மிதிலைக் காட்சிப் படலம் - Mithilai Kaatchip Padalam - பால காண்டம் - Bala Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





பால காண்டம்

10. மிதிலைக் காட்சிப் படலம்

மிதிலையில் அசைந்தாடிய கொடிகள்

'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! 1

நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள் எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்' என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார். 2

பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின் சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார். 3

மூவரும் மிதிலையினுள் புகுதல்

ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம் அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும் எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில், மிதிலை புக்கார். 4

விழுமிய வீதிகளைக் கடந்து செல்லுதல்

சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும், துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார். 5

தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
ஆறும் ஆய், கலின மா விலாழியால் அழிந்து, ஓர் ஆறு ஆய்,
சேறும் ஆய், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு ஒன்று
மாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில், சென்றார். 6

தண்டுதல் இன்றி ஒன்றி, தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின், கலவிப் போரின் ஒசிந்த மென் மகளிரேபோல்,
பண் தரு கிளவியார்தம் புலவியில் பரிந்த கோதை,
வண்டொடு கிடந்து, தேன் சோர், மணி நெடுந் தெருவில் சென்றார். 7

வீதிகளில் கண்ட காட்சிகள்

நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். 8

பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப் பொங்க,
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி,
காசு அறு பவளச் செங் காய் மரகதக் கமுகு பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையொடு உலவக் கண்டார். 9

வரப்பு அறு மணியும், பொன்னும், ஆரமும், கவரி வாலும்,
சுரத்திடை அகிலும், மஞ்ஞைத் தோகையும், தும்பிக் கொம்பும்,
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்புற, கரைகள்தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். 10

வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி, வார்ந்த
கள் என நரம்பு வீக்கி, கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து, இனிது சென்றார். 11

கொட்பு உறு கலினப் பாய் மா, குலால் மகன் முடுக்கி விட்ட
மட் கலத் திகிரி போல, வாளியின் வருவ, மேலோர்
நட்பினின் இடையறாவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்,
கட்புலத்து இனைய என்று தெரிவு இல, திரியக் கண்டார். 12

தயிர் உறு மத்தின் காம சரம் பட, தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லா,
செயிர் உறு மனத்த ஆகி, தீத் திரள் செங் கண் சிந்த,
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார். 13

வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும், கொண்டு,
நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார். 14

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல் மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார். 15

மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
பை அரவு அல்குலார் தம் உள்ளமும், பளிங்கும், போல,
மை அரி நெடுங் கண் நோக்கம் படுதலும் கருகி, வந்து
கை புகின் சிவந்து, காட்டும் கந்துகம் பலவும் கண்டார். 16

கடகமும், குழையும், பூணும், ஆரமும், கலிங்க நுண் நூல்
வடகமும், மகர யாழும் வட்டினி கொடுத்து, வாசத்
தொடையல் அம் கோதை சோர, பளிக்கு நாய் சிவப்பத் தொட்டு;
படை நெடுங் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார். 17

பங்கயம், குவளை, ஆம்பல், படர் கொடி வள்ளை, நீலம்,
செங் கிடை, தரங்கம், கெண்டை, சினை வரால், இனைய தேம்ப;
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி, சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார். 18

இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி,
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன,
புயங்களில் கலவைச் சாந்தும், புணர் முலைச் சுவடும் நீங்கா,
பயம் கெழு குமரர் வட்டு-ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார். 19

வெஞ் சினம் உருவிற்று என்னும் மேனியர், வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார்,
செஞ் சிலைக் கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச் சேந்த
குஞ்சியர், சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார். 20

பாகு ஒக்கும் சொல் பைங் கிளியோடும் பல பேசி,
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு, வண்டுஇனம் ஆர்க்கும் பொழில் கண்டார். 21

அரண்மனையைச் சூழ்ந்துள்ள அகழியை அடைந்தனர்

உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய,
இம்பர்த் தோன்றும் நாகர்தம் நாட்டின் எழில் காட்டி,
பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த, படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும், அகழ் கண்டார். 22

கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்

பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23

செப்பும்காலை, செங் கமலத்தோன் முதல் யாரும்,
எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்,
அப் பெண் தானே ஆயின போது, இங்கு, அயல் வேறு ஓர்
ஒப்பு எங்கே கொண்டு, எவ் வகை நாடி, உரை செய்வேம்? 24

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
'இமையா நாட்டம் பெற்றிலம்' என்றார்; 'இரு கண்ணால்
அமையாது' என்றார்-அந்தர வானத்தவர் எல்லாம். 25

வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்,
குன்றம் ஆட, கோவின் அளிக்கும் கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள். 26

'பெருந்தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும், தான்' என்றால், நான்முகன் இன்னும் தரலாமே?-
அருந்தா அந்தத் தேவர் இரந்தால், அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது, என் இனி நல்கும் மணி ஆழி? 27

அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே? 28

மலர்மேல் நின்று இம் மங்கை இவ் வையத்திடை வைக,
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ? நல் அறமேயோ?
உலகோ? வானோ? உம்பர்கொலோ? ஈது உணரேமால்! 29

தன் நேர் இல்லா மங்கையர், 'செங்கைத் தளிர் மானே!
அன்னே! தேனே! ஆர் அமிழ்தே!' என்று அடி போற்றி,
முன்னே, முன்னே, மொய்ம் மலர் தூவி, முறை சார,
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். 30

பொன் சேர் மென் கால் கிண்கிணி, ஆரம், புனை ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை, தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண, சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள். 31

'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும், திண்
கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள். 32

வெங் களி விழிக்கு ஒரு விழவும் ஆய், அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு, இனி, யாவது ஆம்கொலோ? 33

இழைகளும் குழைகளும் இன்ன, முன்னமே,
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும், இப் பாவை தோன்றலால்,
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே! 34

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. 36

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார். 37

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் -
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38

இராமன் முனிவருடன் போக அவன் நினைவால் சீதை ஓவியப்பாவைபோல் நிற்றல்

அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்,
பைந்தொடி, ஓவியப் பாவை போன்றனள்;
சிந்தையும், நிறையும், மெய்ந் நலனும், பின் செல,
மைந்தனும், முனியொடு மறையப் போயினான். 39

சீதையின் காதல் நோய்

பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலம், மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! 40

மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,
பால் உறு பிரை என, பரந்தது எங்குமே. 41

நோம்; உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின், மனத்திடை உன்னி, விம்முவாள்;
காமனும், ஒரு சரம் கருத்தின் எய்தனன் -
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. 42

நிழல் இடு குண்டலம் அதனின், நெய் இடா,
அழல் இடா, மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்,
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர,
தழல் இடு வல்லியே போல, சாம்பினான். 43

தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும்,
மழுங்கிய உள்ளமும், அறிவும், மாமையும்,
இழந்தவள்-இமையவர் கடைய, யாவையும்,
வழங்கிய கடல் என-வறியள் ஆயினாள். 44

வருந்திச் சோர்ந்த சீதையைத் தோழியர் மலர்ப்படுக்கையில் சேர்த்தல்

கலம் குழைந்து உக, நெடு நானும் கண் அற,
நலம் குழைதர, நகில்முகத்தின் ஏவுண்டு,
மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தர,
பொலங் குழை மயிலைக் கொண்டு, அரிதின் போயினார். 45

காதொடும் குழை பொரு கயற் கண் நங்கை தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த, தண் பனிச்
சீத நுண் துளி, மலர் அமளிச் சேர்த்தினார். 46

காதல் நோயால் துயருற்ற சீதையின் நிலை

தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்-
பூளை வீ புரை பனிப் புயற்குப் தேம்பிய
தாள தாமரைமலர் ததைந்த பொய்கையும்,
வாள் அரா நுங்கிய மதியும், போலவே. 47

மலை முகட்டு இடத்து உகு மழைக்கண் ஆலிபோல்,
முலை முகட்டு உதிர்ந்தன, நெடுங் கண் முத்துஇனம்;
சிலை நுதற்கடை உறை செறிந்த வேர்வு, தன்
உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே. 48

கம்பம் இல் கொடு மனக் காம வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,
வெம்புறு மனத்து அனல் வெதுப்ப, மென் மலர்க்
கொம்பு என, அமளியில் குழைந்து சாய்ந்தனள். 49

சொரிந்தன நறு மலர் சுருக் கொண்டு ஏறின;
பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின;
எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்
பரிந்தன; கரிந்தன, பல்லவங்களே. 50

நோய் முதல் அறியாது, தாதியர் முதலியோர் தவித்தல்

தாதியர், செவிலியர், தாயர், தவ்வையர்,
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கின்ர்;
'யாதுகொல் இது?' என, எண்ணல் தேற்றலர்;
போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர். 51

காதல் நோயால் துயருற்ற சீதையின் தோற்றம்

அருகில் நின்று அசைகின்ற ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட, இழையும், மாலையும்,
கரிகுவ, தீகுவ, கனல்வ, காட்டலால்,
உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள். 52

'அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு' எனும்;
'வல் எழு; அல்லவேல், மரகதப் பெருங்
கல்' எனும், 'இரு புயம்'; 'கமலம் கண்' எனும்;
'வில்லொடும் இழிந்தது ஓர் மேகம்' என்னுமால். 53

'நெருக்கி உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே! 54

'உரைசெயின், தேவர்தம் உலகு உளான் அலன்-
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன், மார்பின் நூலினன்,
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால். 55

'பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
எண்வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன் -
மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்? 56

இராமனை நினைத்து சீதை உருகுதல்

'இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57

படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாளுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது, என் உள்ளம் நண்ணியே. 58

'பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்,
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை, இன்னும், கண்ணிற் கண்டு,
அறிந்து, உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?' 59

என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின்,
'நின்றனன், இவண்' எனும்; 'நீங்கினான்' எனும்;
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்,
ஒன்று அல, பல நினைந்து, உருகும் காலையே. 60

அந்திமாலையின் தோற்றமும்

அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ,
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப் போய்,-
முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான். 61

விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும், இருளும், காட்டலால்,
அரியவட்கு அனல் தரும் அந்திமாலையாம்
கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான். 62

மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
ஓத மென் சிலம்பொடும், உதிரச் செக்கரும்,
பாதக இருள் செய் கஞ்சுகமும், பற்றலால்,
சாதகர் என்னவும் தகைத்து - அம் மாலையே. 63

மாலைப் பொழுதில் சீதையின் மன நிலையும் புலம்பலும்

கயங்கள் என்னும் கனல் தோய்ந்து, கடி நாள் மலரின் விடம் பூசி,
இயங்கு தென்றல் மன்மதவேள் எய்த புண்ணினிடை நுழைய,
உயங்கும் உணர்வும், நல் நலமும், உருகிச் சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி, 'இதுவோ கூற்றின் வடிவு?' என்றாள். 64

'கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும் போதோ?
படர் பூங் குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ? பானலோ?-
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ?' என்று தளர்வாள்முன்,
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே! 65

'மை வான் நிறத்து, மீன் எயிற்று, வாடை உயிர்ப்பின், வளர் செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே! என்னை வளைத்துப் பகைத்தியால்?
எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி இல்லை;
உய்வான் உற, இப் பழி பூண, உன்னோடு எனக்குப் பகை உண்டோ ? 66

ஆலம் உலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து, காயத்தின்
மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும் இருலாய் விளைந்ததுவே! 67

வெளி நின்றவரோ போய் மறைந்தார்; விலக்க, ஒருவர்தமைக் காணேன்;
"எளியள், பெண்" என்று இரங்காதே, எல்லி யாமத்து இருளூடே,
ஒளி அம்பு எய்யும் மன்மதனார், உனக்கு இம் மாயம் உரைத்தாரோ?
அளியென் செய்த தீவினையே! அந்தி ஆகி வந்தாயோ? 68

நெய் விளக்கு அகற்றி, மணி விளக்கு அமைத்துத் தோழியர் உபசரித்தல்

ஆண்டு, அங்கு, அனையாள், இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை, அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெருங் கோயில், சீத மணியின் வேதிகைவாய்,
'நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய' என்று, அங்கு, அவை நீக்கி,
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால், இரவைப் பகல் செய்தார். 69

திங்களின் தோற்றம்

பெருந் திண் நெடு மால் வரை நிறுவி, பிணித்த பாம்பின் மணித் தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க,
இருந்த அமரர் கலக்கிய நாள், அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது - ஆழி வெண் திங்கள். 70

வண்டு ஆய், அயன் நான்மறை பாட, மலர்ந்தது ஒரு தாமரைப் போது,
பண்டு ஆலிலையின்மிசைக் கிடந்து, பாரும் நீரும், பசித்தான்போல்,
உண்டான் உந்திக் கடல் பூத்தது; ஓதக் கடலும், தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது - ஆழி வெண் திங்கள். 71

புள்ளிக் குறி இட்டென ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில், சிறந்த இருட் பிழம்பை நக்கி நிமிரும் நிலாக் கற்றை, -
கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?-கீழ்பால் திசையின்மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின் பாளை போன்று விரிந்துளதால், 72

வண்ண மாலை கைபரப்பி, உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி, தண் மதியத்து உதயத்து எழுந்த நிலாக் கற்றை-
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக் கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ்போல்-எங்கும் பரந்துளதால், 73

நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடுவெண் திங்கள் எனும் தச்சன்,
மீ, தன் கரங்கள் அவை பரப்பி, மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்,
'காத்த கண்ணன் மணி உந்திக் கமல நாளத்திடைப் பண்டு
பூத்த அண்டம் பழையது' என்று, புதுக்குவானும் போன்றுளதால். 74

தாமரை மலர் குவிய, ஆம்பல் அலர்தல்

விரை செய் கமலப் பெரும் போது, விரும்பிப் புகுந்த திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய, கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்;
உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி, உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது, அரக்கு ஆம்பல். 75

சீதை நிலவை பழித்துரைத்தல்

'நீங்கா மாயையவர் தமக்கு நிறமே தோற்றுப் புறமே போய்,
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும், எனக்கும், கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து, உலகை விழுங்கி, மேன்மேலும்
வீங்கா நின்ற கர் நெருப்பினிடையே எழுந்த வெண் நெருப்பே! 76

'கொடியை அல்லை; நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும், வந்தனை,
பிடியின் மென் நடைப் பெண்ணொடு; என்றால், எனைச்
சுடுதியோ?-கடல் தோன்றிய திங்களே! 77

காதல் நோயால் சீதை பட்ட பாடு

மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலைமேல் பட,
ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென,
போது மொய்த்த அமளிப் புரண்டாள் அரோ! 78

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள். 79

வாச மென் கலவைக் களி வாரி, மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
வீச வீச வெதும்பினள், மென் முலை;-
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80

மலர்ப் படுக்கை கரிய, சேடியர் மேலும் மலர் கொண்டு வந்து குவித்தல்

தாயரின் பரி சேடியர், தாது உகு
வீ, அரித் தளிர், மெல் அணை, மேனியில்
காய் எரிக் கரியக் கரிய, கொணர்ந்து,
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார். 81

கன்னி நல் நகரில், கமழ் சேக்கையுள்,
அன்னம், இன்னணம் ஆயினள்; ஆயவள்,
மின்னின் மின்னிய, மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம். 82

மிகைப் பாடல்கள்

இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி, யார்க்கும்
முன்னவன் ஆய தேவும், முனிவனும், இளைய கோவும்,
பொன்னகர் இறையும் மற்றைப் பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தைச் சேர்ந்தார். 20-1

நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய், அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்,
அங்கு அவர்க்கு அமுதும் ஆய், வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ? 32-1

தீங்கு செய் அரக்கர் தம் வருக்கம் தீயவும்,
ஓங்கிய தவங்களும், உலகும், வேதமும்
தாங்கி மேல் வளரவும், தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள். 52-1

அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப, விண் எலாம்
கொப்புளங் கொண்டென, உடுக்கள் கூர்ந்தவே. 76-1




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247