உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
கிட்கிந்தா காண்டம் 3. நட்புக் கோட் படலம் அனுமன் சுக்கிரீவனிடம் சென்று, இராமனின் சிறப்புக்களைக்
கூறுதல் போன, மந்தர மணிப் புய நெடும் புகழினான்,- ஆன தன் பொரு சினத்து அரசன்மாடு அணுகினான்- 'யானும், என் குலமும், இவ் உலகும், உய்ந்தனம்' எனா, மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான். 1 மேலவன், திருமகற்கு உரைசெய்தான், 'விரை செய் தார் வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக் காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்' எனா, ஆலம் உண்டவனின் நின்று, அரு நடம் புரிகுவான். 2 'மண் உளார், விண் உளார், மாறு உளார், வேறு உளார், எண் உளார், இயல் உளார், இசை உளார், திசை உளார், கண் உளார் ஆயினும்; பகை உளார், கழி நெடும் புண் உளார், ஆர் உயிர்க்கு அமுதமேபோல் உளார். 3 'சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன், பாழியால் உலகு எலாம் ஒரு வழிப் படர வாழ் ஆழியான், மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்; ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார். 4 'நீதியார்; கருணையின் நெறியினார்; நெறிவயின் பேதியா நிலைமையார்; எவரினும் பெருமையார்; போதியாது அளவு இலா உணர்வினார்; புகழினார்; காதி சேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார். 5 'வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள, வில் கோலி, அக் கொடுமையாள் புதல்வனைக் கொன்று, தன் கால் இயல் பொடியினால், நெடிய கற் படிவம் ஆம் ஆலிகைக்கு, அரிய பேர் உரு அளித்தருளினான். 6 'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து, எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர்க் கடவுள்தன் பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க அனைய நாள். 7 'உளை வயப் புரவியான் உதவ உற்று, ஒரு சொலால், அளவு இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால், வளையுடைப் புணரி சூழ் மகிதலத் திரு எலாம் இளையவற்கு உதவி, இத் தலை எழுந்தருளினான். 8 'தெவ் இரா வகை, நெடுஞ் சிகை விரா மழுவினான் அவ் இராமனையும், மா வலி தொலைத் தருளினான், இவ் இராகவன்; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் அவ் விராதனை இராவகை துடைத்தருளினான். 9 'கரன் முதல் கருணை அற்றவர், கடற்படை யொடும் சிரம் உகச் சிலை குனித்து உதவுவான்; திசை உளார் பரமுகப் பகை துமித்தருளுவான்; பரமர் ஆம் அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்; 10 'ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால், காயமான் ஆயினான் ஆவனே? காவலா! நீ அம் மான் நேர்தியால்; நேர் இல் மாரீசன் ஆம் மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். 11 'உக்க அந்தமும், உடல் பொறை துறந்து உயர் பதம் புக்க அந்தமும், நமக்கு உரை செயும் புரையவோ - திக்கு அவம் தர, நெடுந் திரள் கரம், சினவு தோள், அக் கவந்தனும், நினைந்து அமரர் தாழ் சவரிபோல்? 12 'முனைவரும் பிறரும், மேல், முடிவு அரும் பகல் எலாம், இனையர் வந்து உறுவர் என்று, இயல் தவம் புரிகுவார்; வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் எனையர் என்று உரைசெய்கேன்? - இரவிதன் சிறுவனே! 13 'மாயையால், மதி இலா நிருதர்கோன், மனைவியைத் தீய கான் நெறியின் உய்த்தனன்; அவள் - தேடுவார், நீ, ஐயா, தவம் இழைத்துடைமையால், நெடு மனம் தூயையா உடையையால், உறவினைத் துணிகுவார். 14 'தந்திருந்தனர் அருள்; தகை நெடும் பகைஞன் ஆம் இந்திரன் சிறுவனுக்கு இறுதி, இன்று இசை தரும்; புந்தியின் பெருமையாய்! போதரு' என்று உரை செய்தான் - மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான். 15 சுக்கிரீவன் இராமனை வந்து காணுதல் அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான், 'உன்னையே உடைய எற்கு அரியது எப் பொருள் அரோ? பொன்னையே பொருவுவாய்! போது' என, போதுவான், தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான். 16 கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன், காமர் குண்டலம் துறந்த கோல வதனமும், குளிர்க்கும் கண்ணும், புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை. 17 சுக்கிரீவனின் சிந்தனை நோக்கினான்; நெடிது நின்றான்; 'நொடிவு அருங் கமலத்து அண்ணல் ஆக்கிய உலகம் எல்லாம், அன்று தொட்டு இன்று காறும்' பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து, இரு படிவம் ஆகி, மேக்கு உயர் தடந் தோள் பெற்று, வீரர் ஆய் விளைந்த' என்பான். 18 தேறினன் - 'அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே, மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ; ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது' அன்றே! 19 சுக்கிரீவனை இராமன் வரவேற்றல் என நினைந்து, இனைய எண்ணி, இவர்கின்ற காதல் ஓதக் கனை கடல் கரைநின்று ஏறா, கண் இணை களிப்ப நோக்கி, அனகனைக் குறுகினான்; அவ் அண்ணலும், அருத்தி கூர, புனை மலர்த் தடக் கை நீட்டி, 'போந்து இனிது இருத்தி' என்றான். 20 இருவரும் ஒருங்கு இருந்த காட்சி தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளி, குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார்; அவா முதல் அறுத்த சிந்தை அனகனும், அரியின் வேந்தும், உவா உற வந்து கூடும், உடுபதி, இரவி, ஒத்தார். 21 கூட்டம் உற்று இருந்த வீரர், குறித்தது ஓர் பொருட்கு, முன்நாள் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார்; மீட்டும், வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க, கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார். 22 சுக்கிரீவன் - இராமன் உரையாடல் ஆயது ஓர் அவதியின்கண், அருக்கன்சேய், அரசை நோக்கி, 'தீவினை தீய நோற்றார் என்னின் யார்? செல்வ! நின்னை, நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை, மேயினென்; விதியே நல்கின், மேவல் ஆகாது என்?' என்றான். 23 'மை அறு தவத்தின் வந்த சவரி, இம் மலையில் நீ வந்து எய்தினை இருந்த தன்மை, இயம்பினள்; யாங்கள் உற்ற கை அறு துயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்; ஐய! நின் - தீரும்' என்ன, அரிக் குலத்து அரசன் சொல்வான்: 24 'முரணுடைத் தடக் கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை, இருள்நிலைப் புறத்தின்காறும், உலகு எங்கும், தொடர, இக் குன்று அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்; சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம்' என்றான். 25 என்ற அக் குரக்கு வேந்தை, இராமனும் இரங்கி நோக்கி, 'உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள, முன் நாள் சென்றன போக, மேல் வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன நின்றன, எனக்கும் நிற்கும் நேர்' என மொழியும் நேரா, 26 'மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல் சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன்' என்றான். 27 இராமன் நட்புக் கொண்டமை கேட்டு, குரக்குச் சேனை மகிழ்தல் ஆர்த்தது குரக்குச் சேனை; அஞ்சனை சிறுவன் மேனி, போர்த்தன, பொடித்து உரோமப் புளகங்கள்; பூவின் மாரி தூர்த்தனர், விண்ணோர், மேகம் சொரிந்தென, அனகன் சொன்ன வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும் மெய் என்று உன்னா, 28 சுக்கிரீவனது இருக்கைக்கு அனுமன் இராமனை அழைத்தல் ஆண்டு எழுந்து, அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம், 'வாழி! தூண் திரள் தடந் தோள் மைந்த! தோழனும் நீயும் வாழி! ஈண்டு, நும் கோயில் எய்தி, இனிதின் நும் இருக்கை காண வேண்டும்; நும் அருள் என்?' என்றான்; வீரனும், 'விழுமிது' என்றான். 29 அனைவரும் புதுமலர்ச் சோலை சென்று சேர்தல் ஏகினர் - இரவி சேயும், இருவரும், அரிகள் ஏறும், ஊக வெஞ் சேனை சூழ, அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த- நாகமும், நரந்தக் காவும், நளின வாவிகளும் நண்ணி, போக பூமியையும் ஏசும் புது மலர்ச் சோலை புக்கார். 30 ஆரமும் அகிலும் துன்றி, அவிர் பளிக்கு அறை அளாவி, நாரம் நின்றன போல் தோன்றி, நவ மணித் தடங்கள் நீடும் பாரமும், மருங்கும், தெய்வத் தருவும், நீர்ப் பண்ணை ஆடும் சூர் அரமகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே. 31 அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் - வேலை முன், பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மை போல், குயிலும் மா மணிக் குழுவு சோதியால், வெயிலும், வெள்ளி வெண் மதியும், மேம்படா. 32 இராமன் சுக்கிரீவனோடு விருந்துண்ணல் ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய், மேய மைந்தரும், கவியின் வேந்தனும், தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார், ஆய அன்பினோடு அளவளாவுவார். 33 கனியும், கந்தமும், காயும், தூயன இனிய யாவையும் கொணர, யாரினும் புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின் இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான். 34 'நீயும் மனைவியைப் பிரிந்துள்ளாயோ?' என இராமன் சுக்கிரீவனை
வினாவுதல் விருந்தும் ஆகி, அம் மெய்ம்மை அன்பினோடு இருந்து, நோக்கி, நொந்து, இறைவன், சிந்தியா, 'பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப் பிரிந்துளாய்கொலோ நீயும் பின்?' என்றான். 35 மாருதி சுக்கிரீவனது நிலையை எடுத்துரைத்தல் என்ற வேலையில் எழுந்து, மாருதி, குன்று போல நின்று, இரு கை கூப்பினான்- 'நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்! ஒன்று, யான் உனக்கு உரைப்பது உண்டு' எனா: 36 வாலியின் சிறப்பு 'நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி வேலி அன்னவன், மலையின் மேல் உளான், சூலிதன் அருள் துறையின் முற்றினான், வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான்; 37 'கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று, உழலும் மந்தரத்து உருவு தேய, முன், அழலும் கோள் அரா அகடு தீ விட, சுழலும் வேலையைக் கடையும் தோளினான்; 38 'நிலனும், நீரும், மாய் நெருப்பும், காற்றும், என்று உலைவுஇல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்; அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்; 39 'கிட்டுவார் பொரக் கிடைக்கின், அன்னவர் பட்ட நல் வலம் பாகம் எய்துவான்; எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று, அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்; 40 'கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள் வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான் வால் செலாத வாய் அலது, இராவணன் கோல் செலாது; அவன் குடை செலாது அரோ. 41 'மேருவே முதல் கிரிகள் வேரொடும் பேருமே, அவன் பேருமேல்; நெடுங் காரும், வானமும், கதிரும், நாகமும், தூருமே, அவன் பெரிய தோள்களால். 42 'பார் இடந்த வெம் பன்றி, பண்டை நாள் நீர் கடைந்த பேர் ஆமை, நேர் உளான்; மார்பு இடந்த மா எனினும், மற்றவன் தார் கிடந்த தோள் தகைய வல்லதோ! 43 'படர்ந்த நீள் நெடுந் தலை பரப்பி, மீது, அடர்ந்து பாரம் வந்து உற, அனந்தனும் கிடந்து தாங்கும் இக் கிரியை மேயினான், நடந்து தாங்கும், இப் புவனம், நாள் எலாம். 44 'கடல் உளைப்பதும், கால் சலிப்பதும், மிடல் அருக்கர் தேர்மீது செல்வதும், தொடர மற்றவன் சுளியும் என்று அலால்,- அடலின் வெற்றியாய்! - அயலின் ஆவவோ? 45 'வெள்ளம் ஏழு பத்து உள்ள, மேருவைத் தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்; உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்,- வள்ளலே! - அவன் வலியின் வன்மையால், 46 'மழை இடிப்பு உறா; வய வெஞ் சீய மா முழை இடிப்பு உறா; முரண் வெங் காலும் மென் தழை துடிப்புறச் சார்வு உறாது; - அவன் விழைவிடத்தின்மேல், விளிவை அஞ்சலால். 47 'மெய்க்கொள் வாலினால், மிடல் இராவணன் தொக்க தோள் உறத் தொடர்ப்படுத்த நாள், புக்கிலாதவும், பொழி அரத்த நீர் உக்கிலாத வேறு உலகம் யாவதோ? 48 'இந்திரன் தனிப் புதல்வன், இன் அளிச் சந்திரன் தழைத்தனைய தன்மையான், அந்தகன் தனக்கு அரிய ஆணையான், முந்தி வந்தனன், இவனின் - மொய்ம்பினோய்! 49 சுக்கிரீவனோடு வாலி பகைமை கொண்ட காரணத்தை உரைத்தல் 'அன்னவன் எமக்கு அரசன் ஆகவே, இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள், முன்னவன் குலப் பகைஞன், - முட்டினான்- மின் எயிற்று வாள் அவுணன், வெம்மையான். 50 'முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர் ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்; "வட்ட மண்டலத்து அரிது வாழ்வு" எனா, எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான். 51 'எய்து காலை, அப் பிலனுள் எய்தி, "யான் நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; - நோன்மையாய்!- செய்தி, காவல், நீ, சிறிது போழ்து" எனா, வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான். 52 'ஏகி, வாலியும் இருது ஏழொடு ஏழ் வேக வெம் பிலம் தடவி, வெம்மையான் மோக வென்றிமேல் முயல்வின் வைகிட, சோகம் எய்தினன், துணை துளங்கினான். 53 'அழுது அழுங்குறும் இவனை, அன்பினின் தொழுது இரந்து, "நின் தொழில் இது; ஆதலால், எழுது வென்றியாய்! அரசு கொள்க!" என, "பழுது இது" என்றனன், பரியும் நெஞ்சினான். 54 'என்று, தானும், "அவ் வழி இரும் பிலம் சென்று, முன்னவன் - தேடுவேன்; அவற் கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின், பொன்றுவேன்" எனா, புகுதல் மேயினான். 55 'தடுத்து, வல்லவர் தணிவு செய்து, நோய் கெடுத்து, மேலையோர் கிளத்து நீதியால் அடுத்த காவலும், அரிகள் ஆணையால் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்? 56 'அன்ன நாளில், மாயாவி, அப் பிலத்து, இன்ன வாயினூடு எய்தும் என்ன, யாம், பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து, வேறு உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம். 57 'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க் கோமகன் தனைக் கொண்டுவந்து, யாம் மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய், ஆவி உண்டனன் அவனை, அன்னவன். 58 'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு, உளம் களித்த வாலியும், கடிதின் எய்தினான்; விளித்து நின்று, வேறு உரை பெறான்; "இருந்து அளித்தவாறு நன்று, இளவலார்!" எனா, 59 'வால் விசைத்து, வான் வளி நிமிர்ந்தெனக் கால் விசைத்து, அவன் கடிதின் எற்றலும், நீல் நிறத்து விண் நெடு முகட்டவும், வேலை புக்கவும், பெரிய வெற்பு எலாம். 60 'ஏறினான் அவன்; எவரும் அஞ்சுறச் சீறினான்; நெடுஞ் சிகரம் எய்தினான்; வேறு இல், ஆதவன் புதல்வன், மெய்ம்மை ஆம் ஆறினானும், வந்து அடி வணங்கினான். 61 'வணங்கி, "அண்ணல்! நின் வரவு இலாமையால், உணங்கி, உன் வழிப் படர உன்னுவேற்கு, இணங்கர் இன்மையால், இறைவ! நும்முடைக் கணங்கள், 'காவல், உன் கடன்மை"' என்றனர். 62 '"ஆணை அஞ்சி, இவ் அரசை எய்தி வாழ் நாண் இலாத என் நவையை, நல்குவாய்; பூண் நிலாவு தோளினை! பொறாய்!" என, கோணினான், நெடுங் கொடுமை கூறினான். 63 'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங் குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன் கடல் கடைந்த அக் கரதலங்களால், உடல் கடைந்தனன், இவன் உலைந்தனன். 64 'இவன், உலைந்து உலைந்து, எழு கடல் புறத்து அவனியும் கடந்து, எயில் அடைந்தனன்; கவனம் ஒன்று இலான், கால் கடாயென, அவனி வேலை ஏழ், அரியின் வாவினான். 65 'நக்கரக் கடல் புறத்து நண்ணும் நாள், செக்கர் மெய்த் தனிச் சோதி சேர்கலாச் சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப் பக்கம் உற்று, அவன் கடிது பற்றினான். 66 'பற்றி, அஞ்சலன் பழியின், வெஞ்சினம் முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால், எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து, அற்றம் ஒன்று பெற்று, இவன், அகன்றனன். 67 வாலிக்குப் பயந்து, சுக்கிரீவன் மலையில் வாழ்தலைக் கூறல் 'எந்தை! மற்று அவன் எயிறு அதுக்குமேல், அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்; இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் - முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால். 68 'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் அரு மருந்தையும், அவன் விரும்பினான்; இருமையும் துறந்து, இவன் இருந்தனன்; கருமம் இங்கு இது; எம் கடவுள்!' என்றனன். 69 அனுமன் உரை கேட்ட இராமன் சினந்து, வாலியைக் கொல்வதாகச்
சூளுரைத்தல் பொய் இலாதவன் வரன்முறை இம் மொழி புகல, ஐயன், ஆயிரம் பெயருடை அமரர்க்கும் அமரன், வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது; மலர்க் கண் - செய்ய தாமரை, ஆம்பல் அம் போது எனச் சிவந்த. 70 ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன, ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப் பாரம் ஈந்தவன், 'பரிவு இலன், ஒருவன் தன் இளையோன் தாரம் வௌவினன்' என்ற சொல் தரிக்குமாறு உளதோ? 71 'உலகம் எழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி, தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்; புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு' என்று புகன்றான். 72 எழுந்து, பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப, அழுந்து துன்பினுக்கு அக் கரை கண்டனன் அனையான், 'விழுந்ததே இனி வாலி தன் வலி!' என, விரும்பா, மொழிந்த வீரற்கு, 'யாம் எண்ணுவது உண்டு' என மொழிந்தான். 73 அமைச்சர்களோடு சுக்கிரீவன் ஆலோசிக்க, அனுமன் பேசுதல் அனைய ஆண்டு உரைத்து, அனுமனே முதலிய அமைச்சர், நினைவும், கல்வியும், நீதியும், சூழ்ச்சியும் நிறைந்தார் எனையர், அன்னவரோடும் வேறு இருந்தனன், இரவி தனையன்; அவ் வழி, சமீரணன் மகன் உரைதருவான்: 74 'உன்னினேன், உன் தன் உள்ளத்தின் உள்ளதை, உரவோய்! "அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை" என்று அயிர்த்தனை; இனி, யான் சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய்' எனச் சொன்னான். 75 'சங்கு சக்கரக் குறி உள, தடக் கையில், தாளில்; எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை; செங் கண் விற் கரத்து இராமன், அத் திரு நெடு மாலே; இங்கு உதித்தனன், ஈண்டு அறம் நிறுத்துதற்கு; இன்னும், 76 'செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக் கறுக்கும், வெஞ் சினக் காலன் தன் காலமும் காலால் அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடகத் தனி வில் இறுக்கும் தன்மை, அம் மாயவற்கு அன்றியும் எளிதோ? 77 'என்னை ஈன்றவன், "இவ் உலகு யாவையும் ஈன்றான்- தன்னை ஈன்றவற்கு அடிமை செய்; தவம் உனக்கு அஃதே; உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது" என உரைத்தான்; இன்ன தோன்றலே அவன்; இதற்கு ஏது உண்டு; - இறையோய்! 78 'துன்பு தோன்றிய பொழுது, உடன் தோன்றுவன்; "எவர்க்கும் முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என்?" என்று இயம்ப, "அன்பு சான்று" என உரைத்தனன்; ஐய! என் ஆக்கை, என்பு தோன்றல உருகினஎனின், பிறிது எவனோ? 79 இராமனின் ஆற்றல் அறிதற்கு அனுமன் உரைத்த உபாயம் 'பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்! அறிதிஎன்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள் நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன் பொறி கொள் வெஞ் சரம் போவது காண்!' எனப் புகன்றான். 80 அனுமன் சொல்லுக்கு இணங்கிய சுக்கிரீவன், இராமனிடம் தன்
எண்ணத்தை உரைத்தல் 'நன்று நன்று' எனா, நல் நெடுங் குன்றமும் நாணும் தன் துணைத் தனி மாருதி தோளிணை தழுவி, சென்று, செம்மலைக் குறுகி, 'யான் செப்புவது உளதால், ஒன்று உனக்கு' என, இராமனும், 'உரைத்தி அஃது' என்றான். 81 மிகைப் பாடல்கள் 'பிரிவு இல் கான் அது தனில், பெரிய சூர்ப்பணகைதன் கரிய மா நகிலொடும், காதொடும், நாசியை அரியினார்; அவள் சொல, திரிசிரா அவனொடும், கரனொடும், அவுணரும், காலன் வாய் ஆயினார்.' 10-1 கடுத்து எழு தமத்தைச் சீறும் கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின், வரம்பு தோன்றப் படித்தவன் வணங்கி, வாழ்த்தி, பரு மணிக் கனகத் தோள்மேல் எடுத்தனன், இரண்டுபாலும் இருவரை; ஏகலுற்றான். 29-1 'என்று கால்மகன் இயம்ப, ஈசனும், "நன்று நன்று" எனா, நனி தொடர்ந்து பின் சென்ற வாலிமுன் சென்ற செம்மல்தான் அன்று வாவுதற்கு அறிந்தனன்கொலாம்?' 65-1 இனையவா வியந்து இளவல்தன்னொடும், வனையும் வார் கழல் கருணை வள்ளல், பின்பு, 'இனைய வீரர் செய்தமை இயம்பு' என, புனையும் வாகையான் புகறல் மேயினான்: 65-2 'திறத்து மா மறை அயனொடு ஐம்முகன், பிறர், தேடிப் புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடிக் கமலம் உறச் சிவப்ப இத் தரை மிசை உறல், அறம் ஆக்கல், மறத்தை வீட்டுதல், அன்றியே, பிறிது மற்று உண்டோ ?' 70-1 'நீலகண்டனும், நேமியும், குலிசனும், மலரின் - மேல் உளானும், வந்து, அவன் உயிர்க்கு உதவினும், வீட்டி ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென்; அனலோன் சாலும், இன்று எனது உரைக்கு அருஞ் சான்று' எனச் சமைந்தான். 71-1 'மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள் எண்ணில் ஏழ் உள; அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன், விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும்' என்று உலகின் - கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால். 80-1 |