உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
ஆரண்ய காண்டம் 8. மாரீசன் வதைப் படலம் மாரீசன் இராவணன் வந்த காரணத்தை வினவுதல் இருந்த மாரீசன், அந்த இராவணன் எய்தலோடும், பொருந்திய பயத்தன், சிந்தை பொருமுற்று வெருவுகின்றான், கருந் தட மலை அன்னானை எதிர்கொண்டு, கடன்கள் யாவும் திருந்திய செய்து, செவ்வித் திருமுகம் நோக்கிச் செப்பும். 1 'சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும், அந்தகனுக்கும், அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்! இந்த வனத்து, என் இன்னல் இருக்கைக்கு, எளியோரின் வந்த கருத்து என்? சொல்லுதி' என்றான் - மருள்கின்றான். 2 சீதையைக் கவர இராவணன் மாரீசனின் துணை வேண்டுதல் 'ஆனது அனைத்தும்; ஆவி தரித்தேன், அயர்கின்றேன்; போனது, பொற்பும்; மேன்மையும் அற்றேன், புகழோடும், யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி?' என்னா 'வானவருக்கும் நாண அடுக்கும் வசை மன்னோ?' 3 'வன்மை தரித்தோர் மானிடர்; மற்று அங்கு, அவர் வாளால் நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்; என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர் புன்மை, தெரிப்பின், வேறு இனி எற்றே? புகல்-வேலோய்! 4 'திருகு சினத்தார் முதிர மலைந்தார்; சிறியோர், நாள் பருகினர் என்றால், வென்றி நலத்தின் பழி அன்றோ? இரு கை சுமந்தாய்! இனிதின் இருந்தாய்! இகல் வேல் உன் மருகர் உலந்தார்; ஒருவன் மலைந்தான், வரி வில்லால். 5 'வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன், விளிகின்றேன்; ஒப்பு இலர் என்றே, போர் செயல் ஒல்லேன்; உடன் வாழும் துப்பு அழி செவ் வாய் வஞ்சியை வௌவ, துணை கொண்டிட்டு, இப் பழி நின்னால் தீரிய வந்தேன், இவண்' என்றான். 6 மாரீசன் இராவணனுக்கு அறிவுரை பகர்தல் இச் சொல் அனைத்தும் சொல்லி, அரக்கன், எரிகின்ற கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன், 'சிச்சி' என, தன் மெய்ச் செவி பொத்தி, தெருமந்தான்; அச்சம் அகற்றி, செற்ற மனத்தோடு அறைகின்றான்; 7 'மன்னா! நீ உன் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய் உன்னால் அன்று ஈது; ஊழ்வினை என்றே உணர்கின்றேன்; இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம்' என்னா, சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம். 8 'அற்ற கரத்தொடு, உன் தலை நீயே அனல் முன்னில் பற்றினை உய்த்தாய்; பற்பல காலம் பசி கூர உற்று, உயிர் உள்ளே தேய, உலந்தாய்; பினை அன்றோ பெற்றனை செல்வம்? பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ? 9 'திறத் திறனாலே, செய் தவம் முற்றித் திரு உற்றாய், மறத் திறனாலோ? சொல்லுதி-சொல் ஆய் மறை வல்லோய்!- அறத் திறனாலே எய்தினை அன்றோ? அது, நீயும் புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ? 10 'நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடை அல்லா வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும் தாரம் கொண்டார், என்ற இவர் தம்மைத் தருமம் தான் ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! 11 'அந்தரம் உற்றான், அகலிகை பொற்பால் அழிவுற்றான்; இந்திரன் ஒப்பார், எத்தனையோர் தாம் இழிவுற்றார்? செந் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்; மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய், மதி அற்றாய். 12 'செய்தாயேனும், தீவினையோடும் பழி அல்லால் எய்தாது, எய்தாது, எய்தின், இராமன், உலகு ஈன்றான், வைதால் அன்ன வாளிகள் கொண்டு, உன் வழியோடும் கொய்தான் அன்றே, கொற்றம் முடித்து, உன் குழு எல்லாம்? 13 'என்றால், என்னே? எண்ணலையே நீ, கரன் என்பான், நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை? அம்மா! தன் தானைத் திண் தேரொடும் மாளத் தனு ஒன்றால் கொன்றான்; முற்றும் கொல்ல, மனத்தில் குறிகொண்டான். 14 'வெய்யோர் யாரே, வீர விராதன் துணை வெய்யோர்? ஐயோ! போனான், அம்பொடும், உம்பர்க்கு அவன் என்றால், உய்வார் யாரே நம்மில் எனக் கொண்டு, உணர்தோறும், நையாநின்றேன்; நீ இது உரைத்து நலிவாயோ? 15 'மாண்டார், மாண்டார்; நீ இனி மாள்வார் தொழில் செய்ய வேண்டா, வேண்டா; செய்திடின், உய்வான் விதி உண்டோ? ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன்? அறம் நோனார் ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்? எல்லாம் இலர் அன்றோ? 16 'எம்பிக்கும் என் அன்னைதனக்கும் இறுதிக்கு ஓர் அம்பு உய்க்கும் போர் வில்லிதனக்கும், அயல் நிற்கும் தம்பிக்கும், என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்; கம்பிக்கும் என் நெஞ்சு, அவன் என்றே; கவல்கின்றேன். 17 '"நின்றும், சென்றும், வாழ்வன யாவும் நிலையாவால்; பொன்றும்" என்னும் மெய்ம்மை உணர்ந்தாய்; புலை ஆடற்கு ஒன்றும் உன்னாய்; என் உரை கொள்ளாய்; உயர் செல்வத்து, என்றும், என்றும், வைகுதி; ஐயா! இனி; என்றான். 18 இராவணன் சினந்து உரைத்தல் '"கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித் தோள் இங்கு ஓர் மனிதற்கு எளிய" என்றனை' என, தன் வெங் கண் எரிய, புருவம் மீதுற, விடைத்தான். 19 'நிகழ்ந்ததை நினைத்திலை; என் நெஞ்சின் நிலை, அஞ்சாது இகழ்ந்தனை; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை, ஐயா! புகழ்ந்தனை; தனிப் பிழை; பொறுத்தனென் இது' என்றான். 20 மீண்டும் மாரீசன் உரைத்தல் தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான், 'உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்; என்னை முனிவுற்றிலை; இது என்?' என இசைத்தான். 21 'எடுத்த மலையே நினையின், "ஈசன், இகல் வில்லாய் வடித்த மலை, நீ இது, வலித்தி" என, வாரிப் பிடித்த மலை, நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற மலை அன்றோ? 22 'யாதும் அறியாய்; உரை கொளாய்; இகல் இராமன் கோதை புனையாமுன், உயிர் கொள்ளைபடும் அன்றே; பேதை மதியால், 'இஃது ஓர் பெண் உருவம்" என்றாய்; சீதை உருவோ? நிருதர் தீவினை அது அன்றோ? 23 '"உஞ்சு பிழையாய் உறவினோடும்" என உன்னா, நெஞ்சு பறைபோதும்; அது நீ நினையகில்லாய்; அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து அருகு நின்றார், நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" எனலும் நன்றோ? 24 'ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும், மற்றைத் தேசம் முதல் முற்றும், ஓர் இமைப்பின் உயிர் தின்ப- கோசிகன் அளித்த கடவுட் படை, கொதிப்போடு ஆசு இல, கணிப்பு இல, இராமன் அருள் நிற்ப. 25 'வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்; தீது உரை செய்தாய்; இனைய செய்கை சிதைவு அன்றோ? மாதுலனும் ஆய், மரபின் முந்தை உற வந்தேன், ஈது உரை செய்தேன்; அதனை, எந்தை! தவிர்க' என்றான். 26 மறுத்தால் உன்னை ஒழிப்பேன் என இராவணன் மாரீசனிடம் கூறல் என்ன, உரை இத்தனையும், எத்தனையும் எண்ணிச் சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்; 'அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்; உன்னை, ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ? 27 'திக்கயம் ஒளிப்ப, நிலை தேவர் கெட, வானம் புக்கு, அவர் இருக்கை புகைவித்து, உலகம் யாவும் சக்கரம் நடத்தும் எனையோ, தயரதன் தன் மக்கள் நலிகிற்பர்? இது நன்று வலி அன்றோ? 28 'மூஉலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன்; மேவலர் கிடைக்கின், இதன்மேல் இனியது உண்டோ? ஏவல் செயகிற்றி, எனது ஆணை வழி, எண்ணிக் காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ? 29 'மறுத்தனை எனப் பெறினும், நின்னை வடி வாளால் ஒறுத்து, மனம் உற்றது முடிப்பென்; ஒழிகல்லேன்; வெறுப்பன கிளத்தலும் இத் தொழிலை விட்டு, என் குறிப்பின் வழி நிற்றி, உயிர்கொண்டு உழலின்' என்றான். 30 மாரீசன் உடன்படல் அரக்கன் அஃது உரைத்தலோடும், அறிந்தனன் அடங்கி, "நெஞ்சம் தருக்கினர் கெடுவர்" என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ? "செருக்குநர்த் தீர்த்தும்" என்பார்தம்மின் ஆர் செருக்கர்?" என்னா, உருக்கிய செம்பின் உற்ற நீர் என, உரைக்கலுற்றான்: 31 'உன் வயின் உறுதி நோக்கி, உண்மையின் உணர்த்தினேன்; மற்று, என் வயின் இறுதி நோக்கி, அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்; நன்மையும் தீமை அன்றே, நாசம் வந்து உற்ற போது? புன்மையின் நின்ற நீராய்! செய்வது புகல்தி' என்றான். 32 இராவணனின் சூழ்ச்சி என்றலும், எழுந்து புல்லி, ஏறிய வெகுளி நீங்கி, 'குன்று எனக் குவிந்த தோளாய்! மாரவேள் கொதிக்கும் அம்பால் பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ? தென்றலைப் பகையைச் செய்த சீதையைத் தருதி' என்றான். 33 ஆண்டையான் அனைய கூற, 'அரக்கர் ஓர் இருவரோடும், பூண்ட என் மானம் தீரத் தண்டகம் புக்க காலை, தூண்டிய சரங்கள் பாய, துணைவர் பட்டு உருள, அஞ்சி மீண்ட யான், சென்று செய்யும் வினை என்கொல்? விளம்புக!' என்றான். 34 ஆயவன் அனைய கூற, அரக்கர் கோன், 'ஐய! நொய்து உன் தாயை ஆர் உயிர் உண்டானை, யான் கொலச் சமைந்து நின்றேன்! போய், ஐயா! புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ? மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை' என்றான். 35 'புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத் திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்; அறத்து உளதுஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன் மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன மாரீசன் சொன்னான். 36 ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன், 'அவரை வெல்லத் தானையும் வேண்டுமோ? என் தடக் கை வாள் தக்கது அன்றோ? ஏனையர் இறக்கின், தானும் தமியளாய் இறக்கும் அன்றே மானவள்? ஆதலாலே, மாயையின் வலித்தும்' என்றான். 37 'தேவியைத் தீண்டாமுன்னம், இவன் தலை சரத்தின் சிந்திப் போம் வகை புணர்ப்பன் என்று, புத்தியால் புகல்கின்றேற்கும் ஆம் வகை ஆயிற்று இல்லை; ஆர் விதி விளைவை ஓர்வார்? ஏவிய செய்வது அல்லால், இல்லை வேறு ஒன்று' என்று, எண்ணா. 38 'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? இயம்புக?' என்றான், 'பொன்னின் மான் ஆகிப் புக்கு, பொன்னை மால் புணர்த்துக' என்ன, 'அன்னது செய்வென்' என்னா, மாரீசன் அமைந்து போனான்; மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு ஒரு நெறியில் போனான். 39 மாரீசனின் எண்ணமும் செயலும் மேல்நாள் அவர் வில் வலி கண்டமையால், தான் ஆக நினைந்து சமைந்திலனால், 'மான் ஆகுதி' என்றவன் வாள் வலியால், போனான் மனமும், செயலும் புகல்வாம். 40 வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர் நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான் நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால். 41 அக் காலமும், வேள்வியின், அன்று தொடர்ந்து இக் காலும், நலிந்தும் ஓர் ஈறு பெறான்; முக் காலின் முடிந்திடுவான் முயல்வான் புக்கான் அவ் இராகவன் வைகு புனம். 42 மாரீசன் பொன்மானாய்ப் போதல் தன் மானம் இலாத, தயங்கு ஒளி சால் மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் பொன் மான் உருவம் கொடு போயினனால்- நன் மான் அனையாள்தனை நாடுறுவான். 43 கலைமான் முதல் ஆயின கண்ட எலாம், அலை மானுறும் ஆசையின், வந்தனவால்- நிலையா மன, வஞ்சனை, நேயம் இலா விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே. 44 பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் நையா இடை நோவ நடந்தனளால்- வைதேவி, தன் வால் வளை மென் கை எனும் கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள். 45 உண்டாகிய கேடு உடையார், துயில்வாய் எண் தானும் இயைந்து இயையா உருவம் கண்டார் எனலாம் வகை, கண்டனவால்- பண்டு ஆரும் உறா இடர்படறுவாள். 46 காணா இது, கைதவம் என்று உணராள் பேணாத நலம்கொடு பேணினளால்- வாழ்நாள் அவ் இராவணன் மாளுதலால், வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால். 47 மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அணுகுதல் நெற்றிப் பிறையாள் முனம் நின்றிடலும், முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள், 'பற்றித் தருக என்பென்' எனப் பதையா, வெற்றிச் சிலை வீரனை மேவினளால். 48 'ஆணிப் பொனின் ஆகியது; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது; திண் செவி, கால், மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்; காணத் தகும்' என்றனள், கை தொழுவாள். 49 'இம் மான் இந் நிலத்தினில் இல்லை' எனா, எம்மான் இதனைச் சிறிது எண்ணல் செயான், செம் மானவள் சொல்கொடு, தே மலரோன் அம்மானும், அருத்தியன் ஆயினனால். 50 இலக்குவன் மாய மான் அது என உரைத்தல் ஆண்டு, அங்கு, இளையான் உரையாடினனால் 'வேண்டும் எனலாம் விழைவு அன்று இது' எனா; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய்! அது நாம் காண்டும்' எனும் வள்ளல் கருத்து உணர்வான். 51 'காயம், கனகம்; மணி, கால், செவி, வால்; பாயும் உருவோடு இது பண்பு அலவால்; மாயம் எனல் அன்றி, மனக் கொளவே ஏயும்? இறை மெய் அல' என்ற அளவே. 52 'இவ்வாறு இருக்கலாகாதோ" என இராமன் வினவுதல் 'நில்லா உலகின் நிலை, நேர்மையினால் வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம் பல் ஆயிரகோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை-இளங் குமரா! 53 'என் என்று நினைத்தது, இழைத்து உளம்? நம் கன்னங்களின் வேறு உள காணுதுமால்; பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ் அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ? 54 'முறையும் முடிவும் இலை, மொய் உயிர்' என்று, இறைவன் இளையானொடு இயம்பினனால்; 'பறையும் துணை, அன்னது பல் நெறி போய் மறையும் என, ஏழை வருந்தினளால். 55 இராமன் சீதையுடன் சென்று மானைக் காணுதல் அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக் குன்றம் அன்னான், 'புனையிழை! காட்டு அது' என்று போயினான்; பொறாத சிந்தைக் கனை கழல் தம்பி பின்பு சென்றனன், கடக்க ஒண்ணா வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே. 56 நோக்கிய மானை நோக்கி, நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; 'நன்று இது' என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்றோ? அன்னது பழுது போமோ? 57 'என் ஒக்கும் என்னல் ஆகும்? இளையவ! இதனை நோக்காய்; தன் ஒக்கும் உவமை அல்லால், தனை ஒக்கும் உவமை உண்டோ? பல், நக்க தரளம் ஒக்கும், பசும் புல்மேல் படரும் மெல் நா மின் ஒக்கும்; செம் பொன், மேனி; வெள்ளியின் விளங்கும் புள்ளி. 58 'வரி சிலை மறை வலோனே! மான் இதன் வடிவை, உற்ற அரிவையர், மைந்தர், யாரே ஆதரம் கூர்கிலாதார்? உருகிய மனத்த ஆகி, ஊர்வன, பறப்ப, யாவும் விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய்!' 59 ஆரியன அனைய கூற, அன்னது தன்னை நோக்கி, 'சீரியது அன்று இது' என்று, சிந்தையில் தெளிந்த தம்பி, 'காரியம் என்னை, ஈண்டுக் கண்டது கனக மானேல்? வேரி அம் தெரியல் வீர! மீள்வதே மேன்மை' என்றான். 60 அற்று அவன் பகராமுன்னம், அழகனை, அழகியாளும் 'கொற்றவன் மைந்த! மற்றைக் குழைவுடை உழையை, வல்லை பற்றினை தருதி ஆயின், பதியிடை அவதி எய்தப் பெற்றுழி, இனிது உண்டாடப் பெறற்கு அருந் தகைமைத்து' என்றாள். 61 மான் குறித்து இராம-இலக்குவரின் மாறுபாடு ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரைசெய்ய, ஐயன், 'செய்வென்' என்று அமைய, நோக்கத் தெளிவுடைத் தம்பி செப்பும்; 'வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த கைதவ மான் என்று, அண்ணல்! காணுதி கடையின்' என்றான். 62 'மாயமேல், மடியும் அன்றே வாளியின்; மடிந்தபோது காய் சினத்தவரைக் கொன்று உடன் கழித்தோமும் ஆதும்; தூயதேல், பற்றிக் கோடும்; சொல்லிய இரண்டின் ஒன்று தீயதே? உரைத்தி' என்றான்-தேவரை இடுக்கண் தீர்ப்பான். 63 'பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம்; பிடித்த மாயம் என் என்றும் தெளிதல் தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்; முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல், பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ் உடைத்தாம் அன்று' என்றான். 64 'பகையுடை அரக்கர் என்றும், பலர் என்றும், பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல் நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின் நன்று இது' என்னா, தகையுடைத் தம்பிக்கு, அந் நாள், சதுமுகன் தாதை சொன்னான். 65 'அடுத்தவும் எண்ணிச் செய்தல், அண்ணலே! அமைதி அன்றோ? விடுத்து, இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும், வில்லால் தொடுத்த வெம் பகழி தூவித் தொடர்ந்தனென், விரைந்து சென்று படுக்குவென்; அது அன்று ஆயின், பற்றினென் கொணர்வென்' என்றான். 66 ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய வாயிடை, மழலை இன் சொல் கிளியினின் குழறி, மாழ்கி, 'நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்' என்னா, சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். 67 இளையவனை இருத்தி, இராமன் மான் பின் செல்லல் போனவள் புலவி நோக்கி, புரவலன், 'பொலன் கொள் தாராய்! மான் இது நானே பற்றி, வல்லையின் வருவென், நன்றே; கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி' என்னா, வேல் நகு சரமும், வில்லும், வாங்கினன் விரையலுற்றான். 68 'முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான்; அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன், இதனை; ஐய! இன்னமும் காண்டி; வாழி, ஏகு' என, இரு கை கூப்பி, பொன் அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே. 69 மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்துக் கொள்ளான்; சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி, சிந்துரப் பவளச் செவ்வாய் முறுவலன், சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான், அம் மானினைத் தொடரலுற்றான். 70 மிதித்தது மெல்ல மெல்ல; வெறித்தது வெருவி; மீதில் குதித்தது; செவியை நீட்டி, குரபதம் உரத்தைக் கூட்டி, உதித்து எழும் ஊதை, உள்ளம், என்று இவை உருவச் செல்லும் கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே. 71 நீட்டினான், உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்; மீட்டும் தாள் நீட்டற்கு, அம்மா! வேறும் ஓர் அண்டம் உண்டோ? ஓட்டினான், தொடர்ந்த தன்னை, ஒழிவு அற நிறைந்த தன்மை, காட்டினான் அன்றி, அன்று, அக் கடுமை யார் கணிக்கற்பாலார்? 72 குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! 73 'காயம் வேறு ஆகி, செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே? ஏயுமே; என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே, ஆயுமேல் உறுதல் செல்லாம்; ஆதலால், அரக்கர் செய்த மாயமே ஆயதே; நான் வருந்தியது' என்றான் -வள்ளல். 74 இராமன் அம்புக்கு மாரீசன் வீழ்தல் 'பற்றுவான், இனி, அல்லன்; பகழியால் செற்று, வானில் செலுத்தல் உற்றான்' என மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா, உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான். 75 அக் கணத்தினில், ஐயனும், வெய்ய தன் சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர், செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் - 'புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு' எனா. 76 நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் பட்டது; அப்பொழுதே, பகு வாயினால், அட்ட திக்கினும், அப்புறமும் புக விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன். 77 இராமன் சாலைக்கு விரைதல் வெய்யவன், தன் உருவோடு வீழ்தலும், 'செய்யது அன்று' எனச் செப்பிய தம்பியை, 'ஐயன் வல்லன்; என் ஆர் உயிர் வல்லன் நான் உய்ய வந்தவன் வல்லன்' என்று உன்னினான். 78 ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அந் நீசன் மேனியை, நின்று உற நோக்கினான்; மாசு இல் மா தவன் வேள்வியில் வந்த மா- ரீசனே இவன் என்பதும் தேறினான். 79 'புழைத்த வாளி உரம் புக, புல்லியோன், இழைத்த மாயையின், என் குரலால் எடுத்து அழைத்தது உண்டு; அது கேட்டு அயர்வு எய்துமால், மழைக் கண் ஏழை' என்று, உள்ளம் வருந்தினான். 80 'மாற்றம் இன்னது, "மாய மாரீசன்" என்று, ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது ஆற்றல் தேரும் அறிவினன்; ஆதலால், தேற்றுமால் இளையோன்' எனத் தேறினான். 81 'மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்; சூழ்வது ஓர் பொருள் உண்டு; இவன் சொல்லினால் மூள்வது ஏதம்; அது முடியாமுனம் மீள்வதே நலன்' என்று, அவன் மீண்டனன். 82 மிகைப் பாடல்கள் ஆயிரம் கடல் கையுடையானை மழு வாளால் 'ஏ' எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் மேய விறல் முற்றும் வரி வெஞ் சிலையினோடும் தாயவன் வலித் தகைமை யாம் உறு தகைத்தோ. 25-1 |