னார். "தேச சேவையில் ஈடுபடுங்கள்; சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள். விலங்கில் விடுதலையை அடையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். "தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள்; உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும்" என்று அவர் உறுதி கூறினார்.

     காந்தி மகானுடைய போதனைக்குப் பாரத நாட்டின் பெண்குலம் செவி சாய்த்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் தாய்நாட்டின் தொண்டில் ஈடுபட்டார்கள்; அவர்களில் பலர் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்; சிறை புகுந்தார்கள்; இன்னும் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.

     இதனால், சாதாரணமாய் நூறு வருஷத்தில் நடக்கக் கூடிய பெண்குலத்தின் முன்னேற்றம் இந்த ஒரே வருஷத்தில் ஏற்பட்டது. வேறு நாடுகளில் எத்தனையோ காலம் ஸ்திரீகள் ஆண் மக்களுடன் போராடி, சண்டை பிடித்துப் பெற்ற உரிமைகளையெல்லாம் பாரதப் பெண்கள் அநாயாசமாகப் பெற்றுவிட்டார்கள். ஆண்களுடன் சரி நிகர் சமானமாக நின்று தேச விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்க எவ்விதம் மறுக்க முடியும்?

     கோர்ட்டில் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், பொது ஜனங்களுடைய அநுதாபமெல்லாம் உமாராணியின் பக்கம் இருந்ததற்கு முக்கிய காரணம் மேற்கூறிய தேச நிலைமையேயாகும். இது உமாராணிக்கும் தெரியாமலில்லை. நாட்டில் நடந்து கொண்டிருந்த தேச விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்று சிறை புகுந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் உமாராணி அறிந்து தான் இருந்தாள். வழக்கில் தோற்றுப் போனால் என்ன செய்வது என்று அவளுடைய இருதய அந்தரங்கத்தில் தீர்மானம் செய்திருந்தாள்.

     வேண்டாத புருஷனுடன் சேர்ந்து வாழும்படி சட்டம் நிர்ப்பந்தப்படுத்தலாம்; கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளிக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் அமுலுக்குக் கொண்டு வர முடியுமா? அது முடியாமல் செய்யும் வழி தனக்குத் தெரியும்! தேச சேவிகையர் படையில் சேர்ந்து சிறை புகுந்துவிட்டால், சிறைக்குள்ளே வந்து தன்னைச் சட்டம் கட்டாயப்படுத்தாதல்லவா? "சிறைக்குள் சுதந்திரத்தைக் காணுங்கள்" என்று மகாத்மா காந்தி சொன்னது மற்றையோர் விஷயத்தில் உண்மையோ, என்னமோ, தன் விஷயத்தில் அது முற்றும் உண்மையாயிருக்கும் என்று அவள் உறுதி கொண்டாள். சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் கட்டுப்பட்டு, ஸ்ரீதரனுடன் கூடிவாழ்ந்தால் அதுதான் அடிமை வாழ்வு; அதுதான் கொடிய சிறை வாழ்க்கை. இதற்கு மாறாக, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகச் சிறை புகுந்தால், அந்தச் சிறை வாழ்க்கையே உண்மையான சுதந்திர வாழ்க்கையாகும்.

எனவே,

     'அடிமை வாழ்வில் ஆசை ஏனோ?
     விடுதலை பெற எழுவாய்!'

என்று தேச சேவிகையர் பாடிக் கொண்டு சென்றபோது, தன்னை பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு அவர்கள் அழைப்பதாகவே சாவித்திரிக்குத் தோன்றிற்று. அந்த அழைப்பை ஏற்று அவள் ஆரஞ்சு நிறக் கதர்ப்புடவை உடுத்திக் கிளம்பிச் சென்றதைச் சென்ற அத்தியாயத்தில் கூறினோம்.

     ஆனால் சாவித்திரி எதிர்பார்த்த நிர்ப்பந்த வாழ்க்கை உண்மையிலேயே அவளுக்கு வர இருந்ததா? கோர்ட்டுத் தீர்ப்பின்படி அவள் பிரியமில்லாத புருஷனுடன் கட்டாயமாகக் கூடி வாழ்ந்திருக்கும்படி நேரிட்டிருக்குமோ?

     இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொள்ள நாம் பாரத விலாஸ் ஹோட்டலில் ஸ்ரீதரனுடைய அறைக்குப் போக வேண்டியதாயிருக்கிறது.

     ஸ்ரீதரன் அப்போது ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அந்தக் கடிதத்தை எழுதுவதில் அவனுக்கு ரொம்பவும் சிரமம் ஏற்படுகிறதென்பது நன்றாய்த் தெரிந்தது. அடிக்கடி எழுதுவதை நிறுத்திவிட்டு ஆகாயத்தைப் பார்ப்பதும், பெருமூச்சு விடுவதும், எழுந்திருந்து நடப்பதுமாயிருந்தான். அவனுக்குப் பக்கத்தில், கீழே அநேக கடுதாசிகள் கசக்கப்பட்டுக் கிடந்தன. அவையெல்லாம் ஸ்ரீதரன் எழுத முயற்சித்து அவனுக்குத் திருப்தியில்லாமல் அரை குறையாக நிறுத்திக் கசக்கிப் போட்டவையேயாகும்.

     இப்போது, மேஜை மீது வைத்திருந்த காகிதத்தில், "சாவித்திரி, உனக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? என்ன சொன்னால்தான் நீ நம்பப் போகிறாய்?...ஆனால், உனக்காக நான் இதை எழுதவில்லை. குழந்தை சாருவுக்காக எழுதுகிறேன். உங்களைவிட்டுப் பிரிந்து போவதற்கு முன் குழந்தைக்கு ஒரு வார்த்தை சொல்லாமல் போக என் மனம் இடங் கொடுக்கவில்லை..." என்று எழுதியிருந்தது.

     அச் சமயத்தில் ஸ்ரீதரனுடைய பழைய சிநேகிதன் நாணா (நாராயணன், பி.ஏ.,பி.எல்.,) அறைக்குள் வந்தான். ஸ்ரீதரனுடைய முதுகில் தட்டிக் கொடுத்து "ஸ்ரீதரா! எப்போதும் நீ அதிர்ஷ்டக்காரண்டா!" என்றான்.

     பிறகு, நாற்காலியில் உட்கார்ந்து, ஒரு சிகரெட் எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு சொன்னான்: "ஸ்ரீதரா! உன்னை நான் ரொம்ப 'தாங்க்' பண்ணணும். இந்தக் கேஸிலே, நான் உனக்காக ஆஜரானதிலிருந்து என் பேர் பிரசித்தமாப் போச்சு. இந்த ஒரு வாரத்திலே எனக்கு ஆறு கேஸ் வந்திருக்கு. இரண்டு கிட்னாப்பிங் கேஸ்..."

     அதற்குள் ஸ்ரீதரன் எரிச்சலுடன், "ரொம்ப சரி! இப்போ எங்க வந்தே, அதைச் சொல்லித் தொலை!" என்றான்.

     "என்ன ரொம்பக் கோபமாயிருக்கே, ஸ்ரீதரா? எங்கே வந்தேன்னு கேக்கறயே? நம்ம பக்கந்தான் கேஸ் ஜயிச்சுடுத்தேன்னு சும்மா இருக்கக்கூடாது, தெரியுமோ இல்லையோ? சூட்டோ டு சூடா மேலே ஆகவேண்டியதுக்கு 'ஸ்டெப்ஸ்' எடுத்துக்கணும். நாளைக்கு ஒரு நோட்டீஸ் கொடுத்து வைக்கலாம்னு நினைக்கிறேன்" என்றான் நாணா.

     ஸ்ரீதரன் அப்போது ரௌத்ராகாரம் அடைந்தான் என்று சொல்லவேண்டும். அவனுடைய கோபத்துக்குத் தகுந்த வார்த்தைகள் இங்கிலீஷ் வார்த்தைகளாகத்தான் வந்தன. "ஷட் அப், யு இடியட்! கெட் அவுட், கெட் அவுட்!" என்று கத்தினான். கத்திக் கொண்டே நாணாவைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி அறைக்கு வெளியே கொண்டு விட்டான். நாணா, "என்னடா இது? திடீர்னு பைத்தியம் பிடிச்சுடுத்தா என்ன?" என்று சொல்லிக்கொண்டே மாடிப்படியில் வேகமாக இறங்கிச் சென்றான்.

     அவன் போனதும், ஸ்ரீதரன் மறுபடியும் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தான். தனக்குத் தானே பின் வருமாறு சொல்லிக் கொண்டான்: 'கேஸாம், ஜயமாம், இங்கே யாருக்கு வேணும்! சாவித்திரி! உன் பணத்துக்கு ஆசைப்பட்டுண்டு கேஸ் போட்டேன் என்று தானே நினைச்சே? நீ நினைச்சது தப்பு என்று இதோ காட்டுகிறேன், பார்! - நான் பழைய ஸ்ரீதரன் இல்லேன்னு சொன்னேன்; நீ நம்பலை - இன்னிக்குச் சாயங்காலம் நான் தேசத் தொண்டிலே சேர்ந்து ஜெயிலுக்குப் போய்ட்டேன்னு நீ கேள்விப்படற போதாவது நம்ப மாட்டாயா, பார்க்கலாம்!"

     இம்மாதிரி சொல்லிக் கொண்டே ஸ்ரீதரன் அன்று காலையில் தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த கதர் உடைகளை எடுத்து அணிந்து கொண்டான்.