உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கோவை நூல்கள் |
கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முறையாகக் கோக்கப்பட்டது கோவை என்று பொருள்படும். அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இது கோவை இலக்கியம் எனப்படுகிறது. கோவை இலக்கியப் புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போலக் கோவையாகப் பாடி உள்ளனர். ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம். இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பின் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பி அகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோன்றின. இந்த இலக்கண நூல்கள் கூறும் அகப்பொருள் செய்திகளுக்கு எடுத்துகாட்டுக்களாக இலக்கியம் படைக்கும் முயற்சியில் புலவர்கள் ஈடுபட்டனர். இந்த முயற்சியின் விளைவே கோவை இலக்கியம் எனலாம். பாண்டிக்கோவை என்ற நூல் இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. தஞ்சை வாணன் கோவை என்ற நூல் நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டு இலக்கிய நூலாக உள்ளது. திருக்குறளில் உள்ள காமத்துப்பால் இடம் பெறும் திருக்குறள்களும் கோவை இலக்கிய வகையின் கருக்களாக அமைந்துள்ளன என்று கருதலாம். கோவை இலக்கிய நூல்களில் முதலில் வைத்து எண்ணப்படுவது பாண்டிக் கோவை என்ற நூல் ஆகும். இந்நூலின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயரை அறியமுடியவில்லை. பாண்டிக்கோவை என்ற நூலை அடுத்துத் திருக்கோவையார் என்ற நூல் தோன்றியது. இதை அடுத்து, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தஞ்சைவாணன் கோவை என்ற நூல் எழுந்தது. இந்நூலை இயற்றியவர் பொய்யாமொழிப் புலவர் ஆவார். அதைத் தொடர்ந்து குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன. ‘நாணிக்கண் புதைத்தல்’ என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு ‘ஒரு துறைக்கோவை’ என்னும் நூல் பின்பு தோன்றியது. புகழ் பெற்ற கோவை நூல்கள் |