சிறுமணவூர் முனிசாமி முதலியார்

இயற்றிய

திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி

அவையடக்கம் வெண்பா

ஜெலம்வளர்த்த அண்ணா மலைவளர்க்க தருமநெரி
நலம்வளர்த்தவல்லாளன் நற்புகழை - நிலம்வளர்க்க
சிறுமணவூர் முனிசாமி செந்தமிழாற்பாடுதற்குக்
கரிமுகவன் பொன்னடியே காப்பு.

நூன்முகம் - கும்மிப்பாட்டு

கும்மியடிப்பெண்கள் கும்மியடி - குரு
     கும்பமுனியின் தமிழாலே
செம்மலெனுந்திரு வல்லாளமன்னவன்
     சேதியைச்சொல்லிப் புவிமேலே. 1

வாரணமாமுகன் பொன்னடியை - முந்தி
     வணங்கியிணங்கி யேதுதித்து
காரணமாக வல்லாளன்சரித்திரங்
     கண்ணேகும்மி யடியுங்கடி. 2

முந்தியுதித்தவனைப் போற்றி - முரு
     கேசனும்வேலு மயில்போற்றி
செந்தமிழ்வாணி நிதம்போற்றி - சிவ
     காமிக்கருணைப் பதம் போற்றி. 3

ஆதியண்ணாமலை யெண்பதிங்காதமும்
     அன்னையுந்தந்தையும் போல்வளர்த்து
நீதிவழுவாத வல்லாளமன்னவன்
     நெறியைச்சொல்லுவேன் கேளுங்கடி. 4

வேதியரோதிய கூட்டங்களும் - வெகு
     ஜெனங்கள்தங்கிய பாட்டைகளும்
நீதிவிளங்கிய கோட்டைகளும் பெண்கள்
     நெருக்கமாகிய பாட்டைகளும். 5

அன்னம்பகர்ந்திடும் சாலைகளும் - நல்ல
     அலர்ந்தத்தாமரை சோலைகளும்
பன்னிசைபாடிய கூடங்களுந்தமிழ்
     பாவலர்தங்கிய மேடைகளும். 6

பொற்சிகரத்தொளிர் கோபுரமும் - நல்ல
     புஷ்கரணிதிகழ் தாபரமும்
மின்னொளிந்திரு வீதிகளும் - விலை
     மின்னார்பாடிய கீதங்களும். 7

அத்தியுலாவும் பெருந்தெருவும் - அம்
     ராள்பலசேனை னெடுந்தெருவும்
சத்திரச்சாவடி வீதிகளும் - பல
     சாலைகளும்வெகு சோலைகளும். 8

தோரணத்தம்ப துஜத்தெருவும் - மிக
     துப்புரவாகிய கட்டடமும்
வாரணிகொங்கையர் நெட்டிடையும் - மிக
     வளம்பொருந்திய பாதைகளும். 9

பொன்னணிமாரிய வீதிகளும் - பொது
     மங்கையர் தங்கியநீதிகளும்
நன்னயகீத விலாசங்களும் - நக
     றாதியுந்தீபப் பிரகாசங்களும். 10

தவத்தர்போற்று மண்ணாமலைக்ஷேத்திரந்
     தன்னரசாகக் குடையோங்கும்
சிவத்துக்கிசைந்த வல்லாளமன்னவன்
     சிறப்பைசொல்லுவேன் கேளுங்கடி. 11

முப்பொழுதும்பூசைப் புரிவாண்டி - சிவ
     முத்திரைவெண்ணீர் பிரியாண்டி
யெப்போதும்சிந்தை சிவத்தாண்டி - மன்னன்
     யேற்போருக்கீயுங் குணத்தாண்டி. 12

அண்டமளாவும் சிவகிரியமதில்
     ஆலயமும்நதிச் சீர்நலமும்
தொண்டர்பரவும் பெருந்திரளும் - ஜெனத்
     தோத்திரமுமன்னன் காத்திரமும் 13

நித்தம்சிவபூசை பண்ணுவராம் - சிவ
     பத்தரிருப்பிடம் நண்ணுவறாம்
பத்துத்திசையும் பரவிடவே பர
     தேசிகட்கன்னம் படைப்பாறாம். 14

இப்படியாகத்தினந்தோறும் - அவர்
     கைப்பிடிநாயகி தன்னுடனே
ஒப்பியண்ணாமலை யீசன்திருவடி
     ஒவ்வொருபோதுந் துதிப்பாறாம். 15

என்னவரங்கள் புரிந்தாலும் - பொருள்
     யெப்படிவாரி யிரைத்தாலும்
தன்னரசாள்வோர் புத்திரனில்லாமல்
     தளந்துவேந்த னழுதாண்டி. 16

மைந்தநில்லாமல் மனதுநொந்து - தன்
     மந்திரியின்முகம் பார்த்தழுது
எந்தவிதத்தில் பலநடைவேனென்று
     யெண்ணாதயோசனைப் பண்ணாண்டி. 17

அரசனழுதக் குறையாலே - சொந்த
     அமைச்சநல்ல அறிவாலே
வரங்கள்கேட்ட தளிப்பேனென்றுநன்றாய்
     பரக்கப்பெருங்கொடி நாட்டுமென்றார். 18

எப்பொருள்வேண்டி யடுத்தாலும் - இந்த
     சீமையைத்தாவென்று கேட்டாலும்
ஒப்பிக்கொடுத்துப் பணிவேனென்று - ஐயா
     உயரப்பெருங்கொடி நாட்டுமென்றான். 19

கேட்டபொருளைத் தருவமென்றா - லெந்த
     நாட்டுத்துரவியும் வந்திடுவார்
கோட்டிக்கொரு புண்ய வாநிருந்தாலும்
     குறைகள்நிரைவேரு மென்றுறைத்தார். 20

மந்திரிசொன்ன மொழியாலே - அப்போ
     மன்னனுமெத்த மகிழ்வாலே
இந்தமொழியு முபதேசந்தானென்
     றெழுநூரடிக்கம்பம் நட்டாண்டி. 21

கம்பத்தைநட்டு முடித்தாண்டி - கொடி
     காற்றில்பரக்கத் தொடுத்தாண்டி
அம்புவியுள்ளவர் யெப்பொருள்கேட்டாலும்
     அட்சணமேதாரே னென்றாண்டி. 22

கட்டடதானங் கரிதானம் - நல்ல
     காரிழைதானங் கலைதானம்
பட்டுடைதானம் பரிதானம்திரு
     பாக்கியமென்ற பொருள்தானம். 23

கோகுலதானங் குடைதானம் - குடி
     யிளைத்தபேருக்கு பூதானம்
வாகாய்முப்பத் திரண்டுதானங்களும்
     வல்லாளன்செய்கிற நாளையிலே. 24

பண்டேயுலக முழுமையுஞ்சுத்திய
     பாரசடைமுனி நாரதரும்
கண்டேவல்லாளன் பெரும்புகழ்யாவையும்
     காதினால்கேட்டுத் துடந்தாண்டி. 25

யெல்லையெல்லாம்புகழ் கொண்டவனே - அப்பா
     வல்லாளனென்கிற மன்னவனே
பல்லாயிரங்கோடி சன்னதிசுத்தினான்
     பாதையிலுன்புகழ் கேட்டுவந்தேன். 26

வந்தவர்நாரத மாமுனிவேடத்தை
     வல்லாளராச னறியாமல்
சிந்தையிலென்ன பொருள்நினைந்துவந்தீர்
     சொல்லுமையா பரதேசியென்றார். 27

நாரதர்சொல் விருத்தம்

எண்டிசையரியவேதான் எழில்தர் மக்கொடி யைநாட்டி
அண்டனோர்க்கீவேனென்று ஆண்மையைப் பகர்ந்த மன்னா
ஒன்றினைக்கருதியேதான் ஒன்பதுகோடி செம்பொன்
இன்றுனைக்கேட்கவந்தேன் எனக்களித்தனுப்புவாயே.

கும்மி

இம்மொழிகாதினில் கேட்டாண்டி - மன்னன்
     யேதும்பதிலுறை சொல்லாண்டி
செம்பொன்னைவாரி யளந்தாண்டி - சிவ
     பத்தரடியிற் றெழுதாண்டி. 28

ஒன்பதுகோடி குவித்தனையாயித
     ஒட்டகமீதி லெடுத்தனையா
தம்பதிசொல்லத் துணையுமவிட்டேநிநி
     தாறாளமாக நடவுமென்றான். 29

மன்னனுரைத்த மொழிகேட்டாரிந்த
     மண்டலஞ்சுத்துந் தவமுனியார்
பண்ணும்கைலாய மேவும்சிவனுக்கு
     பக்தநிவந்தா னெனநினைத்தார் 30

கட்டியபொன்னை நடத்திக்கொண்டுமுனி
     காற்றிலும்வேக மாகநடந்து
எட்டியிரண்டடி யாகக்கைலாயம்
     யேகிநின்றாண்டித் தவமுனியும். 31

கைலாயத்தில் நாரதர் சொல்லுதல்

முப்பத்துமுக்கோடி தேவர்களுமுனி
     நாற்பத்தெண்ணாயிரம் மகாரிஷியும்
செப்பமாய்கூடுங் சபைதனிலேமுனி
     சிரத்தைக்குனிந்து தொழுதாண்டி 32

திங்களுங்கங்கை தரித்தவரே நெற்றி
     தீயால்புரத்தை யெரித்தவரே
பொங்குமுலகினில் மானிடன்செய்கிற
     புண்ணியமென்சொல்வேன் சங்கரரே. 33

அண்டங்களாயிரத் தெட்டிலுமேயுமக்
     கடியார்கோடான கோடியுண்டு
தொண்டனையாயிந்த வல்லாளனைப்போலே
     துய்யகுணத்தவ றாருமில்லை. 34

வல்லாளனென்கிற பேருடையான்திரு
     வண்ணாமலைநக ருக்குடையான்
இல்லாளைக்கேட்டாலு மேதருவானென்றுஞ்
     சொல்லாதநல்ல குணமுடையான். 35

யென்றுமுனிவ னுறைத்திடவேமனங்
     கொண்டுசிவமுங் களித்திடவே
அண்டைநிறைந்துள்ள தேவர்களாதியும்
     ஐயன்கருணைக் கிசைந்தவறாம். 36

பரமசிவம் குபேரனையேவுதல்

தொண்டரிருதயங் கண்டவராமிந்த
     தொல்லுலகெங்கும் நிறைந்தவறாம்
அண்டரறிந்திட வேணுமென்றேயள
     காபுரிவேந்தன் முகம்பார்த்தார் 37

பொன்னுக்குடைய புரந்தரனே இந்த
     பூவுலகெங்கும் மதிப்பவனே
தன்னிகரற்ற வென்னன்பன்குறையர
     தாரினிற்போய்வர வாருமென்றார். 38

கொஞ்சதிரவியம் வேணுமடா நம்ம
     கூட்டம்சிவ கணந்தானுமடா
துஞ்சாதனைவரும் ஆண்டிகள்போலத்
     துடருமிதுவே தருணமென்றார். 39

ஐயனுரைத்த மொழிகேட்டு அள
     காபுரிவேந்தன் மிகத்தாழ்ந்து
பையதிரவியம் வேணதெடுத்து
     பரமசிவத்தைத் தொழுதாண்டி. 40

தருணமென்ற மொழிகேட்டு கைலை
     தங்கியிருக்கும் கணங்களெல்லாம்
கருணைசிவபெரு மானருகேநல்ல
     காஷாயம்பூண்டு கரங்குவித்தார். 41

ஆயிரத்தெட்டு சிவகணமும் அள
     காபுரிவேந்தன் குபேரனுமாய்
தோயுங்கருணைக் கடவுள்திருவடி
     தோத்திரஞ்செய்துத் துடந்தனறாம். 42

முக்கண்கடவுளோர் ஜங்கமறாமங்கே
     முந்தியசீடன் குபேரனுமாம்
மிக்கசிவகண மாயிரத்தெட்டும்
     மெய்யன்திருவடி யாண்டிகளாம். 43

ஆயிரத்தெட்டு கணம்நடக்க - அதில்
     ஆதித்தன்போல் பெருமான்நடக்க - அதில்
நேயகுருவோடு ஆண்டியும்சீடனும்
     நெருங்கியண்ணா மலையடுத்தார். 44

அண்ணாமலைக்கி வரும்பாச்சல் அங்கே
     அரகராவென்ற பெருங்கூச்சல்
எண்ணஓரெண்பதிங் காதவழிதூரம்
     யெல்லாஞ்சிவபத்த றாய்நுழைந்தார். 45

சங்கராவென்று சிலர்துதிப்பார் சிலர்
     சம்போசதாசிவா வென்றுரைப்பார்
மங்கையோர்பாகா வெனத்தொழுவார் - மதி
     மாமுடியோனே யெனப்பணிவார். 46

எண்பதிங்காத மண்ணாமலைமுற்றிலும்
     யெல்லாஞ்சிவமய மாய்நிறைந்து
அண்ணாலெனுஞ்சிவ சங்கரஜங்கமர்
     ஐயனுரைப்பதை கேளுங்கடி. 47

ஆரமணிகள் பணிவேண்டேநிது
     வல்லதுபூமித் தரல்வேண்டேன்
கூரியபொன்னும் பொருள்வேண்டேனன்னங்
     கொடுக்குமுத்தம ரெங்கேயென்பார். 48

உத்தமமன்னவ ரிங்கிலையோ அவ
     ருண்மைவிளங்கும் சுதநிலையோ
மெத்தப்பசிக்குது அன்னதானஞ்செய்யும்
     மெல்லியரில்லையோ வென்றுரைப்பார். 49

காவியுடையது வேதவிரவிவர்
     காந்தியோமன்மத னென்றிடலாம்
தாவியண்ணாமலை மாதரெல்லாமவர்
     தங்கள் கணவனை யேமறப்பார். 50

வீதிமுழுமையு மேவிடுத்துயிவர்
     வேசியரில்ல மதையடுத்து
பாதிமதியணி யெம்பெருமானந்த
     பாவையர்முன்னிலை யேதுரைப்பார். 51

ஆண்டியடிநாங்கள் ஆண்டியடி கருத்
     தாண்டுமுதலும்மை வேண்டவில்லை
நீண்டசிலைமாரன் தூண்டுங்கணையாலே
     நினைவுதோணுது கொஞ்சமடி. 52

கொஞ்சம்நினைவு தடுக்குதடியெங்கள்
     நெஞ்சம்அவ்வாறே நெருக்குதடி
வஞ்சியொருத்திக்கு யின்றோரிரவுக்கு
     வழங்குங்கட்டளை சொல்லுமடி. 53

தாசிகள்சொல் விருத்தம்

வன்னியும் பிறையும் வேணி வளர்சடைமுடியான் சாட்சி
மன்னவனு ரைத்தவாறே மற்றொமுகத்தைப் பாறோம்
கன்னியரொ ருத்திக்கேதான் கட்டளை யாயிரம்பொன்
தன்னிலுங் குறையோமையா தாடனக்கலை யின்வாறே.

கன்னியர்சொன்ன மொழிகேட்டுக்கடை
     கண்ணால்குபேரன் முகம்பார்த்து
பொன்னிலேஒவ்வொரு ஆயிரமெண்ணியே
     பேதையர்கையிற் கொடுவுமென்றார். 54

வீடுமுழுதுங் குரித்துக்கொண்டார் அங்கே
     வேசிக்கோறாண்டி நிறுத்திவிட்டார்
நீடியஞான விழிநோக்கி வேறே
     நேரிழையில்லையென் றேம்தித்தார். 55

ஆண்டிக்கிவஞ்சனை செய்யவேண்டாம் இன்பம்
     ஆகாமல்நாளைக் கழிக்கவேண்டாம்
வேண்டும்பொருளைத் தடுக்கவேண்டாம் பெண்ணே
     வீணாய்பொழுதை விடிக்கவேண்டாம். 56

ஜங்கமர்நோக்க மதைப்பார்த்து ராஜன்
     சாஷ்டாங்கமாக சிரந்தாழ்ந்து
எங்குவந்தீரையா பத்தர்களேவுமக்
     கென்னபொருள்வேணும் வுத்தமரே 58

பொன்னுக்கிடமில்லை ஆண்டியப்பாநான்
     போக்கிடம்யாத்திரை பாதையப்பா
கன்னியராசை நெருக்குதப்பா - கெட்ட
     காமம்வந்தென்னைத் தடுக்குதப்பா. 59

கன்னியரேதுக்கு ஜங்கமரே - யிதோ
     கல்யாணம்செய்விப்பேன் இங்ஙனவே
வன்னிக்கெதிராகக் கட்டினமா துவுன்
     வாழ்நாளைக்கெல்லா மிருப்பாளே. 60

தொல்லையப்பாமிகத் தொல்லையப்பா - அந்த
     அல்லலப்பாபடச் சள்ளையப்பா
யெல்லையப்பாயெனக் கில்லையப்பாசுகம்
     யின்றைக்கொருநாளே போதுமப்பா. 61

இன்றைக்கொருநாளே போதுமென்றுயிந்த
     ஏழைப்பண்டார முறைத்திடவே
நன்றெனத்தூதரைத் தானனுப்பி - விலை
     நங்கையொருத்தி யழையுமென்றான். 62

காணுமண்ணாமலை வீதியெல்லாமிந்த
     காவலரோடி மிகப்பார்த்து
ஆணும்பெண்ணன்றித் தனித்தவரில்லையே
     ஆச்சர்யமென்று பணிந்தார்கள். 63

கேட்டதேமன்னன் மதிவேர்த்து - அங்கே
     கிட்டவேமந்திரி முகம்பார்த்து
போட்டக்கொடிக்கொரு தீங்குவராமலே
     போயிநீவாவென் றுறைத்தாண்டி. 64

அமச்சனெழுந்து நடந்தாண்டி - விலை
     ஆரிழைவீதி நுழைந்தாண்டி
நிமைகொட்டாமலே வீடெல்லா மாண்டிகள்
     நிறைந்திருப்பதைக் கண்டாண்டி. 65

மதனக்கலவித் தொடுப்பவருஞ்சிலர்
     மாரிசங்கீதம் படிப்பவரும்
விதனமில்லாமலே பஞ்சணைமீதில்
     விருந்துபலகாரந் தின்பவரும். 66

ஆடைகளைந்துள்ள மாதர்களும் நன்றாய்
     அணையைத்திரித்திப் படுப்பவரும்
கூடவப்போது நினைப்பவரும் சிலர்
     குந்தியேபேசி யிருப்பவரும். 67

அல்லாமமச்ச னரிந்துக்கொண்டு கொஞ்சம்
     அழைத்தும்பார்ப்போமென் றெண்ணிக்கொண்டு
மெல்லியொருத்தியை மன்னனழைக்குறார்
     மெத்தப்பணமுந் தருவாண்டி. 68

மெத்தப்பணந்தாரே னென்றுறைத்தீர் இதோ
     பத்தரிடத்தில்முன் வாங்கிவிட்டோம்
பொய்த்தமொழியொன்றுஞ் சொல்லமாட்டோமையா
     பொழுதுவிடிந்தாலே வாரோமென்றார். 69

ஆண்டியிடத்திலே வாங்கிவிட்டோம் பத்து
     ஆயிரந்தந்தாலும் நீங்கமாட்டோம்
வேண்டிவந்தோரைக் கெடுக்கமாட்டோமினி
     விடிந்தபிறகே வருவோமையா. 70

அப்புரங்கேழ்க்கவும் நாவிமில்லை - அவர்க்
     கங்கேநிற்கவும் ஒப்பவில்லை
தெப்பனவோடி யரசன்சபையிலே
     சேதிவிபர முறைத்தாண்டி. 71

ஆச்சர்யமென்று நினைத்தாண்டி - மன்னன்
     அங்கேயேமூர்ச்சையாய் விழுந்தாண்டி
நாள்செய்துவந்த தருமமெல்லாமொரு
     நங்கையால் கெட்டுதென் றேயழுதார். 72

மன்னவனங்கே யெழுந்தாண்டி - கூட
     மந்திரிதானுந் துடந்தாண்டி
தன்னுடன்காவல ரெண்ணற்றபேருமாய்
     தாசித்தெருவில் வுரைப்பாண்டி. 73

நங்கையேவுங்களை நம்பிக்கொண்டு - யெந்தன்
     நாவினாலுத்தாரஞ் சொல்லிவிட்டேன்
சங்சரர்தொண்டனோர் ஜங்கமண்டி - யவர்
     சாபங்கொடுத்தால் பலிக்குமடி. 74

ஊரும்பதியும் இனாங்கொடுப்பே னெந்தன்
     வுயிரைக்கேட்டாலு மேதருவேன்
பாரளித்தசிவன் சாட்சியாக சொன்னேன்
     பாவையொருத்தியே வாங்களடி. 75

மன்னனுரைத்த மொழிகேட்டு - அந்த
     மாதரனைவோருந் தெண்டனிட்டு
முன்னமேஆண்டி யிடம் பொருள்வாங்கினோம்
     மோசமினிசெய்ய மாட்டோமையா. 76

இன்றைபொழுது விடிந்துவிட்டால் - நாங்கள்
     யெல்லாரும்நாளை வருவோமையா
ஒன்றுமேநீதர வேண்டாமையாபெண்கள்
     உங்கள் அடுமையே காருமையா. 77

நடக்கக்காலும் மிகச்சோர்ந்து - ராஜன்
     நாணியேவெட்கி முகத்தளர்ந்து
ஒடுக்கமாக மனைசேர்ந்து மன்னன்
     ஒன்றுஞ்சொல்லாமல் படுத்தாண்டி. 78

வல்லமாதேவியோ மூத்தவளாம் - யிளம்
     மங்கையோசல்லாமா தேவியராம்
மெல்லியிருவரும் மன்னனழுகையில்
     மெத்தவுங்கூட விசனமிட்டார் 79

தொட்டவிரதம் விடுத்தனடியின்று
     தொலையாச்சாபம் பிடித்தனடி
நட்டக்கொடிமரம் பட்டுதடி - யினி
     நானும்யிருந்தால் சுமைதாண்டி. 80

பத்தர்க்குசொன்ன மொழிபோச்சுயினி
     பாவினானென்கிற பேராச்சு
யித்தரைமீதிலோர் மாதுகிடைக்காமல்
     யென்னுடநெஞ்சு ரிணமாச்சு. 81

ஆளனழுத துயர்பார்த்து - யிரண்
     டன்னத்திளைய கிளிசேர்த்து
வேளைக்கிதோஷங் குரிக்கவேண்டாமுந்தன்
     விரதஞ்செலுத்துவீ ரென்றுசொன்னாள். 82

ஆண்டியின் ஆசைக் கெடுக்கவேண்டாம் - யெனக்
     காக்கினையொன்றுங் கொடுக்கவேண்டாம்
நீண்டவிரதம் விடுக்கவேண்டாமிப்போ
     நானேயணைகுரே னென்றுசொன்னாள். 83

சொல்லவுனக்கு பயந்தேண்டி - நீ
     சொன்னதுமோட்ச நயந்தாண்டி
நல்லதுசீக்கிரம் ஸ்தானபானஞ்செய்து
     நல்லபட்டாடை யுடுத்துமடி. 84

சீக்கிரமென்று வுறைத்துவிட்டு - மன்னன்
     சங்கமர்முன்னாக ஓடிவந்து
கார்க்கவேணுமையா கன்னியிருக்குறாள்
     களித்துசேரவே வாருமென்றான். 85

பாதம்பணிந்தவர் கைபிடித்துமலர்
     பஞ்சணைவீட்டுக் கழைத்துவந்து
ஓதினவாக்கு முடித்தேனையாயினி
     உங்கள்மனம்போலே சேருமென்றான். 86

சோதிக்கவந்துள்ள சங்கமருமப்போ
     சோர்ந்துபஞ்சணை மேல்படுத்து
ஆதிகடவுளும் யோகநித்திரையில்
     ஆனந்தமாக யிருந்தாண்டி. 87

சல்லமாதேவி யிளையமங்கையவள்
     ஸ்தானங்கள்செய்து பணிபூட்டி
மெல்லநடந்துமே பஞ்சணைவீட்டிலே
     மெத்தனப்பக்கத்தி லுட்கார்ந்தாள். 88

வீணைசுரத்தின் யிசைபடித்தாள் காம
     வேகக்குரியனே கந்தொடுத்தாள்
நாணமில்லாமலே யெப்படிசெய்தாலும்
     நாயகனித்திரை செய்தாண்டி. 89

கங்குல்விடிந்தால் மொழிபோகும் நம்ம
     கணவன்விரதம் பழுதாகும்
இங்கனம்சும்மா விருக்கக்கூடாதென்று
     யெட்டிப்பிடித்தவர் மேல்படுத்தாள். 90

படுத்தமாதுத் தழிவிடவே யிவர்
     பாலகனாகி யழுதிடவே
தடித்தகொங்கையில் பால்சுரந்தப்போ
     தானாயொழுகுதாம் பாருங்கடி. 91

பொதுவிருத்தம்

குழவியுங் காகாவென்று கூரியேயழு கும்போது
மழையதுநிகர்த்த வேந்தன் மனமதுதிடுக் கிட்டோடி
பிழையதுவரியேன் ஈசா பேதமோ நினைத்தாயிங்கு
பழகவோ வந்தாயென்று பரதவித்தேது சொல்வான். 92

கும்மி

சங்கரசம்போ சதாசிவனே - இது
     சம்மதமோயெங்கள் துன்மனமோ
இங்கெனைப்பாவியென் றோவிடுத்தாய் - என்னை
     யேதுக்கையாசுமை யாகவைத்தாய். 93

ஆதிபராபர மெய்ப்பொருளே - யெந்தன்
     ஆறாயிறான பரம்பொருளே
சோதிக்கவந்து குழவியானாயினி
     செய்யும்வாரேதோ வரியேனையா. 94

என்றுதொழுதுப் புலம்பயிலே - அங்கே
     யிருந்தக்குழவியுங் காணவில்லை
நின்றுப்பரவச மாகையிலே சிவன்
     நின்றாரிஷபத்தில் அண்டையிலே. 95

நானாகச்சோதனை செய்தனப்பா - யிங்கு
     நானேகுழவியா நின்றேனப்பா
ஏனோவுனக்குத் துயரமப்பாயினி
     யென்னவரம்வேணும் கேளுமப்பா. 96

பிள்ளையில்லாமல் அறம்புரிந்த - வென்னை
     பேதகம்செய்தது யேதுக்கையா
தொல்லுலகாளத் துணைகொடுத்து யிந்த
     தொண்டனுக்குன்னடி தாருமையா. 97

இன்றுமுதல்பிள்ளை நானாச்சே - வுனக்
     கின்னஞ்சிலனா ளரசாச்சே
ஒன்றுமஞ்சாமல் கிரிகைநடத்திவா
     வுனக்குமோட்சமிருக்கு தென்றார். 98

இந்தவரமுங் கொடுத்துவிட்டார் - ஜெக
     தீசன்கைலைப் பதியடைந்தார்
அந்தநாள்தொட்டு யிதுவரைக்குமீசன்
     அண்ணாமலைக்கொரு பிள்ளையடி. 99

நீடும்புறாண வுரைப்படிக்கே - யிந்த
     நீதியுலக மறியவென்று
பாடிவைத்தான் சிறு மணவூர்முனிசாமி
     படித்துக்கும்மி யடியுங்கடி. 100

திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி முற்றுப்பெற்றது