யுத்த காண்டம்

12. மகுட பங்கப் படலம்

இராமன் வீடணனிடம் அரக்கர்களை அறிவிக்கக் கேட்டல்

என்னும் வேலையின், இராவணற்கு இளவலை, இராமன்
'கன்னி மா மதில் நகர்நின்று நம் பலம் காண்பான்
முன்னி, வானினும் மூடி நின்றார்களை, முறையால்,
இன்ன நாமத்தர், இனையர், என்று இயம்புதி' என்றான். 1

வீடணன் இராவணனை முதலில் சுட்டிக் காட்டுதல்

'நாறு தன் குலக் கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறு செய்தவன், உருப்பசி, திலோத்தமை, முதலாக்
கூறும் மங்கையர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து
ஏறி நின்றவன், புன் தொழில் இராவணன்' என்றான். 2

சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்தல்

கருதி மற்றொன்று கழறுதல்முனம், விழிக் கனல்கள்
பொருது புக்கன முந்துற, சூரியன் புதல்வன், -
சுருதி அன்ன தாய், 'சிவந்த நல் கனி' என்று சொல்ல,
பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என, -பாய்ந்தான். 3

சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து,
சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் சென்றான்,
ததையச் செங் கரம் பரப்பிய தன் பெருந் தாதை
உதையக் குன்றின்நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான். 4

பள்ளம் போய்ப் புகும் புனல் எனப் படியிடைப் படிந்து
தள்ளும் பொற் கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான்,
வெள்ளம் போல் கண்ணி அழுதலும், இராவணன்மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான். 5

கரிய கொண்டலை, கருணை அம் கடலினை, காணப்
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர், பிறரும்,
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும், உலைவுற்று
இரியல்போயின மயிற் பெருங் குலம் என இரிந்தார். 6

சுக்கிரீவன், இராவணன் வினாவுக்குப் பதில் உரையாது, தன் கைகளால் அவன் மார்பில் குத்துதல்

கால இருள் சிந்து கதிரோன் - மதலை கண்ணுற்று,
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி,
நீல மலை முன் கயிலை நின்றது என, நின்றான்;
ஆலவிடம் அன்று வர, நின்ற சிவன் அன்னான். 7

'இத் திசையின் வந்த பொருள் என்?' என, இயம்பான்,
தத்தி எதிர் சென்று, திசை வென்று உயர் தடந் தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப,
குத்தினன் உரத்தில், நிமிர் கைத் துணை குளிப்ப. 8

இருவரும் கைகலத்தல்

திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான்,
ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப,
தரு வனம் எனப் புடை தழைத்து உயர் தடக் கை
இருபதும் எடுத்து, உரும் இடித்தென அடித்தான். 9

அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ, உறுக்கி எதிர் புக்கு, உடல் பொருத்தி,
கடுத்த விசையின் கடிது எழுந்து, கதிர் வேலான்
முடித் தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான். 10

உதைத்தவன் அடித் துணை பிடித்து, ஒரு கணத்தில்,
பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி,
மதக் கரியை உற்று அரி நெரித்தென மயக்கி,
சுதைத் தலனிடை, கடிது அடிக்கொடு துகைத்தான். 11

துகைத்தவன் உடற் பொறை சுறுக்கொள இறுக்கி,
தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி,
வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின்
குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான். 12

கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை,
பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி,
மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு, புறத்தில்
திக்கொடு, பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான். 13

அகழியில் போர்

திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி,
பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை பிடித்து,
கருத்து அழிவுற, -திரி திறத்து எயில், கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன், -எடுத்து அகழி இட்டான். 14

இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்,
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்;
ஒட்ட உடனே அவனும் வந்து, இவனை உற்றான்;
விட்டிலர் புரண்டு இருவர், ஓர் அகழின் வீழ்ந்தார். 15

விழுந்தனர், சுழன்றனர்; வெகுண்டனர், திரிந்தார்;
அழுந்தினர், அழுந்திலர்; அகன்றிலர், அகன்றார்;
எழுந்தனர், எழுந்திலர்; எதிர்ந்தனர் முதிர்ந்தார்;
ஒழிந்தனர், ஒழிந்திலர்; உணர்ந்திலர்கள், ஒன்றும். 16

அந்தர அருக்கன் மகன், - ஆழி அகழ் ஆக,
சுந்தரமுடைக் கரம் வலிக் கயிறுஅது ஒப்ப,
எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் என, - கடையும் வாலியையும் ஒத்தான். 17

ஊறு படு செம்புனல், உடைத்த கரை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர, அன்னார்,
பாறு, பொருகின்றன பருந்து, இவை எனப்போய்,
ஏறினர் விசும்பிடை; இரிந்த, உலகு எல்லாம். 18

தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்,
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்,
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான். 19

பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்,
செங் கதிரவன் சிறுவனை, திரள் புயத்தால்,
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்,
வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான். 20

கோபுரத்தில் குதித்து, இருவரும் பொருதல்

நூபுர மடந்தையர் கிடந்த அலற, நோனார்
மா புரம் அடங்கலும் இரிந்து அயர, வன் தாள்
மீ புர மடங்கல் என, வெங் கதிரவன் சேய்,
கோபுரம் அடங்க இடிய, தனி குதித்தான். 21

ஒன்றுற விழுந்த உருமைத் தொடர ஓடா,
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன,
'தின்றிடுவென்' என்று எழு சினத் திறல் அரக்கன்
பின் தொடர வந்து, இரு கரத் துணை பிடித்தான். 22

வந்தவனை நின்றவன் வலிந்து, எதிர் மலைந்தான்,
அந்தகனும் அஞ்சிட, நிலத்திடை அரைத்தான்;
எந்திரம் எனக் கடிது எடுத்து, அவன் எறிந்தான்;
கந்துகம் எனக் கடிது எழுந்து, எதிர் கலந்தான். 23

படிந்தனர், பரந்தனர், பரந்தது ஓர் நெருப்பின்
கொடுஞ் சினம் முதிர்ந்தனர், உரத்தின்மிசை குத்த,
நெடுஞ் சுவர் பிளந்தன; நெரிந்த நிமிர் குன்றம்;
இடிந்தன, தகர்ந்தன, இலங்கை மதில் எங்கும். 24

செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார்,
பிறிந்தனர் பொருந்தினர் எனத் தெரிதல் பேணார்,
எறிந்தனர்கள், எய்தினர்கள், இன்னர் என, முன் நின்று
அறிந்திலர், அரக்கரும்; அமர்த் தொழில் அயர்ந்தார். 25

சுக்கிரீவனைக் காணாது, இராமன் இரங்கி உரைத்தல்

இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின், எழிலி வண்ணன்,
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்,
'உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த' என்னா,
தன் உணர்வு அழிந்து, சிந்தை அலமந்து, தளர்ந்து, சாய்ந்தான். 26

'ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர்த் துணைவ! நின்னை
இன்றியான் உளனாய் நின்று, ஒன்று இயற்றுவது இயைவது அன்றால்;
அன்றியும், துயரத்து இட்டாய், அமரரை; அரக்கர்க்கு எல்லாம்
வென்றியும் கொடுத்தாய்; என்னைக் கெடுத்தது உன் வெகுளி' என்றான். 27

'தெய்வ வெம் படையும், தீரா மாயமும், வல்ல தீயோன்
கையிடைப் புக்காய்; நீ வேறு எவ்வணம் கடத்தி, காவல்?
வையம் ஓர் ஏழும் பெற்றால், வாழ்வெனே? வாராய் ஆகில்,
உய்வெனே? - தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே! 28

'ஒன்றாக நினைய, ஒன்றாய் விளைந்தது, என் கருமம்; அந்தோ!
என்றானும், யானோ வாழேன்; "நீ இலை" எனவும் கேளேன்;
இன்று ஆய பழியும் நிற்க, நெடுஞ் செருக் களத்தின் என்னைக்
கொன்றாயும் நீயே - உன்னைக் கொல்லுமேல், குணங்கள் தீயோன். 29

'இறந்தனை என்ற போதும் இருந்து, யான் அரக்கர் என்பார்
திறம்தனை உலகின் நீக்கி, பின் உயிர் தீர்வென் என்றால்,
"புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை
மறந்தனன்; வலியன்" என்பார்; ஆதலால், அதுவும் மாட்டேன். 30

'அழிவது செய்தாய், ஐய! அன்பினால்; அளியத்தேனுக்கு
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன்;
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி,
செழு நகர் அடைந்த போழ்தும், இத் துயர் தீர்வது உண்டோ ?' 31

சுக்கிரீவன் இராவணனது மகுட மணிகளைப் பறித்துக்கொண்டு வருதல்

என்று அவன் இரங்கும் காலத்து, இருவரும் ஒருவர்தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய், வெஞ் சமம் விளைக்கும் வேலை,
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி,
"பொன்றினென் ஆகின், நன்று" என்று அவன் வெள்க, இவனும் போந்தான். 32

கொழு மணி முடிகள்தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமரச் சூட்டி,
தொழுது, அயல் நாணி நின்றான்; தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே. 33

இராமன் சுக்கிரீவனைத் தழுவி, கண்ணீர் சொரிந்து, தன் அன்பை வெளியிட்டுப் பேசுதல்

என்பு உறக் கிழிந்த புண்ணின் இழி பெருங் குருதியோடும்
புன் புலத்து அரக்கன் தன்னைத் தீண்டிய புன்மை போக,
அன்பனை அமரப் புல்லி, மஞ்சனம் ஆட்டி விட்டான்,
தன் பெரு நயனம் என்னும் தாமரைத் தடத்து நீரால். 34

'ஈர்கின்றது அன்றே, என்றன் உள்ளத்தை; இங்கும் அங்கும்
பேர்கின்றது ஆவி; யாக்கை பெயர்கின்றது இல்லை; பின்னை,
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை?' என்று, தெண் நீர்
சோர்கின்ற அருவிக் கண்ணான் துணைவனை நோக்கிச் சொல்லும்: 35

'கல்லினும் வலிய தோளாய்! நின்னை அக் கருணை இல்லோன்
கொல்லுதல் செய்தான் ஆகின், கொடுமையால் கொற்றம் பேணி,
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி,
வெல்லினும், தோற்றேன் யானே அல்லெனோ, விளிந்திலாதேன்? 36

'பெருமையும் வண்மைதானும், பேர் எழில் ஆண்மைதானும்,
ஒருமையின் உணர நோக்கின், பொறையினது ஊற்றம் அன்றே!
அருமையும், அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும்!
இருமையும் கெடுக்கலுற்றாய்; என் நினைந்து, என் செய்தாய் நீ! 37

'இந் நிலை விரைவின் எய்தாது, இத் துணை தாழ்த்தி ஆயின்,
நல் நுதல் சீதையால் என்? ஞாலத்தால் பயன் என்? நம்பீ!
உன்னை யான் தொடர்வல்; என்னைத் தொடரும் இவ் உலகம்; என்றால்,
பின்னை என், இதனைக் கொண்டு? விளையாடி, பிழைப்ப செய்தாய்!' 38

சுக்கிரீவனது மறு மொழி

'காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன்;
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன்;
கேட்டிலேன் அல்லேன்; இன்று கண்டும், அக் கிளி அனாளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங் கை வந்தேன். 39

'வன் பகை நிற்க, எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற
புன் பகை காட்டும் யானோ புகழ்ப் பகைக்கு ஒருவன் போலாம்?
என் பகை தீர்த்து, என் ஆவி அரசொடும் எனக்குத் தந்த
உன் பகை உனக்கே தந்தேன்; உயிர் சுமந்து உழலா நின்றேன். 40

'செம்புக்கும் சிவந்த செங் கண் திசை நிலைக் களிற்றின் சீற்றக்
கொம்புக்கும் குறைந்தது உண்டே, என்னுடைக் குரக்குப் புன் தோள்?
"அம்புக்கு முன்னம் சென்று, உன் அரும் பகை முடிப்பல்" என்று
வெம்புற்ற மனமும், யானும், தீது இன்றி, மீள வந்தேன். 41

'நூல் வலி காட்டும் சிந்தை நும் பெருந் தூதன், வெம் போர்
வேல் வலி காட்டினார்க்கும், வில் வலி காட்டினார்க்கும்,
வால் வலி காட்டிப் போந்த வள நகர் புக்கு, மற்று என்
கால் வலி காட்டிப் போந்தேன்; கை வலிக்கு அவதி உண்டோ ?' 42

வீடணன் சுக்கிரீவனது வீரத்தைப் பாராட்டுதல்

இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் நாணி,
மன்னவர்மன்னன் முன்னர், வானர மன்னன் நிற்ப,
அன்னவன் தன்னை நோக்கி, ஆழியான் அறிவதாக,
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான்; 43

'வாங்கிய மணிகள், அன்னான் தலைமிசை மௌலி மேலே
ஓங்கிய அல்லவோ? மற்று, இனி அப்பால் உயர்ந்தது உண்டோ?
தீங்கினன் சிரத்தின் மேலும், உயிரினும், சீரிது அம்மா!
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய்! 44

'பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்,
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா,
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த
வீரதை விடைவலோற்கும் முடியுமோ? வெறும் உண்டோ? 45

'கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள்,
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி, பறித்திட்டாலும், -
தரு மணி இமைக்கும் தோளாய்! - தசமுகன் முடியில் தைத்த
திரு மணி பறித்துத் தந்த வென்றியே சீரிது அன்றோ? 46

'தொடி மணி இமைக்கும் தோளாய்! - சொல் இதின் வேறும் உண்டோ?
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்வயின் வாங்கிக் கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும் வென்றிக்கு
அடி மணி இட்டாய் அன்றே? - அரிக் குலத்து அரச!' என்றான். 47

இராமனும் சுக்கிரீவனது வெற்றியைப் போற்றுதல்

'வென்றி அன்று என்றும், வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க
நன்றி அன்று என்றும், அன்று; நானிலம் எயிற்றில் கொண்ட
பன்றி அன்று ஆகின், ஈது ஆர் இயற்றுவார் பரிவின்?' என்னா,
'இன்று இது வென்றி' என்று என்று, இராமனும் இரங்கிச் சொன்னான். 48

சூரியனின் மறைவு

தன் தனிப் புதல்வன் வென்றித் தசமுகன் முடியில் தைத்த
மின் தளிர்த்தனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்;
'ஒன்று ஒழித்து ஒன்று ஆம்' என்று, அவ் அரக்கனுக்கு ஒளிப்பான் போல,
வன் தனிக் குன்றுக்கு அப்பால், இரவியும் மறையப் போனான். 49

இராமனும் இராவணனும் தத்தம் இருக்கை சேர்தல்

கங்குல் வந்து இறுத்த காலை, கை விளக்கு எடுப்ப, காவல்
வெங் கழல் அரக்கன் மௌலிமிசை மணி விளக்கம் செய்ய,
செங் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறையத் தேக்கிப்
பொங்கிய தோளினானும், இழிந்து போய், இருக்கை புக்கான். 50

என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்,
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள,
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக,
பொன்றாது பொன்றினான், தன் புகழ் என இழிந்து, போனான். 51

மிகைப் பாடல்கள்

பிடித்தவன் விழித் துணை பிதுங்கிட நெருக்கி,
இடித்து அலம்வரக் கதறி எய்த்திட, இரங்காது
அடிக் கொடு துகைத்து அலை கடற்குள் ஒரு கையால்
எடுத்து உக, இராவணன் எறிந்து, இகலின் ஆர்த்தான். 22-1

எறிந்திட விழுந்து, இரவி சேய் அறிவு சோர்வுற்று,
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகமது தேறி,
பிறிந்திலன் எனத் தொனி பிறந்திட, மருங்கில்
செறிந்து, 'அமர் அரக்கனொடு செய்வென்!' என வந்தான். 22-2

என இவை அமலன் கூற, இரு கையும் எடுத்துக் கூப்பி,
மனம் மிக நாணி, ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான்,
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே,
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான். 38-1

என்றனன்; என்றலோடும், இணை அடி இறைஞ்சி, ஆங்கு,
குன்று உறழ் குவவுத் திண் தோள் கொற்ற வல் வீரற் காண,
தன் தனி உள்ள நாணால் தழல் விழிக் கொலை வெஞ் சீயம்
நின்றென, எருத்தம் கோட்டி, நிலனுற நோக்கிக் கூறும். 38-2

ஏர் அணி மாட கூடம் இலங்கிய இலங்கை வேந்தை
காரணம் ஆக வாலால் கட்டிய வாலி, அன்றிப்
போரணம் ஆளும் அம்பால் புடைத்த மால் பாதம் போற்றி
காரணச் சுடரோன் மைந்தன் தலைவனை வணங்கிச் சொல்லும். 38-3

இரவி போய் மறையும் முன்பு, அங்கு இராமனும், இலங்கை நின்ற
வரை இழிந்து, அனைவரோடும் வந்து, தன் இருக்கை எய்தி,
நிருதர்தம் குலத்தை எல்லாம் நீறு எழப் புரியுமாறே
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்துக் கொண்டாம். 49-1

தெய்வத் தாமரையோன் ஆகி யாவையும் தெரியக் காட்டி,
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பிக் காத்து,
சைவத்தன் ஆகி, யாவும் தடிந்திடும் செயலின் மேவும்
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே, யாம். 49-2

பூசலைக் குறித்து இராமன், பொரும் கவிச் சேனை வெள்ளம்
மாசு அற வகுத்து, நாலு திக்கினும் வளையச் செய்து,
பாசமுற்றுடைய நண்பின் படைத் துணையவர்களோடும்
பாசறை இருந்தான்; அந்தப் பதகனும் இழிந்து போனான். 49-3