ஸ்ரீ குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை குறம் மதுரை மீனாட்சியம்மை குறம் என்னும் குறம் வகை சிற்றிலக்கிய வகை நூல் குமரகுருபரரால் இயற்றப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் (சிவன்) மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக இந்நூல்அமைந்துள்ளது. காப்பு அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கார்கொண்ட பொழின்மதுரைக் கர்ப்பூர வல்லிமணங் கமழுந் தெய்வத் தார்கொண்ட கருங்குழலங் கயற்கணா யகிகுறஞ்செந் தமிழாற் பாட வார்கொண்ட புகர்முகத்தைங் கரத்தொருகோட் டிருசெவிமும் மதத்து நால்வாய்ப் போர்கொண்ட கவுட்சிறுகட் சித்திவிநா யகன்றுணைத்தாள் போற்று வாமே. நூல் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் பூமருவிய பொழிறிகழ் மதுரா புரிமருவிய வங்கயற்க ணம்மை தேமருவிய மதிதவழ் குடுமித் தென்பொதியக் குறத்திநா னம்மே. 1 செந்நென் முத்துங் கன்னன்முத் துமொளி திகழ்மதுரை யங்கயற்க ணம்மை பொன்னுமுத்துஞ் சொரியும்வெள் ளருவிப் பொதியமலைக் குறத்திநா னம்மே. 2 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்து மரசிருக்குந் தென்ன ரீன்ற கண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந் துவரிதழங் கயற்கட் பாவை வண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும் பரிபுரத்தாண் மனத்துள் வைத்துக் கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும் பொதியமலைக் குறத்தி நானே. 3 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் மங்கை குங்குமக் கொங்கை பங்கயச் செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள் பங்க னைக்கழ லங்க னைச்சொக்க லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே. 4 வேறு வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலே கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே. 5 வேறு புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை பொற்கோல மிட்டுநிறை நாழி வையாய். 6 வேறு ஆழிகைதா வழகாருமங் கயற்கணம்மை பங்கர் அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி யம்மே. 7 வேறு பேசு மென்குறி மோச மென்றிடில் ஆர்சொ லும்பரி யாசமே வாச மென்குழ லாய்சவுந்தர மாறர் வந்தணை வாரமே. 8 வேறு நங்கை நீகரு துங்குறி சொல்லவுன் செங்கை தனக்கொடு வாவெங்கள் அங்க யற்கண்ணி பங்க ரருட்சொக்க லிங்க ரினியணை வாரம்மே. 9 வேறு தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான் ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே. 10 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கைக்குறியின் முகக்குறிநன் றிடத்தெழுந்த கவுளிநண்று கண்னி மார்வந் திக்குறிநன் றென்கின்றா ரிடக்கண்ணுந் துடிக்கின்ற திதன்மே லுண்டோ பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடி நீ யங்கயற்கட் பூவை மாதின் மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு மணிந்தவர்தோண் மேவு வா யே. 11 மொச்சகக் கலிப்பா கடமலைக்கும் வெம்மலையாங் கம்மலையு மாயிரவாய்ப் படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தை குடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும் வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே. 12 திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே. 13 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கன்ன மதம்பெய் துறங்குகொலைக் களிறு கிடந்து பிளிறுமலை தென்னந் தமிழும் பசுங்குழவித் தென்றற் கொழுந்துந் திளைக்குமலை அன்னம் பயிலும் பொழிற்கூட லறலங் கூந்தற் பிடியாண்ட பொன்னங் குடுமித் தடஞ்சாரற் பொதிய மலையென் மலையம்மே. 14 எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் மந்தமா ருதம்வளரு மலையெங்கண் மலையே வடகலைதென் கலைபயிலு மலையெங்கண் மலையே கந்தவேள் விளையாடு மலையெங்கண் மலையே கனகநவ மணிவிளையு மலையெங்கண் மலையே ............................................ ............................................ இந்தமா நிலம்புரக்கு மங்கயற்கண் ணம்மை யின்பமுறுந் தென்பொதிய மலையெங்கண் மலையே. 15 சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடு மொருபாற் சினப்புலியு மடப்பிணையுந் திளைத்திடுமங் கொருபால் வெங்கரடி மரையினொடும் விளையாடு மொருபால் விடவரவு மடமயிலும் விருந்தயரு மொருபால் அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்கவிகை நிழற்கீ ழம்பொன்முடி சூடிமெங்க ளபிடேக வல்லி செங்கமலப் பதம்பரவுங் கும்பமுனி பயிலுந் தென்பொதிய மலைகாண்மற் றெங்கண்மலை யம்மே.16 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கச்சைப் பொருது மதர்த்தெழுந்து கதிர்த்துப் பணைத்த மணிக்கொங்கைப் பச்சைப் பசுங்கொம் பங்கயற்கட் பாவை பயந்த வாறிருதோட் செச்சைப் படலை நறுங்குஞ்சிச் சிறுவன் றனக்குப் பெருந்தடங்கட் கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த குறவர் குலமெங் குலமம்மே. 17 எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி யெடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத் தொடுப்போம் பழம்பிழிந்த கொழுஞ்சாறுந் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையு மரவுரியு மிசைந்திடவே யுடுப்போம் செழுந்தினையு நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த வியல்பிதுகா ணம்மே. 18 புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும் புதுத்தினைகல் லுரற்பாறை முன்றிறொறு முணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும் கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந் திறங்கும் சில்வலையும் பலவாரு முன்னிறப்பிற் றூங்கும் சிறுதுடியும் பெருமுரசுந் திசைதொறுநின் றேங்கும் கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும் குறிச்சியெங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே. 19 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவனெங்கள் வீட்டிற் கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி சீதனமா வழங்கி னாராற் பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு துணியிலையென் பிறகே வந்த கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு மெனக்குமிலை கங்சி தானே. 20 எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று குற்றால மாப்பனூர் பூவணநெல் வேலி ஏடகமா டானைதிருக் கானப்பேர் சுழிய லிராமேசந் திருப்புத்தூ ரிவைமுதலாந் தலங்கள் நாடியெங்க ளங்கயற்கண் ணாண்டதமிழ்ப் பாண்டி நன்னாடும் பிறநாடு மென்னாட தாகக் காடுமலை யுந்திரிந்து குறிசொல்லிக் காலங் கழித்தேனென் குறவனுக்குங் கஞ்சிவாரா தம்மே. 21 பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடியென் பாட்டி பூமகண்மா யவன்மார்பிற் பொலிவளென்று சொன்னாள் மற்றவள்பெண் களிலெங்கள் பெரியதாய் கலைமான் மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள் பெற்றவெங்க ணற்றாயுஞ் சுந்தரியிந் திரன்றோள் பெறுமென்றாள் பின்னெங்கள் சிறியதா யம்மே சொற்றகுறிக் களவிலையெங் கன்னிமா ரறியச் சொன்னேன்பொய் யலநாங்கள் சொன்னது சொன் னதுவே. 22 முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின் முகக்குறிகண் டிவளுலக முழுதாளு மென்றேன் பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள் பிஞ்ஞகர்தா மணவாளப் பிள்ளையென்று சொன்னேன் அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோ ராண்பிள்ளை யுண்டுபிறந் தரசாளு மென்றேன் சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும் தொகுத்துநீ நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே. 23 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் கெண்ணெயுமோ ருடுப்பு மீந்தாற் பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ நினைத்தவெலாம் புகல்வன் கண்டாய் வருகால நிகழ்காலங் கழிகால மூன்றுமொக்க வகுத்துப் பார்த்துத் தருகாலந் தெரிந்துரைப்ப தௌிதரிதன் றெங்கள்குறச் சாதிக் கம்மே. 24 எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் குங்குமஞ்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையுங் காட்டிச் செங்கனக நவமணிக டிசைநான்கும் பரப்பித் தென்மேலை மூலைதனிற் பிள்ளையார் வைத்துப் பொங்குநறு மலறுகோ டைங்கரர்க்குச் சாத்திப் புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து மங்கையருக் கரசியெங்க ளங்கயற்கண் ணமுதை மனத்துள்வைத்து நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே. 25 முந்நாழி முச்சிறங்கை நெல்லளந்து கொடுவா முறத்திலொரு படிநெல்லை முன்னேவை யம்மே இந்நாழி நெல்லையுமுக் கூறுசெய்தோர் கூற்றை யிரட்டை படவெண்ணினபோ தொற்றைபட்ட தம்மே உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையர்வந் துதித்தா ருனக்கினியெண் ணினகரும மிமைப்பினிற்கை கூடும் என்னாணை யெங்கள்குலக் கன்னிமா ரறிய வெக்குறிதப் பினுந்தப்பா திக்குறிகா ணம்மே. 26 அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் நெல்லளந் திட்ட போது நிமித்தநன் றிடத்தெ ழுந்த பல்லியும் வரத்தே சொல்லும் பத்தினிப் பெண்கள் வாயாற் சொல்லிய வாய்ச்சொ லன்றித் தும்மலு நல்ல தேகாண் அல்லது கிளைகூட் டும்புற் றாந்தைவீச் சழகி தம்மே. 27 எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் கொண்டுவா வம்மேகை கொண்டுவா வம்மே கொழுங்கனக நவமணிக ளளைந்திடுமுன் கையே வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடுமுன் கையே வருந்தினர்க்கு நவநிதியுஞ் சொரிந்திடுமுன் கையே புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடுமுன் கையே புழுகுறுநெய்ச் சொக்கர்புயந் தழுவிடுமுன் கையே அண்டர்தநா யகியெங்கண் மதுரைநா யகியை யங்கயற்கண் ணாயகியைக் கும்பிடுமுன் கையே. 28 அம்மேநின் செங்கையைநின் கொங்கையில்வைத் ததுதா னபிடேகச் சொக்கருனை யணைவரென்ற குறிகாண் இம்மேலைத் திகையினிற்கை யெடுத்ததுவு மவர்தாம் இன்றந்திப் பொழுதினில்வந் தெய்துவரெ றதுகாண் கைம்மேற்கை கட்டியதுந் தப்பாம லுனக்குக் கைகூடு நீநினைத்த காரியமென் றதுகாண் செம்மேனி மணிவயிற்றிற் கைவைத்த தினிநீ சிறுவர்பதி னறுவரையும் பெறுவையென்ற தம்மே. 29 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் அங்கைத் தலத்துத் தனரேகை யளவில் செல்வந் தருமுனது செங்கைத் துடிதென் மதுரேசர் செம்பொற் புயத்திற் சேர்க்குமால் இங்கிப் படிபுத் திரரேகை யெவர்க்கு மிலையிப் படிதோளில் தங்கு மறுவங் கயற்கணம்மை தன்னோ டிருக்கத் தருமம்மே. 30 சிந்து பொன்பொதியுந் துகிலெனவெண் புயலொடுதண் பனிமூடும் தென்பொதிய மலையாட்டி பேரைச்சொல்லாய் பாடநான். 31 பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக் குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான். 32 அன்பாண்டு கல்வலிதென் றவ்வைபா டியவெங்கள் தென்பாண்டி நாட்டாடன் பேரைச்சொல்லாய் பாடநான். 33 பொன்மாடஞ் சூழ்ந்தகரும் புயலமலன் போர்வைநிகர் பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். 34 எண்டிசைக்கும் வேம்பாயெம் மிறையவர்க்குக் கரும்பாகும் வண்டிசைக்குந் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான். 35 தினவட்ட மிடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும் கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான். 36 திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்ட கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான். 37 ஆனேற்றுங் கொடியானை யைங்கணையான் வென்றிடவம் மீனேற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். 38 இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொரு தனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். 39 கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழ வருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே. 40 விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ் மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே. 41 வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தை மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே. 42 ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும் தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே. 43 வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுது மீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே. 44 கான்மணக்குஞ் சடைக்காட்டிற் கவின்மணக்குங் கடிக்கொன்றைத் தேன்மணக்கும் பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே. 45 எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும் வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைய் பாடுவனே. 46 வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர் பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. 47 இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும் முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. 48 ஒன்றாகி யனைத்துயிர்க்கு முயிராகி யெப்பொருளும் அன்றாகி யவையனைத்து மானாளைப் பாடுவனே. 49 பரசிருக்குந் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் அரசிருக்கு மங்கயற்கண் ணாரமுதைப் பாடுவனே. 50 கொச்சகக் கலிப்பா நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி கார்வாழி யங்கயற்கட் கன்னிதிரு வருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே. 51 மதுரை மீனாட்சியம்மை குறம் முற்றிற்று |