யுத்த காண்டம்

9. ஒற்றுக் கேள்விப் படலம்

இராமன் துணைவருடன் சேதுவைக் காணச் செல்லுதல்

ஆண் தகையும், அன்பினொடு, காதல்அமிழ்து ஊற,
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி,
'ஈண்ட எழுக' என்றனன் - இழைத்த படி எல்லாம்
காண்டல் அதன்மேல் நெடிய காதல் முதிர்கின்றான். 1

பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும்
கொண்டல் என வந்து அ(வ்) அணையைக் குறுகி நின்றான் -
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளைக்
கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான். 2

நின்று, நெடிது உன்னினன், 'நெடுங் கடல் நிரம்பக்
குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை,
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான்
என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்?' என்றான். 3

ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்,
'ஆழம் உரை செய்யும் அளவே! இனி அது ஒன்றோ?
ஆழியில் இலங்கை பெரிது அத்திசையது ஆமேல்,
ஏழு கடலும் கடிது அடைப்பர், இவர்' என்றான். 4

இராமன் சேனையுடன் அணைவழிக் கடல் கடந்து போதல்

நெற்றியின் அரக்கர் பதி செல்ல, நெறி நல் நூல்
கற்று உணரும் மாருதி கடைக் குழை வர, தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல, வீரப்
பொன் திரள் புயக் கரு நிறக் களிறு போனான். 5

இருங் கவி கொள் சேனை, மணி ஆரம் இடறி, தன்
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான,
ஒருங்கு நனி போயின - உயர்ந்த கரையூடே
கருங் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப. 6

ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று,
யாதும் ஒழியா வகை சுமந்து, கடல் எய்தப்
போதலினும், அன்ன படை பொன்னி எனல் ஆகும். 7

ஆயது நெருங்க, அடி இட்டு, அடி இடாமல்,
தேயும் நெறி மாடு, திரை ஊடு, விசை செல்ல,
போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல்
பாய் புரவி விண் படர்வபோல், இனிது பாய்வ. 8

மெய்யிடை நெருங்க, வெளியற்று அயலில் வீழும்
பொய் இடம் இலாத, புனலின் புகல் இலாத,
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கையினிடை சென்று, கரை கண்ட கரை இல்லை. 9

இழைத்தனைய வெங் கதிரின் வெஞ் சுடர், இராமன்
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல்,
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம், உயர்ந்த
வழைத் தரு, எடுத்து அருகு வந்தனர், அநேகர். 10

ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே
ஆம் அரசன் - மைந்தர் திரு மேனி அலசாமே,
பூ மரன் இறுத்து, அவை பொருத்துவ பொருத்தி,
சாமரையின் வீசினர், படைத் தலைவர்தாமே. 11

அருங் கடகம் அம் கையில் அகற்றி, அயர்வோடும்
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா,
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து
இருங் கடல் கடந்து, கரை ஏறினன்-இராமன். 12

இலங்கை நகரின் புறத்துள்ள சுவேல மலையில் இராமன் தங்குதல்

பெருந் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்,
மருந்து அனைய தம்பியொடும், வன் துணைவரோடும்,
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான். 13

பாடிவீடு அமைக்குமாறு இராமன் நீலனுக்குச் சொல்ல, நீலன் நளனுக்குச் சொல்லுதல்

நீலனை இனிது நோக்கி, நேமியோன், 'விரைய, நீ நம்
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி' என்ன,
கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி,
நூல் வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்தின் சொன்னான். 14

நளன் பாசறை அமைத்தல்

பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின்
நல் நலம் ஆக வாங்கி, நால் வகைச் சதுரம் நாட்டி,
இன்னர் என்று எனாத வண்ணம், இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம்
நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாண் உட்கொண்டான். 15

வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும்
கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான்; கழைகள் ஆன
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான்; தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து, வாசப் பூவினால் வேய்ந்துவிட்டான். 16

வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி, மன்னுயிர்கட்கு எல்லாம்
தாயினும் அன்பினானைத் தாள் உற வணங்கி, தம்தம்
ஏயின இருக்கை நோக்கி, எண் திசை மருங்கும் யாரும்
போயினர்; பன்னசாலை இராமனும் இனிது புக்கான். 17

சூரியன் மறைவும், சந்திரன் தோற்றமும்

பப்பு நீர் ஆய வீரர், பரு வரை கடலில் பாய்ச்ச,
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு,
உப்பு நீர் அகத்துத் தோய்ந்த ஒளி நிறம் விளங்க, அப் பால்
அப்பு நீராடுவான்போல், அருக்கனும் அத்தம் சேர்ந்தான். 18

மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும்
பால் உறு பசு வெண் திங்கள், பங்கய நயனத்து அண்ணல்
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி,
கால் உற வளைத்த காமன் வில் என, காட்டிற்று அன்றே. 19

நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறுஞ் சுண்ணம் உண்டு,
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகரத் தென்றல் என்னும்
காற்றினும், மாலை ஆன கனலினும், காமன் வாளிக்
கூற்றினும், வெம்மை காட்டிக் கொதித்தது - அக் குளிர் வெண் திங்கள். 20

செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கைத் தீர்ந்து,
துயிர் சுவை மறந்தான் தோள்மேல் தூ நிலாத் தவழும் தோற்றம் -
மயிற் குலம் பிரிந்தது என்ன, மரகத மலைமேல், மெள்ள,
உயிர்ப்புடை வெள்ளைப் பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற. 21

மன் நெடு நகரம் மாடே வரவர, வயிரச் செங் கைப்
பொன் நெடுந் திரள் தோள் ஐயன் மெய் உறப் புழுங்கி நைந்தான்;
பல் நெடுங் காதத்தேயும் சுட வல்ல, பவளச் செவ் வாய்,
அந் நெடுங் கருங் கண், தீயை அணுகினால் தணிவது உண்டோ? 22

இராவணன் ஏவிய ஒற்றரை வீடணன் பற்றிக் கொள்ளுதல்

இற்றிது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ,
ஒற்றர் வந்து அளவு நோக்கி, குரங்கு என உழல்கின்றாரைப்
பற்றினன் என்ப மன்னோ - பண்டு தான் பல நாள் செய்த
நல் தவப் பயன் தந்து உய்ப்ப, முந்துறப் போந்த நம்பி. 23

பேர்வுறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள்,
ஓர்வுறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான்,
சோர்வுறு பாலின் வேலைச் சிறு துளி தெறித்தவேனும்,
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான்; 24

பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று, நீண்ட விஞ்சையுள் அடங்கி, தாமும்
உருவமும் தெரியாவண்ணம் ஒளித்தனர், உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான். 25

ஒற்றரின் நிலை கண்டு இரங்கிய இராமன், அவரை விடப் பணித்தல்

கூட்டிய வில் திண் கையால் குரங்குகள் இரங்கக் குத்தி,
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கிப்
பூட்டிய கையர், வாயால் குருதியே பொழிகின்றாரைக்
காட்டினன், 'கள்வர்' என்னா; கருணை அம் கடலும் கண்டான். 26

பாம்பு இழைப் பள்ளி வள்ளல், பகைஞர் என்று உணரான், 'பல்லோர்
நோம் பிழை செய்தகொல்லோ குரங்கு?' என இரங்கி நோக்கி,
'தாம் பிழை செய்தாரேனும், "தஞ்சம்!" என்று அடைந்தோர் தம்மை
நாம் பிழை செய்யலாமோ? நலியலீர்; விடுமின்!' என்றான். 27

இராவணனது ஒற்றர் என்பதை வீடணன் விளக்கிச் சொல்லுதல்

அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்,
'நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்;
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்;
சுகன், இவன்; அவனும் சாரன்' என்பது தெரியச் சொன்னான். 28

கல்விக்கண் மிக்கோன் சொல்ல, கரு மன நிருதக் கள்வர்,
'வல் விற் கை வீர! மற்று இவ் வானரர் வலியை நோக்கி,
வெல்விக்கை அரிது என்று எண்ணி, வினையத்தால் எம்மை எல்லாம்
கொல்விக்க வந்தான்; மெய்ம்மை; குரங்கு நாம்; கொள்க!' என்றார். 29

'கள்ளரே! காண்டி' என்னா மந்திரம் கருத்துள் கொண்டான்;
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர், தீர் வினை சேர்தலோடும்,
துள்ளியின் இரதம் தோய்ந்து, தொல் நிறம் கரந்து, வேறு ஆய்
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என, வேறுபட்டார். 30

இராமன் ஒற்றர்க்கு அபயம் அளித்து, உண்மையை உரைக்குமாறு கூறுதல்

மின் குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து, வெற்பில் நின்ற
வன் கணார் தம்மை நோக்கி, மணி நகை முறுவல் தோன்ற,
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன், 'போந்த தன்மை
என்கொலாம்? தெரிய எல்லாம் இயம்புதிர்; அஞ்சல்!' என்றான். 31

ஒற்றர் தாம் வந்த காரணம் உரைத்தல்

'தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை, தன்னைக் கொல்லும்
நோய் தெரிந்து உணரான், தேடிக் கொண்டனன் நுவல, யாங்கள்,
வாய் தெரிந்து உணராவண்ணம் கழறுவார், வணங்கி, மாய்
வேய் தெரிந்து உரைக்க வந்தேம், வினையினால் - வீர!' என்றார். 32

இராமன் இராவணனுக்குச் சில செய்திகள் சொல்லுமாறு ஒற்றரிடம் கூறுதல்

'எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர்; மகர வேலை கவிக் குல வீரர் தூர்த்துக்
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர்; காலம் தாழ்த்த
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் - வினையம் மிக்கீர்! 33

'கொத்துறு தலையான் வைகும் குறும்புடை இலங்கைக் குன்றம்
தத்துறு தட நீர் வேலைதனின் ஒரு சிறையிற்று ஆதல்
ஒத்து உற உணர்ந்திலாமை, உயிரொடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால். 34

'"சண்டம் கொள் வேகமாகத் தனி விடை உவணம் தாங்கும்,
துண்டம் கொள் பிறையான், மௌலித் துளவினானோடும், தொல்லை
அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும், அறம் இலாதாற்
கண்டங்கள் பலவும் காண்பென்" என்பதும் கழறுவீரால். 35

'"தீட்டிய மழு வாள் வீரன் தாதையைச் செற்றான் சுற்றம்
மாட்டிய வண்ணம் என்ன, வருக்கமும் மற்றும் முற்றும்
வீட்டி, என் தாதைக்காக மெய்ப் பலி விசும்புளோரை
ஊட்டுவென் உயிர் கொண்டு" என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால். 36

'"தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க,
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும்,
வாழ்வு எலாம் தம்பி கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு இலாச் சிறையின் வைப்பேன்" என்பதும் விளம்புவீரால். 37

ஒற்றரை இராமன் போக்குதல்

'நோக்கினீர், தானை எங்கும் நுழைந்து, நீர்; இனி, வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லை ஆயின் அஞ்சல்' என்று, அவரை ஐயன்,
'வாக்கினின், மனத்தின், கையின் மற்று இவர் நலியா வண்ணம்,
போக்குதி விரைவின்' என்றான்; 'உய்ந்தனம்' என்று போனார். 38

இரவில் இராவணன் மந்திராலோசனை

அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும்,
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும்,
வரவும் நோக்கி, இலங்கையர் மன்னவன்,
இரவின், எண்ணிட, வேறு இருந்தான் அரோ. 39

வார் குலாம் முலை மாதரும், மைந்தரும்,
ஆரும் நீங்க, அறிஞரொடு ஏகினான் -
'சேர்க' என்னின் அல்லால், இளந் தென்றலும்
சார்கிலா நெடு மந்திர சாலையே. 40

உணர்வு இல் நெஞ்சினர், ஊமர், உரைப் பொருள்
புணரும் கேள்வியர் அல்லர், பொறி இலர்,
கொணரும் கூனர், குறளர், கொழுஞ் சுடர்
துணரும் நல் விளக்கு ஏந்தினர், சுற்றினார். 41

இராவணன் வினா

'நணியர், வந்து மனிதர்; நம்க்கு இனித்
துணியும் செய் வினை யாது?' எனச் சொல்லினான் -
பணியும் தானவர் ஆதியர் பல் முடி
மணியினால் விளங்கும் மலர்த் தாளினான். 42

இராவணனது தாயைப் பெற்ற மாலியவான் கூற்று

ச்'கால வெங் கனல் போலும் கணைகளால்
வேலை வெந்து, நடுங்கி, வெயில் புரை
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம்
சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால். 43

'"கிழி படக் கடல் கீண்டதும், மாண்டது
மொழி படைத்த வலி" என மூண்டது ஓர்
பழி படைத்த பெரும் பயத்து, அன்னவன்
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால். 44

'படைத்த மால் வரை யாவும் பறித்து, வேர்
துடைத்த வானர வீரர், தம் தோள்களைப்
புடைத்தவாறும், புணரியைப் போக்கு அற
அடைத்தவாறும், என் உள்ளத்து அடைத்தவால். 45

'காந்து வெஞ் சின வீரர், கணக்கு இலார்,
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர,
வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால்
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால். 46

'சுட்டவா கண்டும், தொல் நகர் வேலையைத்
தட்டவா கண்டும், தா அற்ற தெவ்வரைக்
கட்டவா கண்டும், கண் எதிரே வந்து
விட்டவா கண்டும், மேல் எண்ண வேண்டுமோ?' 47

இராவணன் மாலியவானைச் சினத்தல்

என்று தாயைப் பயந்தோன் இயம்பலும்,
தின்று வாயை, விழிவழித் தீ உக,
'நன்று, நன்று! நம் மந்திரம் நன்று!' எனா,
'என்றும் வாழ்தி, இளவலொடு; ஏகு' என்றான். 48

மாலியவான் மௌனமாக இருக்க, சேனைத் தலைவன் பேசுதல்

'ஈனமேகொல், இதம்?' என எண்ணுறா,
மோனம் ஆகி இருந்தனன், முற்றினான்.
ஆன காலை, அடியின் இறைஞ்சி, அச்
சேனை நாதன் இனையன செப்பினான்: 49

'கண்மை இந் நகர் வேலை கடந்த அத்
திண்மை ஒன்றும் அலால், திசைக் காவலர்
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ்
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ? - ஐயா! 50

'"கூசும் வானரர் குன்று கொடு இக் கடல்
வீசினார்" எனும் வீரம் விளம்பினாய்;
ஊசி வேரொடும் ஓங்கலை, ஓங்கிய
ஈசனோடும், எடுத்ததும் இல்லையோ? 51

'அது கொடு என் சில? ஆர் அமர் மேல் இனி,
மதி கெடுந் தகையோர், வந்து நாம் உறை
பதி புகுந்தனர்; தம்மைப் படுப்பது ஓர்
விதி கொடு உந்த விளைந்ததுதான்' என்றான். 52

ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும்

முற்றும் மூடிய கஞ்சுகன், மூட்டிய
வெற்று அனல் பொறிக் கண்ணினன், வேத்திரம்
பற்றும் அங்கையின், படிகாரன், 'இன்று
ஒற்றர் வந்தனர்' என்ன, உணர்த்தினான். 53

வாயில் காவலன் கூறி வணங்கலும்,
மேய வெங் கண் விறல் கொள் இராக்கதர் -
நாயகன், 'புகுத்து, ஈங்கு' என, 'நன்று' எனப்
போய், அவன் புகல, புகுந்தார் அரோ. 54

மனைக்கண் வந்து, அவன் பாதம் வணங்கினார் -
பனைக் கை வன் குரங்கின் படர் சேனையை
நினைக்கும்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்,
கனைக்கும் தோறும் உதிரங்கள் கக்குவார். 55

'வெள்ள வாரி விரிவொடு, அவ் வீடணத்
தள்ளவாரி நிலைமையும், தாபதர்
உள்ளவாறும், உரைமின்' என்றான் - உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான். 56

'அடியம் அந் நெடுஞ் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம்; முது வேலையின்
படியை நோக்கி, எப் பாலும் படர்குறும்
கடிய வேகக் கலுழனின் கண்டிலேம். 57

'நுவல, யாம் வர வேண்டிய நோக்கதோ?
கவலை - வேலை எனும், கரை கண்டிலா,
அவலம் எய்தி அடைத்துழி, ஆர்த்து எழும்
துவலையே வந்து சொல்லியது இல்லையோ? 58

'"எல்லை நோக்கவும் எய்திலதாம்" எனும்
சொல்லை நோக்கிய மானுடன், தோள் எனும்
கல்லை நோக்கி, கணைகளை நோக்கி, தன்
வில்லை நோக்கவும், வெந்தது வேலையே. 59

'தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே,
தேர் உலாவு கதிரும், திருந்து தன்
பேர் உலாவும் அளவினும், பெற்றனன்,
நீர் உலாவும் இலங்கை நெடுந் திரு. 60

'சேது பந்தனம் செய்தனன் என்றது இப்
போது வந்த புது வலியோ - ஒரு
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய
ஏது அந்தம் இலாத இருக்கவே? 61

'மருந்து தேவர் அருந்திய மாலைவாய்,
இருந்த தானவர்தம்மை இரவி முன்
பெருந் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின்,
தெரிந்து காட்டினன், நும்பி சினத்தினான். 62

'பற்றி, வானர வீரர் பனைக் கையால்,
எற்றி எங்களை, ஏண் நெடுந் தோள் இறச்
சுற்றி, ஈர்த்து அலைத்து, சுடர்போல் ஒளிர்
வெற்றி வீரற்குக் காட்டி, விளம்பினான். 63

'"சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை
வரங்கள் சிந்துவென்" என்றனன்; மற்று எமைக்
குரங்கு அலாமை தெரிந்தும், அக் கொற்றவன்
இரங்க, உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று' என்றார். 64

மற்றும் யாவையும், வாய்மை அம் மானவன்
சொற்ற யாவையும், சோர்வு இன்றிச் சொல்லினார்;
'குற்றம் யாவையும் கோளொடு நீங்குக!
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக!' என்றார். 65

சேனை காவலனின் பேச்சு

'"வைதெனக் கொல்லும் விற் கை மானிடர், மகர நீரை
நொய்தினின் அடைத்து, மானத் தானையான் நுவன்ற நம் ஊர்
எய்தினர்" என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும்
செய் திறன் உண்டோ ?' என்னச் சேனை காப்பாளன் செப்பும்: 66

'விட்டனை மாதை என்ற போதினும், "வெருவி, வேந்தன்
பட்டது" என்று இகழ்வர் விண்ணோர்; பற்றி, இப் பகையைத் தீர
ஒட்டல் ஆம் போரில், ஒன்னார் ஒட்டினும், உம்பி ஒட்டான்;
கிட்டிய போது, செய்வது என் இனிக் கிளத்தல் வேண்டும்? 67

'ஆண்டுச் சென்று, அரிகளோடும், மனிதரை அமரில் கொன்று,
மீண்டு, நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமேல்,
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது, உறுதி உண்டோ?
வேண்டியது எய்தப் பெற்றால், வெற்றியின் விழுமிது அன்றோ? 68

'ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானை, ஐய!
தேயினும், ஊழி நூறு வேண்டுமால்; சிறுமை என்னோ?
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்,
நீ உருத்து எழுந்த போது, குரங்கு எதிர் நிற்பது உண்டோ? 69

'வந்தவர் தானையோடு மறிந்து, மாக் கடலில் வீழ்ந்து,
சிந்தினர் இரிந்து போக, சேனையும் யானும் சென்று,
வெந் தொழில் புரியுமாறு காணுதி; விடை ஈக!' என்ன,
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏயச் சொன்னான். 70

மாலியவான் பேச்சு

மதி நெறி அறிவு சான்ற மாலியவான், 'நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமைத்து' என்னா,
'விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், மீண்டு
செது நெறி நிலையினாரே' என்பது தெரியச் செப்பும்: 71

'"பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி வேலித்
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக,
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும்
ஈசற்கும் ஈசன் வந்தான்" என்பதோர் வார்த்தை இட்டார். 72

'அன்னவற்கு இளவல் தன்னை, "அரு மறை, 'பரம்' என்று ஓதும்
நல் நிலை நின்று தீர்ந்து, நவை உயிர்கள் தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்னப் பல வகை நின்ற தூயோன்
இன் அணை" என்ன யாரும் இயம்புவர்; ஏது யாதோ? 73

''அவ்வவர்க்கு அமைந்த வில்லும், குல வரை அவற்றின் ஆன்ற
வெவ் வலி வேறு வாங்கி, விரிஞ்சனே விதித்த, மேல் நாள்;
செவ் வழி நாணும், சேடன்; தெரி கணை ஆகச் செய்த
கவ்வு அயில், கால நேமிக் கணக்கையும் கடந்தது" என்பார். 74

'"வாலி மா மகன் வந்தானை, "வானவர்க்கு இறைவன்" என்றார்;
நீலனை, "உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன்" என்றார்;
காலனை ஒக்கும் தூதன், "காற்று எனும் கடவுள்" என்றார்;
மேலும் ஒன்று உரைத்தார், "அன்னான் விரிஞ்சன் ஆம், இனிமேல்" என்றார். 75

'"அப் பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் வேர் அறுப்பதாக
இப் பதி எய்தி நின்ற இராமன்" என்று எவரும் சொன்னார்;
ஒப்பினால் உரைக்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ?
செப்பி என்? "குரங்காய் வந்தார் தனித் தனித் தேவர்" என்றார். 76

'ஆயது தெரிந்தோ? தங்கள் அச்சமோ? அறிவோ? -யார்க்கும்
சேயவள்; எளியள் என்னா, சீதையை இகழல் அம்மா! -
"தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள்" என்றும், "தோன்றாத்
தாய் அவள், உலகுக்கு எல்லாம்" என்பதும், சாற்றுகின்றார். 77

'"கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம்;
மீனுடை அகழி வேலை விலங்கல்மேல் இலங்கை வேந்தன்
தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின் தலைவர்தாமே
மானுட வடிவம் கொண்டார்" என்பது ஓர் வார்த்தை இட்டார். 78

'"ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த" என்றார்;
"தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, தக்கோன்
ஏயின தூதன் எற்ற, பற்று விட்டு, இலங்கைத் தெய்வம்
போயினது" என்றும் சொன்னார்; "புகுந்தது, போரும்" என்றார். 79

'"அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன,
நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய் இலாதான்,
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞானத்
தம்பியே சாற்றிப் போனான்" என்பதும் சமையச் சொன்னார். 80

'ஈது எலாம் உணர்ந்தேன் யானும்; என் குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும், உன் தன் மேல் அன்பினாலும்,
வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்;
சீதையை விடுதி ஆயின், தீரும் இத் தீமை' என்றான். 81

மாலியவானின் பேச்சை இராவணன் இகழ்ந்து பேசுதல்

'மற்று எலாம் நிற்க, அந்த மனிதர் வானரங்கள், வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும், "தோற்றி நீ" என்றும் சொன்னாய்;
கற்றவா நன்று! போ' என்று, இனையன கழறலுற்றான்: 82

'பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக,
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப் புறத்தது ஆக,
காது வெஞ் செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும்,
சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ? 83

'ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம்
வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; "வெம் போர்
முன் தருக" என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம்
சென்றன; இன்று வந்த குரங்கின் மேல் செல்கலாவோ? 84

'சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும் ஓர் குரங்காய்த் தோன்றி
ஏலுமேல், இடைவது அல்லால், என் செய வல்லான் என்னை?
வேலை நீர் கடைந்த மேல்நாள், உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? அம்மா! 85

'அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும், என் கை வாளி
பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போழ்ந்து முன் நாள்,
மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண? 86

'கொற்றவன், இமையோர் கோமான், குரக்கினது உருவு கொண்டால்,
அற்றை நாள், அவன் தான் விட்ட அயிற்படை அறுத்து மாற்ற,
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப்
பொற்றை மால் வரைகளோ, என் புய நெடும் பொருப்பும்? அம்மா!' 87

சூரியன் தோற்றம்

உள்ளமே தூது செல்ல, உயிர் அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப்புள் கவற்சி நீங்க,
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட
வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே. 88

இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி,
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான், - 'போர் மேற்கொண்டு
மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால்' என்று, தானும்
தொல் நகர் காண்பான் போல, - கதிரவன் தோற்றம் செய்தான். 89

மிகைப் பாடல்கள்

என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய்
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து,
துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே,
'வென்றி, இனி' என்று, படையோடு உடன் விரைந்தான். 4-1

இறுத்தனன் - ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும்,
குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும்,
பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும், பொய் தீர்
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா! 13-1

(நளனுக்கு முடி சூட்டு படலம்)

என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன்,
'வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக்
குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை
நன்று என முயன்ற தவம் என்கொல்? நவில்க!' என்றான். 13-2

நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக்
கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே,
'புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே
உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். 13-3

'மலரவனிடத்தில் வரு காசிபன், மரீசி,
புலகனுடன் அத்திரி, புலத்தியன், வசிட்டன்,
இலகு விசுவன், பிருகு, தக்கன், இயல்பு ஆகும்
நலம் மருவு அங்கிரவு எனப் புகல்வர் நல்லோர். 13-4

'மக்கள்தனில் ஒன்பதின்மர் வானம் முதலாக
மிக்க உலகைத் தர விதித்து, விசுவப் பேர்
தொக்க பிரமற்கு ஒரு தொழில்தனை விதித்தான்
அக் கணம் நினைத்தபடி அண்டம் முதல் ஆக. 13-5

'அன்ன தொழிலால் விசுவகன்மன் எனல் ஆனான்,
பொன்னுலகை ஆதிய வகுத்திடுதல் போல,
நென்னல் இகல் மாருதி நெருப்பினில் அழிந்த
நன் நகரம் முன்னையினும் நன்கு உற அளித்தான். 13-6

'மூ-உலகின் எவ் எவர்கள் முன்னு மணி மாடம்
ஆவது புரிந்து, மயன் ஆகவும் இருந்தான்;
தேவர் இகல் மா அசுரர் சொற்ற முறை செய்தற்கு
ஆவளவில் வானவர்கள் தச்சன் எனல் ஆனான். 13-7

'அன்னவன் இயற்கை அறிதற்கு அரிய; மேல்நாள்
பன்னு மறை அந்தணன் விதித்தபடி, பார்மேல்
மன்னும் இறையோர் எவரும் வந்தபடி தானே
உன்னும் அவன் மைந்தன் நளன் என்றிட உதித்தான். 13-8

'தாயரொடு தந்தை மகிழும் தனையன், வானின்
மேய மதி போல வளர் மெய்யின் மணி மாட
நாயகம் அது ஆன திரு வீதியில் நடந்தே
ஏய சிறு பாலருடன் ஆடி மனை எய்தும். 13-9

'சிந்தை மகிழ் இல்லில் விளையாடு சிறுவன், தேர்
தந்தை வழிபாடுபுரியும் கடவுள்தன்னை
வந்து திகழ் மா மணி மலர்த்தவிசினோடே
கந்த மலர் வாவியினிடைக் கடிதின் இட்டான். 13-10

'மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே
பொற்றொடி மடந்தையை விளித்து, "உரை" என, போய்
நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச்
சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன். 13-11

'பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே
கோசிகம் அமைத்து, மணி மாடம் அது கோலி,
நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி
ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான். 13-12

'இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே
மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும்,
அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; "இவன் தன்
கைப்படல் மிதக்க" என ஓர் உரை கதித்தான். 13-13

'அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா
என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே
குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்!'
என்று நளன் வன் திறம் எடுத்துமுன் இசைத்தான். 13-14

சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை
கற்றவர் அறிவுறும் கடவுள், 'இத் தொழில்
முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!-
மற்று உனக்கு உரைப்பது என், முகமன்?-வாழியாய்!' 13-15

'ஐயன் நல் இயற்கை, எப்பொருளும் அன்பினால்
எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்;
செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு
உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான். 13-16

'இத் திறம் புரி நளற்கு இன்பம் எய்தவே
வித்தக இயற்றிட வேண்டும்' என்றனன்;
உத்தமன் உரைப்படி உஞற்றற்கு எய்தினார்
முத் திறத்து உலகையும் ஏந்தும் மொய்ம்பினார். 13-17

இங்கு இவை தாதையை எண்ணும் முன்னமே
அங்கு அவன் வணங்கினன், அருகின் எய்தினான்;
புங்கவ நின் மகற்கு இனிய பொன் முடி
துங்க மா மணிக் கலன் தருதி, தூய்மையாய்!' 13-18

என்றலும், மணி முடி, கலன்கள், இன் நறாத்
துன்று மா மலர்த் தொடை, தூய பொன் -துகில்,
குன்று எனக் குவித்தனன்; கோல மா மலர்
மன்றல் செய் விதானமும் மருங்கு அமைத்து அரோ. 13-19

முடி புனை மண்டபம் ஒன்று முற்றுவித்து,
இடி நிகர் பல் இயம் இயம்ப, வானரர்
நெடிய வான் கங்கையே முதல நீத்த நீர்
கடிது கொண்டு அணைந்தனர் கணத்தின் என்பவே. 13-20

நளன் தனை விதிமுறை நானம் ஆடுவித்து,
இளங் கதிர் அனைய பொன்-துகிலும் ஈந்து, ஒளிர்
களங்கனி அனையவன் ஏவ, கண் அகல்
வளம் திகழ் மண்டப மருங்கின் எய்தினான். 13-21

ஆனதோர் காலையின் அருக்கன் மைந்தனும்
ஏனைய வீரரும் இலங்கை மன்னனும்,
வானரர் அனைவரும் மருங்கு சூழ் வர,
தேன் நிமிர் அலங்கலும் கலனும் சேர்த்தியே. 13-22

பொலங்கிரி அனைய தோள்-தம்பி போந்து, ஒளி
இலங்கிய மணி முடி இரு கை ஏந்தினான்,
அலங்கல் அம் தோள் நளற்கு அன்பின் சூட்டினான் -
'குலங்களோடு இனிது வாழ்க!' என்று கூறியே. 13-23

இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய
ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும்
அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே
'நளன் இயற்றிய தவம் நன்று' என்று ஓதினார். 13-24

முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல்
அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல்
படி புகழ் ஆசிகள் பகர்ந்து, 'பார்மிசை
நெடிது உற நின் குலம்!' என நிகழ்த்தினான். 13-25

மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே
பொன் -திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு
உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும்,
பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான். 13-26

இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான்
தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள்
இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்;
பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம் அரோ. 13-27

கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன், கேள்வி
வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி, வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா! 14-1

போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி, 'இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!' என்றான்;
நாயகன் தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து, 'நன்று!' என்று
ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே. 16-1

அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின் வீரர்க்கு
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத,
செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே
கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர். 25-1

என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை வேந்தன்
தனது ஒரு தம்பி, 'அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே காண்டி;
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென்' என்று நேர்ந்தான். 29-1

ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி,
'ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின், நீர் போய்,
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும்' என்று ஓதலுற்றான். 32-1

இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய
மன்னர் மன்னவன் ஆய இராவணன்
அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்: 38-1

சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி
நல் அமைச்சர், நவை அறு கேள்வியர்,
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே,
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான். 41-1

'ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க்
காதி, மானுடரோடு கவிக் குலம்
சாதல் ஆக்குவென், தான் ஓர் கணத்து' எனும்
போதில், மாலியவானும் புகலுவான்: 46-1

என்னும் வாய்மை இயம்புறு போதினில்
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி, 'எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர்!' எனா,
துன்னு காவலர் தம்மிடைச் சொல்லினார். 52-1

என்னச் சாரர் இசைத்தனர்; வேலையைக்
கன்னல் ஒன்றில் கடந்து, கவிக் குலம்
துன்னு பாசறைச் சூழல்கள்தோறுமே
அன்னர் ஆகி, அரிதின் அடைந்தனம். 56-1

வருணன் அஞ்சி, வழி கொடுத்து 'ஐய! நின்
சரணம்' என்று அடி தாழ்ந்து, அவன் தன் பகை
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன்,
திரிபுரச் செயல் செய்தது, அங்கு ஓர் கணை. 59-1

செவித் துளை இருபதூடும், தீச் சொரிந்தென்னக் கேட்டு,
புவித்தலம் கிழிய, அண்டம் பொதிர் உற, திசையில் நின்ற
இபத் திரள் இரிய, வானத்து இமையவர் நடுங்க, கையால்
குவித் தடம் புயமே கொட்டி, கொதித்து இடை பகரலுற்றான். 65-1

தானை அம் தலைவன் ஈது சாற்றலும், தறுகண் வெம் போர்க்
கோன் அழன்று உருத்து, 'வீரம் குன்றிய மனிதரோடு
வானரக் குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால்
ஊன் அறக் குறைப்பென் நாளை, ஒரு கணப் பொழுதில்' என்றான். 69-1

மன்னவர் மன்னன் கூற, மைந்தனும் வணங்கி, 'ஐயா!
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ? இறைவ! நீ போய்,
"மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென்" என்றால்,
பின்னை என் வீரம் என்னாம்?' என்றனன், பேசலுற்றான்: 69-2

'இந்திரன் செம்மல் தம்பி, யாவரும் எவரும் போற்றும்
சந்திரன் பதத்து முன்னோன்' என்றனர்; 'சமரை வேட்டு,
வந்தனர்; நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன்' என்பதும் தெரியச் சொன்னார். 74-1

எரி எனச் சீறி, இவ்வாறு உரைத்து, இரு மருங்கில் நின்ற
நிருதரைக் கணித்து நோக்கி, 'நெடுங் கரி, இரதம், வாசி,
விருதர்கள் ஆதி வெள்ளப் படைத் தொகை விரைந்து, நாளைப்
பொரு திறம் அமையும்' என்னா, புது மலர்ச் சேக்கை புக்கான். 87-1