பிராட்டி திருவடி தொழுத படலம் - Piratti Thiruvadi Thozhutha Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com

யுத்த காண்டம்

40. பிராட்டி திருவடி தொழுத படலம்

சீதைக்குச் செய்தி சொல்லி வர, இராமன் அனுமனை அனுப்புதல்

இப் புறத்து, இன எய்துறு காலையில்,
அப் புறத்ததை உன்னி, அனுமனை,
'துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய்' எனச் செப்பினான். 1

அனுமன் சீதையைத் தொழுது, அவளுக்குச் செய்தி கூறுதல்

வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என,
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 2

'ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்!' 3

பாடினான் திரு நாமங்கள்; பல் முறை
கூடு சாரியில் குப்புற்றுக் கூத்து நின்று
ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச்
சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 4

'தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை
அலை கிடந்தென ஆழி கிடந்தன;
நிலை கிடந்தது, உடல் நிலத்தே' என்றான். 5

'அண்ணல் ஆணையின், வீடணனும் மறக்
கண் இலாதவன் காதல் தொடர்தலால்,
பெண் அலாது, பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்' என்றான். 6

செய்தி கேட்டு மகிழ்ந்த சீதையின் நிலை

ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுறப்
பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள்-
பருகல் உற்ற அமுது பயந்த நாள். 7

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட,
தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்-
பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். 8

புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ,
உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ,
சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ-
முந்தி ஓங்கின யாவை-முலைகொலோ? 9

குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர்
பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி
நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;-
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? 10

களிப்பு மிகுதியால் சீதை பேசாதிருக்க, அனுமன், ஒன்றும் பேசாத காரணத்தை வினவல்

அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள்,
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர்
நினைவு இலாது நெடிது இருந்தாள்-நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள். 11

'"யாது இதற்கு ஒன்று இயம்புவல்?" என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ?' எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: 12

சீதையின் மறுமொழி

'மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று, "ஒன்று இயம்புவது யாது?" என
நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்;
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 13

'முன்னை, "நீக்குவென் மொய் சிறை" என்ற நீ
பின்னை நீக்கி, உவகையும், பேசினை;
"என்ன பேற்றினை ஈகுவது?" என்பதை
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். 14

'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15

'ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்;
"யாது செய்வது?" என்று எண்ணி இருந்தனென்;
வேத நல் மணி வேகடம் செய்தன்ன
தூத! என் இனிச் செய் திறம்? சொல்' என்றாள். 16

அனுமன் தான் மேலே செய்யப் போவது குறித்துச் சீதையிடம் கூறி, அவளது அனுமதியை வேண்டுதல்

'எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின்
மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் -
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?-
புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!' 17

என உரைத்து, 'திரிசடையாள், எம் மோய்!
மனவினில் சுடர் மா முக மாட்சியாள்-
தனை ஒழித்து, இல் அரக்கியர்தங்களை
வினையினில் சுட வேண்டுவென், யான்' என்றான். 18

'உரை அலா உரை உன்னை உரைத்து, உராய்
விரைய ஓடி, "விழுங்குவம்" என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து,
இரை செய்வேன், மறலிக்கு, இனி' என்னுமால். 19

காவல் அரக்கியர் சீதையைச் சரணம் அடைதல்

'குடல் குறைத்து, குருதி குடித்து, இவர்
உடல் முருக்கியிட்டு, உண்குவென்' என்றலும்,
அடல் அரக்கியர், 'அன்னை! நின் பாதமே
விடலம்; மெய்ச் சரண்' என்று விளம்பலும், 20

'அரக்கியர்க்குத் துன்பம் செய்வது முறையன்று' எனச் சீதை அனுமனுக்கு கூறல்

அன்னை, 'அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்' எனா,
மன்னும் மாருதி மா முகம் நோக்கி, 'வேறு
என்ன தீமை இவர் இழைத்தார், அவன்
சொன்ன சொல்லினது அல்லது? -தூய்மையோய்! 21

'யான் இழைத்த வினையினின் இவ் இடர்-
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்! 22

'எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை-
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர்
மனக்கு நோய் செயல்!' என்றனள்-மா மதி-
தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள். 23

இராமன் வீடணனிடம் சீதையை அழைத்து வருமாறு கூறி அனுப்புதல்

என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான்
தன் துணைப் பெருந் தேவி தயா' எனா
நின்ற காலை, நெடியவன், 'வீடண!
சென்று தா, நம் தேவியை, சீரொடும்.' 24

வீடணன் சீதையைத் தொழுது, கோலம் புனைந்து இராமனிடத்திற்கு எழுந்தருளுமாறு வேண்டுதல்

என்னும் காலை, இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன்,
'உன்னும் காலைக் கொணர்வென்' என்று ஓத, அப்
பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். 25

'வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் நின்னைக்
காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண வந்தார்;
"பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் போக்கி,
ஈண்டக் கொண்டு அணைதி" என்றான்; எழுந்தருள், இறைவி!' என்றான். 26

கோலம் புனையாது, இங்கு இருந்த தன்மையில் வருதலே தக்கது என சீதை கூறல்

'யான் இவண் இருந்த தன்மை, இமையவர் குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், காண்டல், மாட்சி;
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று - வீர!' 27

இராமனது குறிப்பு கோலம் புனைந்து வருதலே என்று வீடணன் உரைக்க, சீதை ஒருப்படுதல்

என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு இறைவன், 'நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் குறிப்பு இது' என்றான்;
'நன்று' என நங்கை நேர்ந்தாள், நாயகக் கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை முதலோர், சேர. 28

தேவமாதர்கள் சீதைக்குக் கோலம் புனைதல்

மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி, வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும், மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்டப் பட்ட நவை இல கலவை தாங்கி,
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார். 29

காணியைப் பெண்மைக்கு எல்லாம், கற்பினுக்கு அணியை, பொற்பின்
ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை, அறத்தின் தாயை,
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன,
வேணியை, அரம்பை, மெல்ல, விரல் முறை சுகிர்ந்து விட்டாள். 30

பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி, ஆட்டினர், உம்பர் மாதர். 31

உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டதென்ன
மரு விளை கலவை ஊட்டி, குங்குமம் முலையின் ஆட்டி,
கரு விளை மலரின் காட்சிக் காசு அறு தூசு, காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் செய்தார். 32

சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளப் பைம் பூண்,
இந்திரன் தேவிக்கு ஏற்ப, இயைவன பூட்டி, யாணர்ச்
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தேம் பசும் பாகு தீற்றி,
மந்திரத்து அயினி நீரால் வலஞ்செய்து, காப்பும் இட்டார். 33

சீதையை இராமனிடத்திற்கு வீடணன் அழைத்து வருதல்

மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன, மானம்
கொண்டனர் ஏற்றி, வான மடந்தையர் தொடர்ந்து கூட,
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட,
அண்டர் நாயகன்பால், அண்ணல் வீடணன் அருளின் சென்றான். 34

இப் புறத்து இமையவர், முனிவர் ஏழையர்,
துப்பு உறச் சிவந்த வாய் விஞ்சைத் தோகையர்,
முப் புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர்,
ஒப்புறக் குவிந்தனர், ஓகை கூறுவார். 35

அருங் குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்,
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்,
நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஓச்சலால்,
கருங் கடல் முழக்கு எனப் பிறந்த, கம்பலை. 36

இராமன், வீடணனைச் சினந்து நோக்கி, கடிந்து கூறுதல்

அவ் வழி, இராமனும் அலர்ந்த தாமரைச்
செவ்வி வாள் முகம்கொடு செயிர்த்து நோக்குறா,
'இவ் ஒலி யாவது?' என்று இயம்ப, இற்று எனா,
கவ்வை இல் முனிவரர் கழறினார் அரோ. 37

முனிவரர் வாசகம் கேட்புறாதமுன்,
நனி இதழ் துடித்திட நகைத்து, வீடணன்-
தனை எழ நோக்கி, 'நீ, தகாத செய்தியோ,
புனித நூல் கற்று உணர் புந்தியோய்?' என்றான். 38

'கடுந் திறல் அமர்க் களம் காணும் ஆசையால்,
நெடுந் திசைத் தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அடைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்?-கருது நூல் வலாய்! 39

'பரசுடைக் கடவுள், நேமிப் பண்ணவன், பதுமத்து அண்ணல்,
அரசுடைத் தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ ?'
கரை செயற்கு அரிய தேவர், ஏனையோர், கலந்து காண்பான்
விரசுறின், விலக்குவாரோ? வேறு உளார்க்கு என்கொல்?-வீர! 40

இராமன் சொல்லைக் கேட்டு, வீடணன் அஞ்சி நடுங்கி நிற்றல்

'ஆதலான், அரக்கர் கோவே! அடுப்பது அன்று உனக்கும், இன்னே
சாதுகை மாந்தர் தம்மைத் தடுப்பது' என்று அருளி, செங் கண்
வேதநாயகன் தான் நிற்ப, வெய்து உயிர்த்து, அலக்கண் எய்தி,
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன், குணங்கள்தூயோன். 41

சீதை இராமன் கோலத்தைக் காண்பாளாய், அனுமனது உதவியைப் பாராட்டி உரைத்தல்

அருந்ததி அனைய நங்கை அமர்க் களம் அணுகி, ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசிப் பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி,
கருந் தடங் கண்ணும் நெஞ்சும் களித்திட, இனைய சொன்னாள்: 42

'சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் தன் கற்பு?' என்றான். 43

சீதை இராமனது திருமேனியைக் காணுதல்

'எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி
நச்சு இலை' என்பது ஓர் நவை இலாள் எதிர்,
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய்க்
கைச் சிலை ஏந்தி நின்றானைக் கண்ணுற்றாள். 44

சீதை இராமனைத் தொழுது, ஏக்கம் நீங்குதல்

மானமீது அரம்பையர் சூழ வந்துளாள்,
போன பேர் உயிரினைக் கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற, அவனி எய்தினாள். 45

பிறப்பினும் துணைவனை, பிறவிப் பேர் இடர்
துறப்பினும் துணைவனை, தொழுது, 'நான் இனி
மறப்பினும் நன்று; இனி மாறு வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று' என ஏக்கம் நீங்கினாள். 46

இராமன் சீதையை அமைய நோக்குதல்

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். 47

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல்

கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர,
வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை,
பணம் கிளர் அரவு என எழுந்து, பார்ப்புறா, 48

'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ? 49

'உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன். 50

'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை-வெறுமை நீங்கினாய்! 51

'கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ. 52

'பெண்மையும், பெருமையும், பிறப்பும், கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
வண்மை இல் மன்னவன் புகழின், மாய்ந்தவால். 53

'அடைப்பர், ஐம் புலன்களை; ஒழுக்கம் ஆணியாச்
சடைப் பரம் புனைந்து, ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர்; வந்து இடை ஒரு பழி வந்தால், அது
துடைப்பர், தம் உயிரொடும்-குலத்தின் தோகைமார். 54

'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;
சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறி
போதியால்' என்றனன்-புலவர் புந்தியான். 55

இராமனது உரை கேட்டு, முனிவர் முதலியோர் அரற்றுதல்

முனைவரும், அமரரும், மற்றும் முற்றிய
நினைவு அரு மகளிரும், நிருதர் என்று உளார்
எனைவரும், வானரத்து எவரும், வேறு உளார்
அனைவரும், வாய் திறந்து, அரற்றினார் அரோ. 56

இராமனின் கடுமொழி கேட்ட சீதையின் துயர நிலை

கண் இணை உதிரமும், புனலும் கான்று உக,
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்,
புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால்
உள் நினைப்பு ஓவி நின்று, உயிர்ப்பு வீங்கினாள். 57

பருந்து அடர் சுரத்திடை, பருகு நீர் நசை
வருந்து அருந் துயரினால் மாளலுற்ற மான்,
இருந் தடம் கண்டு, அதின் எய்துறாவகைப்
பெருந் தடை உற்றெனப் பேதுற்றாள் அரோ. 58

உற்று நின்று, உலகினை நோக்கி, ஓடு அரி
முற்றுறு நெடுங் கண் நீர் ஆலி மொய்த்து உக,
'இற்றது போலும், யான் இருந்து பெற்ற பேறு;
உற்றதால் இன்று அவம்!' என்று என்று ஓதுவாள்; 59

'மாருதி வந்து, எனைக் கண்டு, "வள்ளல் நீ
சாருதி ஈண்டு" எனச் சமையச் சொல்லினான்;
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ,
சோரும் என் நிலை? அவன் தூதும் அல்லனோ? 60

'எத் தவம், எந் நலம், என்ன கற்பு, நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய், அறம் பிழைத்ததாம் அன்றே,
உத்தம! நீ மனத்து உணர்ந்திலாமையால். 61

'பார்க்கு எலாம் பத்தினி; பதுமத்தானுக்கும்
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள், பேதையேன்;
ஆர்க்கு எலாம் கண்ணவன், "அன்று" என்றால், அது
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ? 62

'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும்,
சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும்,
அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்,
மங்கையர் மன நிலை உணர வல்லரோ? 63

'ஆதலின், புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்?
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; தக்கதே,
வேத! நின் பணி; அது விதியும்' என்றனள். 64

சீதை இலக்குவனை தீ அமைக்குமாறு வேண்டல்

இளையவன் தனை அழைத்து, 'இடுதி, தீ' என,
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்;
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான். 65

இலக்குவன் தீ அமைக்க, சீதை அதன் பக்கத்தில் செல்லுதல்

ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன்,
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும்,
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான்; அதன்
பாங்குற நடந்தனள், பதுமப் போதினாள். 66

தீயிடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக் குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய் திறந்து அரற்றின-மறைகள் நான்கொடும்,
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும். 67

வலம் வரும் அளவையில் மறுகி, வான் முதல்
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன;
அலம் வரல் உற்றன; அலறி, 'ஐய! இச்
சலம் இது தக்கிலது' என்னச் சாற்றின. 68

இந்திரன் தேவியர் முதல ஏழையர்,
அந்தர வானின்நின்று அரற்றுகின்றவர்,
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார். 69

நடுங்கினர், நான்முகன் முதல நாயகர்;
படம் குறைந்தது, படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என, வெதும்பிற்றால் உலகு;
இடம் திரிந்தன சுடர்; கடல்கள் ஏங்கின. 70

சீதை தீயில் குதித்தல்

கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை,
'மனத்தினால், வாக்கினால், மறு உற்றேன் எனின்,
சினத்தினால் சுடுதியால், தீச் செல்வா!' என்றாள்;
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். 71

சீதையின் கற்புத் தீயினால், அக்கினி வெந்து தீய்தல்

நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாவின் பஞ்சு எனத்
தீந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால். 72

அக்கினி சீதையைக் கையில் ஏந்தி, இராமபிரானைக் குறித்துக் கதறிக் கொண்டு எழுதலும், சீதை எரியால் வாட்டமுறாது விளங்குதலும்

அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து
எழுந்தனன்-அங்கி, வெந்து எரியும் மேனியான்,
தொழும் கரத் துணையினன், சுருதி ஞானத்தின்
கொழுந்தினைப் பூசலிட்டு அரற்றும் கொள்கையான். 73

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால்; உணர்த்துமாறு உண்டோ?
பாடிய வண்டொடும், பனித்த தேனொடும்,
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால். 74

திரிந்தன உலகமும் செவ்வன நின்றன;
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன;
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர், நாணமும் பொறையும் நீங்கினார். 75

அக்கினிதேவனது முறையீடும், இராமன் வினாவும்

'கனிந்து உயர் கற்பு எனும் கடவுள்-தீயினால்,
நினைந்திலை, என் வலி நீக்கினாய்' என,
அநிந்தனை அங்கி, 'நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம்' என முறையிட்டான் அரோ. 76

இன்னது ஓர் காலையில், இராமன், 'யாரை நீ?
என்னை நீ இயம்பியது, எரியுள் தோன்றி? இப்
புன்மை சால் ஒருத்தியைச் சுடாது போற்றினாய்;
அன்னது ஆர் சொல்ல? ஈது அறைதியால்' என்றான். 77

அக்கினிதேவனின் மறுமொழி

'அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப் பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; எனது இயற்கை நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும் சான்றுளாய்? 78

'வேட்பதும், மங்கையர் விலங்கினார் எனின்
கேட்பதும், பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும், என்வயின் என்னும் மெய்ப்பொருள்-
வாள்-பெருந் தோளினாய்!-மறைகள் சொல்லுமால். 79

'ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும், மீட்டியோ?-
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய்! 80

'தேவரும் முனிவரும், திரிவ நிற்பவும்,
மூவகை உலகமும், கண்கள் மோதி நின்று,
"ஆ!" எனல் கேட்கிலை; அறத்தை நீக்கி, வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டுக் கொண்டியோ? 81

'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வையுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.' 82

சீதையை இராமன் ஏற்றுக்கொள்ளல்

பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று,
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ,
சூடு உறும் மேனிய அலரி, தோகையை
மாடு உறக் கொணர்ந்தனன்; வள்ளல் கூறுவான்: 83

'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு; ஆதலால்,
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, "யாதும் ஓர்
பழிப்பு இலள்" என்றனை; பழியும் இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன்-கருணை உள்ளத்தான். 84

தேவர்கள் வேண்டியபடி, பிரமன் இராமனது உண்மை நிலையை உணர்த்துதல்

'உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று, காலம் வந்துளதால்,
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று, அவை உணரா
இணர்த் துழாய்த் தொங்கல் இராமற்கு' என்று இமையவர் இசைப்ப,
தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான்: 85

'மன்னர் தொல் குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய்த் துணிவு
நின் அலாது இல்லை; நின்னின் வேறு உளது இலை-நெடியோய்! 86

'பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்த
விகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி, யாவர்க்கும் அரிய அப் புருடனும், நீ; இம்
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம். 87

'முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமைத்
தன் பெருந் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்,
"மன் பெரும் பரமார்த்தம்" என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால், மற்று இங்கு யாரையும் அறையா. 88

'எனக்கும், எண் வகை ஒருவற்கும், இமையவர்க்கு இறைவன்-
தனக்கும், பல் பெரு முனிவர்க்கும், உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும், நீயே பரம் என்பதை அறிந்தார்
வினைத் துவக்குடை வீட்ட அருந் தளை நின்று மீள்வார். 89

'என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னைத் தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி,
தன்னைத் தான் அறியாமையின், சலிப்ப; அச் சலம் தீர்ந்து,
உன்னைத் தாதை என்று உணர்குவ, முத்தி வித்து, ஒழிந்த. 90

'"ஐ-அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து, அவற்றின்
மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது" என்னும் ஈது அரு மறை புகலும்;
வையம் சான்று; இனி, சான்றுக்குச் சான்று இலை, வழக்கால். 91

'அளவையால் அளந்து, "ஆம்", "அன்று", என்று அறிவுறும் அமைதி
உளவை யாவையும் உனக்கு இல்லை; உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும், கண்ணால்,
துளவை ஆய் முடியாய்! "உளை நீ" எனத் துணியும். 92

'அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்,
கரணம் அவ் அறிவைக் கடந்து அகல்வு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான். 93

'தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை; நின்கணே தோற்றும்,
ஆற்றல் சால் முதல் பகுதி; மற்று அதனுள் ஆம், பண்பால்
காற்றை முன்னுடைப் பூதங்கள்; அவை சென்று, கடைக்கால்,
வீற்று வீற்று உற்று வீவுறும்; நீ என்றும் விளியாய். 94

'மின்னைக் காட்டுதல்போல் வந்து விளியும் இவ் உலகம்
தன்னைக் காட்டவும், தருமத்தை நாட்டவும், தனியே
என்னைக் காட்டுதி; இறுதியும் காட்டுதி; எனக்கும்
உன்னைக் காட்டலை; ஒளிக்கின்றும் இலை, மறை உரையால். 95

'என் உருக் கொடு இல் உலகினை ஈனுதி; இடையே
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி; உமைகோன்-
தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது தனி அருக்கன்
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது-முதலாய்! 96

'ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து, இரு வினை உகுப்போர்;
"ஓங்காரப் பொருள் ஆம்", "அன்று" என்று, ஊழி சென்றாலும்,
ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர். 97

'இனையது ஆகலின், எம்மை மூன்று உலகையும் ஈன்று, இம்
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் 'என்று அது முடித்தனன்-முந்து நீர் முளைத்த
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன். 98

சிவபெருமான் இராமனுக்கு உண்மையை உணர்த்துதல்

என்னும் மாத்திரத்து, ஏறு அமர் கடவுளும் இசைத்தான்;
'உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால், உரவோய்!
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ; மூவகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது, நின் மார்பின் வந்து அமைந்தாள். 99

'துறக்கும் தன்மையள் அல்லளால், தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப் பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இறைவ! நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன்-மழுவலான் வழுத்தி. 100

தயரதனுக்குச் சிவபெருமான் பணித்தல்

பின்னும் நோக்கினான், பெருந் தகைப் புதல்வனைப் பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து, இருந் துறக்கத்துள் இருந்த
மன்னவற் சென்று கண்டு, 'நின் மைந்தனைத் தெருட்டி,
முன்னை வன் துயர் நீக்குதி, மொய்ம்பினோய்!' என்றான். 101

ஐயரதன் பூதலத்து வருதலும், இராமன் அவனை வணங்குதலும்

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள் மிசை விழுந்தான். 102

தயரதன் இராமனை எடுத்துத் தழுவி, மகிழ்வுடன் பேசுதல்

வீழ்ந்த மைந்தனை எடுத்து, தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திடத் தழுவி, கண் அருவி நீராட்டி,
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற, மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட, நின்று-இவை புகன்றான்: 103

'அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று காறும் என் இதயத்தினிடை நின்றது, என்னைக்
கொன்று நீங்கலது, இப்பொழுது அகன்றது, உன் குலப் பூண்
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க. 104

'மைந்தரைப் பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்,
சுந்தரப் பெருந் தோளினாய்! என் துணைத் தாளின்
பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய்;
உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன். 105

'பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்,
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி;
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!' 106

தயரதன் வணங்கிய சீதைக்குத் தேறுதல் மொழி கூறுல்

என்று, மைந்தனை எடுத்து எடுத்து, இறுகுறத் தழுவி,
குன்று போன்று உள தோளினான், சீதையைக் குறுக,
தன் துணைக் கழல் வணங்கலும், கருணையால் தழுவி
நின்று, மற்று இவை நிகழ்த்தினான், நிகழ்த்த அரும் புகழோன்: 107

'"நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட,
அங்கி புக்கிடு" என்று உணர்த்திய அது மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் தேறுவது உண்டு; அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல். 108

'"பொன்னைத் தீயிடைப் பெய்வது அப் பொன்னுடைத் தூய்மை-
தன்னைக் காட்டுதற்கு" என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், "கற்பினுக்கு அரசி" என்று, "உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது" என்று எண்ணி, இப் பெரியோன். 109

'பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான் நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்'. 110

தயரதன் இலக்குவனைத் தழுவிப் பாராட்டுதல்

என்னச் சொல்லி, அவ் ஏந்திழை திரு மனத்து யாதும்
உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்;
பின்னைச் செம்மல் அவ் இளவலை, உள் அன்பு பிணிப்ப,
தனனைத் தான் எனத் தழுவினன், கண்கள் நீர் ததும்ப. 111

கண்ணின் நீர்ப் பெருந் தாரை மற்று அவன் சடைக் கற்றை
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர, தழீஇ நின்று, 'மைந்த!
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை, தமையனைத் தொடர்ந்து உடன் போந்தாய். 112

'புரந்தான் பெரும் பகைஞனைப் போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும்
நிரந்தரம் புகல்கின்றது; நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து, அறம் நிறுத்தினை-ஐய!' 113

தயரதன் இராமனிடம் வரம் கேட்கக் கூற, இராமன் வரம் வேண்டுதல்

என்று, பின்னரும், இராமனை, 'யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி, உயர் குணத்தோய்!' என, 'உனை யான்
சென்று வானிடைக் கண்டு, இடர் தீர்வென் என்று இருந்தேன்;
இன்று காணப் பெற்றேன்; இனிப் பெறுவது என்?' என்றான். 114

'ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை' என, அழகன்,
'தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!' எனத் தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர் எலாம், வழுத்தி. 115

தயரதன் மறுமொழி

'வரத கேள்!' எனத் தயரதன் உரை செய்வான்; 'மறு இல்
பரதன் அன்னது பெறுக! தான் முடியினைப் பறித்து, இவ்
விரத வேடம் மற்று உதவிய பாவிமேல் விளிவு
சரதம் நீங்கலதாம்' என்றான், தழீஇய கை தளர. 116

கைகேயின் மேல் தணியாத தயரதன் சினமும் இராமன் உரையால் நீங்குதல்

'ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது, ஆள்வுற மதித்து,
யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம் பிராட்டி-
தான் பிழைத்தது உண்டோ ?' என்றான்; அவன் சலம் தவிர்ந்தான். 117

எவ் வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
'தெவ் வரம்பு அறு கானிடைச் செலுத்தினாட்கு ஈந்த
அவ் வரங்களும் இரண்டு; அவை ஆற்றினாற்கு ஈந்த
இவ் வரங்களும் இரண்டு' என்றார், தேவரும் இரங்கி. 118

இராமன் விரும்பிய இரு வரத்தையும் அளித்து, தயரதன் விண் ஏகுதல்

வரம் இரண்டு அளித்து, அழகனை, இளவலை, மலர்மேல்
விரவு பொன்னினை, மண்ணிடை நிறுத்தி, விண்ணிடையே
உரவு மானம் மீது ஏகினன்-உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து, உறு புகழ் படைத்தோன். 119

தேவர்கள் 'வேண்டும் வரம் கேள்' என, இராமன் வரம் வேண்டுதல்

கோட்டு வார் சிலைக் குரிசிலை அமரர் தம் குழாங்கள்
மீட்டும் நோக்குறா, 'வீர! நீ வேண்டுவ வரங்கள்
கேட்டியால்' என, 'அரக்கர்கள் கிளர் பெருஞ் செருவில்
வீட்ட, மாண்டுள குரங்கு எலாம் எழுக!' என விளம்பி, 120

பின்னும் ஓர் வரம், 'வானரப் பெருங் கடல் பெயர்ந்து,
மன்னு பல் வனம், மால் வரைக் குலங்கள், மற்று இன்ன
துன் இடங்கள், காய் கனி கிழங்கோடு தேன் துற்ற,
இன் உண் நீர் உளவாக! என இயம்பிடுக' என்றான். 121

தேவர்கள் வரம் அருள, மாண்ட குரங்குகள் உயிர் பெற்றெழுந்து இராமனை வணங்குதல்

வரம் தரும் முதல் மழுவலான், முனிவரர், வானோர்,
புரந்தராதி, மற்று ஏனையோர், தனித் தனிப் புகழ்ந்து ஆங்கு,
'அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக! நினது அருளால்
குரங்குஇனம் பெறுக!' என்றனர், உள்ளமும் குளிர்ப்பார். 122

முந்தை நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த
அந்த வானரம் அடங்கலும் எழுந்து, உடன் ஆர்த்து,
சிந்தையோடு கண் களிப்புற, செரு எலாம் நினையா,
வந்து தாமரைக் கண்ணனை வணங்கின, மகிழ்ந்து. 123

கும்பகன்னனோடு இந்திரசித்து, வெங் குலப் போர்
வெம்பு வெஞ் சினத்து இராவணன், முதலிய வீரர்
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப,
உம்பர் யாவரும் இராமனைப் பார்த்து, இவை உரைத்தார்; 124

பதினான்கு ஆண்டுகள் முடிந்ததை தேவர்கள் இராமனுக்கு உணர்த்தி, நீங்குதல்

'இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்
புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,
படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு. 125

'"வஞ்சர் இல்லை இவ் அண்டத்தின்" எனும் படி மடித்த
கஞ்ச நாள் மலர்க் கையினாய்! அன்னை சொல் கடவா,
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த;
பஞ்சமிப் பெயர் படைத்துள திதி இன்று பயந்த. 126

'இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! போதியால்' என்பது விளம்பா,
நின்ற தேவர்கள் நீங்கினார்; இராகவன் நினைந்தான். 127

மிகைப் பாடல்கள்

'மங்கை, சோபனம்! மா மயில், சோபனம்!
பங்கயத்து உறை பாவையே, சோபனம்!
அங்கு அ(வ்) ஆவி அரக்கனை ஆரியச்
சிங்கம் இன்று சிதைத்தது, சோபனம். 3-1

'வல்லி, சோபனம்! மாதரே, சோபனம்!
சொல்லின் நல்ல நல் தோகையே, சோபனம்!
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய
வல்லியங்கள் வதைத்தது, சோபனம்! 3-2

'அன்னை, சோபனம்! ஆயிழை, சோபனம்!
மின்னின் நுண் இடை மெல்லியல், சோபனம்!
அன்ன ஆளி அரக்கனை ஆரிய
மன்னன் இன்று வதைத்தது, சோபனம்! 3-3

'நாறு பூங் குழல் நாயகி, சோபனம்!
நாறு பூங் குழல் நாரியே, சோபனம்!
ஆறு வாளி அரக்கனை ஆரிய
ஏறும் இன்றும் எரித்தது, சோபனம்!' 3-4

சொன்ன சோபனம் தோகை செவி புக,
அன்னம் உன்னி, அனுமனை நோக்கியே,
'அன்ன போரில் அறிந்துளது, ஐய! நீ
இன்னம் இன்னம் இயம்புதியால்' என்றாள். 3-5

சென்றவன் தன்னை நோக்கி, 'திருவினாள் எங்கே?' என்ன,
'மன்றல் அம் கோதையாளும் வந்தனள், மானம்தன்னில்'
என்றனன்; என்னலோடும், 'ஈண்டு நீ கொணர்க!' என்ன,
'நன்று!' என வணங்கிப் போந்து, நால்வரை, 'கொணர்க!' என்றான். 33-1

காத்திரம் மிகுத்தோர், நால்வர், கஞ்சுகிப் போர்வையாளர்,
வேத்திரக் கையோர், ஈண்டீ, விரைவுடன் வெள்ளம் தன்னைப்
பாத்திட, பரந்த சேனை பாறிட, பரமன் சீறி,
'ஆர்த்த பேர் ஒலி என்?' என்ன, 'அரிகள் ஆர்ப்பவாம்' என்றார். 33-2

என்ற போது இராமன், 'ஐய! வீடணா! என்ன கொள்கை!
மன்றல் அம் குழலினாளை மணம் புணர் காலம் அன்றி,
துன்றிய குழலினார் தம் சுயம்வர வாஞ்சை, சூழும்
வென்றி சேர் களத்தும், வீர! விழுமியது அன்று, வேலோய்!' 33-3

அற்புதன் இனைய கூற, ஐய வீடணனும் எய்தி,
செப்பு இள முலையாள் தன்பால் செப்பவும், திருவனாளும்,
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல்
ஒப்பினைக் கண்ணின் கண்டே, உளம் நினைந்து, இனைய சொன்னாள். 33-4

'அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால்,
பழிபடும் என்பரால், பாருளோர் எலாம்;
விழுமியது அன்று, நீ மீண்டது; இவ் இடம்
கழிபடும்' என்றனன், கமலக்கண்ணனே. 54-1

கண்ணுடை நாயகன், 'கழிப்பென்' என்றபின்,
மண்ணிடைத் தோன்றிய மாது சொல்லுவாள்:
'எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான்
விண்ணிடை அடைவதே விழுமிது' என்றனள். 54-2

பொங்கிய சிந்தையல் பொருமி, விம்முவாள்,
'சங்கையென்' என்ற சொல் தரிக்கிலாமையால்,
மங்கையர் குழுக்களும் மண்ணும் காணவே,
அங்கியின் வீழலே அழகிதாம் அரோ. 54-3

'அஞ்சினென், அஞ்சினென், ஐய! அஞ்சினென்;
பஞ்சு இவர் மெல்லடிப் பதுமத்தாள்தன்மேல்
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்;
தஞ்சமோ, மறை முதல் தலைவ! ஈது?' என்றான். 73-1

கற்பு எனும் கனல் சுட, கலங்கி, பாவகன்
சொல் பொழி துதியினன், தொழுத கையினன்,
'வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா!
அற்புதனே! உனக்கு அபயம் யான்' என்றான். 75-1

'இன்னும், என் ஐய! கேள்: இசைப்பென் மெய், உனக்கு;
அன்னவை மனக் கொளக் கருதும் ஆகையால்,
முன்னை வானவர் துயர் முடிக்குறும் பொருட்டு
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள். 82-1

'யான் புரி மாயையின், சனகி என்று உணர்ந்-
தான் கவர் அரக்கன்; அம் மாயை என் சுடர்க்
கான் புகக் கரந்தது; இக் கமல நாயகி
தான் புரி தவத்து உனைத் தழுவ உற்றுளாள்.' 82-2

ஐயன் அம் மொழியினை அருளும் வேலையில்,
மை அறு மன்னுயிர்த் தொகைகள் வாய் திறந்து,
ஒய்யென ஒலித்ததால்; உவகை மீக்கொள,
துய்ய வானவர் துதித்து, இனைய சொல்லுவார்: 84-1

'மிகுத்த மூன்றரைக் கோடியில் மெய் அரைக் கோடி
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம்
அகத்தின் நோய் அறுத்து, அருந் துயர் களைந்து, எமக்கு அழியாச்
சுகத்தை நல்கிய சுருதி நாயக!' எனத் தொழுதார். 84-2

'திருக் குவால் மலி செல்வத்துச் செருக்குவேம் திறத்துத்
தருக்கு மாய்வுற, தானவர் அரக்கர் வெஞ் சமரில்
இரிக்க, மாழ்கி நொந்து, உனைப் புகல் யாம் புக, இயையாக்
கருக்குளாய் வந்து தோற்றுதி! ஈங்கு இது கடனோ?' 96-1

என்ற வாசகம் எறுழ் வலித் தோளினான் இயம்ப,
மன்றல் தாங்கிய மலரவன், வாசவற் கூவி,
'துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடரச்
சென்று, மற்று அவன்-தருக' என வணங்கினன், சென்றான். 101-1

'எனக்கும், எண்வகை முனிவர்க்கும், இமையவர் உலகம்-
தனக்கும், மற்று இவள் தாய் என மனக் கொளத் தகுதி;
மனத்தின் யாவர்க்கும் மறு அறுத்திடும் இவள் மலராள்;
புனந் துழாய் முடிப் புரவலன் நீ; நிறை புகழோய்!' 110-1
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247