யுத்த காண்டம்

30. படைக் காட்சிப் படலம்

பல இடங்களிலும் இருந்த அரக்கர் சேனை இலங்கை அடைதல்

அத் தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், 'இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை; பணி என்?' என்றார். 1

ஏம்பலுற்று எழுந்த மன்னன், 'எவ் வழி எய்திற்று?' என்றான்;
கூம்பலுற்று உயர்ந்த கையர், 'ஒரு வழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை' என்றார். 2

மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட,
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக, மேல் மேல்,
கண்ணுற அருமை காணாக் கற்பத்தின் முடிவில் கார்போல்,
எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. 3

வாள்தனின் வயங்க மின்னா; மழை அதின் இருளமாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடிப்பு எதிர் முழங்கமாட்டா;
மீட்டு இனி உவமை இல்லை, வேலை மீச் சென்ற என்னின் -
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல. 4

உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற,
தொலைவு அருந் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற;
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின, நிமிர்ந்து; நின்றான்,
அலரியும், முந்து செல்லும் ஆறு நீத்து, அஞ்சி, அப்பால். 5

மேற்பட விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, விண்ட
நாற் பெரு வாயிலூடும், இலங்கை ஊர், நடக்கும் தானை, -
கார்க் கருங் கடலை, மற்றோர் இடத்திடை, காலந்தானே
சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன. 6

'நெருக்குடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்தனையே' என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற - அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக் கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன. 7

இராவணன் கோபுரத்தை அடைந்து சேனைகளை நோக்குதல்

அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் கோபுரத்தின் எய்தி,
பொதுவுற நோக்கலுற்றான், ஒரு நெறி போகப் போக,
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான், வேலை ஏழும்
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான். 8

மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி,
ஓத நீர் செல்வது அன்ன தானையை, உணர்வு கூட்டி,
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்போல்,
தூதுவர் அணிகள்தோறும் வரன்முறை காட்டிச் சொல்வார்: 9

'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த
யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்
மோகத்தின் பட முடித்தவர், மாயையின் முதல்வர்,
மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர்' என விரித்தார். 10

'குசையின் தீவினின் உறைபவர், கூற்றுக்கும் விதிக்கும்
வசையும் வன்மையும் வளர்ப்பவர், வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு, இவரால்;
விசையம்தாம் என நிற்பவர், இவர் - நெடு விறலோய்! 11

'இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்;
உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12

'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக்
குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்
சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர். 13

'பவளக் குன்றினின் உறைபவர்; வெள்ளி பண்பு அழிந்து, ஓர்
குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் கூட,
அவளின் தோன்றினர், ஐ-இரு கோடியர்; நொய்தின்
திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சில நாள். 14

'கந்தமாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப் பால்
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி; அதில் வாழ்வோர்,
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர்;
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் - இறைவ! 15

'மலயம் என்பது பொதிய மாமலை; அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்;
"குலையும் இவ் உலகு" எனக் கொண்டு, நான்முகன் கூறி,
"உலைவிலீர்! இதில் உறையும்" என்று இரந்திட, உறைந்தார். 16

'முக்கரக் கையர்; மூ இலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்;
நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் - புகழோய்! 17

'மறலியை, பண்டு, தம் பெருந் தாய் சொல, வலியால்,
புற நிலைப் பெருஞ் சக்கர மால் வரைப் பொருப்பின்,
விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்;
இறலி அப் பெருந் தீவிடை உறைபவர் - இவர்கள். 18

'வேதாளக் கரத்து இவர், "பண்டு புவியிடம் விரிவு
போதாது உம்தமக்கு; எழு வகையாய் நின்ற புவனம்,
பாதாளத்து உறைவீர்" என, நான்முகன் பணிப்ப,
நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால், இவண் நடந்தார். 19

'நிருதி தன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்;
"பருதி தேவர்கட்கு" எனத் தக்க பண்பினர்; பானக்
குருதி பெற்றிலரேல், கடல் ஏழையும் குடிப்பார்;
இருள் நிறத்தவர்; ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார். 20

'பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தினின், ஆதியின் பயந்த பைங் கழலோர்;
பூரணத் தடந் திசைதொறும் இந்திரன் புலரா
வாரணத்தினை நிறுத்தியே, சூடினர் வாகை. 21

'மறக் கண் வெஞ் சின மலை என இந் நின்ற வயவர்,
இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர்;
அறக் கண் துஞ்சிலன், ஆயிரம் பணந் தலை அனந்தன்,
உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க. 22

'காளியைப் பண்டு கண்ணுதல் காட்டியகாலை,
மூள முற்றிய சினக் கொடுந் தீயிடை முளைத்தோர்,
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர்; -பெருங் குழுவாய்
வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும் வருவார். 23

'பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை எனத் தெறு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;-
சாலம் தோன்றிட, வட திசைமேல் வந்து சார்வார். 24

'சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்,
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை, கொடுமைக்கு
ஏற்றம் ஆக, பண்டு உதித்துளோர் என்பவர், இவரால். 25

'காலன் மார்பிடைச் சிவன் கழல் பட, பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர்,
சூலம் ஏந்தி முன் நின்றவர்; இந் நின்ற தொகையார்,
ஆலகாலத்தின், அமிழ்தின், முன் பிறந்த போர் அரக்கர். 26

'வடவைத் தீயினில், வாசுகி கான்ற மாக் கடுவை
இட, அத் தீயிடை எழுந்தவர், இவர்; கண மழையைத்
தடவ, தீ என நிமிர்ந்த குஞ்சியர், உவர், தனித் தேர்
கடவ, தீந்த வெம் புரத்திடைத் தோன்றிய கழலோர். 27

'இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் - ஐய! -
நினையவும், குறித்து உரைக்கவும், அரிது; இவர் நிறைந்த
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின்,
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா. 28

'ஒருவரே சென்று, அவ் உறு திறல் குரங்கையும், உரவோர்
இருவர் என்றவர் தம்மையும், ஒரு கையோடு எற்றி,
வருவர்; மற்று இனிப் பகர்வது என்? - வானவர்க்கு அரிய
நிருப!' என்றனர், தூதுவர், இராவணன் நிகழ்த்தும்: 29

சேனையின் அளவை இராவணன் வினாவ, தூதுவர் விடை பகர்ந்து, அகல்தல்

'எத் திறத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத் திறத்தினை அறைதிர்' என்று உரைசெய, அவர்கள்,
'ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது' என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு 'எண் சிறிது' என்றனர், பெயர்ந்தார். 30

படைத்தலைவரை அழைத்து வருமாறு இராவணன் பணித்தல்

'படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால் -
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி,
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், அமைவுற்று,
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற' என்று உரைத்தான். 31

தூதர் கூறிட, திசைதொறும் திசைதொறும் தொடர்ந்தார்,
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்;
போது தூவினர், வணங்கினர், இராவணன் பொலன் தாள்
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட. 32

வணங்கிய வீரரின் நலனை இராவணன் உசாவுதல்

அனையர் யாவரும் அருகு சென்று, அடி முறை வணங்கி,
வினையம் மேவினர், இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை;
'நினையும் நல் வரவு ஆக, நும் வரவு!' என நிரம்பி,
'மனையும் மக்களும் வலியரே?' என்றனன், மறவோன். 33

'பெரிய திண் புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்;
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ?
இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை;
அரியது என் எமக்கு?' என்றனர், அவன் கருத்து அறிவார். 34

சேனைத் தலைவரின் வினாவும், இராவணன் தன் நிலைமையை விளக்குதலும்

'மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள்' என, அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான். 35

சேனைத் தலைவர்கள் பகையை எள்ளி நகையாடுதல்

'கும்பகன்னனோடு இந்திரசித்தையும், குலத்தின்
வெம்பு வெஞ் சினத்து அரக்கர்தம் குழுவையும், வென்றார்
அம்பினால், சிறு மனிதரே! நன்று, நம் ஆற்றல்!
நம்ப! சேனையும் வானரமே!' என நக்கார். 36

உலகைச் சேடன் தன் உச்சி நின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரொடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக் குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை?' 37

என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு,
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி,
வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன்,
'அன்ன மானுடர் ஆர்? வலி யாவது?' என்று அறைந்தான். 38

மாலியவான் பகைவரின் வலிமையை எடுத்து உரைத்தல்

மற்று அ(வ்)வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து,
'உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம்
கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக்
கிற்றும், கேட்டிரால்' என்றனன், கிளத்துவான் துணிந்தான்: 39

'பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்;
கரிய மால் வரை நிகர் கர தூடணர், கதிர் வேல்
திரிசிரா, அவர் திரைக் கடல் அன பெருஞ் சேனை,
ஒரு விலால், ஒரு நாழிகைப் பொழுதினின், உலந்தார். 40

'ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும்
ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை?
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை, இந் நாள்,
பாழி மார்பு அகம் பிய்த்து, உயிர் குடித்தது, ஓர் பகழி. 41

'இங்கு வந்து நீர் வினாயது என்? எறி திரைப் பரவை
அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ?
கங்கைசூடிதன் கடுஞ் சிலை ஒடித்த அக் காலம்,
உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 42

'ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு, இலங்கையின் அளவில்,
தீயின் வெய்ய போர் அரக்கர் தம் சேனை; அச் சேனை
போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்,
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 43

'கொற்ற வெஞ் சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்
பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,
மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;
இற்றை நாள் வரை, யானும் மற்று இவனுமே இருந்தோம். 44

'மூலத் தானை என்று உண்டு; அது மும்மை நூறு அமைந்த
கூலச் சேனையின் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கை நீர் வந்துளீர்; இனி, தக்க கழலோர்
சீலச் செய்கையும், கவிப் பெருஞ் சேனையும், தெரிக்கில், 45

'ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி,
திருகு வெஞ் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, - அரக்கியர் புலம்ப,
கருது சேனையும் கொன்று, மாக் கடலையும் கடந்து. 46

'கண்டிலீர்கொலாம், கடலினை மலை கொண்டு கட்டி,
மண்டு போர் செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவுக்கு அப்புறம் குதித்து. 47

'இது இயற்கை; ஓர் சீதை என்று இருந் தவத்து இயைந்தாள்,
பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால்,
விதி விளைத்தது; அவ் வில்லியர் வெல்க! நீர் வெல்க!
முதுமொழிப் பதம் சொல்லினென்' என்று, உரை முடித்தான். 48

இத்தனை நாள் போர் செய்யாத காரணத்தை வன்னி வினாவ, இராவணன் 'இழிவு நோக்கிக் குரங்குடன் பொருதிலேன்' எனல்

வன்னி, மன்னனை நோக்கி, 'நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாதிருந்தது?' என்று, இசைத்தான்;
'புன்மை நோக்கினென்; நாணினால் பொருதிலேன்' என்றான்;
'அன்னதேல், இனி அமையும் எம் கடமை அஃது' என்றான். 49

'பொருதலே தக்கது' என வன்னி மொழிதல்

'மூது உணர்ந்த இம் முது மகன் கூறிய முயற்சி
சீதை என்பவள் தனை விட்டு, அம் மனிதரைச் சேர்தல்;
ஆதியின் தலை செயத்தக்கது; இனிச் செயல் அழிவால்,
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும்? 50

'விட்டம் ஆயினும் மாதினை, வெஞ் சமம் விரும்பிப்
பட்ட வீரரைப் பெறுகிலெம்; பெறுவது பழியால்;
முட்டி, மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்,
கட்டம், அத் தொழில்; செருத் தொழில் இனிச் செயும் கடமை' 51

பகைவரை வெல்ல, அரக்கர் விடை பெற்று எழுதல்

என்று, எழுந்தனர் இராக்கதர், 'இருக்க நீ; யாமே
சென்று, மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி,
வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்
புன் தொழில் குலம் ஆதும்' என்று உரைத்தனர், போனார். 52

மிகைப் பாடல்கள்

தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று அரக்கர் சேனை
இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள் பத்தின்
எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை வெள்ளம். 2-1

மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் - திண் திறலோய்! 22-1

சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்து ஐஞ்-
ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்;
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர். 25-1

சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற் கண்
சூல பாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு விறலால்
கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர் துரந்தோர். 27-1

ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடு போர்
மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய் மனத்தோர்,
'காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல் காலாள்,
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி' என்று உரைப்பார். 30-1

அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து உலகில்,
துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் -
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ? 43-1