உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
ஆரண்ய காண்டம் 10. சடாயு உயிர் நீத்த படலம் இராவணனை கழுகு அரசன் சடாயு எதிர்த்தல் என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா, 'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன் மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும் பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 1 பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று பூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி, ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும் ஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 2 சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல் மேகமும் விண்ணின் மீச்செல்ல, 'மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என, நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. 3 யானையும், யாளியும், முதல யாவையும், கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால், வானமும் கானமும் மாறு கொள்ளவே. 4 'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர் வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா, பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 5 வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான் எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்; சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். 6 சடாயு சீதையிடம் அஞ்சவேண்டாம் எனக் கூறி, இராவணனுக்கு
அறிவுரை கூறுதல் ஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்' எனா, தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான், மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய், மீண்டுற்று உரையாடலை மேயினனால்; 7 'கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம் சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ பட்டாய் எனவே கொடு பத்தினியை விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். 8 'பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் மாதா அனையாளை மனக்கொடு, நீ யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்? ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? 9 'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை மெய்யாக இராமன் விருந்திடவே, கை ஆர முகந்து கொடு, அந்தகனார், ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? 10 'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல் விடும் உண்டை கடாவ விரும்பினையே? அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன் கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்! 11 'எல்லா உலகங்களும், இந்திரனும், அல்லாதவர் மூவரும், அந்தகனும், புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? 12 'இம்மைக்கு, உறவோடும் இறந்தழியும் வெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்; அம்மைக்கு, அரு மா நரகம் தருமால்; எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ? 13 'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம் அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால், எத் தேவரோடு எண்ணுவது? எண்ணம் இலாய்! பித்தேறினை ஆதல் பிழைத்தனையால். 14 'புரம் பற்றிய போர் விடையோன் அருளால் வரம் பெற்றவும், மற்று உள விஞ்சைகளும், உரம் பெற்றன ஆவன-உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடும் தனையே. 15 'வான் ஆள்பவன் மைந்தன், வளைத்த விலான், தானே வரின், நின்று தடுப்பு அரிதால்; நானே அவண் உய்ப்பென், இந் நன்னுதலை; போ, நீ கடிது' என்று புகன்றிடலும். 16 இராவணன் சீதையை விட மறுத்தல் கேட்டான் நிருதர்க்கு இறை, கேழ் கிளர் தன் வாள் தாரை நெருப்பு உக, வாய் மடியா, 'ஓட்டாய்; இனி நீ உரை செய்குநரைக் காட்டாய் கடிது' என்று, கனன்று உரையா. 17 'வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப் பெரும் புண் திறவாவகை பேருதி நீ; இரும்பு உண்ட நீர் மீளினும், என்னுழையின் கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்'. 18 சடாயு சீதைக்கு அபயம் அளித்தல் என்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த, அன்னம் அயர்கின்றது நோக்கி, 'அரக்கன் ஆக்கை சின்னம் உறும் இப்பொழுதே; 'சிலை ஏந்தி, நங்கள் மன்னன் மகன் வந்திலன்' என்று, வருந்தல்; அன்னை! 19 'முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ, தத்துற்று, அயரேல்; தலை, தால பலத்தின் ஏலும் கொத்து ஒப்பன கொண்டு, இவன் கொண்டன என்ற ஆசை பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி' என்றான். 20 சடாயு நிகழ்த்திய பெரும் போர் இடிப்பு ஒத்த முழக்கின், இருஞ் சிறை வீசி எற்றி, முடிப் பத்திகளைப் படி இட்டு, முழங்கு துண்டம் கடிப்பக் கடிது உற்றவன், காண்தகும் நீண்ட வீணைக் கொடிப் பற்றி ஒடித்து, உயர் வானவர் ஆசி கொண்டான். 21 அக் காலை, அரக்கன், அரக்கு உருக்கு அன்ன கண்ணன், எக் காலமும், இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் நக்கான், உலகு ஏழும் நடுங்கிட, நாகம் அன்ன கைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். 22 சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி மண்ட, சிறகால் அடித்தான் சில; வள் உகீரால் கண்டப்படுத்தான் சில; காலனும் காண உட்கும் துண்டப் படையால், சிலை துண்ட துண்டங்கள் கண்டான். 23 மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம் வாட்டும் கலுழன் என, வன் தலை பத்தின் மீதும் நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால் கோட்டும் அளவில், மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். 24 எழுந்தான் தட மார்பினில், ஏழினொடு ஏழு வாளி அழுந்தாது கழன்றிடப் பெய்து, எடுத்து ஆர்த்து, அரக்கன் பொழிந்தான், புகர் வாளிகள் மீளவும்; 'போர்ச் சடாயு விழுந்தான்' என, அஞ்சினர், விண்ணவர் வெய்து உயிர்த்தார். 25 புண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன், மண்ணில், கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்- கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று, மீள விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான். 26 ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி, மூக்கால் கொத்தா, நகத்தால் குடையா, சிறையால் புடையா, முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். 27 அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் தட மார்பில்; செறித்தலும், தேவர் அஞ்சி வெறித்தார்; வெறியாமுன், இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் பறவைக்கு இறை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 28 எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும், மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி, வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் - சொல் இட்டு அவன் தோள் வலி, யார் உளர் சொல்ல வல்லார்? 29 மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட, வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி, தாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத் தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன். 30 ஞாலம் படுப்பான், தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் மூலம் ஒடிப்புண்டது கண்டு, முனிந்த நெஞ்சன், ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான், மறம் தோற்றிலாதான். 31 'ஆற்றான் இவன் என்று உணராது, எனது ஆற்றல் காண்' என்று ஏற்றான் எருவைக்கு இறை, முத்தலை எஃகம், மார்பில்; மேல் தான் இது செய்பவர் யார்?' என, விண்ணுளோர்கள் தோற்றாது நின்றார், தம் தோள்புடை கொட்டி ஆர்த்தார். 32 பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும் இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும், தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த மென் நோக்கியர் நோக்கமும், ஆம் என மீண்டது அவ் வேல். 33 வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன், மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப் பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான். 34 எறிந்தான் தனை நோக்கி, இராவணன், நெஞ்சின் ஆற்றல் அறிந்தான்; முனிந்து, ஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி, பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழ, புடைத்தான்; மறிந்தான் எருவைக்கு இறை, மால் வரை போல மண்மேல். 35 மண்மேல் விழுந்தான் விழலோடும், வயங்கு மான் தேர் கண்மேல் ஒளியும் தொடராவகை, தான் கடாவி, விண்மேல் எழுந்தான்; எழ மெல்லியலாளும், வெந் தீ புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்போல், புரண்டாள். 36 கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்; 'அழுந்தேல் அவலத்திடை; அஞ்சலை அன்னம்!' என்னா, எழுந்தான்; உயிர்த்தான்; 'அட! எங்கு இனிப் போவது?' என்னா, விழுந்தான் அவன் தேர் மிசை, விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. 37 பாய்ந்தான்; அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்; எய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித் தீய்ந்து ஆசு அற வீசி, அத் திண் திறல் துண்ட வாளால் காய்ந்தான்; கவர்ந்தான் உயிர்; காலனும் கைவிதிர்த்தான். 38 திண் தேர் அழித்து, ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி விண்தான் மறைப்பச் செறிகின்றன, வில் இலாமை, மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின், வச்சைமாக்கள் பண்டாரம் ஒக்கின்றன, வள் உகிரால் பறித்தான். 39 மாச் சிச்சிரல் பாய்ந்தென, மார்பினும் தோள்கள்மேலும் ஓச்சி, சிறகால் புடைத்தான்; உலையா விழுந்து மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்; 'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?' எனப் புகன்றான். 40 அவ் வேலையினே முனிந்தான்; முனிந்து ஆற்றலன்; அவ் வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்; 'இவ் வேலையினே, இவன் இன் உயிர் உண்பென்' என்னா, செவ்வே, பிழையா நெடு வாள் உறை தீர்த்து, எறிந்தான். 41 இராவணன் தெய்வ வாள் எறிய சடாயு வீழ்தல் வலியின் தலை தோற்றிலன்; மாற்ற அருந் தெய்வ வாளால் நலியும் தலை என்றது அன்றியும், வாழ்க்கை நாளும் மெலியும் கடை சென்றுளது; ஆகலின், விண்ணின் வேந்தன் குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின், வீழ்ந்தான். 42 சீதை துயர்க்கடலில் ஆழ்தல் விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன், மண்ணின்; விண்ணோர் இரிந்தார்; 'இழந்தாள் துணை' என்ன, முனிக் கணங்கள் பரிந்தார்; படர் விண்டுவின் நாட்டவர் பைம் பொன் மாரி சொரிந்தார்; அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள். 43 வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து, மிக்கான்; தொள்கின் தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள், உள்கும்; உயிர்க்கும்; உயங்கும்; ஒரு சார்வு காணாள், கொள் கொம்பு ஒடிய, கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள். 44 'வன் துணை, உளன் என வந்த மன்னனும் பொன்றினன், எனக்கு இனிப் புகல் என்?' என்கின்றாள்; இன் துணை பிரிந்து, இரிந்து, இன்னல் எய்திய அன்றில் அம் பெடை என அரற்றினாள் அரோ. 45 'அல்லல் உற்றேனை, வந்து, "அஞ்சல்" என்ற, இந் நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே? வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம்?' என, இரங்கி ஏங்கினாள். 46 'நாண் இலேன் உரைகொடு நடந்த நம்பிமீர்! நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் ஆணியை, உந்தையர்க்கு அமைந்த அன்பனை, காணிய வம்' என, கலங்கி விம்மினாள். 47 'கற்பு அழியாமை என் கடமை; ஆயினும் பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் வில் பழியுண்டது, வினையினேன் வந்த இல் பழியுண்டது' என்று, இரங்கி ஏங்கினாள். 48 'எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்! சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை நல் இயல் அருங் கடன் கழித்த நம்பியைப் புல்லுதியோ?' என, பொருமிப் பொங்கினாள். 49 வான் வழி அரக்கன் ஏகல் ஏங்குவாள் தனிமையும், இறகு இழந்தவன் ஆங்குறு நிலைமையும், அரக்கன் நோக்கினான்; வாங்கினன், தேரிடை வைத்த மண்ணொடும், வீங்கு தோள்மீக் கொடு, விண்ணின் ஏகினான். 50 விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால், கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள், உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள்; மண்ணிடை, தன்னையும் மறந்து, சாம்பினாள். 51 இனி என்ன ஆகுமோ என எண்ணி சடாயு இரங்கல் ஏகினன் அரக்கனும், எருவை வேந்தனும் மோக வெந் துயர் சிறிது ஆறி, முன்னியே மாகமே நோக்கினென்; வஞ்சன் வல்லையில் போகுதல் கண்டு, அகம் புலர்ந்து சொல்லுவான்; 52 'வந்திலர் மைந்தர்தாம்; "மருகிக்கு எய்திய வெந் துயர் துடைத்தனென்" என்னும் மெய்ப் புகழ் தந்திலர், விதியினார்; தரும வேலியைச் சிந்தினர்; மேல் இனிச் செயல் என் ஆம்கொலோ? 53 'வெற்றியர் உளர் எனின், மின்னின் நுண் இடைப் பொன்-தொடிக்கு இந் நிலை புகுதற்பாலதோ? உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்; சிற்றவை வஞ்சனை, முடியச் செய்ததோ? 54 'பஞ்சு அணை பாம்பணை ஆகப் பள்ளி சேர் அஞ்சனவண்ணனே இராமன்; ஆதலால், வெஞ் சின அரக்கனால் வெல்லற்பாலனோ? வஞ்சனை இழைத்தனன், கள்ள மாயையால். 55 'வேர் அற அரக்கரை வென்று, வெம் பழி தீரும், என் சிறுவனும், தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன், நல் மலர்ப் பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால். 56 பருஞ் சிறை இன்னன பன்னி உன்னுவான், 'அருஞ் சிறை உற்றனள் ஆம்' எனா, மனம்; 'பொரும் சிறை அற்றதேல், பூவை கற்பு எனும் இருஞ் சிறை அறாது' என, இடரின் நீங்கினான். 57 அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும், 'வஞ்சியை மீட்டிலென்' என்னும் மானமும், செஞ்செவே மக்கள்பால் சென்ற காதலும், நெஞ்சுற, துயின்றனன் உணர்வு நீங்கலான். 58 சீதை சிறையுறல் வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய், செஞ்செவே திரு உருத் தீண்ட அஞ்சுவான், நஞ்சு இயல் அரக்கியர் நடுவண், ஆயிடை, சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத்தான் அரோ. 59 எதிர்பாராத வகையில் இராம இலக்குவர் சந்தித்தல் இந் நிலை இளையவன் செயல் இயம்பினாம்; 'பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய மன் நிலை அறிக' என, மங்கை ஏவிய பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ. 60 ஒரு மகள் தனிமையை உன்னி, உள் உறும் பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான், பெருமகன் தனைத் தனிப் பிரிந்து பேதுறும் திரு நகர்ச் செல்லும் அப் பரதன் செய்கையான். 61 தெண் திரைக் கலம் என விரைவில் செல்கின்றான்; புண்டரீகத் தடங்காடு பூத்து, ஒரு கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான் தனைக் கண்டனன்; மனம் எனக் களிக்கும் கண்ணினான். 62 'துண்ணெனும் அவ் உரை தொடர, தோகையும் பெண் எனும் பேதைமை மயக்க, பேதினால் உள் நிறை சோரும்' என்று, ஊசலாடும் அக் கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ. 63 புன் சொற்கள் தந்த பகுவாய் அரக்கன் உரை பொய் எனாது, புலர்வாள் வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ, நிலை தேர வந்த மருளோ? தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு, தனியே, என் சொல் கடந்து, மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே. 64 என்று உன்னி, 'என்னை விதியார் முடிப்பது?' என எண்ணி நின்ற இறையை, பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த, விரைவோடு புல்லி, உருகா- நின்று, 'உன்னி வந்த நிலை என்கொல்?' என்று, நெடியோன் விளம்ப, நொடிவான். 65 'இல்லா, நிலத்தின் இயையாத, வெஞ் சொல் எழ, வஞ்சி எவ்வமுற, யான் "வல் வாய் அரக்கன் உரை ஆகும்" என்ன, மதியாள், மறுக்கம் உறுவாள் "நில்லாது மற்று இது அறி, போதி" என்ன, நெடியோய் புயத்தின் வலி என் சொல்லால் மனத்தின் அடையாள், சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள். 66 '"ஏகாது நிற்றிஎனின், யான் நெருப்பின் இடை வீழ்வென்" என்று, முடுகா, மா கானகத்தினிடை ஓடலோடும், மனம் அஞ்சி, வஞ்ச வினையேன் போகாது இருக்கின், இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா, ஆகாது இறக்கை; அறன் அன்று; எனக்கொடு, இவண் வந்தது' என்ன, அமலன். 67 'சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது; அதையோ, தடுக்க முடியாது; ஆஆ! அலக்கண் உறுவாள், உரைத்த பொருளோ, அகத்தின் அடையாள்; காவா நிலத்தின் வரும் ஏதம்; மற்று அது ஒழியாது; கைக்கொடு அகலப் போவார், பிரிக்க முயல்வார், புணர்ந்த பொருள் ஆம் இது' என்று தெருளா. 68 'வந்தாய் திறத்தில் உளதன்று, குற்றம்; மடவாள் மறுக்கம் உறுவாள், சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்; முந்தே தடுக்க, ஒழியாது, எடுத்த வினையேன் முடித்த முடிவால், அந்தோ கெடுத்தது' என, உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான். 69 'பாணிக்க நின்று பயன் ஆவது என்னை? பயில் பூவை அன்ன குயிலைக் காணின், கலந்த துயர் தீரும்; அன்றி அயல் இல்லை' என்று, கடுகி, சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று, சிலை வாளி அன்ன விசை போய், ஆணிப் பசும் பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா. 70 இராமனின் திகைப்பு ஓடி வந்தனன்; சாலையில், சோலையின் உதவும் தோடு இவர்ந்த பூஞ் சுரி குழலாள்தனைக் காணான்; கூடு தன்னுடையது பிரிந்து, ஆர் உயிர், குறியா, தேடி வந்து, அது கண்டிலது ஆம் என, நின்றான். 71 கைத்த சிந்தையன், கனங் குழை அணங்கினைக் காணான்- உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான்; உதவ வைத்த மா நிதி, மண்ணொடும் மறைந்தன, வாங்கிப் பொய்த்துளோர் கொள, திகைத்து, நின்றானையும் போன்றான். 72 மண் சுழன்றது; மால் வரை சுழன்றது; மதியோர் எண் சுழன்றது; சுழன்ற அவ் எறி கடல் ஏழும்; விண் சுழன்றது; வேதமும் சுழன்றது; விரிஞ்சன் கண் சுழன்றது; சுழன்றது, கதிரொடு மதியும். 73 'அறத்தைச் சீறும்கொல்? அருளையே சீறும்கொல்? அமரர் திறத்தைச் சீறும்கொல்? முனிவரைச் சீறும்கொல்? தீயோர் மறத்தைச் சீறும்கொல்? "என்கொலோ முடிவு?" என்று, மறையின் நிறத்தைச் சீறும்கொல் நெடுந்தகையோன்?' என, நடுங்கா. 74 நீல மேனி அந் நெடியவன் மன நிலை திரிய, மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் காலம் ஆம் என, கடையிடு கணிக்க அரும் பொருள்கள் மேல கீழுற, கீழன மேலுறும் வேலை. 75 தேர்ச் சுவடு கண்டு, அதனைத் தொடர்ந்து செல்லுதல் 'தேரின் ஆழியும் தெரிந்தனம்; தீண்டுதல் அஞ்சிப் பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம், பயன் இன்று ஓரும் தன்மை ஈது என் என்பது, உரன் இலாதவர்போல்; தூரம் போதல்முன் தொடர்தும்' என்று, இளையவன் தொழலும். 76 'ஆம்; அதே இனி அமைவது' என்று, அமலனும், மெய்யில் தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி, வாம மால் வரை மரன் இவை மடிதர, வயவர் பூமிமேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார். 77 மண்ணின்மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து, விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; மெய் உற வெந்த புண்ணினூடு உறு வேல் என, மனம் மிகப் புழுங்கி எண்ணி, 'நாம் இனிச் செய்வது என்? இளவலே!' என்றான். 78 'தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது, அத் திண் தேர்; மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! வானம், விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று; விம்மி, நிற்கும் நோக்கு இது என் பயத்தது?' என, இளையவன் நேர்ந்தான். 79 துண்டு பட்ட வீணைக்கொடி கண்டு, சடாயு போர் செய்ததை அறிதல் 'ஆகும்; அன்னதே கருமம்' என்று, அத் திசை நோக்கி, ஏகி, யோசனை இரண்டு சென்றார்; இடை எதிர்ந்தார், மாக மால் வரை கால் பொர மறிந்தது மான, பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல். 80 கண்டு, 'கண்டகரோடும், அக் காரிகை பொருட்டால் அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது?' என்று அயிர்த்தார்; துண்ட வாளினின் சுடர்க் கொடி துணிந்தது என்று உணரா, புண்டரீகக் கண் புனல் வர, புரவலன் புகல்வான். 81 'நோக்கினால், ஐய! நொய்து இவண் எய்திய நுந்தை மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால்; மொய்ம்பின் தாக்கினான்; நடு அடுத்தது தெரிகிலம்; தமியன்; யாக்கை தேம்பிடும்; எண் அரும் பருவங்கள் இறந்தான். 82 'நன்று சாலவும்; நடுங்க அரும் மிடுக்கினன்; நாமும், சென்று கூடல் ஆம்; பொழுது எலாம் தடுப்பது திடனால்; வென்று மீட்கினும் மீட்குமால்; வேறுற எண்ணி, நின்று தாழ்த்து ஒரு பயன் இலை' என்றலும், நெடியோன். 83 படைக்கலன்கள் சிதைந்து கிடத்தல் 'தொடர்வதே நலம் ஆம்' என, படிமிசைச் சுற்றிப் படரும் கால் என, கறங்கு என, செல்லுவார் பார்த்தார்; மிடல் கொள் வெஞ் சிலை, விண் இடு வில் முறிந்தென்ன, கடலின்மாடு உயர் திரை என, கிடந்தது கண்டார். 84 'சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் படைத்த மலை கிடந்தென வலியது; வடிவினால் மதியின் கலை கிடந்தன்ன காட்சியது; இது கடித்து ஒடித்தான்; நிலை கிடந்தவா நோக்கு' என, நோக்கினன் நின்றான். 85 நின்று, பின்னரும் நெடு நெறி கடந்து, உற நிமிரச் சென்று நோக்கினர்; திரி சிகைக் கொடு நெடுஞ் சூலம் ஒன்று, பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார். 86 மறித்தும் சென்றனர்; வானிடை வயங்குற வழங்கி எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம், நெறிக் கொள் கானகம் மறைதர, நிருதர்கோன் நெஞ்சின், பறித்து வீசிய, கவசமும் கிடந்தது பார்த்தார். 87 கான் கிடந்தது மறைதர, கால் வயக் கலிமாத் தான் கிடந்துழிச் சாரதி கிடந்துழிச் சார்ந்தார்; ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது; உலகின் வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார். 88 கண்டு, அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர்-கவின் ஆர் விண் தலம் துறந்து, இறுதியின் விரி கதிர் வெய்யோன் மண்டலம் பல மண்ணிடைக் கிடந்தென, மணியின் குண்டலம் பல, குலமணிப் பூண்களின் குவியல். 89 'ஒருவனொடு பொருதவர் மிகப் பலர் போலும்' என இராமன் கூறல் 'தோள் அணிக் குலம் பல உள; குண்டலத் தொகுதி வாள் இமைப்பன பல உள; மணி முடி பலவால்; நாள் அனைத்தையும் கடந்தனன், தமியன், நம் தாதை; யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர்; இளையோய்! 90 'பொருதவன் இராவணன் ஒருவனே' என இலக்குவன் கூறல் திருவின் நாயகன் உரைசெய, சுமித்திரை சிங்கம், 'தருவின் நீளிய தோள் பல, தலை பல, என்றால் பொருது தாதையை இத்தனை நெறிக் கொடு போனான் ஒருவனே, அவன் இராவணன் ஆம்' என உரைத்தான். 91 சடாயுவைக் கண்டு, இராமன் புலம்புதல் மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா, மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான், உடலுள் நாட்டிய குருதிஅம் பரவையின் உம்பர், கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான். 92 துள்ளி, ஓங்கு செந் தாமரை நயனங்கள் சொரிய, தள்ளி ஓங்கிய அமலன், தன் தனி உயிர்த் தந்தை வள்ளியோன் திரு மேனியில், தழல் நிற வண்ணன் வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என, வீழ்ந்தான். 93 உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்விலன்கொல் என்று அயிர்த்த தம்பி புக்கு, அம் கையின் எடுத்தனன், அருவிப் புயல் கலந்த நீர் தெளித்தலும், புண்டரீகக் கண் பெயர்த்து, பைப்பைய அயர்வு தீர்ந்து, இனையன பேசும்: 94 தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார் முந்து ஆரே உள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்; எந்தாயே! எற்காக நீயும் இறந்தனையால்; அந்தோ! வினையேன் அருங் கூற்றம் ஆனேனே! 95 'பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்- தன் உறுவல் தீர்ப்பான், தனி உறுவது ஓராதே, உன் உறவு, நீ தீர்த்தாய்; ஓர் உறவும் இல்லாதேன் என் உறுவான் வேண்டி இடர் உறுவேன்? எந்தாயே! 96 'மாண்டேனே அன்றோ? மறையோர் குறை முடிப்பான் பூண்டேன் விரதம்; அதனால் உயிர் பொறுப்பேன்; நீண்டேன் மரம் போல, நின்று ஒழிந்த புன் தொழிலேன்; வேண்டேன், இம் மா மாயப் புன் பிறவி வேண்டேனே! 97 'என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை, சான்றோயை, கொன்றானும் நின்றான்; கொலையுண்டு நீ கிடந்தாய்; வன் தாள் சிலை ஏந்தி, வாளிக் கடல் சுமந்து நின்றேனும் நின்றேன்; நெடு மரம் போல் நின்றேனே! 98 'சொல் உடையார் என் போல் இனி உளரோ? தொல் வினையேன் இல் உடையாள் காண, இறகு உடையாய்! எண் இலாப் பல் உடையாய்! உன்னைப் படை உடையான் கொன்று அகல, வில் உடையேன் நின்றேன்; விறல் உடையேன் அல்லேனோ? 99 சடாயு மூர்ச்சை தெளிந்து இராம இலக்குவரை உச்சி மோந்து
நடந்தவை உரைத்தல் அன்னா! பல பலவும் பன்னி அழும்; மயங்கும்; தன் நேர் இலாதானும் தம்பியும் அத் தன்மையனாய்; உன்னா, உணர்வு சிறிது உள் முளைப்ப, புள்ளரசும், இன்னா உயிர்ப்பான், இருவரையும் நோக்கினான். 100 உற்றது உணராது, உயிர் உலைய வெய்துயிர்ப்பான் கொற்றவரைக் கண்டான்; தன் உள்ளம் குளிர்ப்புற்றான்; இற்ற இரு சிறகும், இன்னுயிரும், ஏழ் உலகும் பெற்றனனே ஒத்தான்; 'பெயர்த்தேன் பழி' என்றான். 101 'பாக்கியத்தால், இன்று, என் பயன் இல் பழி யாக்கை போக்குகின்றேன்; கண்ணுற்றேன், புண்ணியரே! வம்மின்' என்று தாக்கி அரக்கன் மகுடத் தலை நிகர்த்த மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான். 102 'வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய நெஞ்சகமே முன்னே நினைவித்தது; ஆனாலும், அம் சொல் மயிலை, அருந்ததியை, நீங்கினிரோ, எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும்?' என்று உரைத்தான். 103 என்று அவன் இயம்பலும், இளைய கோமகன், ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறாவகை, வன் திறல் மாய மான் வந்தது ஆதியா நின்றதும், நிகழ்ந்ததும், நிரப்பினான் அரோ. 104 இராம இலக்குவருக்கு சடாயு ஆறுதல் கூறுதல் ஆற்றலோன் அவ் உரை அறைய, ஆணையால் ஏற்று, உணர்ந்து, எண்ணி, அவ் எருவை வேந்தனும், 'மாற்ற அருந் துயர் இவர் மனக் கொளாவகை தேற்றுதல் நன்று' என, இனைய செப்புவான்: 105 'அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ? "துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான் விதி வயம்' என்பதை மேற்கொளாவிடின், மதி வலியால் விதி வெல்ல வல்லமோ? 106 'தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற, சிந்தையை எரிவுசெய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்; பிரிவுசெய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ? 107 'அலக்கணும் இன்பமும் அணுகும் நாள், அவை விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ? இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார், தலைக் கலந்து, இரந்தது தவத்தின் பாலதோ? 108 'பொங்கு வெங் கோள் அரா, விசும்பு பூத்தன வெங் கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்; அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்த் திங்களும், ஒரு முறை வளரும் தேயுமால். 109 'அந்தரம் வருதலும், அனைய தீர்தலும், சுந்தரத் தோளினிர்! தொன்மை நீரவால்; மந்திர இமையவர் குருவின் வாய்மொழி இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ? 110 'தடைக்க அரும் பெரு வலிச் சம்பரப் பெயர்க் கடைத் தொழில் அவுணனால், குலிசக்கையினான் படைத்தனன் பழி, அது, பகழி வில் வலாய்! துடைத்தனன் நுந்தை, தன் குவவுத் தோளினால். 111 'பிள்ளைச் சொல் கிளி அனாளைப் பிரிவுறல் உற்ற பெற்றி, தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும், தந்ததேயால்; கள்ளப் போர் அரக்கர் என்னும் களையினைக் களைந்து வாழ்தி; புள்ளிற்கும், புலன் இல் பேய்க்கும், தாய் அன்ன புலவு வேலோய்! 112 'வடுக் கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும் எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு தடுத்தனேன், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால், படுத்தனன், இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது' என்றான். 113 இராமன் சீற்றமுடன் எழுதல் கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகாமுன்னம், ஊறின உதிரம், செங் கண்; உயிர்த்தன, உயிர்ப்புச் செந் தீ; ஏறின புருவம் மேல் மேல்; இரிந்தன சுடர்கள் எங்கும்; கீறினது அண்டகோளம்; கிழிந்தன கிரிகள் எல்லாம். 114 மண்ணகம் திரிய, நின்ற மால் வரை திரிய, மற்றைக் கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய, காவல் விண்ணகம் திரிய, மேலை விரிஞ்சனும் திரிய, 'வீரன், எண் அரும் பொருள்கள் எல்லாம்' என்பது தெரிந்தது அன்றே? 115 'குறித்த வெங் கோபம் யார்மேல் கோளுறும்கொல்?' என்று அஞ்சி, வெறித்து நின்று, உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை, பொறிப் பிதிர் படலை, செந் தீப் புகையொடும் பொடிப்ப, 'பொம்' என்று எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான்: 116 'பெண் தனி ஒருத்திதன்னை, பேதை வாள் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீ இக் கோளுற, குலுங்கல் செல்லா எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை, இன்னே, கண்ட வானவர்களோடும் களையுமாறு, இன்று காண்டி. 117 'தாரகை உதிருமாறும், தனிக் கதிர் பிதிருமாறும், பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும், நீரொடு நிலனும் காலும், நின்றவும், திரிந்த யாவும், வேரொடு மடியுமாறும், விண்ணவர் விளியுமாறும். 118 இக் கணம் ஒன்றில், நின்ற ஏழினோடு ஏழு சான்ற மிக்கன போன்று தோன்றும், உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து, நீரின் மொக்குளின் உடையுமாறும், காண்' என, முனியும் வேலை, 119 வெஞ் சுடர்க் கடவுள் மீண்டு, மேருவில் மறையலுற்றான்; எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன; துஞ்சின உலகம் எல்லாம் என்பது என்? துணிந்த நெஞ்சின், அஞ்சினன், இளைய கோவும்; அயல் உளோர்க்கு அவதி உண்டோ? 120 சடாயு சீற்றம் தணித்தல் இவ் வழி நிகழும் வேலை, எருவைகட்கு இறைவன், 'யாதும், செவ்வியோய்! முனியல்; வாழி! தேவரும் முனிவர்தாமும், வெவ் வலி வீர! நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் எவ் வலி கொண்டு வெல்வார், இராவணன் செயலை?' என்றான். 121 'நாள்செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் தோள் செய்த வீரம் என்னில் கண்டனை; சொல்லும் உண்டோ? தாள் செய்ய கமலத்தானே முதலினர், தலை பத்து உள்ளாற்கு ஆட் செய்கின்றார்கள்; அன்றி, அறம் செய்கின்றார்கள் யாரே? 122 'தெண் திரை உலகம் தன்னில், செறுநர்மாட்டு ஏவல் செய்து பெண்டிரின் வாழ்வர் அன்றே? இது அன்றோ தேவர் பெற்றி! பண்டு உலகு அளந்தோன் நல்க, பாற்கடல் அமுதம் அந் நாள் உண்டிலர் ஆகில், இந் நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ? 123 'வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக, கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்; அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை, உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ? 124 'ஆதலால், முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கி, தேவர்தம் கருத்தும் முற்றி, வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி, வேறும் தீது உள துடைத்தி' என்றான் - சேவடிக் கமலம் சேர்வான். 125 புயல் நிற வண்ணன், ஆண்டு, அப் புண்ணியன் புகன்ற சொல்லை, 'தயரதன் பணி ஈது' என்ன, சிந்தையில் தழுவிநின்றான்; 'அயல் இனி முனிவது என்னை? அரக்கரை வருக்கம் தீர்க்கும் செயல் இனிச் செயல்' என்று எண்ணி, கண்ணிய சீற்றம் தீர்ந்தான். 126 சடாயுவின் மரணம் ஆயபின், அமலன்தானும், "ஐய! நீ அமைதி" என்ன, வாயிடை மொழிந்தது அன்றி, மற்று ஒரு செயலும் உண்டோ? போயது அவ் அரக்கன் எங்கே? புகல்' என, புள்ளின் வேந்தன் ஓய்வினன்; உணர்வும் தேய, உரைத்திலன்; உயிரும் தீர்ந்தான். 127 சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே? வேதங்கள் காண்கிலாமை, வெளிநின்றே மறையும் வீரன் பாதங்கள் கண்ணின் பார்த்தால்; படிவம் கொள் நெடிய பஞ்ச பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான். 128 வீடு அவன் எய்தும் வேலை, விரிஞ்சனே முதல மேலோர், ஆடவர்க்கு அரசனோடு தம்பியும், அழுது சோர, காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த, சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே. 129 தளர்ந்த இராமனை இலக்குவன் தேற்றுதல் 'அறம்தலை நின்றிலாத அரக்கனின், ஆண்மை தீர்ந்தேன்; துறந்தனென், தவம் செய்கேனோ? துறப்பெனோ உயிரை? சொல்லாய்; பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால், பெற்ற தாதை இறந்தனன்; இருந்துளேன் யான்; என் செய்கேன்? இளவல்!' என்றான். 130 என்றலும், இளைய கோ அவ் இராமனை இறைஞ்சி, 'யாண்டும் வென்றியாய்! விதியின் தன்மை பழியல விளைந்தது ஒன்றோ? நின்று இனி நினைவது என்னே? நெருக்கி அவ் அரக்கர்தம்மைக் கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந் துயர் குளிப்பது?' என்றான். 131 'எந்தை! நீ இயம்பிற்று என்னை? எண்மையன் ஆகி, ஏழைச் சந்த வார் குழலினாளைத் துறந்தனை தணிதியேனும், உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லாச் சிந்தையை ஆகிநின்று, செய்வது என் செய்கை?" என்றான். 132 இருவரும் சடாயுவிற்கு இறுதிக் கடன் செய்தல் அவ் வழி இளவல் கூற, அறிவனும் அயர்வு நீங்கி, 'இவ் வழி இனைய எண்ணின் ஏழைமைப்பாலது' என்னா, வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன், 'விளிந்த தாதை செவ் வழி உரிமை யாவும் திருத்துவம்; சிறுவ!' என்றான். 133 இந்தனம் எனைய என்ன, கார் அகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து, வேண்டும் தருப்பையும் திருத்தி, பூவும் சிந்தினன், மணலின் வேதி தீது அற இயற்றி, தெண் நீர் தந்தனன்; தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான். 134 ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்; சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி, கடன்முறை கடவாவண்ணம் நேர்ந்தனன் - நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். 135 தளிர்த்தன கிளர்ந்த மேனித் தாமரைக் கெழுமு செம்பூத் துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் குளித்தனன், கொண்டல், ஆற்று, குளித்தபின், கொண்ட நல் நீர் அளித்தனன் - அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அவலம் தீர்ந்தான். 136 மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்; பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசை, 'கொள்க' என்று, ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! 137 பல் வகைத் துறையும், வேதப் பலிக் கடன் பலவும், முற்றி, வெல் வகைக் குமரன் நின்ற வேலையின், வேலை சார்ந்தான் - தொல் வகைக் குலத்தின் வந்தான் துன்பத்தால், புனலும் தோய்ந்து, செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன, வெய்யோன். 138 மிகைப் பாடல்கள் 'பின்னவன் உரையினை மறுத்து, பேதையேன், அன்னவன் தனைக் கடிது அகற்றினேன்; பொரு மன்னவன் சிறை அற மயங்கினேன்; விதி இன்னமும் எவ் வினை இயற்றுமோ?' எனா. 45-1 சடாயுவைத் தடிந்த வாளைச் சடுதியில் விதிர்க்கக் கண்டாள்; 'தடால்' எனக் கபாடம் சாத்தி, சாலையுள் சலித்தாள் அந்தோ; விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான், குடா மதி கோனைச் சேரும் கோமுகன் - குறளி ஒத்தான். 58-1 'பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம்' என, உள் நிறை கூடமும் உவந்த சாலையும், மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும் விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள். 58-2 முன்னமே பூமியை முகந்து, பாதலம், தன்னிலே தரித்தன சயமும் தந்திலது என்னவே, மாகம்மீது ஏகினான் செய உன்னியே இராவணன் உவந்ததொத்துஅரோ. 58-3 சடாயுவும் சாய்ந்தனன்; சனகி சாய்ந்தனள்; விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன் தொடா மறைக் கிரியையும் சுவைத்த கோமகன் அடாத மேற் செயல் எலாம் அமைத்தல் என் சயம்? 58-4 மூன்று பத்து ஒருபது முந்து யோசனை ஏன்றது; பாவையும், 'ஏது?' என்று எண்ணும்முன், தோன்றினன் சுபாரிசன்; தொழுது, 'தொல் உலகு ஈன்றவள் இவள்' என, இசைத்து இறைஞ்சியும். 58-5 'இசைக் கடல் உறைபவ! இலங்கை வேந்தன் நீ; திசைப்படாப் புவனம் உன் செல்வம்; என்னதோ வசைக் கடல் வாழ்வு; இது வழக்கு என்று எண்ணியோ, துசக் கடல் மொழி செலத் தொழுது போயினான்? 58-6 தேன்றிரும் இராவணன் சேற என்று எதிர்ந்து, ஊன்று செம்பாதி சேய் தூண்டத் தூண்டிட, மூன்று தன் பதத்தில் ஒன்று இழிந்த மொய் கரத்து ஊன்று தண்டு ஒடிந்தென வீழ ஓடினான். 59-1 |