உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
பால காண்டம் 13. கார்முகப் படலம் மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும்
எனச் சனகன் உரைத்தல் 'மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான் தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்; நோற்றனள் நங்கையும்; நொய்தின் ஐயன் வில் ஏற்றுமேல், இடர்க் கடல் ஏற்றும்' என்றனன். 1 சனகனது ஆணைப்படி ஏவலர் வில்லை மண்டபத்திற்குக் கொண்டுவருதல் என்றனன், ஏன்று, தன் எதிர் நின்றாரை, 'அக் குன்று உறழ் வரி சிலை கொணர்மின், ஈண்டு' என, 'நன்று' என வணங்கினர், நால்வர் ஓடினர்; பொன் திணி கார்முகச் சாலை புக்கனர். 2 உறு வலி யானையை ஒத்த மேனியர், செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர், அறுபதினாயிரர், அளவு இல் ஆற்றலர், தறி மடுத்து, இடையிடை, தண்டில் தாங்கினர்; 3 நெடு நிலமகள் முதுகு ஆற்ற, நின்று உயர் தட நிமிர் வடவரைதானும் நாண் உற, 'இடம் இலை உலகு' என வந்தது,-எங்கணும் கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே. 4 வில்லினைக் கண்டார் கூறிய மொழிகள் 'சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச் சிங்க ஏறு அல்லனேல், இதனைத் தீண்டுவான் எங்கு உளன் ஒருவன்? இன்று ஏற்றின், இச் சிலை, மங்கைதன் திருமணம் வாழுமால்' என்பார். 5 'கைதவம், தனு எனல்; கனகக் குன்று' என்பார்; 'செய்தது, அத் திசைமுகன் தீண்டி அன்று; தன் மொய் தவப் பெருமையின் முயற்சியால்' என்பார்; 'எய்தவன் யாவனோ, ஏற்றிப் பண்டு?' என்பார். 6 'திண் நெடு மேருவைத் திரட்டிற்றோ?' என்பார்; 'வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து' என்பார்; 'அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?' என்பார்; 'விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ?' என்பார். 7 'என், "இது கொணர்க" என, இயம்பினான்?' என்பார்; 'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்; 'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்; 'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். 8 'இச் சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது?' என்பார்; 'நச் சிலை நங்கைமேல் நாட்டும், வேந்து' என்பார்; 'நிச்சயம் எடுக்கும்கொல் நேமியான்!' என்பார்; சிற்சிலர், 'விதி செய்த தீமை ஆம்' என்பார். 9 வில்லைக் கண்ட வேந்தர்கள் கைவிரித்தல் மொய்த்தனர் இன்னணம் மொழிய, மன்னன் முன் உய்த்தனர், நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற, வைத்தனர்; 'வாங்குநர் யாவரோ?' எனா, கைத்தலம் விதிர்த்தனர், கண்ட வேந்தரே. 10 சதானந்த முனிவன் கூறிய வில்லின் வரலாறு போதகம் அனையவன் பொலிவை நோக்கி, அவ் வேதனை தருகின்ற வில்லை நோக்கி, தன் மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய கோதமன் காதலன் கூறல்மேயினான்: 11 'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா, சமை உறு தக்கனார் வேள்வி சாரவே. 12 'உக்கன பல்லொடு, கரங்கள் வீழ்ந்தன; புக்கனர், வானவர் புகாத சூழல்கள்; தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின; முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான். 13 'தாளுடை வரி சிலை, சம்பு, உம்பர்தம் நாள் உடைமையின், அவர் நடுக்கம் நோக்கி, இக் கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான். 14 'கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ? வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால், யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய தேர் முக அல்குலாள் செவ்வி கேள்' எனா, 15 'இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு அணைத்து ஈர்க்கும் வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல் பல சால் உழுதேம். 16 'உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின் ஒளி பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென, புணரி எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து ஒதுங்கித் தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள். 17 'குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து, அவை உய்யப் பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்; கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில் கங்கை எனும் அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு உற்றார். 18 'சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு-செய்வினையால் வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப, அத் திருவை அமரர் குலம் ஆதரித்தார் என, அறிஞர்! இத் திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார்! 19 'கலித் தானைக் கடலோடும் கைத் தானக் களிற்று அரசர் ஒலித்து ஆனை என வந்து, மணம் மொழிந்தார்க்கு எதிர், "உருத்த புலித் தானை, களிற்று உரிவைப் போர்வையான் வரி சிலையை வலித்தானே மங்கை திருமணத்தான்" என்று, யாம் வலித்தேம். 20 'வல் வில்லுக்கு ஆற்றார்கள், மார வேள் வளை கருப்பின் மெல் வில்லுக்கு ஆற்றாராய், தாம் எம்மை விளிகுற்றார்; கல் வில்லோடு உலகு ஈந்த கனங் குழையைக் காதலித்து,- சொல் வில்லால் உலகு அளிப்பாய்!-போர் செய்யத் தொடங்கினார். 21 'எம் மன்னன் பெருஞ் சேனை ஈவதனை மேற்கொண்ட செம் மன்னர் புகழ் வேட்ட பொருளேபோல் தேய்ந்ததால்; பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலைக் காதலித்த அம் மன்னர் சேனை, தமது ஆசைபோல் ஆயிற்றால். 22 'மல் காக்கும் மணிப் புயத்து மன்னன் இவன், மழவிடையோன் வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி, எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என, வேந்தர், அல் காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என, அகன்றார். 23 'அன்று முதல், இன்று அளவும், ஆரும் இந்தச் சிலை அருகு சென்றும் இலர்; போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார்; "என்றும் இனி மணமும் இலை" என்று இருந்தோம்; இவன் ஏற்றின், நன்று; மலர்க் குழல் சீதை நலம் பழுது ஆகாது' என்றான். 24 இராமன் வில்லை நோக்கி எழுதல் நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி, அறிவனும் தன், புனைந்த சடைமுடி துளக்கி, போர் ஏற்றின் முகம் பார்த்தான்; வனைந்தனைய திருமேனி வள்ளலும், அம் மா தவத்தோன் நினைந்த எலாம் நினைந்து, அந்த நெடுஞ் சிலையை நோக்கினான். 25 பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்; 'அழிந்தது, வில்' என, விண்ணவர் ஆர்த்தார்; மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார். 26 மங்கையர் மன நிலையும், வாய் மொழியும் தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன் ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம், சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா, ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான். 27 'காணும் நெடுஞ் சிலை கால் வலிது' என்பார்; 'நாணுடை நங்கை நலம் கிளர் செங் கேழ்ப் பாணி, இவன் படர் செங் கை படாதேல், வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்' என்பார். 28 கரங்கள் குவித்து, இரு கண்கள் பனிப்ப, 'இருங் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின், நரந்த நறைக் குழல் நங்கையும், நாமும், முருங்கு எரியில் புக மூழ்குதும்' என்பார். 29 'வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால், "கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால், வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப் பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார். 30 'ஞான முனிக்கு ஒரு நாண் இலை' என்பார்; 'கோன் இவனின் கொடியோன் இலை' என்பார்; 'மானவன் இச் சிலை கால் வளையானேல், பீன தனத்தவள் பேறு இலள்' என்பார். 31 வில்லை நோக்கி இராமன் நடத்தல் தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர் ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப, மாக மடங்கலும், மால் விடையும், பொன் நாகமும், நாகமும், நாண நடந்தான். 32 இமைப் பொழுதில் வில்லை எடுத்து இராமன் நாண் ஏற்ற, அவ்
வில் ஒடிதல் ஆடக மால் வரை அன்னது தன்னை, 'தேட அரு மா மணி, சீதை எனும் பொன் சூடக வால் வளை, சூட்டிட நீட்டும் ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான். 33 தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். 34 வில் இற்ற பேரோசையால் மூவுலகிலும் தோன்றிய அச்சம் 'ஆரிடைப் புகுதும் நாம்?' என்று, அமரர்கள், கமலத்தோன் தன் பேருடை அண்ட கோளம் பிளந்தது' என்று ஏங்கி, நைந்தார்; பாரிடை உற்ற தன்மை பகர்வது என்? பாரைத் தாங்கி, வேரெனக் கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே! 35 வானவர் வாழ்த்த, மண்ணகத்தார் மகிழ்ந்தனர் பூ மழை சொரிந்தார் விண்ணோர்; பொன் மழை பொழிந்த மேகம்; பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த; கோ முனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி; - 'கொற்ற நாம வேல் சனகற்கு, இன்று, நல்வினை பயந்தது' என்னா. 36 மாலையும், இழையும், சாந்தும், சுண்ணமும், வாச நெய்யும், வேலை வெண் முத்தும், பொன்னும், காசும், நுண் துகிலும், வீசி; பால் வளை, வயிர்கள், ஆர்ப்ப; பல் இயம் துவைப்ப; முந்நீர் ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன, ஒலி நகர் கிளர்ந்தது அன்றே! 37 நல் இயல் மகர வீணைத் தேன் உக, நகையும் தோடும் வில் இட, வாளும் வீச, வேல் கிடந்தனைய நாட்டத்து எல் இயல் மதியம் அன்ன முகத்தியர், எழிலி தோன்றச் சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே! 38 உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கருங் கண் மாதர், புண் உறு புலவி நீங்க, கொழுநரைப் புல்லிக் கொண்டார்; வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமாபோல், மண் உறு வேந்தன் செல்வம், வறியவர் முகந்து கொண்டார். 39 வயிரியர் மதுர கீதம், மங்கையர் அமுத கீதம், செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம், பயிர் கிளை வேயின் கீதம், என்று இவை பருகி, விண்ணோர் உயிருடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார். 40 ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய, அமரர் நாட்டுத் தையலார் இழிந்து, பாரின் மகளிரைத் தழுவிக் கொண்டார்- செய்கையின், வடிவின், ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார்,- மை அரி நெடுங் கண் நோக்கம் இமைத்தலும், மயங்கி நின்றார். 41 மிதிலை நகர மக்களின் மகிழ்ச்சி 'தயரதன் புதல்வன்' என்பார்; 'தாமரைக் கண்ணன்' என்பார்; 'புயல் இவன் மேனி' என்பார்; 'பூவையே பொருவும்' என்பார்; 'மயல் உடைத்து உலகம்' என்பார்; 'மானிடன் அல்லன்' என்பார்; 'கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும்" என்பார். 42 'நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்; கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கும் அன்னதே ஆம்! தம்பியைக் காண்மின்!' என்பார்; 'தவம் உடைத்து உலகம்' என்பார்; 'இம்பர், இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும்' என்பார். 43 காதல் நோய் மிக சீதை உள்ளம் நைந்து உருகுதல் இற்று, இவண் இன்னது ஆக,-மதியொடும் எல்லி நீங்கப் பெற்று, உயிர் பின்னும் காணும் ஆசையால், சிறிது பெற்ற, சிற்றிடை, பெரிய கொங்கை, சேயரிக் கரிய வாள்-கண், பொன் - தொடி,-மடந்தைக்கு அப்பால் உற்றது புகலலுற்றாம்: 44 ஊசல் ஆடு உயிரினோடும், உருகு பூம் பள்ளி நீங்கி, பாசிழை மகளிர் சூழ, போய், ஒரு பளிக்கு மாட, காசு இல் தாமரையின் பொய்கை, சந்திர காந்தம் ஈன்ற சீத நீர் தெளித்த மென் பூஞ் சேக்கையை அரிதின் சேர்ந்தாள். 45 '"பெண் இவண் உற்றது" என்னும் பெருமையால், அருமையான வண்ணமும் இலைகளாலே காட்டலால், வாட்டம் தீர்ந்தேன்;- தண் நறுங் கமலங்காள்!-என் தளிர் நிறம் உண்ட கண்ணின் உள் நிறம் காட்டினீர்; என் உயிர் தர உலோவினீரே! 46 'நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும், தூண் உலாவு தோளும், வாளியூடு உலாவு தூணியும், வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும், மீளவும் காணல் ஆகும்? ஆகின், ஆவி காணல் ஆகுமேகொலாம். 47 விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு, மீது சூழ் வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும், வார் சிலைக் கொண்டல் ஒன்று, இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு, என் ஆவியை உண்டது உண்டு;என் நெஞ்சில் இன்னும்உண்டு;அது என்றும்உண்டு அரோ!48 'பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற, நீடு கொற்ற வில் வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க, வெய்ய காமன் எய்யவே, சஞ்சலம் கலந்தபோது, தையலாரை, உய்ய வந்து, "அஞ்சல்! அஞ்சல்!" என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே? 49 இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என் செய்வீர்! முளைக்கலா மதிக்கொழுந்து போலும் வாள் முகத்தினான். விளைக்கலாத விற் கையாளி, வள்ளல், மார்பின் உள்ளுறத் திளைக்கல் ஆகும் ஆகில், ஆன செய் தவங்கள் செய்ம்மினே! 50 எங்கு நின்று எழுந்தது, இந்த இந்து? வந்து என் நெஞ்சு உலா அங்கு இயன்று, அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் பொங்குகின்ற கொங்கைமேல் விடம் பொழிந்தது; என்னினும், கங்குல் வந்த திங்கள் அன்று; அகம் களங்கம் இல்லையே! 51 'அடர்ந்த வந்து, அனங்கன், நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் விடம் குடைந்த மெய்யின்நின்று வெந்திடாது எழுந்து, வெங் கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து, உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என்? - உள்ளமே! 52 'விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு, இம் மண்ணுளே இழிந்தது என்ன, வந்து போன மைந்தனார், எண்ணுளே இருந்த போதும், யாவரென்று தேர்கிலென்; கண்ணுளே இருந்த போதும், என்கொல் காண்கிலாதவே? 53 'பெய் கடல் பிறந்து, அயல் பிறக்கொணா மருந்து பெற்று, ஐய பொற் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர்போல், மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே, கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்கொலோ?' 54 ஒன்று கொண்டு, உள் நைந்து நைந்து, இரங்கி, விம்மி விம்மியே, பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்வாய், குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு, குளிர் மனத்து ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரைசெய்வாம்: 55 நீலமாலை வில் முறிந்த செய்தியை சீதையிடம் செப்புதல் வடங்களும் குழைகளும் வான வில்லிட, தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர, நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள், நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே. 56 வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்; அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினள், 'சிந்தையுள் மகிழ்ச்சியும், புகுந்த செய்தியும், சுந்தரி! சொல்' என, தொழுது சொல்லுவாள்: 57 'தய ரத துரக மாக் கடலன், கல்வியன், தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான், புயல் பொழி தடக் கையான், புதல்வன்; பூங் கணை மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்; 58 மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்; "அரா-அணை அமலன்" என்று அயிர்க்கும் ஆற்றலான்; 'இராமன்' என்பது பெயர்; இளைய கோவொடும், பராவ அரு முனியொடும், பதி வந்து எய்தினான்; 59 '"பூண் இயல் மொய்ம்பினன், புனிதன் எய்த வில் காணிய வந்தனன்" என்ன, காவலன் ஆணையின் அடைந்த வில் அதனை, ஆண்தகை, நாண் இனிது ஏற்றினான்; நடுங்கிற்று உம்பரே! 60 'மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன் பயில் "சூத்திரம் இது" என, தோளின் வாங்கினான்; ஏத்தினர் இமையவர்; இழிந்த, பூ மழை; வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!' 61 சீதை ஐயம் நீங்கி, அகத்துள் உறுதி பூணுதல் 'கோமுனியுடன் வரு கொண்டல்' என்ற பின், 'தாமரைக் கண்ணினான்' என்ற தன்மையால், 'ஆம்; அவனேகொல்' என்று, ஐயம் நீங்கினாள்- வாம மேகலையினுள் வளர்ந்தது, அல்குலே! 62 'இல்லையே நுசுப்பு' என்பார், 'உண்டு, உண்டு' என்னவும், மெல்லியல், முலைகளும் விம்ம விம்முவாள்; 'சொல்லிய குறியின், அத் தோன்றலே அவன்; அல்லனேல், இறப்பென்' என்று, அகத்துள் உன்னினாள். 63 சனகன் முனிவனிடம் திருமணம் குறித்து வினாவுதல் ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்; பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும் ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி, அக் கோசிகற்கு ஒரு மொழி, சனகன் கூறுவான்: 64 'உரை செய்-எம் பெரும! உன் புதல்வன் வேள்விதான், விரைவின், இன்று, ஒரு பகல் முடித்தல் வேட்கையோ? முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அவ் அரசையும், இவ் வழி அழைத்தல் வேட்கையோ? 65 முனிவன் மொழிப்படி, சனகன் தயரதனுக்குத் தூது விடுத்தல் மல் வலான் அவ் உரை பகர, மா தவன், 'ஒல்லையில் அவனும் வந்துறுதல், நன்று என, எல்லை இல் உவகையான், 'இயைந்தவாறு எலாம் சொல்லுக' என்று, ஓலையும் தூதும் போக்கினான். 66 மிகைப் பாடல்கள் புக்கனர்; சனகர் கோன், 'பொரு இல் நீங்கள்தாம் ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து, இக் கணத்து எய்துவீர்' என்றனன்; என, மிக்கவர் அவ் உரை விளம்பினார் அரோ. 2-1 புக்கனர், அவர்களைப் பொருந்த நோக்கி, 'இம் முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு இக் கணத்து அளித்திர் என்று, எம்மை ஆளுடை மிக்குறு சனகனும் விளம்பினான்' என்றார். 2-2 என்று சாலவே வெதும்பி இன்ன இன்னவாறெலாம் ஒன்றலாது பன்னி ஆவி ஊசலாட வாடுவாள் மன்றல் நாறு மாலை மீளி மான யானை போல முன் சென்ற வீதியூடு பார்வை செல்லநிற்கும் எல்லையே. 54-1 என்று மாதராள் நினைத்து, இவ் இடரின் மூழ்கு போதினில், குன்றுபோல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள், 'வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையைச் சென்று கூறுவோம்' எனத் தெளிந்து சிந்தை முந்துவாள். 55-1 |