கிட்கிந்தா காண்டம்

16. சம்பாதிப் படலம்

வானரர் தென் கடலை காணுதல்

மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற
இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து, 'இலங்கையாள்,
உழைத் தடங் கண்ணி' என்று உரைத்திட்டு, ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார். 1

யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல்

'விரிந்து, நீர், எண் திசை மேவி, நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து' என்று போக்கிய
அருந் துணைக் கவிகள் ஆம் அளவு இல் சேனையும்
பெருந் திரைக் கடல் எனப் பெரிது கூடிற்றே. 2

வானரர் சீதையைக் காணாமை பற்றி வருந்தி உரைத்தல்

யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்;
பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத்
தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார்,
நா உறக் குழறிட நவில்கின்றார் அரோ? 3

'அற்றது நாள் வரை அவதி; காட்சியும்
உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்;
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்;
இற்றது நம் செயல், இனி' என்று எண்ணினார்; 4

'அருந் தவம் புரிதுமோ? அன்னது அன்றுஎனின்,
மருந்து அரு நெடுங் கடு உண்டு மாய்துமோ?
திருந்தியது யாது? அது செய்து தீர்தும்' என்று
இருந்தனர் - தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார். 5

அங்கதன் உரை

கரை பொரு கடல் அயல், கனக மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு,
'உரை செயும் பொருள் உளது' என உணர்த்தினான் -
அரசு இளங் கோள் அரி, அயரும் சிந்தையான்; 6

'"நாடி நாம் கொணருதும், நளினத்தாளை, வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி" என்று,
ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம்; பழியில் மூழ்கிவாம். 7

'"செய்தும்" என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்;
நொய்து சென்று, உற்றது நுவலகிற்றிலம்;
"எய்தும் வந்து" என்பது ஓர் இறையும் கண்டிலம்;
உய்தும் என்றால், இது ஓர் உரிமைத்து ஆகுமோ? 8

'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச் செய்கை காண்குறேன்;
நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்விர் ஆம்' என்றான். 9

சாம்பனது உரை

'விழுமியது உரைத்தனை; - விசயம் வீற்றிருந்து,
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்! -
அழுதுமோ, இருந்து? நம் அன்பு பாழ்படத்
தொழுதுமோ, சென்று?' எனச் சாம்பன் சொல்லினான்: 10

'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
"மாண்டுறுவது நலம்" என வலித்தனம்; -
ஆண் தகை அரசு இளங் குமர! - அன்னது
வேண்டலின், நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால்.' 11

அங்கதன் மறுமொழி

என்று அவன் உரைத்தலும், இருந்த வாலி சேய்,
'குன்று உறழ்ந்தென வளர் குவவுத் தோளினீர்!
பொன்றி நீர் மடிய, யான் போவெனேல், அது
நன்றதோ? உலகமும் நயக்கற்பாலதோ? 12

'"சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதர, போந்துளான்" என
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம், யான்
வான் தொடர்குவென்' என மறித்தும் கூறுவான்: 13

'எல்லை நம் இறுதி, யாய்க்கும் எந்தைக்கும், யாவரேனும்
சொல்லவும் கூடும்; கேட்டால், துஞ்சவும் அடுக்கும்; கண்ட
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம்; அச் சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால், வாழ்வரோ பரதன் மற்றோர்? 14

'பரதனும், பின்னுளோனும், பயந்தெடுத்தவரும், ஊரும்,
சரதமே முடிவர்; கெட்டேன்! "சனகி" என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால், உலகத்து யார்க்கும்,
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா!' எனக் கலுழ்ந்தான். 15

பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்
தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்ப அருந் தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு,
விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன்: 16

அங்கதன் இறத்தல் கூடாது என்பது குறித்துச் சாம்பன் தடுத்து மொழிதல்

'நீயும் நின் தாதையும் நீங்க, நின் குலத்
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்,
நாயகர் இறுதியும் நவிலற்பாலதோ? 17

'ஏகு நீ; அவ் வழி எய்தி, இவ் வழித்
தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி, எம்
சாகையும் உணர்த்துதி; தவிர்த்தி சோகம்; - போர்
வாகையாய்!' என்றனன் - வரம்புஇல் ஆற்றலான். 18

அனுமன் உரை

அவன் அவை உரைத்தபின், அனுமன் சொல்லுவான்:
'புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்;
கவனம் மாண்டவர் என, கருத்திலார் என,
தவன வேகத்தினீர்! சலித்திரோ?' என்றான். 19

பின்னரும் கூறுவான்: 'பிலத்தில், வானத்தில்,
பொன் வரைக் குடுமியில், புறத்துள் அண்டத்தில்,
நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனின்,
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே. 20

'நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்; அல்லது பழியிற்று ஆம்' என்றான். 21

'சடாயு மாண்டான்' என்ற சொற் கேட்டு, சம்பாதி அங்கு வருதல்

என்றலும், கேட்டனன், எருவை வேந்தன் - தன்
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல்; புலம்பும் நெஞ்சினன்;
குன்று என நடந்து, அவர்க் குறுகல் மேயினான். 22

'முறையுடை எம்பியார் முடிந்தவா' எனாப்
பறையீடு நெஞ்சினன்; பதைக்கும் மேனியன்;
இறையுடைக் குலிசவேல் எறிதலால், முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான்; 23

'மிடலுடை எம்பியை வீட்டும் வெஞ் சினப்
படையுளர் ஆயினார் பாரில் யார்?' எனா,
உடலினை வழிந்து போய், உவரி நீர் உக,
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான்; 24

உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான்;
மழுங்கிய நெடுங் கணின் வழங்கும் மாரியான்;
புழுங்குவான், அழுங்கினான்; புடவிமீதினில்,
முழங்கி, வந்து, இழிவது ஓர் முகிலும் போல்கின்றான்; 25

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற,
தெள்ளு நுண் பொடிபட, கடிது செல்கின்றான்;
தள்ளு வன் கால் பொர, தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான்; 26

சம்பாதியைக் கண்டு வானரர் அஞ்சி ஓட, அனுமன் சினத்துடன் எதிர் நிற்றல்

எய்தினன் - இருந்தவர் இரியல் போயினார்;
ஐயன், அம் மாருதி, அழலும் கண்ணினான்,
'கைதவ நிசிசர! கள்ள வேடத்தை!
உய்திகொல் இனி?' எனா உருத்து, முன் நின்றான். 27

சம்பாதியின் முகக் குறிப்பினால் குற்றமற்றவன் என அனுமன் உணர்தல்

வெங் கதம் வீசிய மனத்தன், விம்மலன்,
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்,
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை,
இங்கித வகையினால், எய்த நோக்கினான். 28

சம்பாதி, 'சடாயுவைக் கொன்றவர் யார்?' என வினாவுதல்

நோக்கினன், நின்றனன், நுணங்கு கேள்வியான்,
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாதமுன்,
'தாக்க அருஞ் சடாயுவைத் தருக்கினால் உயிர்
நீக்கினர் யார்? அது நிரப்புவீர்!' என்றான். 29

சம்பாதி தன் வரலாற்றை உரைத்தல்

'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின், உற்றதைப்
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால்'
என்னும் மாருதி எதிர், எருவை வேந்தனும்,
தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேவினான்: 30

'மின் பிறந்தாலென விளங்கு எயிற்றினாய்!
என், பிறந்தார்க்கு இடை எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன்' என முடியக் கூறினான். 31

இராவணன் வாளினால் சடாயு மாண்டமை பற்றி அனுமன் உரைத்தல்

கூறிய வாசகம் கேட்ட, கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா
ஏறினன், உணர்த்தினன், 'இகல் இராவணன்
வீறிய வாளிடை விளிந்தது ஆம்' என்றான். 32

சம்பாதியின் புலம்பல்

அவ் உரை கேட்டலும், அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்;
வெவ் உயிரா, உயிர் பதைப்ப, விம்மினான்;
இவ் உரை, இவ் உரை, எடுத்து இயம்பினான்: 33

'விளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்;
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு
இளையானே! இது என்ன மாயமோ? 34

'மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு;
உலையா நீடு அறம் இன்னும் உண்டுஅரோ;
நிலை ஆர் கற்பமும் நின்றது; இன்று நீ
இலையானாய்; இது என்ன தன்மையோ? 35

'உடனே, அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து -
இடு அ(ந்) நாள் வந்து இருவேமும் எய்தி, யான்;
விட நீயே தனிச் சென்ற வீரமும்
கடனே; - வெங் கலுழற்கும் மேன்மையாய்! 36

'ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
வென்றான் என்னினும், வீர! நிற்கு நேர்
நின்றானே, அவ் அரக்கன்! நின்னையும்
கொன்றானே! இது என்ன கொள்கையோ?' 37

சம்பாதியை அனுமன் தேற்றுதல்

என்று என்று ஏங்கி, இரங்கி, இன்னலால்
பொன்றும் தன்மை புகுந்தபோது, அவற்கு
ஒன்றும் சொற் கொடு உணர்ச்சி நல்கினான் -
வன் திண் தோள் வரை அன்ன மாருதி. 38

இராவணனோடு சடாயு மோதிய காரணத்தை சம்பாதி வினவ, அனுமன் விடை பகர்தல்

தேற்றத் தேறி இருந்த செங்கணான்,
'கூற்று ஒப்பான், கொலை வாள் அரக்கனோடு
ஏற்று, போர் செய்தது என் நிமித்து?' என,
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால்: 39

'எம் கோலான், அவ் இராமன், இல் உளாள்,
செங்கோலான் மகள், சீதை செவ்வியாள்,
வெங் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்,
தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள்; 40

'கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
கண்டான் நும்பி; அறம் கடக்கிலான்,
"வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு" எனா,
திண் தேரான் எதிர் சென்று சீறினான். 41

'சீறி, தீயவன் ஏறு தேரையும்
கீறி, தோள்கள் கிழித்து அழித்தபின்,
தேறி, தேவர்கள் தேவன் தெய்வ வாள்
வீற, பொன்றினன் மெய்ம்மையோன்' என்றான். 42

காரணம் அறிந்த சம்பாதி மகிழ்ந்து சடாயுவைப் பாராட்டுதல்

விளித்தான் அன்னது கேட்டு, 'மெய்ம்மையோய்!
தெளித்து ஆடத் தகு தீர்த்தன்மாட்டு, உயிர்
அளித்தானே! அது நன்று! நன்று!' எனாக்
களித்தான் - வாரி கலுழ்ந்த கண்ணினான். 43

'பைந் தார் எங்கள் இராமன் பத்தினி,
செந் தாள் வஞ்சி, திறத்து இறந்தவன்,
மைந்தா! எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது, உலந்தது உண்மையோ? 44

'அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா, உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு
இறவு என் ஆம்? இதின் இன்பம் யாவதோ?' 45

நீர்க்கடன் முடித்தபின், சம்பாதி வானரரை நோக்கி மொழிதல்

என்று என்று ஏங்கி, இரங்கி, இன் புனல்
சென்று, அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்,
வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான். 46

'வாழ்வித்தீர் எனை; - மைந்தர்! - வந்து, நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்;
கேள்வித் தீவினை கீறினீர்; இருள்
போழ்வித்தீர்; உரை பொய்யின் நீங்கினீர். 47

தனக்கு சிறை முளைக்க இராம நாமத்தைச் சொல்லுமாறு சம்பாதி வானரரை வேண்டுதல்

'எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; என் சிறை தோன்றும்; - சோர்வு இலா
நல்லீர்! அப் பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர்!' 48

இராம நாமத்தால் சம்பாதியின் சிறை முளைத்து விளங்குதல்

என்றான், 'அன்னது காண்டும் யாம்' எனா,
நின்றார் நின்றுழி, நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்,
வன் தோளான் சிறை வானம் தாயவே. 49

சிறை பெற்றான், திகழ்கின்ற மேனியான்,
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் -
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான். 50

வானரர் சம்பாதியின் முன்னைய வரலாற்றை வினவுதல்

தெருண்டான் மெய்ப் பெயர் செப்பலோடும், வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்;
மருண்டார்; வானவர் கோனை வாழ்த்தினார்;
வெருண்டார்; சிந்தை வியந்து விம்முவார். 51

அன்னானைக் கடிது அஞ்சலித்து, 'நீ
முன் நாள் உற்றது முற்றும் ஓது' எனச்
சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வுற,
தன்னால் உற்றது தான் விளம்புவான்: 52

சம்பாதி தன் முன்னை வரலாறு உரைத்தல்

'தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி, சடாயு, என்பேம்;
சேயொளிச் சிறைய வேகக் கழுகினுக்கு அரசு செய்வேம்;
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர்; 53

'"ஆய் உயர் உம்பர் நாடு காண்டும்" என்று அறிவு தள்ள,
மீ உயர் விசும்பினூடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்,
தீயையும் தீக்கும் தெய்வச் செங் கதிர்ச் செல்வன் சீறி, 54

'முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
"எந்தை! நீ காத்தி" என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும், மற்று அவன் மறையப் போனான்;
வெந்து மெய், இறகு தீந்து, விழுந்தனென், விளிகிலாதேன். 55

'மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல்,
கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், "சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி"' என்றான். 56

சம்பாதி இராவணன் இலங்கையில் சீதையைச் சிறைவைத்துள்ளதை தெரிவித்தல்

என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, 'எந்தாய்!
"புன் தொழில் அரக்கன் மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்,
தென் திசை" என்ன உன்னித் தேடியே வந்தும்' என்றார்;
'நன்று நீர் வருந்தல் வேண்டா; நான் இது நவில்வென்' என்றான். 57

'பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை; புக்கு,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறையகத்து வைத்தான்;
ஏகுமின் காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி, இன்னும். 58

'ஓசனை ஒரு நூறு உண்டால், ஒலி கடல் இலங்கை; அவ் ஊர்,
பாச வெங் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
ஏச அருங் குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது?' என்றான். 59

'நான்முகத்து ஒருவன், மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல்,
பால் முகப் பரவைப் பள்ளிப் பரம்பரன், பணி என்றாலும்,
காலனுக்கேயும், சேறல் அரிது; இது காவல் தன்மை;
மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின்; - விளிவு இல் நாளீர்! 60

'எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று, அவ் இலங்கை மூதூர்;
வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மை
சொல்லீரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி, மீள்திர்;
அல்லீரேல், என் சொல் தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா! 61

சம்பாதி விடைபெற்று செல்லுதல்

'காக்குநர் இன்மையால், அக் கழுகுஇனம் முழுதும் கன்றி,
சேக்கை விட்டு, இரியல்போகித் திரிதரும்; அதனைத் தீர்ப்பான்
போக்கு எனக்கு அடுத்த, நண்பீர்! நல்லது புரிமின்' என்னா,
மேக்கு உற விசையின் சென்றான், சிறையினால் விசும்பு போர்ப்பான். 62

மிகைப் பாடல்கள்

யாவரும் அவ் வயின்நின்றும், 'மன் இயல்
பூ வரும், அருந்ததி பொருவும் கற்புடைத்
தேவியை எங்கணும் தேடிக் கண்டிலம்;
மேவினம்' என்பது விளம்பினார் அரோ. 3-1

அன்னதோர் அளவையின் அங்க நாடு ஒரீஇ,
தென் மலைநாட்டினைத் தேடிச் சென்று, உடன்
இன் இசைத் தலைவரோடு இரண்டு வெள்ளமும்
மன்னு மா மயேந்திரத் தலத்து வந்ததால். 3-2

தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென்; சிறைகள் தீய, வெவ்வுயிர்த்து, உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற, உயிர்ப்பொறை போற்றகில்லாது,
ஆழ்ந்தனென்; ஆழ்ந்த என்னை அருந் தவன் எதிர்ந்து தேற்றி, 56-1

'"கற்றிலார் போல உள்ளக் களிப்பினால் அமரர் காப்பூடு
உற்றிடக் கருதி, மீப் போய், ஆதபத்து உனது மேனி
முற்று அழல் முருங்க, மண்ணை முயங்கினை; இனி என்? சில் நாள்
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால். 56-2

'"களித்தவர் கெடுதல் திண்ணம்; சனகியைக் கபடன் வவ்வி, அன்று
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர், இராம நாமம்
விளித்திட, சிறை வந்து ஓங்கும்; வெவ்வுயிர்த்து அயரல்" என்று,
அளித்தனன்; அதனால் ஆவி ஆற்றினேன் - ஆற்றல் மொய்ம்பீர்! 56-3

'அன்றியும், அலருள் வைகும் அயனைநேர் முனிவன், வாய்மை
நன்றிகொள் ஈசற் காண்பான் நணுகலும், வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு, அது யோகத்தின் உணர்ச்சி பேணி,
"பொன்றுதல் ஒழிமின்; யானே புகல்வது கேண்மின்" என்றான். 56-4

'"தசரத ராமன் தேவர் தவத்தினால், தாய் சொல் தாங்கி,
கச ரத துரகம் இன்றிக் கானிடை இறுத்த காலை,
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடித்
திசை திரி கவிகள் உற்றால், சிறகு பெற்று எழுதி" என்ன, 56-5

'எம்பியும் இடரின் வீழ்வான், ஏயது மறுக்க அஞ்சி,
அம்பரத்து இயங்கும் ஆணைக் கழுகினுக்கு அரசன் ஆனான்;
நம்பிமீர்! ஈது என் தன்மை? நீர் இவண் நடந்தவாற்றை,
உம்பரும் உவக்கத் தக்கீர்! உணர்த்துமின், உணர!' என்றான். 56-6

'எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர்
சினக் கொலை அரக்கன் மூதூர் வட திசைநின்று செல்வான்,
நினைக்குமுன் திருவோடு அந்த நீசனை நோக்கி, "எந்தை-
தனக்கு இரை எய்திற்று" என்னா, சிறகினால் தகைந்து கொண்டான். 57-1

'"காமத்தால் நலியப்பட்டு, கணங்குழைதன்னைக் கொண்டு
போம் மத்தா! போகல்; எந்தை புன் பசிக்கு அமைந்தாய்" என்று,
தாமத் தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க, நீசன்
நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி மீண்டு, எனக்குச் சொன்னான்.' 57-2

முன்னர் அந் நிசாகர முனி மொழிந்ததும்,
பின்னர் அச் சுபார்சுபன் பெலத்து இராவணன்-
தன்னொடும் அமர் பொரச் சமைந்து நின்றதும்,
கொன் இயல் சனகியைக் கொண்டு போனதும், 57-3

நினைந்து சம்பாதியும், நீதி யாவையும்
இனைந்தனன், வானரர் எவரும் கேட்கவே;
நினைந்து, கண்ணீர் விழ, நெடிது உயிர்த்தனர்;
வினைந்தனர், புரண்டனர்; விதியை நொந்தனர். 57-4