திருமுடி சூட்டு படலம் - Thirumudi Sootu Padalam - யுத்த காண்டம் - Yuththa Kandam - கம்பராமாயணம் - Kamba Ramayanam - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





யுத்த காண்டம்

42. திருமுடி சூட்டு படலம்

இராமன் தம்பியரோடு நந்தியம் பதியை அடைந்து, சடை நீக்கி, நீராடி கோலம்கொள்ளுதல்

நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மற்றைத்
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். 1

தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால் நிறக் கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான். 2

தேவரும் முனிவரும் மலர் மழை பொழிதல்

தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த
ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக்
கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால்,
பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே. 3

சேனைகள் முதலியவற்றின் மகிழ்ச்சி

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் ஆண்டு
பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும யானை,
காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததேபோல். 4

துருவத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் பெற்றென்ன,
அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை பூத்த. 5

தாய் மார் முதலியோரை வணங்கி, இராமன் அரண்மனையை அடைதல்

ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் களி நடம் செய்யக் கண்டான். 6

நகர மாந்தரின் மகிழ்ச்சிப் பெருக்கு

'வாங்குதும் துகில்கள்' என்னும் மனம் இலர், கரத்தின் பல்கால்
தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும்,
வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் துள்ளி
ஓங்கவும், களிப்பால் சோர்ந்தும், உடை இலாதாரை ஒத்தார். 7

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற, வெற்றிப்
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற,
வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, மயக்கம்தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். 8

இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும், யாரும்
உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த மின்னார்,
பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை மகளிர், மெய்யை
மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற. 9

விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், வேறுளோர்தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்,
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்,
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே. 10

இராமன் திருமுடி சூடும் நாள் குறித்து எங்கும் செய்தி அனுப்புதல்

இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து விட்டார்-
சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன் தாமச்
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி. 11

மூவுலகத்தாரும் அயோத்தியில் வந்து குழுமுதல்

அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார் என்றால்,
தொடுக்குறு கவியால் மற்றைத் துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான் முகத்து ஒருவற்கு உண்டோ ? 12

பிரமன் ஏவலால், மயன் முடி சூட்டு மண்டபம் அமைத்தல்

நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று ஓதும்
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், வணங்கு நெஞ்சன்,
கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு எல்லாம் கொள்ளும்
மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் வயங்கக் கண்டான். 13

அனுமன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வருதல்

'சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று' என்ன, 'ஆம்' என்று,
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, அன்றே
ஏழ் திசை நீரும் தந்தான், இடர் கெட மருந்து தந்தான். 14

இராமன் நீராடுதல்

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய,
ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன் அமைச்சரோடும்
நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக் காட்ட,
எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற என்ன, 15

வசிட்டன் இராமனுக்குத் திருமுடி புனைதல்

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி. 16

வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட
ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும்
துள்ளின களிப்ப, மோலி சூடினான்-கடலின் வந்த
தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் தோளான். 17

மூவுலகத்தாரும் மகிழ்தல்

சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ நன்னூல்
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும், மேன்மை
ஒத்த மூஉலகத் தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்,
தம் தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது, அத் தாம மோலி. 18

பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற
பின் நெடுங் கணவன் தன்னைப் பெற்று, இடைப் பிரிந்து, முற்றும்
தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை நீட்டி,
நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை ஆர. 19

பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல்

விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ. 20

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல். 21

மிகைப் பாடல்கள்

நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி,
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ,
சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் பூண்டு,
பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் தேரின் ஆனான். 1-1

வீடணக் குரிசில், மற்றை வெங்க் கதிர்ச் சிறுவன், வெற்றிக்
கோடு அணை குன்றம் ஏறி, கொண்டல் தேர் மருங்கு செல்ல,
தோடு அணை மவுலிச் செங்கண் வாலிசேய் தூசி செல்ல,
சேடனைப் பொருவும் வீர மாருதி பின்பு சென்றான். 2-1

அறுபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஆன்ற
திறம் உற்ற சிறப்பர் ஆகி, மானுடச் செவ்வி வீரம்
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 2-2

எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றிப் பகட்டினர், பைம் பொன் தேரர்,
வட்ட வெண்குடையர், வீசு சாமரை மருங்கர், வானைத்
தொட்ட வெஞ் சோதி மோலிச் சென்னியர், தொழுது சூழ்ந்தார். 2-3

எழு வகை முனிவரோடும், எண் திசைத் திசைகாப்பாளர்
குழுவினர், திசைகள்தோறும் குழாம் கொண்டு களித்துக் கூடி,
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி,
வழுவல் இல் மலர்கள் சிந்தி, மானிடம் சுருங்கச் சார்ந்தார். 2-4

வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து,
ஊனம் இல் பிடியும் ஒண் தார்ப் புரவியும் பிறவும் ஊர்ந்து,
மீன் இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற,
பூ நிற விமானம் தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள். 2-5

ஆயது நிகழ, செங் கண் இராமனும் அயோத்தி நண்ணி,
தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் தாழ்ந்து,
நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும்
சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் கண்டான். 3-1

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன் தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்,
தம்பியர் தாமும், மற்றும் தாபதர் சங்கத்தோடும்,
அம் புவிதன்னில் மேலாம் அயோத்தியில், அமர்ந்தான் அம்மா. 3-2

இருபத்து ஏழ் அமைந்த கோடி யானைமேல் வரிசைக்கு ஏற்ற
திரு ஒத்த சிறப்பர் ஆகி, மானிடச் செவ்வி வீரர்
உருவத் தோள் ஒளிரும் பூணர், உச்சி வெண் குடையர், பச்சை
மரு ஒத்த அலங்கல் மார்பர், வானரத் தலைவர் போனார். 6-1

ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை அருளின் நோக்கி,
'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம் தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி' என்றான். 10-1

என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் யாவரோடும்
சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் தெய்வப்
பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் மேருக்
குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் புக்கான். 10-2

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம், முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை சுற்ற,
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,
மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி நின்றார். 10-3

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர்; பரதன் தன்னை வினவினர் அவர்க்கு, 'காதல்
புண்டரீகத்துள் வைகும் புராதன, கன்னல் தோளான்,
கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன் கொடுத்தது' என்றான். 10-4

'பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மை
இங்கு இது மலராள் வைகும் மாடம்' என்று இசைத்த போதில்,
'எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ' என்று கூறி,
செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார். 10-5

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி,
பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி, 'தூயோய்!
கருந்தடம் கண்ணினாற்குக் காப்பு நாண் அணியும் நல் நாள்
தெரிந்திடாது இருத்தல் என்னோ?' என்றலும், அண்ணல் செப்பும்: 10-6

'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து' என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின் தோன்றல். 10-7

'கோமுனியோடு மற்றை மறையவர்க் கொணர்க!' என்னா
ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம் ஈன்ற
பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த,
யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது நின்றார். 10-8

அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, 'பெரு நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உவந்து, இனிது ஊழிக் காலம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை' என்றான். 10-9

கயிலையில் வாழும் ஈசன் முதலிய கடவுளோர் தம்
அயில் விழி அரிவைமாரோடு அந்தரம் புகுந்து மொய்த்தார்,
குயில் மொழிச் சீதை கொண்கன் நிலமகள் தன்னைக் கொள்ளும்
இயல்புடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த. 12-1

வேறு இனி உரைப்பது என்னோ? வியன் தருக் குலங்கள் ஆதி
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண,
தேரு தம் உருவு நீத்து, மானிட உருவில் சேர்ந்து, ஆங்கு
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே. 12-2

அவ் வயின் முனிவனோடும் பரதனும், அரியின் சேயும்,
செவ்வியின் நிருதர்கோனும், சாம்பனும், வாலி சேயும்,
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று, ஆங்கு
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது சொன்னார். 12-3

'நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்;
காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக!' என்று,
வேளையே பொடியதாக விழிக்கும்நீள் நுதலின் வெண் பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான். 12-4

தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி
யாவரும் புகுந்து மொய்த்தார்; எழுந்த மங்கலத்தின் ஓசை
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார். 13-1

எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல் வரிசைக்கு ஆன்ற
விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும் ஏந்தி,
புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப, பொங்கும்
சரயுவின் புனலும் தந்தார், சங்கு இனம் முரல மன்னோ. 14-1

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள் சேர்த்தி,
ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின் மீது
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ. 14-2

அந்தணர், வணிகர், வேளாண் மரபினோர், ஆலி நாட்டுச்
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்,
'உய்ந்தனம் அடியம்' என்னும் உவகையின் உவரி நாண
வந்தனர், இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள். 14-3

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, விண்ணோர்,
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் செய்தார். 14-4

மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்
மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,
சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், அனுமன் தானும்,
தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் செய்தார். 14-5

'அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் தவிசோன் ஆட்டும்
கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் ஒருவன்; இந் நாள்
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர்
எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?' என்றனர், புலவர் எல்லாம். 14-6

மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து,
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, செய்ய
இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப,
பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார். 14-7

'வான் உறு முகுர்த்தம் வந்தது' என்று மா மறைகள் நான்கும்
தான் உருக் கொண்டு போற்ற, சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி,
தேன் உறு மலர்கள் சிந்தி, திசைமுகம் பரவ, தெய்வ
வான் உறை மகளிர் ஆட, மா தவர் மகிழ்ந்து வாழ்த்த. 15-1

இப்படித் தழுவி, மாதர் இருவரும், இரண்டு பாலும்,
செப்புறல் அரிய இன்பச் செல்வத்துள் செலுத்தும் நாளில்,
கப்புடைச் சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன், காதல்
வைப்புடை வளாகம் தன்னில், மன்னுயிர் வாழ்த்த, வந்தான். 19-1

மறையவர் வாழி! வேத மனுநெறி வாழி! நன்னூல்
முறை செயும் அரசர், திங்கள் மும் மழை, வாழி! மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி! இக் கதை கேட்போர் வாழி!
அறை புகழ்ச் சடையன் வாழி! அரும் புகழ் அனுமன் வாழி! 20-1

[இது முதற்கொண்டு 'விடை கொடுத்த படலம்' என்று சில பிரதிகளில் காண்கிறது]

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 20-2

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன். 20-3

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 20-4

உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 20-5

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 20-6

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 20-7

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 20-8

கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான். 20-9

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 20-10

மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 20-11

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 20-12

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ் வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 20-13

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
'எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர்' என்றான். 20-14

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 20-15

தேம் படு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே. 20-16

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 20-17

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
'குறை இது' என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை 'வருக' என அருள, வந்தார். 20-18

[ஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறது]

ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ. 20-19

சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 20-20

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20-21

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
'உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி' என்றான். 20-22

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!' என்றான். 20-23

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 20-24

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 20-25

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 20-26

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 20-27

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 20-28

'பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது' என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 20-29

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 20-30

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம். 20-31

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, 'சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று' என்றான். 20-32

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான். 20-33

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?' என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 20-34

அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
'நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும்' என்றான். 20-35

இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், 'ஏவல் செய்தல் கடன்' எனக் கருதிச் சூழ்ந்தார். 20-36

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 20-37

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 20-38

ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 20-39

வான் வளம் சுரக்க; நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக; நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க;
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 21-1

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 21-2

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 21-3

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 21-4




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247