அயோத்தியா காண்டம் 10. பள்ளிபடைப் படலம் பரதனிடம் தூதுவர் தம் வருகையை தெரிவித்தல் பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்; இரவும் நன் பகலும் கடிது ஏகினர்; பரதன் கோயில் உற்றார், 'படிகாரிர்! எம் வரவு சொல்லுதிர் மன்னவற்கே!' என்றார். 1 பரதன் தூதுவரிடம் நலம் விசாரித்தல் 'தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு' என, காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான், 'போதுக ஈங்கு' என, புக்கு, அவர் கைதொழ, 'தீது இலன்கொல் திரு முடியோன்' என்றான். 2 தூதுவர் பதிலும், பரதனின் விசாரிப்பும் 'வலியன்' என்று அவர் கூற மகிழ்ந்தனன்; 'இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் உலைவு இல் செல்வத்தனோ?' என, 'உண்டு' என, தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே. 3 தூதுவர் திருமுகம் கொடுத்தல் மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை உற்ற தன்மை வினாவி உவந்தபின், 'இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்! கொற்றவன் தன் திருமுகம் கொள்க' என்றார். 4 திருமுகம் பெற்ற பரதனின் மகிழ்ச்சி என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான், பொன் திணிந்த பொரு இல் தடக் கையால், நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான் துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான். 5 தூதருக்கு பரதன் பரிசளித்தல் சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண் மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்; ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக் கோடி மேலும் நிதியம் கொடுத்தனன். 6 சத்துருக்கனனுடன் பரதன் அயோத்திக்கு புறப்படுதல் வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம் பூண, வான் உயர் காதலின் பொங்கினான், தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக் காணலாம் எனும் ஆசை கடாவவே. 7 'எழுக சேனை' என்று ஏவினன்; எய்தினன் தொழுது, கேகயர் கோமகன் சொல்லொடும், தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்; பொழுதும் நாளும் குறித்திலன் போயினான். 8 பரத சேனையின் எழுச்சி யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின; மான வேந்தர் குழுவினர்; வாளுடைத் தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன; மீன வேலையின் விம்மின, பேரியே. 9 கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின; வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப் பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன, இடி துவன்றின மின் என, எங்குமே. 10 பண்டி எங்கும் பரந்தன; பல் இயம் கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில் வண்டு இயம்பின; வாளியின் வாவுறும் செண்டு இயங்கு பரியும் செறிந்தவே. 11 துளை முகத்தின் சுருதி விளம்பின; உளை முகத்தின் உம்பரின் ஏகிட, விளை முகத்தன வேலையின் மீது செல் வளை முகத்தன வாசியும் வந்தவே. 12 வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர், மல்லின் வல்லர், சுரிகையின் வல்லவர், கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர், தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார். 13 எறி பகட்டினம், ஆடுகள், ஏற்றை மா, குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும் பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார். 14 நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில், 'பறந்து போதும்கொல்' என்று, பதைக்கின்றார், பிறந்து, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன் உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார். 15 ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத் தான் அளைந்து தழுவின, தண்ணுமை; தேன் அளைந்து செவி உற வார்த்தென, வான் அளைந்தது, மாகதர் பாடலே. 16 ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி; ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ! 17 பரதன் தன் படையுடன் கோசல நாடு சேர்தல் ஆறும் கானும் அகல் மலையும் கடந்து ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான். 18 கோசல நாட்டின் அலங்கோல நிலை ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள் தார் துறந்தன; தண் தலை நெல்லினும், நீர் துறந்தன; தாமரை நீத்தெனப் பார் துறந்தனள், பங்கயச் செல்வியே. 19 பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச் சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி; முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து உதிர்ந்து உலர்ந்தன, ஒண் மலர் ஈட்டமே. 20 'ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம்' என ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால் பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால் சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே. 21 எள் குலா மலர் ஏசிய நாசியர், புள் குலா வயல் பூசல் கடைசியர், கட்கிலார் களை; காதல் கொழுநரோடு உள் கலாம் உடையாரின், உயங்கினார். 22 ஓதுகின்றில கிள்ளையும்; ஓதியர் தூது சென்றில, வந்தில, தோழர்பால்; மோதுகின்றில பேரி, முழா; விழாப் போதுகின்றில, பொன் அணி வீதியே. 23 பாடல் நீத்தன, பண்தொடர் பாண் குழல்; ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்; சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை மாடம் நீத்தன, மங்கல வள்ளையே. 24 நகை இழந்தன, வாள் முகம்; நாறு அகிற் புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல் சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த் தொகை இழந்தன, தோகையர் ஓதியே. 25 அலர்ந்த பைங் கூழ், அகன் குளக் கீழன, மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால், உலர்ந்த-வன்கண் உலோபர் கடைத்தலைப் புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. 26 நாவின் நீத்து அரு நல் வளம் துன்னிய, பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஒரீஇ, தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட, ஆவி நீத்த உடல் எனல் ஆயதே. 27 நாட்டின் நிலை கண்ட பரதனின் துயரம் என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து, ஒன்றும் உற்றது உணர்ந்திலன், உன்னுவான், 'சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்' எனா நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ! 28 பொலிவிழந்த நகரை பரதன் பார்த்தல் மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி பூண்ட வேந்தன் திருமுகன், புந்திதான் தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவான், நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான். 29 பரதன் கொடி இழந்த நகரை காணுதல் 'அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்; அமுது உண்டு போதி' என்று, ஒண் கதிர்ச் செல்வனை, விண் தொடர்ந்து விலக்குவ போல்வன, கண்டிலன், கொடியின் நெடுங் கானமே. 30 பரதன் கொடை முரசு ஒலி இல்லாத நகரை காணுதல் 'ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும், வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து' எனக் கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன, கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே. 31 பரதன் பரிசிலர் பரிசு பெறாத நகரைக் காணுதல் கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன் - பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும், வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர், கொள்ளை மாக்களின் கொண்டனர் ஏகவே. 32 அந்தணர் பரிசில் பெறாமை கண்டு பரதன் இரங்குதல் காவல் மன்னவன் கான்முனை கண்டிலன்- ஆவும், மாவும், அழி கவுள் வேழமும், மேவு காதல் நிதியின் வெறுக்கையும், பூவின் வானவர் கொண்டனர் போகவே. 33 இனிய இசை ஒலி இல்லாத அயோத்தி நகர் சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம் ஏழ் அமைந்த இசை இசையாமையால், மாழை உண் கண் மயில் எனும் சாயலார் கூழை போன்ற, பொருநர் குழாங்களே. 34 மக்கள் இயக்கம் இல்லாமையால் பொலிவு இழந்த நகர வீதிகள் தேரும், மாவும், களிறும், சிவிகையும், ஊரும் பண்டியும், ஊருநர் இன்மையால், யாரும் இன்றி, எழில் இல; வீதிகள், வாரி இன்றிய வாலுக ஆற்றினே. 35 நகரின் நிலை கண்ட பரதனின் கேள்வி அன்ன தன்மை அக நகர் நோக்கினான், பின்னை, அப் பெரியோர் தம் பெருந்தகை, 'மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது? என்ன தன்மை? இளையவனே!' என்றான். 36 நகரின் நிலை அழிவைக் குறித்தல் 'வேற்று அடங்கலர் ஊர் என மெல்லிதால்; சூல் தடங் கருங்கார் புரை தோற்றத்தான் சேல் தடங் கண் திருவொடும் நீங்கிய பால் தடங் கடல் ஒத்தது, பார்' என்றான். 37 சத்துருக்கனனின் உரை குரு மணிப் பூண் அரசிளங் கோளரி இரு கை கூப்பி இறைஞ்சினன், 'எய்தியது ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ் திரு நகர்த் திரு தீர்ந்தனன் ஆம்' என்றான். 38 தயரதன் வாழுமிடத்தை பரதன் அடைதல் அனைய வேலையில், அக் கடைத் தோரண மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் தனையனும், தந்தை சார்விடம் மேவியான். 39 பரதன் தந்தையை மாளிகையில் காணாது துயருறுதல் விருப்பின், எய்தினன், வெந் திறல் வேந்தனை, இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்; 'அருப்பம் அன்று இது' என்று, ஐயுறவு எய்தினான்- பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான். 40 கைகேயி பரதனை அழைத்தல் ஆய காலையில், ஐயனை நாடித் தன் தூய கையின் தொழல் உறுவான் தனை, 'கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு' என, வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள். 41 கைகேயியை பரதன் வணங்க அவள் விசாரித்தல் வந்து, தாயை அடியில் வணங்கலும், சிந்தை ஆரத் தழுவினள், 'தீது இலர் எந்தை, என்னையர், எங்கையர்?' என்றனள்; அந்தம் இல் குணத்தானும், 'அது ஆம்' என்றான். 42 தந்தை எங்கு உளார் என பரதன் வினாவுதல் 'மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்; ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன் யாண்டையான்? பணித்திர்' என்று, இரு கை கூப்பினான். 43 கைகேயியின் பதில் ஆனவன் உரை செய, அழிவு இல் சிந்தையாள், 'தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத் தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ, வானகம் எய்தினான்; வருந்தல் நீ' என்றாள். 44 தயரதன் இறந்த செய்தி கேட்டு பரதன் மூர்ச்சித்தல் எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும், நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்; அறிந்திலன்; உயிர்த்திலன்;-அசனி ஏற்றினால் மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே. 45 பரதன் கைகேயியை கடிந்துரைத்தல் வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர, 'தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல், நீ அலது உரைசெய நினைப்பார்களோ?' என்றான். 46 பரதனின் புலம்பல் எழுந்தனன்; ஏங்கினன்; இரங்கிப் பின்னரும் விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்; அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன மொழிந்தனன், பின்னரும்-முருகன் செவ்வியான். 47 'அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை, சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து, இறந்தனை ஆம் எனின், இறைவ! நீதியை மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ ? 48 'சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து, இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும் மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து, உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ? 49 'முதலவன் முதலிய முந்தையோர் பழங் கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்? 50 'செவ் வழி உருட்டிய திகிரி மன்னவ!- எவ் வழி மருங்கினும் இரவலாளர் தாம், இவ் வழி உலகின் இல்; இன்மை நண்பினோர் அவ் வழி உலகினும் உளர்கொலோ?-ஐயா! 51 'பல் பகல் நிழற்றும் நின் கவிகைப் பாய் நிழல் நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங் கற்பக நறு நிழல் காதலித்தியோ?- மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே! 52 'இம்பர் நின்று ஏகினை; இருக்கும் சார்பு இழந்து, உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ? சம்பரன் அனைய அத் தானைத் தானவர், அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்?-ஐயா! 53 'இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை, உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின், அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய, வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ? 54 'ஏழ் உயர் மத களிற்று இறைவ! ஏகினை- வாழிய கரியவன், வறியன் கை என, பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா ஆழியை, இனி, அவற்கு அளிக்க எண்ணியோ? 55 'பற்று இலை, தவத்தினின் பயந்த மைந்தற்கு முற்று உலகு அளித்து, அது முறையின் எய்திய கொற்றவன் முடி மணக் கோலம் காணவும் பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்?' 56 பரதன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளல் ஆற்றலன், இன்னன பன்னி ஆவலித்து, ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத் தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய, கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான். 57 இராமனை வணங்கிலாலன்றித் துயர் போகாது என பரதன் இயம்பல் 'எந்தையும், யாயும், எம் பிரானும், எம் முனும், அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால், வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால், சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது' என்றான். 58 கைகேயி இராமன் கானகம் சென்றதைக் கூறல் அவ் உரை கேட்டலும், அசனிஏறு என, வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்; 'தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று இவ் இருவோரொடும் கானத்தான்' என்றான். 59 பரதன் துயருறுதல் 'வனத்தினன்' என்று, அவள் இசைத்த மாற்றத்தை நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என; 'வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும் எனைத்து உள கேட்பன துன்பம், யான்?' என்றான். 60 இராமன் வனம் சென்ற காரணத்தை பரதன் வினாவுதல் ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், 'அப் பூங் கழல் காலவன் வனத்துப் போயது, தீங்கு இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ? ஓங்கிய விதியினோ? யாதினோ?' எனா. 61 'தீயன இராமனே செய்யுமேல், அவை தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்? போயது தாதை விண் புக்க பின்னரோ? ஆயதன் முன்னரோ? அருளுவீர்' என்றான். 62 கைகேயின் பதில் உரை 'குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று; அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன் இருக்கவே, வனத்து அவன் ஏகினான்' என்றாள். 63 பரதன் மீண்டும் வினாவுதல் 'குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர் செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல், பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான் புக உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்?' என்றான். 64 கைகேயி தான் பெற்ற வரம் பற்றி கூறல் 'வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப் போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால், நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து' என்றான். 65 பரதனின் சீற்றம் சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள் ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே! 66 துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர் பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது; மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக அடித்தன, ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே. 67 பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும், போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. 68 அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால் துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்; வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்தே! 69 இராமனுக்கு அஞ்சி பரதன் தன் தாயைக் கொல்லாது விடுதல் கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி, கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்; 'நெடியவன் முனியும்' என்று அஞ்சி நின்றனன்; இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்: 70 பரதன் கைகேயியை பழித்துரைத்தல் 'மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம் பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால், கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான் ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்? 71 'நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்; "ஏ" எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்; ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால், "தாய்" எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ? 72 'மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்; மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால், கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ? 73 '"சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால், வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு" எனும், மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ ? 74 'கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும் அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து, இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ? 75 நோயீர் அல்லீர்; நும் கணவன் தன் உயிர் உண்டீர்; பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே? மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்! தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே! 76 'ஒன்றும் பொய்யா மன்னனை வாயால், உயிரோடும் தின்றும், தீரா வன் பழி கொண்டீர்; திரு எய்தி என்றும் நீரே வாழ உவந்தீர்; அவன் ஏக, கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே! 77 'இறந்தான் தந்தை, "ஈந்த வரத்துக்கு இழிவு" என்னா; "அறந்தான் ஈது" என்று, அன்னவன் மைந்தன், அரசு எல்லாம் துறந்தான்; "தாயின் சூழ்ச்சியின், ஞாலம், அவனோடும் பிறந்தான், ஆண்டான்" என்னும் இது, என்னால் பெறலாமே? 78 '"மாளும்" என்றே தந்தையை உன்னான்; வசை கொண்டாள் கோளும் என்னாலே எனல் கொண்டான்; அது அன்றேல். மீளும் அன்றே? என்னையும், "மெய்யே உலகு எல்லாம் ஆளும்" என்றே போயினன் அன்றோ?- அரசு ஆள்வான். 79 'ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் யாதானும் தான் ஆக; "எனக்கே பணி செய்வான், தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன்" என்னப் போதாதோ, என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா? 80 'உய்யா நின்றேன் இன்னமும்; என்முன் உடன் வந்தான், கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி, வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு, அமுது என்ன, நெய்யோடு உண்ண நின்றது, நின்றார் நினையாரோ? 81 '"வில் ஆர் தோளான் மேவினன், வெங் கானகம்" என்ன, நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக் கொல்லேன், மாயேன்; வன் பழியாலே குறைவு அற்றேன்- அல்லேனோ யான்! அன்பு உடையார்போல் அழுகின்றேன். 82 'பாரோர் கொள்ளார்; யான் உயிர் பேணிப் பழி பூணேன்; தீராது ஒன்றால் நின் பழி; ஊரில் திரு நில்லாள்; ஆரோடு எண்ணிற்று? ஆர் உரைதந்தார்? அறம் எல்லாம் வேரோடும் கேடு ஆக முடித்து, என் விளைவித்தாய்? 83 'கொன்றேன், நான் என் தந்தையை, மற்று உன் கொலை வாயால்- ஒன்றோ? கானத்து அண்ணலே உய்த்தேன்; உலகு ஆள்வான் நின்றேன்; என்றால், நின் பிழை உண்டோ ? பழி உண்டோ ? என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ ? 84 'கண்ணாலே, என் செய் வினை, இன்னும் சில காண்பார்; மண்ணோர் பாராது எள்ளுவர்; வாளா பழி பூண்டாய்; "உண்ணா நஞ்சம் கொல்கிலது' என்னும் உரை உண்டு" என்று எண்ணா நின்றேன்; அன்றி இரேன், என் உயிரோடே. 85 பரதன் தான் இனி செய்யப்போவது பற்றி உரைத்தல் 'ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித் தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர, சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம் மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன். 86 கைகேயிக்கு பரதனின் அறிவுரை 'சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன்; செயல் எல்லாம் மறந்தாய் செய்தாய் ஆகுதி; மாயா உயிர் தன்னைத் துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி; உலகத்தே பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப் பிறிது' என்றான். 87 கோசலையின் திருவடி வணங்க பரதல் செல்லுதல் இன்னணம், இனையன இயம்பி, 'யானும், இப் பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்; துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை பொன் அடி தொழுவென்' என்று, எழுந்து போயினான். 88 பரதன் கோசலையின் திருவடியில் வீழ்ந்து வணங்குதல் ஆண்தகை, கோசலை அருகர் எய்தினன்; மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர் காண் தகு தடக் கையின் கமலச் சீறடி பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ! 89 பரதனின் இரங்கல் உரை 'எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்? வந்தது, தமியென், இம் மறுக்கம் காணவோ? சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும், அந்தரத்து அமரரும் அழுது சோரவே. 90 'அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை; படித்தலம் காவலன், பெயரற்பாலனோ? பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால்' எனும்- பொடித்தலம் தோள் உறப்புரண்டு சோர்கின்றான். 91 'கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்? கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன், முடிகுவென், அருந் துயர் முடிய' என்னுமால், 92 'இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ் வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம், "பரதன்" என்று ஒரு பழி படைத்தது' என்னுமால்- மரகத மலை என வளர்ந்த தோளினான். 93 'வாள்தொடு தானையான் வானில் வைகிட, காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா நாடு ஒரு துயரிடை நைவதே' எனும்- தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான். 94 பரதன் தூயன் என அறிந்த கோசலையின் உரை புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள், குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை; 'நிலம் பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்து' எனா, சலம் பிறிது உற, மனம் தளர்ந்து, கூறுவாள்: 95 கோசலை பரதனை வினாவுதல் 'மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்; செய்யனே' என்பது தேறும் சிந்தையாள், 'கைகயர் கோமகள் இழைத்த கைதவம், ஐய! நீ அறிந்திலை போலுமால்?' என்றாள். 96 கோசலையின் சொல்லால் துயருற்ற பரதனின் சூளுரை தாள் உறு குரிசில், அத் தாய் சொல் கேட்டலும், கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான், நாள் உறு நல் அறம் நடுங்க, நாவினால் சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்: 97 'அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன், பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன், மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன், துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன். 98 'குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன், புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன் விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன், இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன், 99 '"தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன்" என்று அழைத்தவன், அறநெறி அந்தணாளரில் பிழைத்தவன், பிழைப்பு இலா மறையைப் பேணலாது, "இழைத்த வன் பொய்" எனும் இழுதை நெஞ்சினோன். 100 'தாய் பசி உழந்து உயிர் தளரத், தான் தனி, பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும், நாயகன் பட நடந்தவனும், நண்ணும் அத் தீ எரி நரகத்துக் கடிது செல்க, யான். 101 'தாளினில் அடைந்தவர்தம்மை, தற்கு ஒரு கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும், நாளினும் அறம் மறந்தவனும், நண்ணுறும் மீள அரு நரகிடைக் கடிது வீழ்க, யான். 102 'பொய்க் கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன், கைக் கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன், எய்த்த இடத்து இடர் செய்தோன், என்று இன்னோர் புகும் மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க, யான். 103 'அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன், மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன், நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும் வெந் துயர் நரகத்து வீழ்க, யானுமே. 104 'கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோ ன், மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன், நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன், என்று இவர் உறு நரகு என்னது ஆகவே. 105 'ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை ஊறு கொண்டு அலைக்க, தன் உயிர் கொண்டு ஓடினோன், சோறு தன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன், ஏறும் அக் கதியிடை யானும் ஏறவே. 106 'எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான், அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான். 107 'அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று, இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன் வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான். 108 'தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற, வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள அஞ்சின மன்னவன் ஆக யானுமே. 109 'கன்னியை அழி செயக் கருதினோன், குரு பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை, பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும் இன்னவர் உறு கதி என்னது ஆகவே. 110 'ஊண் அல உண் வழி நாயின் உண்டவன், "ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்?" என நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான், 111 'மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன், சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன், நறியன அயலவர் நாவில் நீர் வர உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான். 112 'வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில் புல்லிடை உகுத்தனென், பொய்ம்மை யாக்கையைச் சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய இல்லிடை இடு பதம் ஏற்க, என் கையால். 113 மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல் ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக் கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க, யான். 114 'பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த் துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய், மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன், தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை. 115 'கரும்பு அலர் செந் நெல் அம் கழனிக் கான நாடு அரும் பகை கவர்ந்து உண, ஆவி பேணினென், இரும்பு அலர் நெடுந் தளை ஈர்த்த காலொடும், விரும்பலர் முகத்து, எதிர் விழித்து நிற்க, யான்.' 116 பரதனைத் தழுவி கோசலை அழுதல் தூய வாசகம் சொன்ன தோன்றலை, தீய கானகம் திருவின் நீங்கி முன் போயினான் வரக் கண்ட பொம்மலாள் ஆய காதலால், அழுது புல்லினாள். 117 செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும், அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்; கொம்மை வெம் முலை குமுறு பால் உக, விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்: 118 கோசலை பரதனை வாழ்த்துதல் 'முன்னை நும் குல முதலுளோர்கள்தாம், நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்? மன்னர் மன்னவா!' என்று, வாழ்த்தினாள்- உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள். 119 சத்துருக்கனன் கோசலையை வணங்கலும், வசிட்டனின் வருகையும் உன்ன நைந்து நைந்து, உருகும் அன்புகூர் அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும், சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்; இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான். 120 வசிட்டனை பரதன் வணங்கலும், வசிட்டன் தழுவி அழுதலும் வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து, 'எந்தை யாண்டையான்? இயம்புவீர்?' எனா, நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மா தவன் அழுது புல்லினான். 121 கோசலை பரதனை தயரதனுக்கு இறுதிக் கடன் செய்யச் சொல்லுதல் 'மறு இல் மைந்தனே! வள்ளல், உந்தையார், இறுதி எய்தி நாள் ஏழ்-இரண்டின; சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி' என்று, உறுவல் மேயினாள் உரையின் மேயினாள். 122 பரதன் வசிட்டனுடன் சென்று தந்தையின் திருவுருவை நோக்கல் அன்னை ஏவினாள், அடி இறைஞ்சினான்; பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய், தன்னை நல்கி, அத் தருமம் நல்கினான் பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான். 123 தயரதனின் திருமேனி கண்டு பரதன் புலம்பல் மண்ணின்மேல் விழுந்து அலறி மாழ்குவான், அண்ணல், ஆழியான், அவனி காவலான், எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை, கண்ண நீரினால் கழுவி ஆட்டினான். 124 தயரதன் உடலை விமானத்தில் வைத்து, யானையின் மீது கொண்டு
செல்லுதல் பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார், சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்; கொற்ற மண்கணை குமுற, மன்னனை, மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர். 125 கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து, உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற, அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ, புரசை யானையில் கொண்டு போயினார். 126 சாவுப் பறை முதலியன ஒலித்தல் சங்கு பேரியும், தழுவு சின்னமும் எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ, மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப் பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே. 127 தயரதன் உடல் சரயு நதி அடைதல் மாவும், யானையும், வயங்கு தேர்களும், கோவும், நான் மறைக் குழுவும், முன் செல, தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை தாவு வார் புனல் சரயு எய்தினார். 128 இறுதிக் கடன் செய பரதனை அழைத்தல் எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும் செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை, வெய்தின் ஏற்றினார்; 'வீர! நுந்தைபால் பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து' என்றார். 129 கடன் செய்ய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்துரைத்தல் என்னும் வேலையில் எழுந்த வீரனை, 'அன்னை தீமையால் அரசன் நின்னையும், துன்னு துன்பத்தால், துறந்து போயினான், முன்னரே' என முனிவன் கூறினான். 130 பரதன் துயர் மிகுதியால் புலம்பி அழுதல் 'துறந்து போயினான் நுந்தை; தோன்றல்! நீ பிறந்து, பேர் அறம் பிழைத்தது' என்றபோது, இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம். 131 இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா, படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான், தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்: 132 'உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே? இரவிதன் குலத்து, எந்தை முந்தையோர் பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்; அரசு செய்யவோ ஆவது ஆயினேன்! 133 'பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் தா இல் மன்னர், தம் தரும நீதியால் தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே, ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா? 134 'துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்; என்னை! என்னையே ஈன்று காத்த என் அன்னையார் எனக்கு அழகு செய்தவா!' 135 வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு தயரதனுக்கு இறுதிக்கடன்
செய்வித்தல் என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத் துன்று தாரவற்கு இளைய தோன்றலால், அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்- நின்று நான்மறை நெறி செய் நீர்மையான். 136 தயரதன் தேவியர் தீக்குளித்து நற்கதி பெறுதல் இழையும் ஆரமும் இடையும் மின்னிட, குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம் தழை இல் முண்டகம் தழுவி கானிடை முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார். 137 அங்கி நீரினும் குளிர, அம்புயத் திங்கள் வாள் முகம் திரு விளங்குற, சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும் நங்கைமார் புகும் உலகம் நண்ணினார். 138 ஈமக் கடன் முடித்துப் பரதன் மனை சேர்தல் அனைய மா தவன், அரசர் கோமகற்கு இனைய தன்மையால் இயைவ செய்த பின், மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான். 139 பத்து நாட்கள் சடங்குகள் நடைபெறுதல் ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என, மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்; தந்தை தன்வயின் தருமம் யாவையும், முந்து நூலுளோர் முறையின் முற்றினான். 140 வசிட்டனும் மந்திரக்கிழவரும் பரதனிடம் வருதல் முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல் சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான், வெற்றி மா தவன் - வினை முடித்த அக் கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்: 141 'மன்னர் இன்றியே வையம் வைகல்தான் தொன்மை அன்று' எனத் துணியும் நெஞ்சினார், அன்ன மா நிலத்து அறிஞர் தம்மொடும், முன்னை மந்திரக் கிழவர் முந்தினார். 142 மிகைப் பாடல்கள் ஆய காதல் தனையனைத் தந்த அத் தூய தையல் தொழிலுறுவார், 'உனைக் கூயள் அன்னை' என்றே சென்று கூறலும், ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான். 41-1 'தீ அன கொடியவள் செய்த செய்கையை நாயினேன் உனரின், நல் நெறியின் நீங்கலாத் தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை ஆயவர் வீழ் கதி அதனின் வீழ்க, யான்.' 116-1 உந்து போன தடந் தேர் வலானொடும், மந்திரப் பெருந் தலைவர், மற்றுளோர், தந்திரத் தனித் தலைவர், நண்பினோர், வந்து சுற்றும் உற்று, அழுது மாழ்கினார். 125-1 என்று கொண்டு மாதவன் இயம்பலும்,- நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்; 'நன்று, நன்று!' எனா நகை முகிழ்த்தனன்;- குன்று குன்றுறக் குலவு தோளினான். 131-1 அன்னதாக, அங்கு, ஆறு பத்து எனச் சொன்ன ஆயிரம் தோகைமார்களும், துன்னி வந்தனர்-சோர்வு இலாது, அவர் மின்னும் வாள் எரி மீது வீழவே. 136-1 |