யுத்த காண்டம்

3. இரணியன் வதைப் படலம்

இரணியனது இயல்பும் ஏற்றமும்

'வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்;
போதம் கண்ணிய வரம் எலாம் தரக் கொண்டு போந்தான்;
காதும் கண்ணுதல், மலர் அயன், கடைமுறை காணாப்
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான். 1

'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், அயனும்,
கற்றை அம் சடைக் கடவுளும், காத்து, அளித்து, அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவினோ? அதன் புறத்து உலவா
மற்றை அண்டத்தும், தன் பெயரே சொல, வாழ்ந்தான். 2

'பாழி வன் தடந் திசை சுமந்து ஓங்கிய பணைக் கைப்
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு எனக் கடந்து ஏறும். 3

'வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான்;
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்;
பண்டைத் தெண் திரைப் பரவை நீர் உவர் என்று படியான்;
அண்டத்தைப் பொதுத்து, அப் புறத்து அப்பினால் ஆடும். 4

'மரபின், மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி,
பரவும் இந்திரன் பதியிடைப் பகற் பொழுது ஆற்றி,
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும். 5

'சாரும் மானத்தில், சந்திரன் தனிப் பதம் சரிக்கும்;
தேரின் மேலின் நின்று, இரவிதன் பெரும் பதம் செலுத்தும்;
பேர்வு இல் எண் திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்;
மேரு மால் வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும். 6

'நிலனும், நீரும், வெங் கனலொடு காலும், ஆய் நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி,
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய், உலகின்
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும், மாற்றும். 7

'தாமரைத் தடங் கண்ணினான் பேர் அவை தவிர,
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில,
தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வியின், இமையவர் பேறு எலாம் உண்ணும். 8

'காவல், காட்டுதல், துடைத்தல், என்று இத் தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர், பிடிக்கிலர் முறைமை;
ஏவர் மற்றவர்? யோகியர் உறு பதம் இழந்தார்;
தேவரும், அவன் தாள் அலால் அருச்சனை செய்யார். 9

'மருக் கொள் தாமரை நான்முகன், ஐம்முகன், முதலோர்
குருக்களோடு கற்று, ஓதுவது, அவன் பெருங் கொற்றம்;
சுருக்கு இல் நான்மறை, "தொன்று தொட்டு உயிர்தொறும் தோன்றாது
இருக்கும் தெய்வமும் இரணியனே! நம!" என்னும். 10

'பண்டு, வானவர் தானவர் யாவரும் பற்றி,
தெண் திரைக் கடல் கடைதர, வலியது தேடிக்
கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத் தோட்கு அமைந்த
தண்டு எனக் கொளலுற்று, அது நொய்து எனத் தவிர்ந்தான். 11

'மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும்,
கண்தலம் பசும்பொன்னவன் முன்னவன் காதில்
குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு விறல் கூறல்? 12

'மயர்வு இல் மன் நெடுஞ் சேவடி மண்ணிடை வைப்பின்,
அயரும், வாள் எயிற்று ஆயிர நனந் தலை அனந்தன்;
உயருமேல், அண்ட முகடு தன் முடி உற உயரும்;
பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும். 13

'பெண்ணில், பேர் எழில் ஆணினில், அலியினில், பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில், இல்லதில், உலவான்;
கண்ணில் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்;
மண்ணில் சாகிலன்; வானிலும் சாகிலன்;-வரத்தால். 14

'தேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும்
யாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற,
கோவை மால், அயன், மான் இடன், யாவரும் கொல்ல,
ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்-அனையான். 15

'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த
மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்;
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும், அன்னவன்தனைச் சென்று சாரா. 16

'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக்
கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா;
நள்ளின் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார்
கொள்ளச் சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்? 17

'பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான்;
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;
தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும், சாகான்;
ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன். 18

இரணியனது மகனாகிய பிரகலாதனின் பெருமை

'ஆயவன் தனக்கு அரு மகன், அறிஞரின் அறிஞன்,
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்,
நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன்,
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன். 19

தன் மகனை இரணியன் வேதம் ஓதுமாறு சொல்லுதல்

'வாழியான்-அவன்தனைக் கண்டு, மனம் மகிழ்ந்து, உருகி,
"ஆழி ஐய! நீ அறிதியால், மறை" என அறைந்தான் -
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம்
ஏழும் ஏழும் வந்து அடி தொழ, அரசு வீற்றிருந்தான். 20

ஓர் அந்தணன் பிரகலாதனுக்கு மறை ஓதுவித்தல்

'என்று, ஓர் அந்தணன், எல்லை இல் அறிஞனை ஏவி,
"நன்று நீ இவற்கு உதவுதி, மறை" என நவின்றான்;
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்;
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான். 21

இரணியன் பெயரை ஆசிரியன் ஓதச் சொல்ல, சிறுவன் 'ஓம் நமோ நாராயணாய!' என்று உரைத்தல்

'ஓதப் புக்க அவன், "உந்தை பேர் உரை" எனலோடும்,
போதத் தன் செவித் தொளை இரு கைகளால் பொத்தி,
"மூ தக்கோய்! இது நல் தவம் அன்று" என மொழியா,
வேதத்து உச்சியின் மெய்ப் பொருட் பெயரினை விரித்தான். 22

'"ஓம் நமோ நாராயணாய!" என்று உரைத்து, உளம் உருகி,
தான் அமைந்து, இரு தடக் கையும் தலைமிசைத் தாங்கி,
பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர்ப் புறம் பொடிப்ப,
ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி, 23

அந்தணன் உரைத்தலும், சிறுவனின் மறுமொழியும்

'"கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்; கெடுவாய்!
படுத்து ஒழிந்தனை; பாவி! எத் தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின் அறிவில்
எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?" என்றான். 24

'"என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; இனைய
உன்னை உய்வித்து, இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதற் பெயர் மொழிவது மொழிந்தேன்;
என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி" என்றான். 25

குருவின் அறிவுரையை மறுத்து, பிரகலாதன் சொல்லியவை

'"முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும், முதல்வன்
உந்தை; மற்று அவன் திருப்பெயர் உரைசெயற்கு உரிய
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ? ஐய!
எந்தை! இப் பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்" என்றான். 26

'வேத பாரகன் அவ் உரை விளம்பலும், விமலன்,
"ஆதி நாயகன் பெயர் அன்றி, யான் பிறிது அறியேன்;
ஓத வேண்டுவது இல்லை; என் உணர்வினுக்கு ஒன்றும்
போதியாததும் இல்லை" என்று, இவை இவை புகன்றான்: 27

'"தொல்லை நான்மறை வரன்முறைத் துணி பொருட்கு எல்லாம்
எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம்கொண்டது, என் உள்;
இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத,
வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத. 28

'"ஆரைச் சொல்லுவது, அந்தணர் அரு மறை அறிந்தோர்,
ஓரச் சொல்லுவது எப் பொருள், உபநிடதங்கள்,
தீரச் சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
பேரைச் சொல்லுவது அல்லது, பிறிதும் ஒன்று உளதோ? 29

'"வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ? 30

'"காடு பற்றியும், கனவரை பற்றியும், கலைத் தோல்
மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால்
வீடு பெற்றவர், 'பெற்றதின் விழுமிது' என்று உரைக்கும்
மாடு பெற்றனென்; மற்று, இனி என், பெற வருந்தி? 31

'"செவிகளால் பல கேட்டிலர் ஆயினும், தேவர்க்கு
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்;
கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்;-காலால்
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார். 32

'"எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்" என உரைத்தான். 33

மறையவன் நடந்த செய்தியை இரணியனுக்கு அறிவித்தல்

'மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன், மறையவன்; மறுகி,
"ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து எய்தியது" என்னா,
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான்,
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் எனச் சொன்னான்: 34

'"எந்தை! கேள்: எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச்
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி,
'முந்தையே நினைந்து, என் பொருள் முற்றும்?' என்று உரைத்து, உன்
மைந்தன் ஓதிலன், வேதம்" என்று உரைத்தனன், வணங்கி. 35

மைந்தன் உரைத்ததைக் கூறுமாறு இரணியன் கேட்க, அந்தணன், 'அது சொல்லத்தக்கது அன்று' எனல்

'அன்ன கேட்டு, அவன், "அந்தண! அந்தணர்க்கு அடாத,
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத,
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது,
என்ன சொல், அவன் இயம்பியது? இயம்புதி" என்றான். 36

'அரசன் அன்னவை உரைசெய்ய, அந்தணன் அஞ்சி,
சிரதலம் கரம் சேர்ந்திடா, "செவித் தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்!
நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்" என நவின்றான். 37

மைந்தனை அழைத்து, இரணியன் நிகழ்ந்தன கேட்டல்

'"கொணர்க என் மைந்தனை, வல் விரைந்து" என்றனன், கொடியோன்;
உணர்வு இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி,
கணனின் எய்தினர், "பணி" என, தாதையைக் கண்டான் -
துணை இலாந்தனைத் துணை என உடையவன் தொழுதான். 38

'தொழுத மைந்தனை, சுடர் மணி மார்பிடைச் சுண்ணம்
எழுத, அன்பினின் இறுகுறத் தழுவி, மாடு இருத்தி,
முழுதும் நோக்கி, "நீ, வேதியன் கேட்கிலன் முனிய,
பழுது சொல்லியது என்? அது பகருதி" என்றான். 39

மைந்தன் தனது உரையின் மகிமையைக் கூற, இரணியன் அதனை விளங்க உரைக்குமாறு வேண்டுதல்

'"சுருதி யாவையும் தொடங்குறும் எல்லையில் சொல்லும்
ஒருவன், யாவர்க்கும் நாயகன், திருப் பெயர் உணரக்
கருதக் கேட்டிடக் கட்டுரைத்து, இடர்க் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல்" என உரைத்தான். 40

'தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய, தீயோன்
"தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்;
ஆவது ஆகுக; அன்று எனின், அறிகுவம்" என்றே,
"யாவது, அவ் உரை? இயம்புதி, இயம்புதி!" என்றான். 41

நாராயண நாம மகிமையைப் பிரகலாதன் எடுத்துரைத்தல்

'"காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய! 42

'''மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை. 43

'"முக் கண் தேவனும், நான் முகத்து ஒருவனும், முதலா,
மக்கள்காறும், இம் மந்திரம் மறந்தவர் இறந்தார்;
புக்குக் காட்டுவது அரிது; இது பொதுவுறக் கண்டார்
ஒக்க நோக்கினர்; அல்லவர் இதன் நிலை உணரார். 44

'"தோற்றம் என்னும் அத் தொல் வினைத் தொடு கடல் சுழி நின்று
ஏற்று நன் கலன், அருங் கலன் யாவர்க்கும், இனிய
மாற்ற மங்கலம், மா தவர் வேதத்தின் வரம்பின்
தேற்ற மெய்ப்பொருள், திருந்த மற்று இதின் இல்லை, சிறந்த. 45

'"உன் உயிர்க்கும், என் உயிர்க்கும், இவ் உலகத்திலுள்ள
மன்னுயிர்க்கும், ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச்
சொன்னது இப் பெயர்" என்றனன், அறிஞரின் தூயோன்;
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான். 46

இரணியனது சின மொழி

'"இற்றை நாள் வரை, யான் உள நாள் முதல், இப் பேர்
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என்
ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப் பெயர் உரைத்தார்?
கற்றது ஆரொடு? சொல்லுதி, விரைந்து" எனக் கனன்றான். 47

'"முனைவர் வானவர் முதலினர், மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர், யாவரும், என் இரு கழலே
நினைவது; ஓதுவது என் பெயர்; நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர்; மைந்த! நீ யாரிடை அறிந்தாய்? 48

'"மறம் கொள் வெஞ் செரு மலைகுவான், பல் முறை வந்தான்,
கறங்கு வெஞ் சிறைக் கலுழன் தன் கடுமையின், கரந்தான்;
பிறங்கு தெண் திரைப் பெருங் கடல் புக்கு, இனம் பெயராது,
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார்? 49

'"பரவை நுண் மணல் எண்ணினும், எண்ண அரும் பரப்பின்
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொலக் குறைந்தார்;
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு
விரவு நன்மை என்? துன்மதி! விளம்பு" என வெகுண்டான். 50

'"வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை, ஏனம் ஒன்று ஆகி,
எயிற்றினால் எறிந்து, இன் உயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ, நினைப் பயந்தது நான்?" எனப் பகர்ந்தான். 51

'"ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன்,
தருதல், காக்குதல், தவிர்த்தல், என்று இவை செயத் தக்கோன்,
கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி,
திருவிலீ! மற்று இது எம் மறைப் பொருள் எனத் தெரிந்தாய்? 52

'"ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர் உலகின்;
வேதம் எங்கனம், அங்கனம் அவை சொன்ன விதியால்,
கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்; குறித்துத்
தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின். 53

'"செய்த மா தவம் உடைமையின், அரி, அயன், சிவன், என்று
எய்தினார் பதம் இழந்தனர்; யான் தவம் இயற்றி,
பொய் இல் நாயகம் பூண்டபின், இனி அது புரிதல்
நொய்யது ஆகும் என்று, ஆரும் என் காவலின் நுழைந்தார். 54

'"வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி,
கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர் பகையைத்
தாழ்வியாதன செய்யும்' என்று; அனையவர் தம்பால்
வாழ்வு யாது? அயல் எவ் வழிப் புறங்கொண்டு வாழ்வார்? 55

'"பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்; பெயர்த்தும்,
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை; முனிவன்
யாது சொல்லினன், அவை அவை இதம் என எண்ணி,
ஓது; போதி" என உரைத்தனன் - உலகு எலாம் உயர்ந்தோன். 56

இரணியனுக்குப் பிரகலாதனின் அறிவுரை

'"உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல், -
விரை உள அலங்கலாய்!-வேத வேள்வியின்
கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின்
பிரை உளது" என்பது மைந்தன் பேசுவான்: 57

'"வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின்
பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவென்;
'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தற்பாற்று' எனா,
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால். 58

'"தன்னுளே உலகங்கள் எவையும் தந்து, அவை -
தன்னுள்ளே நின்று, தான் அவற்றுள் தங்குவான்,
பின் இலன் முன் இலன், ஒருவன்; பேர்கிலன்;
தொல் நிலை ஒருவரால் துணியற்பாலதோ? 59

'"சாங்கியம், யோகம், என்று இரண்டு தன்மைய,
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன;
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி, அன்னவன்
ஓங்கிய மேல் நிலை உணரற்பாலதோ? 60

'"சித்து என அரு மறைச் சிரத்தின் தேறிய
தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர்
வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார். 61

'"அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து
உள; ஐயா! உபநிடதங்கள் ஓதுவ;
கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன்
களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார். 62

'"மூவகை உலகும் ஆய், குணங்கள் மூன்றும் ஆய்,
யாவையும் எவரும் ஆய், எண் இல் வேறுபட்டு,
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ? 63

'"கருமமும், கருமத்தின் பயனும், கண்ணிய
தரு முதல் தலைவனும், தானும், ஆனவன்
அருமையும் பெருமையும் அறிய வல்லவர்,
இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார். 64

'"மந்திரம் மா தவம் என்னும் மாலைய,
தந்துறு பயன் இவை, முறையின் சாற்றிய
நந்தல் இல் தெய்வம் ஆய், நல்கும் நான்மறை
அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம் - அவன். 65

'"முற்படப் பயன் தரும், முன்னில் நின்றவர்,
பிற்பயப் பயன் தரும், பின்பு போல் அவன்;
தற் பயன் தான் திரி தருமம் இல்லை; அஃது
அற்புத மாயையால் அறிகிலார் பலர். 66

'"ஒரு வினை, ஒரு பயன் அன்றி உய்க்குமோ,
இரு வினை என்பவை இயற்றி இட்டவை;
கருதின கருதின காட்டுகின்றது,
தரு பரன் அருள்; இனிச் சான்று வேண்டுமோ? 67

'"ஓர் ஆவுதி, கடைமுறை வேள்வி ஓம்புவார்,
அரா-அணை அமலனுக்கு அளிப்பரேல்; அது
சராசரம் அனைத்தினும் சாரும்-என்பது
பராவ அரு மறைப் பொருள்; பயனும் அன்னதால். 68

'"பகுதியின் உட் பயன் பயந்தது; அன்னதின்
விகுதியின் மிகுதிகள் எவையும், மேலவர்
வகுதியின் வயத்தன; வரவு போக்கது;
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ? 69

'"எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை,-
முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர் -
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்,
விழுத் தனிப் பல் இதழ் விரை இலா முகிழ். 70

'"கண்ணினும் கரந்துளன்; கண்டு காட்டுவார்
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி, உண்மையால்,
மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும் -
எண்ணினும் நெடியவன் ஒருவன், எண் இலான். 71

'"சிந்தையின், செய்கையின், சொல்லின், சேர்ந்துளன்;
இந்தியம்தொறும் உளன்; உற்றது எண்ணினால்,
முந்தை ஓர் எழுத்து என வந்து, மும் முறைச்
சந்தியும் பதமுமாய்த் தழைத்த தன்மையான். 72

'"காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும், வன்மையும், தீர்க்கும் செய்கையான்
நாமமும், அவன் பிற நலி கொடா நெடுஞ்
சேமமும், பிறர்களால் செப்பற்பாலவோ? 73

'"காலமும் கருவியும், இடனும் ஆய், கடைப்
பால் அமை பயனும் ஆய், பயன் துய்ப்பானும் ஆய்,
சீலமும் அவை தரும் திருவும் ஆய், உளன் -
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான். 74

'"உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர்
தெள் விளி யாழிடைத் தெரியும் செய்கையின்,
உள் உளன்; புறத்து உளன்; ஒன்றும் நண்ணலான்;
தள்ள அரு மறைகளும் மருளும் தன்மையான். 75

'"ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான்;
தாம மூஉலகமும் தழுவிச் சார்தலால்,
தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான். 76

'"காலையின் நறு மலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால், சொல்லுவோர்க்கு எலாம்,
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான். 77

'"இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடுஞ் செல்வமும், நாளும், நாம் அற
மன்னுயிர் இழத்தி! என்று இறைஞ்சி வாழ்த்தினேன்,
சொன்னவன் நாமம்" என்று உணரச் சொல்லினான். 78

இரணியன் சினந்து, பிரகலாதனைக் கொல்லுமாறு வீரரை ஏவுதல்

'எதிரில் நின்று, இவை இவை உரைத்திடுதலும், எவ் உலகமும் அஞ்ச,
முதிரும் வெங் கத மொழிகொடு மூண்டது, முது கடற் கடு ஏய்ப்ப;
கதிரும் வானமும் சுழன்றன; நெடு நிலம் கம்பித்த; கனகன் கண்
உதிரம் கான்றன; தோன்றின புகைக் கொடி; உமிழ்ந்தது கொடுந்தீயே 79

'"வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென்; வினையத்தால்,
ஊறி, என்னுளே உதித்தது; குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்;
ஈறு இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் - என்கின்றான்;
கோறிர்" என்றனன்; என்றலும், பற்றினர், கூற்றினும் கொலை வல்லார். 80

வீரர்கள் பிரகலாதனைப் பல வழிகளில் கொல்ல முயல்தலும், இறைவன் நாம மகிமையால் அவன் அவற்றிலிருந்து மீளுதலும்

'குன்றுபோல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர், மழுக் கூர் வாள்
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் - " உயிரோடும்
தின்று தீர்குதும்" என்குநர், உரும் எனத் தெழிக்குநர், சின வேழக்
கன்று புல்லிய் கோள் அரிக் குழு எனக் கனல்கின்ற தறுகண்ணார். 81

'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர்
"ஏ" எனும் மாத்திரத்து எய்தன, எறிந்தன எறிதொறும் எறிதோறும்,-
தூயவன் தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார்
வாயின் வைதன ஒத்தன-அத்துணை மழுவொடு கொலை வாளும். 82

'எறிந்த, எய்தன, எற்றின, குத்தின, ஈர்த்தன, படை யாவும்
முறிந்து, நுண் பொடி ஆயின; முடிந்தன; முனிவு இலான் முழு மேனி
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின; தூயவன் துணிவு ஒன்றா
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்; அயர்த்திலன், அவன் நாமம். 83

'"உள்ள வான் படை உலப்பில யாவையும் உக்கன - உரவோய்! - நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது; இனிச் செயல் என்கொல், பிறிது?" என்ன,
"கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள்; கதுமெனக் கனல் பொத்தித்
தள்ளுமின்" என உரைத்தனன்; வயவரும், அத் தொழில் தலைநின்றார். 84

'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம்தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட;
அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்; "அரி" என்று
தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது, சுடு தீயே. 85

'கால வெங் கனல் கதுவிய காலையில், கற்பு உடையவள் சொற்ற
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின், - கிழியொடு நெய் தீற்றி,
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின், - அனுமன் தன்
கூலம் ஆம் என, என்புறக் குளிர்ந்தது, அக் குரு மணித் திரு மேனி. 86

'"சுட்டது இல்லை நின் தோன்றலை, சுடர்க் கனல் சுழி படர் அழுவத்துள்
இட்ட போதிலும்; என் இனிச் செயத் தக்கது?" என்றனர், இகல் வெய்யோர்,
"கட்டி, தீயையும் கடுஞ் சிறை இடுமின்; அக் கள்வனைக் கவர்ந்து உண்ண
எட்டுப் பாம்பையும் விடுமின்கள்" என்றனன், எரி எழு தறுகண்ணான். 87

அனந்தனே முதலாகிய நாகங்கள், "அருள் என்கொல்?" என, அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினில்; நெருப்பு உகு பகு வாயால்,
வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல், வாள் எயிறு உற ஊன்றி,
சினம் தம் மீக்கொள, கடித்தன; துடித்திலன், திருப்பெயர் மறவாதான். 88

'பக்கம் நின்றவை பயத்தினின் புயற் கறைப் பசும் புனல் பரு வாயின்
கக்க, வெஞ் சிறைக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்துள்,
செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்தன செய்கைய, வலி சிந்தி
உக்க, பற் குலம்; ஒழுகின, எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி. 89

'"சூழப் பற்றின சுற்றும் எயிற்றின்
போழக்கிற்றில" என்று புகன்றார்;
"வாழித் திக்கின், மயக்கின் மதம் தாழ்,
வேழத்துக்கு இடுமின்" என விட்டான். 90

'பசையில் தங்கல் இல் சிந்தையர் பல்லோர்
திசையில் சென்றனர்; "செப்பினன்" என்னும்
இசையில் தந்தனர் - இந்திரன் என்பான்
விசையின் திண் பணை வெஞ் சின வேழம். 91

'கையில், கால்களில், மார்பு, கழுத்தில்,
தெய்வப் பாசம் உறப் பிணி செய்தார்;
மையல் காய் கரி முன் உற வைத்தார்;
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்: 92

'"எந்தாய்! - பண்டு ஓர் இடங்கர் விழுங்க, -
முந்தாய் நின்ற முதல் பொருளே! என்று,
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத,
வந்தான் என் தன் மனத்தினன்" என்றான். 93

'என்னா முன்னம், இருங் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த, நிலத்தின்,
அன்னானைத் தொழுது, அஞ்சி அகன்றது;
ஒன்னார் அத் திறம் எய்தி உரைத்தார். 94

'"வல் வீரைத் துயில்வானை மதித்து, என்
நல் வீரத்தை அழித்தது; நண்ணுற்று,
ஒல்வீர்! ஒற்றை உரக் கரிதன்னைக்
கொல்வீர்" என்றனன், நெஞ்சு கொதிப்பான். 95

'தன்னைக் கொல்லுநர் சாருதலோடும், -
பொன்னைக் கொல்லும் ஒளிப் புகழ் பொய்யா
மன்னைக் கொல்லிய வந்தது - வாரா
மின்னைக் கொல்லும் வெயில் திண் எயிற்றால். 96

'வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு
ஆரக் குத்தி அழுத்திய நாகம்,
வாரத் தண் குலை வாழை மடல் சூழ்
ஈரத் தண்டு என, இற்றன எல்லாம். 97

'வெண் கோடு இற்றன, மேவலர் செய்யும்
கண் கோடல் பொறியின் கடிது ஏகி,
"எண் கோடற்கு அரிது" என்ன, வெகுண்டான்,
திண் கோடைக் கதிரின் தெறு கண்ணான். 98

'"தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு
எள்ளக் கட்டி எடுத்து விசித்து,
கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா
வெள்ளத்து உய்த்திடுமின்" என விட்டான். 99

'"ஒட்டிக் கொல்ல உணர்ந்து வெகுண்டான்;
விட்டிட்டான் அலன்" என்று விரைந்தார்,
கட்டிக் கல்லொடு, கால் விசையின் போய்,
இட்டிட்டார், கடலின் நடு; - எந்தாய்! 100

'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம். 101

'தலையில் கொண்ட தடக் கையினான், தன்
நிலையின் தீர்வு இல் மனத்தின் நினைந்தான் -
சிலையில் திண் புனலில், சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான். 102

'மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான்,
மீதுற்ற ஆர் சிலை மீது கிடந்தான்,
ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் - மறை ஒல்லை உணர்ந்தான்; 103

'"அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்,
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ?
கொடியாய்! குறியாய்! குணம் ஏதும் இலாய்!
நெடியாய்! அடியேன் நிலை நேர்குதியோ? 104

'"கள்ளம் திரிவாரவர் கைதவம் நீ;
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ?
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான் -
வெள்ளம் தரும் இன் அமுதே! - விதியோ? 105

'"வரு நான்முகனே முதல் வானவர் தாம்,
திரு நான்மறையின் நெறியே திரிவார்;
பெரு நாள் தெரிகின்றிலர்; பேதைமையேன்,
ஒரு நாள், உனை எங்ஙனம் உள்ளுவேனோ? 106

'"செய்யாதனவோ இலை; தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்,
மெய்யே; உயிர் தீர்வது ஒர் மேல்வினை, நீ,
ஐயா! ஒரு நாளும் அயர்த்தனையோ? 107

'"ஆயப் பெறும் நல் நெறி தம் அறிவு என்று,
ஏயப் பெறும் ஈசர்கள் எண் இலரால்;
நீ அப்புறம் நிற்க, நினைக்கிலர்; நின்
மாயப் பொறி புக்கு, மயங்குவரால். 108

'"தாமே தனி நாயகர் ஆய், 'எவையும்
போமே பொருள்' என்ற புராதனர் தாம்,
'யாமே பரம்' என்றனர்; என்ற அவர்க்கு
ஆமே? பிறர், நின் அலது, ஆர் உளரே? 109

'"ஆதிப் பரம் ஆம் எனில், அன்று எனலாம்;
ஓது அப் பெரு நூல்கள் உலப்பு இலவால்;
பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்;
வேதப் பொருளே! விளையாடுதியோ? 110

'"அம்போருகனும், அரனும், அறியார்
எம் போலியர் எண்ணிடின், என், பலவா?
கொம்போடு, அடை, பூ, கனி, காய், எனினும்,
வம்போ, 'மரம் ஒன்று' எனும் வாசகமே? 111

'"நின்னின் பிறிதாய், நிலையின் திரியா,
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்,
உன்னின் பிறிது ஆயினவோ, உலகம் -
பொன்னின் பிறிது ஆகில, பொற் கலனே? 112

'"தாய் தந்தை எனும் தகை வந்தனைதான்,
நீ தந்தனை; நீ உறு நெஞ்சினென் நான்;
நோய் தந்தவனே! நுவல் தீர்வும்" எனா,
வாய் தந்தன சொல்லி, வணங்கினனால். 113

'அத் தன்மை அறிந்த அருந் திறலோன்,
"உய்த்து உய்ம்மின், என் முன்" என, உய்த்தனரால்;
"பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும்;
கைத்தும், கடு நஞ்சின்" எனக் கனல்வான். 114

'இட்டார் கடு வல் விடம்; எண்ணுடையான்
தொட்டான் நுகரா, ஒரு சோர்வு இலனால்;
கட்டு ஆர் கடு மத்திகை, கண் கொடியோன்,
விட்டான்; அவன்மேல் அவர் வீசினரால். 115

'வெய்யார், முடிவு இல்லவர், வீசிய போது,
"உய்யான்" எனும் வேலையினுள், "உறைவோன்
கை ஆயிரம் அல்ல; கணக்கு இல" என்று,
எய்யா உலகு யாவையும் எண்ணினனால். 116

இரணியனுக்கும் பிரகலாதனுக்கும் நிகழ்ந்த உரையாடல்

'"ஊனோடு உயிர் வேறு படா உபயம்
தானே உடையன், தனி மாயையினால்;
யானே உயிர் உண்பல்" எனக் கனலா,
வான் ஏழும் நடுங்கிட, வந்தனனால். 117

'வந்தானை வணங்கி, "என் மன் உயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல், இதுதான்
உம் தாரியது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான்" எனலும், 118

'"ஏவரே உலகம் தந்தார்? என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே? அல்லர் ஆகின், முனிவரே? முழுதும் தோற்ற
தேவரே? பிறரே? யாரே? செப்புதி, தெரிய" என்றான்,
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான், காட்டுமேல் காட்சி கொள்வான். 119

'"உலகு தந்தானும், பல் வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று,
உலைவு இலா உயிர்கள்தோறும், அங்கு அங்கே உறைகின்றானும்,
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல, எங்கும்
அலகு இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் - அத்தா! 120

'"என் கணால் நோக்கிக் காண்டற்கு எங்கணும் உளன்காண், எந்தை;
உன்கண் நான் அன்பின் சொன்னால், உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்;
நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ - நினக்குப் பின்னோன்
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்? 121

'"மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உருவம் மூன்று;
மூன்று கண், சுடர் கொள் சோதி மூன்று; அவன் உலகம் மூன்று;
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்
சான்று அவன்; இதுவே வேத முடிவு; இது சரதம்" என்றான். 122

இறைவன் தூணில் உளனோ? என்று இரணியன் வினாவ, பிரகலாதன், 'எங்கும் உள உண்மையை நீ காண்' என்றான்

'என்றலும், அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்,
"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் - என்றாய்;
நன்று அது கண்டு, பின்னர் நல்லவா புரிதும்; தூணில்
நின்றுளன் என்னின், கள்வன், நிரப்புதி நிலைமை" என்றான். 123

'"சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் நக்கான். 124

'"உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென, நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்" என்றான். 125

'"என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன்
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்" என்றனன், அறிவின் மிக்கான். 126

இரணியன் தூணை அறைய, நரசிங்கம் தூணிடைத் தோன்றிச் சிரித்தல்

'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று!" என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம். 127

பிரகலாதனின் பெருமகிழ்ச்சிச் செயல்

'"நாடி நான் தருவென்" என்ற நல் அறிவாளன், நாளும்
தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும்,
ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங் கை
சூடினான்; தொழுதான்; ஓடி, உலகு எலாம் துகைத்தான், துள்ளி. 128

இரணியன் நரசிங்க மூர்த்தியை போருக்கு அழைத்தல்

'"ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க
நீர், அடா, போதாது என்று, நெடுந் தறி நேடினாயோ?
போர் அடா? பொருதிஆயின், புறப்படு! புறப்படு!" என்றான் -
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப் போவான். 129

நரசிங்கம் தூணைப் பிளந்து வெளித் தோன்றி, பெரு வடிவு கொள்ளுதல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும். 130

'மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன்
அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினானால். 131

'"எத்துணை போதும் கை?" என்று இயம்பினால், எண்ணற்கு ஏற்ற
வித்தகர் உளரே? அந்தத் தானவர் விரிந்த சேனை,
பத்து நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த
அத்தனை கடலும் மாள, தனித் தனி அள்ளிக் கொண்ட, 132

'ஆயிரங் கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு, அங்கு அங்கு,
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டிப் பொன் தோள்,
தீ எனக் கனலும் செங் கண் சிரம்தொறும் மூன்றும், தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும். 133

'முடங்கு வால் உளை அவ் அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெங் காலச் செந் தீ அதனை வந்து அவிக்கும்; கால
மடங்கலின் உயிர்ப்பும், மற்று அக் காற்றினை மாற்றும்; ஆனால்,
அடங்கலும் பகு வாய் யாக்கை அப் புறத்து அகத்தது அம்மா! 134

'குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள், -அமுது பல்கும்
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந - இருக்கை எய்தி,
வயிற்றின் வந்து, அந்நாள், இந்நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ. 135

'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ , கேடு? நான்முகத்தோன் ஆதி
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை,
அன் வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை, அந் நாள்,
தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின். 136

'பேருடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள, விரல்களால் பிசையும்; வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்; 137

'வகிர்ப் படுத்து உரக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன் தோல்
துகிற் படுத்து உரிக்கும்; செந் தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பகை அறப் பிசையும், பல் கால்;
உகிர்ப் புரைப் புக்கோர்தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி; 138

'யானையும், தேரும், மாவும், யாவையும், உயிர் இராமை,
ஊனொடும் தின்னும்; பின்னை, ஒலி திரைப் பரவை ஏழும்
மீனொடும் குடிக்கும்; மேகத்து உருமொடும் விழுங்கும், விண்ணில்;
தான் ஒடுங்காது என்று, அஞ்சி, தருமமும் சலித்தது அம்மா! 139

'ஆழி மால் வரையோடு எற்றும், சிலவரை; அண்ட கோளச்
சூழ் இருஞ் சுவரில் தேய்க்கும், சிலவரை; துளக்கு இல் குன்றம்
ஏழினோடு எற்றிக் கொல்லும், சிலவரை; எட்டுத் திக்கும்
தாழ் இருட் பிழம்பின் தேய்க்கும், சிலவரைத் தடக் கை தாக்கி. 140

'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,
தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்க
கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வான
நிலைகளில் பரக்க, வேலை நீரினில் நிரம்பத் தூர்க்கும்; 141

'முப் புறத்து உலகத் துள்ளும் ஒழிவு அற முற்றும் பற்றி,
தப்புதல் இன்றிக் கொன்று, தையலார் கருவும் தள்ளி,
இப் புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி,
அப் புறத்து அண்டம்தோறும் தடவின, சில கை அம்மா! 142

'கனகனும், அவனில் வந்த, வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய, பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம்
நினைவதன்முன்னம் கொன்று நின்றது - அந் நெடுங் கண் சீயம்
வனை கழலவனும், மற்று அம் மடங்கலின் வரவு நோக்கி, 143

இரணியன் வாள் ஏந்தி, போருக்கு எழுதல்

'வயிர வாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும் வட்டச்
செயிர் அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய,
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச, ஆர்த்து, அங்கு
உயிருடை மேரு என்ன வாய் மடித்து, உருத்து நின்றான். 144

பிரகலாதன் வேண்டுகோளை மறுத்து, இரணியன் நரசிங்க மூர்த்தியை எதிர்த்தல்

'நின்றவன் தன்னை நோக்கி, "நிலை இது கண்டு, நீயும்,
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே;
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி; வணங்கவே, உன்
புன் தொழில் பொறுக்கும்" என்றான் - உலகு எலாம் புகழ நின்றான். 145

'"கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்
தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின், என்
வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ?" என்னா, அண்டங்கள் நடுங்க நக்கான். 146

நரசிங்க மூர்த்தி இரணியனது மார்பைப் பிளத்தல்

'நகைசெயா, வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து, எதிர் பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் -
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான். 147

'இருவரும் பொருந்தப் பற்றி, எவ் உலகுக்கும் மேல் ஆய்,
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்,
வெருவரும் தோற்றத்து, அஞ்சா, வெஞ் சின, அவுணன் மேரு
அரு வரை ஒத்தான்; அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான். 148

'ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர்ப் பாரம் ஆன்ற
ஏற்று அருங் கரங்கள் பல் வேறு எறி திரைப் பரப்பின் தோன்ற,
பாற்கடல் பரந்து பொங்கிப் பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன்; கனகனும் மேரு ஒத்தான். 149

'வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீள் இருங் கனக முட்டை நெடுஞ் சுவர் தேய்ப்ப, நேமி
கோளொடும் திரிவது என்னக் குல மணிக் கொடும் பூண் மின்ன,
தாள் இணை இரண்டும் பற்றிச் சுழற்றினன், தடக் கை ஒன்றால். 150

'சுழற்றிய காலத்து, இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி,
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்தன, இன்றும்
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன;
நிழல் தரும், காலை மாலை, நெடு மணிச் சுடரின் நீத்தம். 151

'"போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது" என்று
தான் தனி ஒருவன் தன்னை உரைசெயும் தரத்தினானோ?
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும், உதிர வெள்ளம் பரந்துளது, உலகம் எங்கும். 152

'ஆயவன் தன்னை, மாயன், அந்தியின், அவன் பொன் கோயில்
வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின் வாயின்,
மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்தம் இடுக்கண் தீர்த்தான். 153

தேவர்கள் நரசிங்கத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்

'முக்கணான், எண்கணானும், முளரி ஆயிரம் கணானும்,
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார்,
"எக் கணால் காண்டும், எந்தை உருவம்" என்று, இரங்கி நின்றார். 154

'நோக்கினார் நோக்கினார் முன், நோக்குறு முகமும் கையும்
ஆக்கையும் தாளும் ஆகி, எங்கணும் தானே ஆகி,
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா,
மேக்கு உயர் சீயம்தன்னைக் கண்டனர், வெருவுகின்றார். 155

நரசிங்க மூர்த்தியைப் பிரமன் துதித்தல்

'பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி,
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கித் தோன்ற,
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி,
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான்: 156

'"தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மை
பின்னைப் படைத்ததுவே காட்டும்; பெரும் பெருமை
உன்னைப் படைத்தாய் நீ என்றால், உயிர் படைப்பான்
என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ? 157

'"பல் ஆயிர கோடி அண்டம், பனிக் கடலுள்
நில்லாத மொக்குள் என, தோன்றுமால், நின்னுழையே;
எல்லா உருவமுமாய் நின்றக்கால், இவ் உருவம்
வல்லே படைத்தால், வரம்பு இன்மை வாராதோ? 158

'"பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை; தமியை; பிறர் இல்லை;
யாரைப் படைக்கின்றது? யாரை அளிக்கின்றது?
ஆரைத் துடைக்கின்றது? - ஐயா! - அறியேமால். 159

'"நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும், யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்." 160

சிங்கப் பெருமான் சீற்றம் தணிந்து, தேவர்கட்கு அபயம் அளித்தல்

'என்று ஆங்கு இயம்பி, இமையாத எண்கணனும்,
வன் தாள் மழுவோனும், யாரும், வணங்கினராய்
நின்றார், இரு மருங்கும்; நேமிப் பெருமானும்,
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான். 161

"எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று என்று,
நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி,
"அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினால்,
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான். 162

பிரமன் முதலிய தேவர்களின் வேண்டுகோட்படி திருமகள் வருதலும், சிங்கப் பெருமான் அருளொடு நோக்குதலும்

'பூவில் திருவை, அழகின் புனை கலத்தை,
யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை,
ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,
தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல. 163

'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை, நறுந் தார் இளங் கொழுந்தை,
முந்தா உலகும் உயிரும் முறை முறையே
தந்தாளை, நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான். 164

சிங்கப் பெருமான் பிரகலாதனை நோக்கிச் சொன்ன அருள்மொழிகள்

'தீது இலாஆக உலகு ஈன்ற தெய்வத்தைக்
காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள்
ஓதினார், சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும்,
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான். 165

'"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என் மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?" என்றான். 166

'"அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதில், நுந்தையை யாம் சீறி,
உயிர் நேடுவேம்போல், உடல் அளைய, கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனி யாம் செய்கேம்? 167

'"கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;
நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது
ஒல்லை உளதேல், இயம்புதியால்" என்று உரைத்தான். 168

பிரகலாதன் வேண்டிய வரமும், சிங்கப் பெருமான் அருளும்

'"முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,
என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான். 169

'அன்னானை நோக்கி, அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்,
"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன்,
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்,
உன் நாள் உலவாய் நீ, என் போல் உளை" என்றான். 170

'"மின்னைத் தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய்!
முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ, மூஉலகும்?
என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி,
உன்னைத் தொழுது ஏத்தி, உய்க, உலகு எல்லாம். 171

''ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ? - எற்கு அன்பர்
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்;
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ?
வானவர்க்கும் நீயே இறை - தொல் மறை வல்லோய்! 172

'"நல் அறமும் மெய்ம்மையும், நான் மறையும், நல் அருளும்,
எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும்,
தொல்லை சால் எண் குணனும், நின் சொல் தொழில் செய்ய,
மல்லல் உரு ஒளியாய்! நாளும் வளர்க, நீ!" 173

பிரகலாதனுக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்ய தேவர்களைப் பெருமான் பணித்தல்

'என்று வரம் அருளி, "எவ் உலகும் கைகூப்ப,
முன்றில் முரசம் முழங்க, முடி சூட்ட,
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து, இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக!" என்றான். 174

சிங்கப் பெருமான் முடி சூட்ட, பிரகலாதன் மூன்று உலகையும் ஆளுதல்

'தே, மன், உரிமை புரிய, திசை முகத்தோன்
ஓமம் இயற்ற, உடையான் முடி சூட்ட,
கோ மன்னவன் ஆகி, மூஉலகும் கைக்கொண்டான் -
நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான். 175

வீடணன் இராவணனுக்குக் கூறுதல்

'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச் செப்பினான்-
மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான். 176

மிகைப் பாடல்கள்

'ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதல் ஆய்,
தாது உலாவிய தொடைப் புயந்து இரணியன் தமரோடு
ஆதி நாள் அவன் வாழ்ந்தனன்; அவன் அருந் தவத்துக்கு
ஏது வேறு இல்லை; யார் அவன்போல் தவம் இழைத்தார்?
[இப்படலத்தின் 'வேதம் கண்ணிய' எனத் துவங்கும் முதல் பாடலுக்கு முன் இது அமைந்துள்ளது]

'இந்த இந்திரன் இமையவர் அவனுக்கு ஓர் பொருளோ?
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும்,
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்,
வந்து, இவன் பதம் முறை முறை வணங்கிட வாழ்ந்தான். 2-1

'திருமகட்கு இறை உலகினும், சேண்படு புரம் மூன்று
எரிபடுத்திய ஈசன் தன் பொருப்பினும், ஏகி,
சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது, ஆங்கு
"இரணியாய நம!" என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும். 5-1

'"ஓம் அரியாய நம்!" என ஒழிவுறாது ஓதும்
நாம நான் மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம்,
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் -
ஆம் அது ஓதுகில், அவன் தனக்கு ஒப்பவர் யாரோ? 9-1

'ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அருந் தவப் பெருமை
ஏலுமோ, எமக்கு இயம்பிட? இறைவ! மற்று அவன் பேர்
மூல மா மறை இது என, மூஉலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று எனத் தகுமால். 10-1

'குனிப்பு இலாத பல் ஆயிர கோடி அண்டத்தின்
நுனிக்கும் வானவர் முதலிய உயிர்த் தொகை நோக்கில்,
அனைத்தும் அன்னவன் ஏவலைத் தலைக்கொண்டு, அங்கு அவன் பேர்
நினைத்து வாழ்த்திட, மூவர்போல் ஒரு தனி நின்றான். 18-1

'அன்னவன், புகழ், சீலம், நல் அறம், தனி மெய்ம்மை,
உன்னும் நான் மறையோடு அருள் நீதியும் பொறையும்,
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே,
மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி வாழ்ந்தான். 19-1

'நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன் ஐந்தும்
ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம் வெருவி,
"அடங்கும், இன்று நம் வாழ்வு" என அயர்ந்து ஒரு படியாய்ப்
பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன பேசும். 23-1

'என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும், இது கேட்டு,
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும், "உரவோய்!
நன்று நீ எனக்கு உரைத்தது!" என்று, இன் நகை புரிந்து, ஆங்கு,
"இன்று கேள் இதின் உறுதி" என்று எடுத்து இவை உரைப்பான்: 24-1

'என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து ந்஢ன்று, இறைவன்
பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து, அரும் புதல்வன்,
"மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும் உரைத்திலென்; மரபால்
உன்னும் உண்மையை உரைத்தனென்; கேள்" என உரைப்பான். 39-1

'அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து அடைந்தேன்;
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத்
தெளிவு பெற்று, இறை பூண்டுளேன்; யான் அலால் தெய்வம்,
மொழி இல் மூடரும், வேறு உளது ஆம் என்று மொழியார். 55-1

'உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை, பார்
அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல்போல்,
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி, வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர், சீரியோர். 67-1

'நான்முகத்து ஒருவனும், நாரி பாகனும்,
தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவத் -
தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்,
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான். 67-2

'வையமேல் இனி வரும் பகை உள எனின், வருவது ஒன்று என்றாலும்,
"உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென்" என்று என் முன் உரைசெய்தாய்;
செய்ய வேண்டுவது என் இனி? நின் உயிர் செகுக்குவென்; சிறப்பு இல்லாப்
பொய்யிலாளனைப் பொருந்திய பெரும் பகை போய பின், புகழ் ஐயா! 79-1

'"இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர்மேல் ஏற்றிப்
புவனம் தன்னிலே நூக்கும்" என்று அவுணர் கோன் புகல,
புவனம் உண்டவன் கழல் இணைப் புண்ணியன் தன்னைப்
பவனன் தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார். 98-1

'உற்று எழுந்தனர், மாளிகை உம்பர்மேல் கொண்டு,
கற்று அறிந்தவர்க்கு அரசனைக் கடுந்திறல் அவுணர்
பற்றி நூக்கலும், பார் மகள் பரிவுடன், நார் ஆர்
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள். 98-2

'ஓதத்தில் மிதந்து ஓடிய கலமேல்
தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்;
வேதத்து உச்சியின் மெய்ப் பொருள் நாமம்
ஓதிப் பின்னும் உரைப்பதை உற்றான்: 103-1

'கயம் மேவும் இடங்கர் கழற் கதுவ,
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம்; மதக் கரி அன்று
உயுமாறு உதவுற்றிட, வந்திலையோ? 112-1

'வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால்,
காதும் பிரமக் கொலை காய, உலைந்து,
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன்
ஏதம் கெட வந்து, இரவு ஓட்டிலையோ? 112-2

'அது கண்டு, அடல் வஞ்சகர், அப்பொழுதில்,
கதம் மிஞ்சிய மன்னன் முனே கடுகி,
"புதல்வன் இறவாது பொருப்பு முநீர்
மிதவைப்பட மேவினன்" என்றனரால். 113-1

'மிடல் கொண்டு அவர் வீசு கரம் பொடிபட்டு
உடல் சிந்திட, உட்கினர்; "மற்று அவனுக்கு
ஒடிவு ஒன்று இலது" என்று அவர் ஓதும் முனம்,
விடம் அஞ்ச எழுந்தனன், வெய்யவனே. 116-1

'நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம் பொன்
தூணில் நின்றனனே அன்றி, தோன்றியது இலது' என்று ஒன்ற,
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப, வெள்ளி
காண வந்து அனைய சீயம் கணத்திடைக் கதிர்த்தது அம்மா! 128-1

'ஈது அவன் மகிழ்தலோடும், இரணியன் எரியின் பொங்கி,
"சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம்
போது, ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன்" என்று
ஓதினன், அண்ட கோளம் உடைந்திட உருத்துச் சொல்வான். 128-2